வெற்றி முழக்கம்/7. பழி கூறாப் பண்பு

விக்கிமூலம் இலிருந்து

7. பழி கூறாப் பண்பு

ருமதைக்கும் உதயணனுக்கும் ஏற்பட்ட சம்பந்தம் பற்றி ஊரில் எழுந்த மறைவான பழிச் செய்திகளை ஒற்றர்கள் மூலம் அறிந்தான் பிரச்சோதனன். மெல்லிய நாணங் கலந்த புன்முறுவல் ஒன்று அவன் இதழ்களில் தோன்றி மறைந்தது. உதயணன் செயலுக்காகப் பிரச்சோதனன் அவனைப் பழிக்கவில்லை; வியப்படையவுமில்லை. இது இளமைப் பருவத்தின் இயல்பு என்ற முடிவிற்கு வந்தான் பிரச்சோதனன்.

மாற்றான் செய்த சிறு செயலைத் தூற்றி இழித்துப் பேசித் துணிந்து மகிழ்ச்சி அடைய வேண்டிய பிரச்சோதன மன்னன் 'பருவம் செய்தவேலை’ என உணர்ந்து, உதயணனை மன்னிக்கும் நாகரிகப் பண்பு மிக உயர்ந்ததல்லவா?

உதயணன் நருமதையை விரும்பியதும், அவளோடு விளையாடியதும் தவறென்று பிரச்சோதனன் நினைக்கவில்லை. உதயணனால் விரும்பப்படுகின்ற அளவிற்குத் தகுதி கொண்ட நருமதைக்குப் பல சிறப்புக்களை அவன் செய்தான். பொன்னிலும் மணியிலும் ஆகிய சிவிகைகள், பொற் பேழைகள் முதலியவற்றை அவளுக்கு அன்பளிப்பாக அளித்தான். புனலாட்டு விழா, தெய்வ விழா முதலிய விழாக்கள் நிகழுகிற காலத்தும், நருமதைநகர் கடந்து சென்று அவற்றில் பங்கு கொள்ள வேண்டாமென்றும் பொது மக்கட்குரிய பிற நிகழ்ச்சிகளையும் அவள் நீக்கிவிட வேண்டு மென்றும் பிரச்சோதனன் ஆணையிட்டான். அரண்மனைக் கூத்திலிருந்தும் அவளுக்கு விடுதலை கிடைத்தது.

இஃது இவ்வாறு இருக்கும்போது, வாசவதத்தையின் யாழ் வித்தகம், எழில் நலம் முதலியவற்றைக் கேள்வியுற்ற ஏனை நாட்டு அரசர் அவளை மணந்துகொள்ள மணத் தூதனுப்பினர். துது மேற்கொண்டு வந்த அவர்களிடம், பிரச்சோதன மன்னன் நடந்துகொண்ட முறை நாகரிகப் பண்பின் உச்ச நிலையில் அவனை நமக்குக் காட்டுகிறது. தூதர்கள் மூலம் பிற அரசர் அனுப்பிய திருமண ஓலைகளையும் செய்திகளையும் நுணுக்கமாக ஆராய்ந்தான். மரங்களில் ஏறித் திரியும் குரங்கு தன் குட்டியையும் பற்றிக்கொண்டு கிளைகளையும் விடாமல் ஏறுதல்போல வாசவதத்தையை இவர்களுக்குக் கொடுத்தல் தகுதியில்லை என்ற எண்ணத்தையும் உறுதியாகக் கொண்டான். அதே சமயத்தில் தூதர்களையும் விருப்பமாக நடத்தினான். அவர்கள் திருமண ஒலையைக் கண்டு நன்று நன்றென்று பாராட்டவுமில்லை. வெகுண்டு சீறவுமில்லை. நொதுமற் பாங்குடன் இருந்தான்.

