வெற்றி முழக்கம்/24. நண்பர் சூழ்ச்சி
யூகியைக் கண்டதும் இடவகன் நட்புணர்ச்சியோடு தழுவிக் கொண்டான். வெகு நாட்களுக்குப்பின் இப்போது தான் யூகியும் இடவகனும் ஒருவரையொருவர் காண்கின்றனர். ஒருவருக்கொருவர் நலன் அறிந்தனர். யூகி உதயணன் நலத்தைக் கூறுமாறு இடவகனைக் கேட்டான். இடவகன் ‘உதயணன் நலம்’ என்று மறுமொழி கூறிப் பின்பு விவரமாக உரைப்பதாகச் சொல்லிவிட்டு, ‘உதயணனை யூகி எவ்வாறு உஞ்சையிலிருந்து மீட்டான்’ என்பதைத் தான் முதலில் அறிய விரும்புவதாகச் சொன்னான். இருவரும் உணவு முதலியவற்றை முடித்துக்கொண்டு காவல்மிக்க மந்திர மாடமொன்றை அடைந்து அங்கு அமர்ந்து உரையாடலாயினர்.
யூகி உஞ்சைக்குத் தான் சென்றபின் நிகழ்ந்த யாவற்றையும் தொகுத்து இடவகனுக்குக் கூறினான். யாவற்றையும் கேட்ட இடவகன், யூகியின் ஆழமான நட்புத் திறத்தைப் போற்றினான். உதயணன் மீட்சிக்காக யூகி ஏற்றிருக்கும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல என்பது அப்போதுதான் இடவகனுக்குப் புலப்பட்டது. உதயணன் தன் உயிரினுமினிய நண்பன் என்ற முறையில், அவனுக்கும் தனக்கும் அத்தகைய நண்பனேயாகிய யூகியை வாய்விட்டுப் பாராட்டினான் இடவகன். தன்னைப் பாராட்டும் இடவகனை இடைமறித்து, “அது இருக்கட்டும், உதயணனைப் பற்றி மேல்நிகழ்ச்சிகளை நான் அறிந்து கொள்ளல் வேண்டாமா? அதை இப்போது கூறு இடவகா” என்று வேண்டிக்கொண்டான் யூகி, இடவகன், உதயணன் உஞ்சையிலிருந்து புறப்பட்டது தொடங்கி, இடையே பிடி வீழ்ந்ததையும் சவரபுளிஞர் வளைத்துக் கொண்டதையும் வயந்தகன் தன்னிடம் வந்து தனக்குச் செய்தி கூறிப் படையுடன் தன்னைக் கூட்டிச் சென்று வேடர்களிடமிருந்து உதயணன் முதலியோரை மீட்டதையும், சயந்தி மலைச்சாரலில் தங்கிவிட்டுச் சயந்தி நகருக்குப் புறப்பட்டதையும் விவரித்துரைத்தான். இடவகன் அவ்வாறு கூறிக் கொண்டே வரும்பொழுது யூகிக்கு உதயணன்பாலுள்ள உயிர் நட்பை அறிந்து கொள்ளத்தக்க நிகழ்ச்சி ஒன்று அங்கே அப்போது நடந்தது.
உதயணன், தத்தை முதலியோர் தங்கியிருந்த இலவம் புதருக்கு வேடர்கள் நெருப்பிட்டு விட்டனர் என்று இடவகன் கூறிக்கொண்டே வரும்பொழுது, தன்னை மறந்த நிலையில் கேட்டுவந்த யூகி, ‘ஆ! அப்படியா? ஐயோ’ என்று கூறிக் கொண்டே அலறிமயங்கி வீழ்ந்துவிட்டான். உடனே இடவகன் தான் திடீரென்று அவ்வாறு கூறியதற்காகத் தன்னைக் கடிந்துகொண்டே குளிர்ந்த சந்தனங் கலந்த நீரை அவன்மேல் முகத்திலும் உடலிலுமாகத் தெளித்து, அவன் மயக்கத்தைத் தெளியச் செய்தான். மூர்ச்சை தெளிந்த யூகி, உதயணன் நலமே என்பதை முன்பே சுருக்கமாகக் கேள்விப் பட்டிருந்தும், தான் அவ்வாறு மூர்ச்சித்ததற்காக நாணுபவன் போலச் சற்றே தலைகுனிந்தான். பின்னர் மேலே நிகழ்ந்தவற்றை இடவகன் கூறத் தொடங்கவே அதைக் கேட்கலானான். உருமண்ணுவாவின் பொறுப்பிலிருந்த தன் ஆளுகைக்குட்பட்ட சயந்தி நகரை அடைந்த உதயணன், தத்தையைத் திருமணம் செய்து கொண்டதையும் பிறவற்றையும் இடவகன் இறுதியாகக் கூறியபோது, யூகி மனமகிழ்ச்சி எய்தினான். ஆனால் அதையடுத்து இடவகன் சொன்ன செய்தி அவனைக் கலக்கத்தில் ஆழ்த்தியது.
