வெற்றி முழக்கம்/12. தலைநகர் தீப்பற்றியது

விக்கிமூலம் இலிருந்து

12. தலைநகர் தீப்பற்றியது

வாசவதத்தையின் நீராடல் முடிந்தபிறகு செவிலியர் முதலியோர் அவளை அலங்கரித்தனர். இதற்கிடையில் உதயணன், பத்திராபதியின் மேலேறித் தத்தை இருந்த துறைக்கும் பக்கத்தில் வந்து சேர்ந்தான். சூர் தடிந்த பிறகு  பிணிமுகம் என்ற யானையிலேறி முருகக் கடவுள் தோன்றியது போல உதயணன் அப்போது விளங்கினான். ஏறக்குறைய இதே சமயத்தில் யூகியின் திட்டம் நடைபெற வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. விழா ஆரவாரம் அதற்கு ஏற்ற வாய்ப்பாயிற்று.

பத்திராபதியின்மேல் அமர்ந்திருந்த உதயணன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்தான். அவன் உள்ளத்தின் அடித்தளத்தில் சிறு பொறாமைக் கனல் தெறித்து விழுந்தது. காரணம் வேறொன்றும் இல்லை. அந் நிகழ்ச்சிகள் யாவும் மாற்றவனாகிய பிரச்சோதனனுடைய செல்வப் பெருக்கத்தைக் காட்டுவன வாயிருந்தமைதான் மெய்க்காரணமாம். தன்னை அவன் செய்த இழிவும் அப்போது அவன் நினைவில் தோன்றி மறைந்தது. நிறைய நன்மை செய்திருந்தாலும் பிரச்சோதனன் செய்த சிறு இழிவே அவன் மனத்தில் கனலாக உறைத்தது. கனல் சற்றே மனத்தில் பரவியது. அதை அவிக்க வேண்டுமானால் பிரச்சோதனன் செய்கைக்குச் சரியான பழிவாங்குவதுதான் வழி. அதை அவிக்கும் தண்ணீர்கூட அதுவாகத்தான் அமையும்.

பாம்பின்மேல் சட்டை சூழ்ந்தாற் போலத் தன்னைச் சுற்றி வெளியே பிறரறியப் புலப்படாமல் சூழ்ந்திருக்கும் படையுடன் காத்திருந்த உதயணன் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். பிரச்சோதனன் பண்பட்ட மனோ பாவமுடைய மன்னன் என்பதை உதயணன் பின்னால் பலவாறு அறிந்திருந்தும்கூட, அவன் தன் பகைவன் என்ற உணர்ச்சி மனத்தில் ஒரு மூலையில் நிரந்தரமாக இருந்தே வந்தது. அந்தப் பழிவாங்கும் எண்ணத்திற்கு யூகி திட்டம் தீட்டிக் கொடுத்திருந்தான். காலம் அதற்கு வாய்ப்பை வரவேற்றுக் கொண்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் மனத்தில் பொறாமைக் கனல் மூளவேண்டிய அவசியம் நேர்வது இயற்கைதானே. கத்திமுனையில் பழிவாங்க விரும்பவில்லையாயினும் தான் அவமானப் படுத்தப்பட்டது போல் பகைவனையும் அவமானப்படுத்திவிட வேண்டுமென்பதுதான் உதயணன் கருத்து. அதில் அவனுடைய காதலும் கலந்திருந்தது.

மாற்றான் செல்வ வளங்கண்டு மனங்கனன்று புகைய, வாசவதத்தை நீராடிக் கொண்டிருந்த துறையருகே பத்திராபதியின் மேலமர்ந்து, சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளைக் கண்டு கொண்டிருந்தான் உதயணன். அப்போது வயந்தகன் அங்கே விரைவாக வந்தான். வந்தவன் நேரே உதயணன் அருகிற் சென்று காதோடு காதாக ஏதோ கூறினான். யூகியின் திட்டங்கள் வயந்தகனால் உதயணனுக்கு விவரிக்கப் பெற்றன. பிரயாணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் இரகசியமாகக் குறைவறச் செய்துவிட்டு வந்திருந்த வயந்தகன், உதயணனை நோக்கிக் கூறுகின்றான். “யானை தனக்குத் தீங்கிழைத்தவனை ஒரு போதும் மறப்பதில்லை. உற்ற காலம் வந்தபோழ்து பழிவாங்கவும் தவறாது. அந்த நிலையில்தான் நீயும் பிரச்சோதனனை இப்போது பழிவாங்க வேண்டியிருக்கின்றது. நம்மைச் சூழ்ச்சிக்கு உட்படுத்தியவனை நாமும் சூழ்ச்சிக்கு உட்படுத்துவதில் குற்றமொன்றும் இல்லை. யூகி இதை உன்னிடம் நன்கு வற்புறுத்திச் சொல்லும்படி கூறினான். நீயோ இப்போது பத்திராபதியின்மேலே அமர்ந்திருக்கிறாய். இடமோ தத்தை நீராடும் துறைக்கு வெகு சமீபம்தான். ஏற்கெனவே யூகியால் நகருள் அனுப்பப் பெற்றிருக்கும் கள்ள மகளிர், தலை நகருக்குத் தீயிட்டுவிடுவர். அங்கே தலைநகரில் அவரிட்ட தீப்புகையை மேலே வானிற் கண்டதும் தத்தையைக் கைப்பற்றிப் பத்திராபதியின்மேல் ஏற்றிக்கொண்டு நீ புறப்பட்டுவிடு. அவ்வாறு நீ தத்தையை யானைப் பிடரியின் மேல் ஏற்றிக் கொண்டதும் அங்கங்கே ஒளிந்திருக்கும் நம்முடைய வீரர்கள் வெளிப்பட்டு ‘உதயணன் வாழ்க’ என்ற வாழ்த்தொலியுடன் நின்னைக் சூழக்காவலாகத் தொடர்வர். எதிர்த்தோர் தலைகளை அவர்கள் வாள்கள் குருதி சுவைத்து விடும். நீ தத்தையுடன் பிடிமேலிருந்து அதனை வேகமாக நின் நாட்டிற்குச் செலுத்து; பிடி இங்கிருந்து ஐந்நூறு  காதமுள்ள நம் நாடுவரை ஓடாதாயினும், நானூறு காதமாவது நிச்சயமாகச் செல்லும். அதற்குப் பின்பு பிடி வீழ்ந்திடினும் கவலை இல்லை. குறும்பரும் வேடர்களும் நிறைந்த எஞ்சிய நாட்டுப்புற வழியில் நமக்குத் துன்பம் நேருமாயினும் அவற்றை ஒருவாறு நீக்கி நாடு சென்றடைய முடியும். இவற்றை நீ உறுதியாகச் செய்து வெற்றிபெற வேண்டு மென்று யூகி உன்பாற் கூறும்படி சொன்னான். நின் வெற்றியை எதிர் நோக்கியே யூகி இத் திட்டங்களை வகுத்துள்ளான்” என்று வயந்தகன் கூறி முடித்தான். உதயணன் ஆழ்ந்து சிந்தனை செய்தபின் தலைநிமிர்ந்து வயந்தகனை நோக்கினான். “யானும் யூகியும் தீதில்லாது உயிர் வாழும்வரை வெற்றிக்கு அழிவே இல்லை. வானக மாயினும் அடிபணியச் செய்வோம். அவ்வாறிருக்க இஃது என்ன பெரிய செயல்? இதை எளிதில் வெற்றி கொள்ளலாம்” என்று கூறி, ஒர் குறுநகை புரிந்தான் உதயணன். வயந்தகன் விடை பெற்று மீண்டும் உடனே வருவதாகக் கூறிவிட்டுச் சென்றான்.