மேலே கூறிய நிலையில் தூதுவர்களை வரவேற்று, இருக்கச் செய்து, சாதுரியமாகச் சில நாள்களில் திருப்பி அனுப்பிவிட்டான் பிரச்சோதனன். இவ்வாறு மணம் வேண்டி வேற்றரசர் தூதனுப்பிய செய்தியை வாசவதத்தையின் செவிலித்தாயாகிய சாங்கியத் தாய், அவள் கருத்தறிய அவளிடம் கூறினாள். தத்தை உதயணனிடம் அளப்பரிய காதல் கொண்டுள்ளாள் என்பதை வெளிப்படையாக அறிந்து கொள்ளவேண்டு மென்பதே சாங்கியத் தாயின் ஆவல். சாங்கியத் தாய் கூறியவற்றைக் கேட்ட தத்தை, இயக்கும் பொறியை இழந்த மயக்குறு நல்லெழிற் புதுமரப் பாவை போலத் துயர் கூர்ந்து நடுக்க முற்றாள். தான் உதயணனையன்றி மற்றொருவனை மணக்கும்படியே நியதி விதித்திருக்குமானால் அதைத் தன் உயிரைக் கொடுத்தாவது அவள் தடுத்துக்கொள்ள விரும்பினாள். தன்னுடைய தந்தை தன்னை வேறோர் அரசனுக்கு மணமுடிக்க இசைவாரா என்பதைப் பற்றி நினைக்கும்போது, அவளால் பொறுக்கவே முடியவில்லை. தத்தையின் இணைவிழிகள் முத்தைப் படைத்தன. ஆம் துயர் கண்ணிர்த் துளிகளாகத் தோன்றின. கலகலவென வளைகள் இசைபாடும் கைகளை நெரித்தாள். முகத்தில் துயரின் சாயை மெல்லப்படர்ந்தது தெரிந்தது. துயர் சோர்வாக உருக்கொண்டது. ‘அணியும் கலிங்கத்தாற் சுருக்கிட்டுக்கொண்டு சாகவாவது செய்வேனே ஒழிய, மற்றொருவன் மாலை சூட இசையேன்’ என்ற துணிவு கொண்டாள் தத்தை. ‘மற்றவன் மாலை சூடுவதற்கு என் தந்தை ஒப்புவாராயின் என் எலும்புகள்தான் அவர் காணக் கிடைக்கும்’ என்று எண்ணி வருந்தினாள் தத்தை. துயரம் முன்பின் அறியாத இடத்தில் தோன்றினால், அது பயங்கர எண்ணங்களுக்கு அடிப்படை செய்யத் தவறுவதில்லை. தத்தையைப் பொறுத்த வரையில் அது உண்மையாயிற்று.

தத்தை துயரமடைவதைக் கண்டு, அவளுக்கு உதயணன் பாலுள்ள மெய்க் காதலைச் சாங்கியத் தாய் அறிந்து கொண்டாள். செவிலித் தாயாகிய தான் அவளைத் தேற்ற வேண்டிய கடமையையும் உணர்ந்தாள். தத்தையைத் தழுவிக்கொண்டு அவளுக்கு ஆறுதல் கூறத் தொடங்கினாள். தத்தையின் கண்ணிரைத் துடைத்துவிட்டுச் செவிலி பேசினாள்; “உன் கருத்துக்கு மாறாகத் தந்தை உனக்கு மணம் புரியமாட்டார். நீ வீணே கவலைப்பட வேண்டா. அங்ஙனமின்றி நின் தந்தை மாறுபடின், உன் நற்றாயும் யானும் எவ்வாறேனும் முயன்று அதைத் தடுக்கத் தயங்கமாட்டோம்” என்று அவள் கூறிய தேற்றுரைகளும் தத்தையை ஆற்றவில்லை. வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை நன்றாக உணர்ந்து அனுபவித்த முதுமகளாகிய சாங்கியத் தாய் உடனே ஒரு சூழ்ச்சியை மேற் கொண்டாள்.

