கல்வி எனும் கண்/பல்கலைக் கழகங்கள்
நாட்டின் உயர்கல்வியின் செழிப்பையும் தரத்தையும் அவற்றின்வழி தெளிவாகும் பண்பாடு, அறிவியல் தெளிவு, ஆக்கநெறி ஆகியவற்றையும் உலகுக்கு உணர்த்துவன அவ்வந்நாட்டுப் பல்கலைக்கழகங்களே. அதனாலேயே அத்தகைய பல்கலைக்கழகங்களை நாடி நம்நாட்டு மக்களுள் பலர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இந்தியாவை, தமிழ்நாட்டை அவ்வாறு பலர் நாடிவந்தகாலமும் ஒன்று இருந்தது. பல்கலைக் கழகங்கள் நாட்டின் ஒளி விளக்கங்களாய் உலக அறிஞர்களைத் தம்மிடம் ஈர்க்கும் திறன் உடையனவாய்-என்றென்றும் உலகில் வாழும் சமுதாய அறிவியல், வாழ்வியல் நுட்பங்களை. ஆய்ந்து கண்டு உணர்த்துவனவாய் அமையவேண்டும். கல்வியெனும்:மாளிகையில் உயர்ந்த மேல்மாடியாக நின்று, படிப்படியாக ஏறிவரும் அறிஞரை-சான்றோரை முழுமைபெறச் செய்வன இவை. காய்தல் உவத்தல் அகற்றி நேர்மை உடையனவாய், காலம் கடவாக் கடப்பாட்டில் நின்று, நேர்மையில் நிலைத்துநின்று, வாழும் சமுதாயத்துக்கும் வருங்காலச் சமுதாயத்துக்கும் வழிகாட்டும் திறனும் செழிப்பும் செயல்பாடும் திண்மையும் உடையனவாக அமையவேண்டும். வள்ளுவர் ‘கல்வி’ பற்றி வகுத்த கொள்கைக்கு நிலைக்களனாய், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற உணர்வுடையோரை உலகுக்குத் தக்கவராக்கி ஆண்டுதோறும் அளித்து உதவுவனவே இவை. இங்கே காழ்ப்புக்கும் கசப்புக்கும் வேற்றுமைக்கும் வேறுபாட்டுக்கும் இடமில்லை. வஞ்சகத்துக்கும் வன்கண்மைக்கும் வழக்குக்கும் வாதத்துக்கும் இடம் இல்லை. ஆம்! இவ்விடம் துலாக்கோல் போன்று நேர்மை வழங்கும் கடவுள் சந்நிதானம் போன்ற ஒன்றாகும். மேனிலைப்பள்ளியின் கல்வி உலகப் பொதுவாழ்வுக்கு வேண்டிய வாழ்க்கைக் கல்வியைக் கற்று, பின் வாழ்வுக்கு வகைதேட அமையும் நிலையில், செலுத்தும் வகையில் அமைவதாகும். ஆனால் பல்கலைக்கழகக் கல்வியோ அதன் பெயருக்கு ஏற்றபடி உலகளாவியதாய் (Universaly) ஏன் பரந்த அண்ட கோள எல்லை வரையில் பார்த்து ஆய்ந்து நலன் காண்பதாய் தனக்கு மட்டுமன்றி, தன் காலத்துக்கு மட்டுமன்றி, என்றென்றும் வாழும் மனித சமுதாயத்துக்கும் உயிரினத்துக்கும் உறுதுணையாய் அமைவதாகும்.மேலும் பயில்பவருக்கு இம்மைக்கு மட்டுமன்றி வள்ளுவர் கூறிய எழுகின்ற பிறவிகள்தோறும் அவனுக்கு வழிகாட்டி அவனை நடத்திச்செல்வது. பல்கலைக்கழகம் என்ற சொல்லே பொருள் பொதிந்ததாகும். ‘University’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மூலக்கரு ‘Universe’ என்பதாகும். ஆம்! பரந்த அண்டகோள அமைப்பின் தொடர்புடையதாய்- ‘எல்லாப் பொருளும் இதன்பால் உள’ என அனைத்தையும் அடக்கியதாய்-என்றென்றும் பரந்த உலகில் மட்டுமின்றி விரிந்த அண்டகோளத்தில் வாழ்ந்த-வாழும்-வாழ இருக்கும் உயிர்த்தன்மைகளை உணர்ந்து, அவற்றின் விரிவாக்கம்-அவை கொண்ட தொடர்பு-அவற்றோடு அமைந்த பஞ்சபூத ஒடுக்கம் என எல்லாவற்றையும் கொண்டதாய்-அதில் பயில்வோர் தெளிந்த உள்ளமும் தெள்ளிய அறிவும் கூர்த்த மதியும் நலம் கொஞ்சும் நெஞ்சமும் உடையவர்களாய், எவ்வுயிரையும் ஒத்துநோக்கும் இயல்பினராய் இருக்கவேண்டும். மாந்தர்க்குக் கண் என அமைந்த இக்கல்வி இத்தகைய பரந்த -விரிந்த-தெளிந்த-நுண்ணிய-ஆய்ந்த தன்மையில் உள்ளதாக அமையவேண்டும். ஆனால் இன்றைய பல்கலைக் கழகங்கள்-நம் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தப் பெருநிலையில் உள்ளனவா? எண்ணிப்பாருங்கள்!