“தனக்குரிய கோசாம்பி நாட்டை ஆருணி அரசன் ஆள்வதையும் உதயணன் அறியான். அரசாட்சிப் பொறுப்பையும் மேற்கொள்ளவில்லை. கோசாம்பியிலிருந்து ஒடி ஒளிந்து வாழ்கின்ற தம் தம்பியர் துயரையும் நினைத்துப் பார்க்கின்றானில்லை. உதயணன் எப்போதும் தத்தையோடு தன் நேரம் முழுமையையுமே செலவிடுகிறான். இன்னும் சில நாள் இப்படியே கழிந்தால், உதயணனுடைய திறமை, ஒழுக்கம், பெருமிதம் முதலிய யாவும் குன்றி வீரவுணர்ச்சியற்ற வெற்றுச் சிற்றின்ப மனிதனாகி விடுவான் அவன். ‘நம்முடைய தலைவன் என்ற உயர்நிலையில் அவன் இருக்கும் போது அவனை நாம் எப்படித் திருத்தி வழிக்குக் கொண்டு வர முடியும்’ என்ற இந்த நினைவுடனேயே, ‘மேலே என்ன செய்வது?’ என்பது அறியாமல் நான், உருமண்ணுவா, வயந்தகன் யாவருமே ஒன்றும் புரியாமல் இருக்கிறோம்” என்று இடவகன் கூறிமுடித்தான். யூகி உடனே அவனுக்கு மறுமொழி கூறாமல், ஓர் ஆளை வரவழைத்துப் புட்பக நகர எல்லையில் தான் விட்டுவந்த சாங்கியத் தாயின் அடையாளங்களைச் சொல்லி, அங்கிருந்து சயந்திநகர் போகும் வழியிலே அவள் எங்கே அகப்பட்டாலும் தேடித் தன்னிடம் கொணருமாறு கூறி அனுப்பினான். அவனை அனுப்பிவிட்டு இடவகனிடம் உதயணனைத் தன்நிலை உணரச் செய்வதற்காக என்னென்ன வழிகளைக் கையாளலாம் என்பது பற்றிச் சிறிது நேரம் பேசினான். அவ்வளவில் இருவரும் துயிலச் சென்றனர்.
மறுநாள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வெகு விரைவிலேயே, போன ஆள் சாங்கியத் தாயோடு திரும்பி வந்து விட்டான். சாங்கியத் தாயை மற்றவர்கள் இல்லாத ஒரு மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று, இடவகன் மூலமாகத் தான் கேள்வியுற்றவற்றை யூகி அவளுக்குக் கூறினான். அப்பால், உதயணனைச் சீர்திருத்துவதற்கும் அவள் துணையே அவனுக்கு வேண்டியிருந்தது. நல்ல வேளையாகச் சாங்கியத் தாய் சயந்தி நகரத்தை அடைவதற்குள்ளேயே அவளைக் கூட்டி வந்திருந்தான் போன ஆள். யூகியின் திட்டத்திற்கு அதுவும் ஓர் உதவியாயிற்று.
அவளுக்குத் தன் ஏற்பாடுகளையும் விளக்கலானான் யூகி. “இன்பத்தையே கதி என்று கொண்டு தன்னைச் சுற்றி இருக்கும் துன்பங்களையும் பொறுப்புக்களையும் மறந்து விட்ட உதயணனை, அந்த மயக்கத்திலிருந்து மீட்கவும் நாம் தான் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். உஞ்சையிலிருந்து தத்தையுடன் பிடியேறி வருவதற்கு அப்போது உதவினோம். இப்போது செய்ய வேண்டிய உதவியோ அதனினும் இன்றியமையாததாக இருக்கிறது. அந்த உதவியைச் செய்து நிறைவேற்ற எவ்வளவோ சூழ்ச்சிகளையும் திட்டங்களையும் வகுத்திருந்தோம். இப்போதும் சில சூழ்ச்சிகளும் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டியிருக்கின்றன. உதயணனுக்குத் தாயாரைப்போன்ற வயது முறை உடைய நீங்கள், முன்போலவே இதற்கு உதவுதல் வேண்டும்” என்று கூறிய யூகி, தன் திட்டங்களையும் மேலே சொல்லலானான். “சயந்தி நகரத்திலுள்ள உதயணன், தத்தை முதலியோரை ஒருநாள் இலாவாண நகரையடுத்த மலைச்சாரலில் உள்ள சோலையில் உண்டாட்டு விழாக் கொண்டாடச் செய்யவேண்டும். தொடர்ந்து நிகழும் விழா நாள்களில் ஒருநாள், வாசவதத்தையை அவனிடமிருந்து பிரித்து அழைத்துச்சென்று அவள் தங்கியிருந்த படமாடக் கோவிலைத் தீக்கிரையாக்கி, அவள் இறந்து விட்டதாக உதயணன் கருதும்படி செய்யவேண்டும். அங்ஙனம் பிரித்து