நீராட்டுவிழா அழகை விரும்பிப் பார்ப்பவன் போலத் தத்தை நீராடும் துறைக்கு மிகவும் அண்மையில் அகலாமலும் அணுகாமலும் பத்திராபதியின்மேல் வந்து நின்று கொண்டான் உதயணன். அப்போது காற்றும் மழையுமாகத் திடீரென்று பெரிய புயலொன்று வீச ஆரம்பித்தது. மறைந்து ஓரிடத்தே இருந்த யூகி அங்கே புயலெழுந்தது கண்டு கனவில் வந்த செல்வத்தை நனவிற் பெற்றாற் போன்ற மகிழ்ச்சியுடன், தமர் அறியக் குறிப்பாகப் பெரு முரசு ஒன்றைக் கொட்டினான். யூகி முரசு கொட்டியதும் அங்கங்கே ஒளிந்திருந்த வீரர்கள் ‘உதயணன் வாழ்க! என்ற ஆரவாரத்துடன் எழுந்தனர். அதே சமயத்தில் நகருள் யூகியால் ஏவப்பட்ட கள்ள மகளிர் ஊருக்குத் தீயிட்டனர். எங்கும் எழுந்தது பெருந்தீ. மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழந்தைகளும் முதியோரும் கன்று கறவைகளுமாக நகரில் பலர் தீக்கிரையாகி விடுவார்களே என்று கவலைப்பட்டு அரற்றினார்கள், நீராடு துறையிலிருந்த மக்கள். நீராடுதலையும் விடமுடியாமல் நெருப்புப் பற்றியிருக்கும் நகருக்குள்ளும் போகமுடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல மக்கள் திணறியபோது யூகியின் கலகமும் தொடங்கிற்று. இதைக் கண்டு மக்களுக்கு ஒன்றுமே புரிய வில்லை. “நீர்விழா என நேரம் தெரிந்து பகைவர் படையெடுத்தனரோ? நளகிரிக்கு மீண்டும் மதம் மூண்டு விட்டதோ?” என்று பலர் பலவாறு கூறினர். நீராட்டு விழாவின் குதூகலம் ஒரே கூக்குரலாகவும் அழுகுரலாகவும் மாறியது. ஒன்றும் புரியாது அங்குமிங்கும் ஒடி உலைந்தது மக்கள் கூட்டம். நகரினின்றும் செந்தீ நாக்குகள் மேல் நோக்கி எழுந்தன. புயலோடு புயலாக முழங்கிய மேகங்களின் இடிமுழக்கைப் பகை யானைகளின் முழக்கென்று அஞ்சி அங்கிருந்த யானைகள் நிலைகெட்டு ஓடின. ஒன்றும் புரியாத மயக்கத்தில் ஆழ்ந்த பிரச்சோதன மன்னன், யானைகளால் அரண் ஒன்று அமைத்து, அதன் நடுவே உரிமை மகளிரையும் சுற்றத்தினரையும் பாதுகாப்பாக இருக்கச் செய்தான். இருந்தும் புதிதாகப் பிடித்து வரப்பெற்ற அந்த யானைகள், தம் போக்கில் தறிகெட்டுச் செல்வதைத் தடுக்க இயலவில்லை. நளகிரியும் மதங்கொண்டது. எதிரே தோன்றிய பகை வீரர்களை வாளிற்கு இரையாக்கித் திரிந்து கொண்டிருந்தனர், உதயணன் வீரர். எங்கும் அச்சமும் வியப்பும் கலந்த ஆரவார வேதனை. நீராட்டு விழ போராட்ட விழாவாக முடிந்தது.