உலகெங்கும் சுற்றி மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவற்றையும் கீழைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் சிலவற்றையும் கண்டவன் நான். அவற்றோடு நம் நாட்டுப் பல்கலைக் கழகங்களை ஒப்புநோக்கின் நாம் எங்கோ பின்நிலையில் இருக்கின்றோம் என்பதை அறியமுடியும். நம்நாட்டு அறிவியல் நுணுக்கங்களை விளக்கும் பண்டைய இலக்கியங்களுக்கு மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்கள் விளக்கம் தருகின்றன; போற்றுகின்றன. பாராட்டுகின்றன. அவைபற்றி, மேலும் மேலும் ஆராய்கிறார்கள். ஆனால் இங்கோ அவற்றைப் படிக்க வேண்டியவர்கள் கூடப் படிப்பதில்லை. அதன் பயன் என்ன என்று எண்ணிப்பார்ப்பதில்லை. நம் நாட்டு அறிவியல், பண்பாடு, கலை, நலத்துறை போன்ற பலவற்றை மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஆராயும் போது, நாம் அவற்றைப் படிக்கவும் செய்யாது பாழாக நாட்களைக் கழிக்கின்றோம். இவற்றைத் தெளிவுபடுத்தி உலகுக்கு உணர்த்தவேண்டிய-வழங்கவேண்டிய பல்கலைக் கழகங்கள் எதை எதையோ எடுத்து ஆராய்கின்றன. தமிழ் நாட்டுப் பழமையான பல்கலைக்கழ்கத்தின் ஆய்வுப்பட்டங்களுக்கு எழுதப்பெற்ற கட்டுரைகளை ஒரு கண்ணோட்டம் கொண்டு நின்றால் அவற்றுள் எத்தனை சமுதாயத்துக்குப் பயன்படுவன என எண்ணத்தோன்றும். தமிழ்த்துறை ஒன்றினை மட்டும் நான் சுட்டிக்காட்டினேன். பிற துறைகளைப் பற்றி அவ்வத் துறையினர் நன்கு அறிவர். ஆனால் அதே வேளையில் வரலாற்றுப் பின்னணியில்-வாழ்வொடு தொடர்புடைய அறிவியல் ஆக்க அமைப்பில் நம் இலக்கியங்கள் எவ்வெவ்வாறு வளம்பெற்றுள்ளன என்பதுபற்றி அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஆராய்கின்றன. அவ்வந்நாட்டு அறிவியல் இலக்கியநெறி, சமுதாயநெறி, சமயநெறி போன்றவற்றோடு, பிறநாட்டு நல்லனவற்றை நாடி நலம் காணும் அப்பல்கலைக் கழகங்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம். சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாரதியின் பாடலைப் பாடி அவருக்கு நூற்றாண்டு விழாக் கொண்டாடி அமைந்துவிடுகிறோமே அன்றி அவர் சொல்வழியே செயலாற்ற நம் பல்கலைக்கழகங்கள் முயல்கின்றனவா? நாம் அவர்
க–3 பெயரைமட்டும் வைத்து திருப்தி அடைகிறோம். அவ்வளவே!