அழைத்துவந்த தத்தையை, என்னிடம் (யூகியிடம்) கொண்டுவந்து விட்டுவிடவேண்டும். அதற்குப் பின்னர் உஞ்சை நகரிலிருந்து வரும்வழியில் பசி மிகுதியால் அவலை உண்டு, அவல் விக்கி யூகியாகிய நான் இறந்து விட்டேன் என்று உதயணன் அறிவுமாறு அவனுக்கு ஒரு பொய்யைக் கூறவேண்டும். இவ்வளவு செயல்களையும் பிறழாமற் செய்து பெருமிதக் குறைவுபட்ட உதயணனை வருத்திப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டியது உங்கள் கடமை” என்று யூகி சாங்கியத் தாய்க்குச் சொன்னான். பின்னர் உருமண்ணுவா, வயந்தகன், இடவகன் முதலியோரையும் தன்பால் வரவழைத்து அவர்களுக்கும் தன் திட்டங்களைக் கூறி, அதன்படி உதயணனை நல்வழிக்குக் கொணர ஒத்துழைக்குமாறு வேண்டினான். அவர்கள் உவகையோடு உடன்பட்டனர். இறுதியாகச் சாங்கியத் தாய்க்குத் தன்னை எங்கே, எந் நேரத்தில், எப்படிச் சந்திக்கலாம், அடிக்கடி நடத்த வேண்டிய வேலைகளைப் பற்றி எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பதையெல்லாம் யூகி தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தான்.
அடுத்த நாள், யூகி யாத்திரைக்காகக் கொண்டுவந்த அவலை உண்கையில் விக்கி இறந்து போனான் என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. கையும் காலும் ஒட்ட வைத்துப் பொய்யாக உருவாக்கப்பட்ட அந்தச் செய்தியை எல்லோரும் நம்புவதற்குரிய சூழ்நிலையை யூகியின் நண்பர்கள் உண்டாக்கியிருந்தனர். அந் நண்பர்கள் கூடியழுத காட்சியும் உளங்குமைந்து இரங்கிய நிலையும் செயற்கைச் செய்தியாகிய அதை, உண்மையாகக் காட்டின. யூகி தலைமறைவாக ஓரிடத்தில் வசித்து வந்தான். அவன் உடல்போல ஓருடலை யூகியின் பிணமென்று காட்டி, அதனைத் தீ மூட்ட விரும்பாது கங்கையில் நீர்ப்படை செய்யப் போவதாகக் கூறிக்கொண்டு திரிந்தனர் அவன் நண்பர். புட்பக நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலுமே இந்தச் செய்தி பரவியிருந்தது. சயந்தி நகருக்கு அதுவரை இச் செய்தி எட்டவில்லை. யூகி தான்வரும் போது வெகு அமைதியாக வந்திருந்ததனால் அவன் உயிரோடு வந்து இருப்பதாக யாரும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதற்குள் சாங்கியத் தாய் சயந்தி நகருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தாள். யூகியின் திறமையும் சூழ்ச்சியும் மிக்க திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, கடமை எல்லாம் அவளைச் சார்ந்திருந்தன. வயந்தகன் முதலியோர் அதற்கு வெறும் உறுதியாளர்கள்தாம். உதயணன் நலனுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் தன்னைக் கொன்று கொள்ளத் துணிந்திருந்த யூகியின் தியாகம், வேடிக்கை நிறைந்ததாகவும் அதே சமயம் நட்பின் உயிர் இயைபுக்கு விளக்கமாகவும் தோன்றியது அவளுக்கு. வழி முழுவதும் இதே சிந்தனைதான். சயந்தி நகரை அடைந்த அவள், மீண்டும் ஒருமுறை தான் செய்ய வேண்டியவற்றை வரிசையாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள். சயந்தி நகரத்து அரண்மனையை அடைந்த சாங்கியத் தாய் அங்கே உதயணனைச் சந்தித்தாள். தாயைக் கண்ட கன்றுபோல அவளை வரவேற்றான் உதயணன். இருவரும் முகமன் கூறிக் கொண்டபின் சித்திரகம்மத்தில் ஒர் இருக்கை தந்து, அதில் அவளை அமரச் செய்து எதிரே தானும் அமர்ந்து கொண்டான் உதயணன்.