திடீரென்று தன்னை நோக்கி விழுந்து விழுந்து சிரித்த செவிலியைப் பார்த்ததும் வாசவதத்தைக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் செவிலியைச் சினத்துடன் நோக்கினாள். “தத்தை! நான் இதுவரை கூறியதெல்லாம் உண்மை என்று தானே நம்பினாய்? அதுதான் இல்லை. இது உன் பொறுமைக்கு நான் வைத்த பரீட்சை. அவ்வளவுதான். எல்லாம் பொய்” செவிலி மீண்டும் பலமாக நகைத்தாள். தத்தை ஆறுதல் பெற்றுவிட்டாள். செவிலியின் சூழ்ச்சி வெற்றியைப் பெற்று விட்டது. சற்றே ஆறுதல் பெற்ற தத்தையின் தலையை மெல்லக் கோதிக் கொண்டே செவிலி சொல்லத் தொடங்கினாள்: “நீ நினைக்கிறபடி உன் தந்தை உன்னை வேறோர் அரசனுக்கு மணம் முடிப்பதற்கு முடியாது. தன் தகுதிக்கு ஏற்ற தகுதி வாய்ந்த மணமகனையே தேர்ந்தெடுக்கவேண்டும். அந்தத் தகுதி அநேகமாக உதயணனிடம் தான் உள்ளது. இளமை, வனப்பு, இல்லொடு வரவு, வளமை, தறுகண், வரம்பில் கல்வி, தேசத்தமைதி, மாசில் சூழ்ச்சி என்ற எட்டுவகைத் தகுதிகளும் குறைவற நிறைந்த மன்னகுமரனுக்கே நின்னை நின் தந்தை மணமுடித்தல் கூடும். இவ்வெண்வகைத் தகுதிகளும் உதயணனிடம் நிறைந்துள்ளன. ஆகையால் மதிநலஞ் சிறந்த உன் தந்தை உனக்கேற்ற நாயகனாக உதயணனைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.” செவிலியின் இத் தேற்றுரைகள் தத்தையின் துயருக்குச் சற்றே ஆறுதலளித்தன. இந்த ஆறுதலால் தத்தைக்குப் புதிய ஊக்கம் பிறந்தது. கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள். ‘நான் உதயணனுக்கே உரியவள் என்னும் விதியை மாறு கொண்டு எந்தை தவறுவராயின் மறுபிறவியிலாவது உதயணனை அடையலாமென்னும் கருத்துடன் இப் பிறவியில் உயிர் விடுவேனேயன்றி இன்னொருவனுக்கு மனம் இணங்கி ஒப்பேனென்று எண்ணினாள். தத்தை வெறும் பெண் மகள் மட்டுமல்லள். அவள் தெய்வீகக் காதல் உலகின் ஒரு தனிச் செல்வி. வாழ்ந்தால் காதலுக்காகவே வாழ வேண்டுமென்று நினைப்பவள். அந்தச் சிறப்பியல்புதான் அவளை இத்தகைய மனத்திட்பம் கொள்ளத் தூண்டியது.

தத்தை கூறிய மொழிகள், ஏற்ற முன்கையில் தொடி வீழ்ந்தாற்போல் அமைந்தன சாங்கியத் தாய்க்கு. உதயணனுக்கு ஏற்ற மறுமொழியையே தத்தையிடம் எதிர்பார்த்த அவளுக்கு அப்படியே கிடைத்தது. ‘பிச்சை யிடுக’ என்று நீட்டிய கையில் பிச்சை யிடுபவனுடைய கொடுக்கும் கரத்திலுள்ள பொன்வளையல் இயல்பாக நழுவி விழுந்தாற்போல் உதயணனுக்கு ஏற்ற மாற்றம் கோரும் செவிலிக்கு, அதுவே சிறந்த முறையில் வாய்த்துவிட்டது. செவிலி தன் தேற்றுரையின் பயனாக எதிர்பார்த்ததும் அதுதானே? பின்பு வாசவ தத்தைக்குத் துணையாகத் தோழிப்பெண் காஞ்சன மாலையைக் காவல் வைத்துவிட்டு உதயணனைக் காணப் புறப்பட்டாள் செவிலித் தாயான சாங்கியத் தாய்.