தமிழ்நாட்டு மிகப் பழைய பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகந்தான். அது 1857ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றியது. அதற்குச் சற்று முன்பாக அதே ஆண்டில் பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்கள் தோன்றின என அறிகிறோம். இத்தகைய பழம்பெரும் பல்கலைக்கழகம் பரந்த எல்லையினைக் கட்டி ஆண்டது. கேரளம், கன்னடம், ஆந்திரப் பகுதிகளையும் ஐதராபாத் எல்லையினையும் அன்று சென்னைப் பல்கலைக்கழகம் கொண்டிருந்தது. இன்று ஒரிசாவுடன் இருக்கும் ‘கஞ்சம் தொடங்கிக் குமரி வரையிலும் மேல் கீழ் கடல் எல்லையிலும் இது ஆட்சி செலுத்தியது. எத்தனையோ வல்லவர்கள். நல்லவர்கள் இதில் இருந்து நாட்டு மேனிலைக் கல்வியினை நன்கு வளர்த்து வந்தனர். இன்று மொழி வாரி மாநிலங்கள் பிரித்தபின், பிறமொழிப் பகுதிகள் நீங்கியதோடு அன்றி, தமிழ்நாட்டிலும் மேலும் பதின்மூன்று பல்கலைக் கழகங்கள் தோன்றி, இதன் எல்லையினை மிகச் சுருங்க வைத்துவிட்டன. எனினும் அன்று இதன் ஆணையின்கீழ் இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கையினைக் காட்டிலும் இன்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மருத்துவம், விவசாயம், பொறியியல், கால்நடை போன்ற வகைக்கொரு பல்கலைக்கழகம் அமைந்து இ ன் அடிப்படைப் பகுதிகளையும் சுருங்கச் செய்துவிட்டன. இன்று தமிழகத்தில் தனிப்பட அண்ணாமலை, அழகப்பர், அவினாசிலிங்கம் போன்றோருடைய பல்கலைக்கழகங்கள். அம்பாத்துறை காந்தி கிராமம் பல்கலைக்கழகம் ஆகியவையும் தனி ஆணை செலுத்துகின்றன. தமிழுக்கும் மகளிருக்கும் என்றும் தனிப் பல்கலைக் கழகங்கள் உள்ளன. ஆகவே பாட அளவிலும் பரப்பளவிலும் எல்லை சுருங்கியதாகச் சென்னைப் பல்கலைக் கழகம் நின்றுவிட்டது. தனிப்பட்ட பல்கலைக் கழகங்கள் தவிர்த்து, கோவை, திருச்சி, மதுரை முதலிய இடங்களில் உள்ளவை தம்முடன் பல கல்லூரிகளை இணைத்துத் தேர்வு நடத்துகின்றன. சென்னை நகரிலேயே இன்று பல்கலைக் கழகங்கள் உள்ளன. எனினும் அவை தனிப்பட்டவை. சென்னைப் பல்கலைக் கழகம் மட்டுமே கல்லூரிகளை இணைத்துத் தேர்வு நடத்துகின்றது. இங்கே எல்லாப் பல்கலைக் கழகங்களைப் பற்றியும் எண்ணிப் பார்த்து எழுத இடமில்லை. முற்றும் என்னால் அறிந்து கொள்ளவும் முடியர்து. எனவே சென்னைப் பல்கலைக் கழகத்தை மட்டும் எடுத்துக் காண நினைக்கின்றேன். இது அறிவு வளம் பெற்றவனாக்கி என்னை வளர்த்துப் பெயரிட்டு உலகில் உலவவிட்ட பல்கலைக் கழகம் அல்லவா! இது பற்றி நான் காட்டும் நல்லவையோ அல்லவையோ பிறவற்றிற்கும் பொருந்தும் என்றும் கூறமாட்டேன்.
நான் முன்பே சுட்டியபடி மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களின் செயல்திறனை ஒப்பு நோக்கும்போது நாம் எங்கோ பின்னிலையில்தான் உள்ளோம். அங்கெல்லாம் பயிற்று முறையும், பாட அமைப்பும், தேர்வு முறையும், பிற செயல்முறைகளும் நமக்கு வழிகாட்டிகளாக உள்ளன. ஓர் ஆசிரியர்-அத்துறையில் தெளிந்த அறிவும் திறனும் உடையவர், தம் கீழ் ஒருசில மாணவரையே தெரிந்தெடுத்துக் கொண்டு, ஏதேனும் ஒரு பாடத்தில் தனித் திறமை காட்டும் வகையில் பயிற்றுவித்து, பாடம் போற்றி, தேவையானபோது வகுப்புகளமைத்து-நல்ல நூல் நிலையங்களில் ஆய்வு செய்யப் பணித்து, எடுத்த பொருளை நன்கு விளக்கி, உலகுக்கு உணர்த்தும் வகையில் தயாராக்கிப் பட்டமளிக்க வாய்ப்பு அளிக்கும் முறை உண்டு. இங்கோ யாரோ என்றோ வரையறுத்த பாடங்களைக் கூடிக் கூட்டமாக இருந்து, ஏதோ பேசி எப்படியோ எழுதிப் பட்டம் பெறும் நிலையினைக் காண்கிறோம். வகுப்பிற்கு வராமலேயே மாணவர் வந்ததாகக் காட்டியும், ஆசிரியர் கல்லூரிக்கு வாராமலேயே வந்ததாகக் காட்டியும் மாணவருக்கும் தமக்கும் தம்மை அறியாமலேயே பிழை புரிவோர் சிலர் உள்ளனர். என்று கூறக் கேட்கிறோம். ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் அமைத்து, பயனுள்ள முறையன்றி மாறுபடுவதைப் பலர் சுட்டிக் காட்டி வருகின்றனர். பல்கலைக்கழகத்திலும் அதன் அங்கங்களாகிய கல்லூரிகளிலும் இன்றைய நிலை வருந்தத்தக்கதாக உள்ளது. எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தமும் உண்ணாவிரதமும் மேற்கொள்ளும் முறை இத்தூய தெய்வத்தலங்களில் நடைபெறுவது வருந்தத்தக்கது. அத்தகைய அவலநிலைக்கு அவர்களைத் தள்ளாத வகையில் ஆட்சியாளரும் செயல்படவேண்டும்.
ஒரு பாடத்துக்கு நான்கு அல்லது மூன்று ஆசிரியர் எனப் பாடம் நடத்துகின்றனர். இதனால் மாணவர் தம் ஆற்றலும் உணர்வும் சிதறி நிற்கின்றன: பண்டைக் காலத்திய குருகுலம் இன்றேனும், ஒரு பாடத்தினை-அல்லது தேர்வுக்கு ஒரு தாளுக்குரிய பாடத்தினை ஒரே ஆசிரியர் நடத்தின் நல்ல பயன் விளையும். ஆனால் பாடத்திட்டமோ பயிற்று முறையோ அவ்வாறு அமைவதில்லை. ஆசிரியர்களும், முன்னரே நான் காட்டியபடி எந்தப் பயிற்சியும் பெறாமல் திடீரெனக் கற்பிக்க வந்து விடுகின்றனர். ஆசிரியர்களுக்குக் குறைந்தது இரண்டாண்டுகளாவது பயிற்சி அளிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். அப்படிச் செய்யும் பொழுது, பிற தனிச் சிறப்புக் கல்லூரிகளுக்கு அமைக்கும் வகையில், குறைந்தது நூற்றுக்கு எழுபது எண்ணாவது பெற்றவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.* (சாதாரண் பட்ட வகுப்பில் ‘பி.பி.எ.’ என்ற வகுப்பிற்கும் நூற்றுக்கு அறுபதுக்குக் குறையாத மதிப்பெண் வேண்டுமென்று சென்னைப் பல்கலைக்கழகம் வற்புறுத்துகின்றது) அவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தினைத் திறம்பட நடத்தும் வகையில் ஏற்ற பயிற்சி அளிக்கப் பெறல் வேண்டும். இந்த வகையில் நல்லாசிரியர்கள் அமைவார்களாயின்-அவர்களும் தங்கள் கடமை உணர்ந்து திறம்படச் செயலாற்றுவார்களாயின் நல்ல மாணவமணிகள் நாட்டுக்கும் உலகுக்கும் கிடைக்குமே!
சென்னைப் பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் மிகச் சிறந்ததாகப் போற்றப் பெற்று, உலக அரங்கில் அதன் மாணவர்களுக்கு உரியமதிப்பும் நல்இடங்களும் தரப்பெற்றின. அனைத்திந்தியத் தேர்வுகளிலும் முதலிடம் பெற்றுத் திகழ்ந்தது. இன்று பல்கலைக்கழகம் தன்னிலையினின்று தாழ்ந்தமையானும் கல்லூரிகளும் வெறும் வாணிப நிறுவனங்களாக மாறிவருகின்றமையானும் தரத்தினைக் காண முடிவதில்லை. மதிப்பெண் அடிப்படையில் சேர்ப்பன விடுத்து பணத்தெண்ணைக் கணக்கிட்டுச் சேர்க்கும் கல்லூரிகளே அதிகமாகிவிட்டன. மருத்துவக் கல்லூரிக்கு ஐந்துலட்சம் ஆறுலட்சம் வரையிலும் பொறியியல் கல்லூரிக்கு இரண்டு லட்சம் வரையிலும் பேரங்கள் நடைபெறுகின்றன. சுயநிதிக் கல்லூரி அல்லது மானியம் பெறாத கல்லூரிகள் பலவும் பெருந்தொகை பெறுவது ஒருபுறம் இருக்க, எல்லா உதவிகளையும் அரசாங்கத்திடம் பெறும் கல்லூரிகளும் நாற்பது, ஐம்பது, ஆயிரம் வரையில் பாடத்துக்கு ஏற்ப வாங்குகின்றனவே! இவற்றைத் தடுக்க யார் நினைக்கிறார்கள்? சுயநிதிக் கல்லூரிகள் வசூலிக்கும் நிதிக்கு உச்ச வரம்பு தேவை என்று கல்வி மானியக் கோரிக்கையின்போது சட்ட மன்றத்தில் ஒருவர் சுட்டி இருக்கிறார். (தினமணி15-9-91-பக் 60 எனவே இது நாடறிந்த ஒன்றானதோடு, அரசும் அறிந்த ஒன்றாகி விட்டதல்லவா! பல்கலைக் கழகங்கள் இவற்றைக் கண்டிப்பதற்குப் பதிலாக ஊக்குவிக்கின்றன என்ற பேச்சே எங்கும் அடிபடுகிறது. கல்லூரிகளில் தேர்வு நடத்தும் முறையிலும் சீர்கேடுகள் உள்ளன என்பர்.
பல்கலைக் கழகச் செயற்பாடுகளிலும் மிகுந்த குறைபாடுகள் இருக்கக் காண்கிறோம். ‘ஊனினைச் சுருக்கின் உள்ளோளி பெருகும்’ என்பார் ஆன்றோர். ஆனால் இங்கே ஊன் சுருங்க, உள்ளமுமன்றோ சுருங்கிவிட்டது. நான் சுமார் 50 ஆண்டுகளாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தோடு தொடர்பு உடையவன். ஆட்சிக்குழு ஒன்று தவிர்த்து பிற அனைத்திலும் பங்குகொண்டவன். சிலவற்றில் உறுப்பினனாகவும் சிலவற்றில் தலைவனாகவும் இருந்து பணியாற்றி வந்துள்ளேன். நான் ஓய்வு பெற்ற பிறகும் சில குழுக்களில் இடம் பெற்றவன் தமிழ்நாட்டுப் பிற பல்கலைக் கழகங்களிலும் வடநாட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் பல குழுக்களில் இடம் பெற்றவன்: அக்காலத்தில் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் ஆற்றிய செயல்முறைகளுக்கும் இன்றைய செயல்முறைகளுக்கும் எத்தனையோ வேறுபாடுகளைஅவை தாழ்வுறும் வகையில்-இருக்கக் காண்கிறேன். எடுத்துக்காட்டுக்கு இரண்டொன்று காட்ட நினைக்கிறேன். தவறாயின் பொறுத்திட வேண்டும்!
கல்லூரிகளுக்கு அடுத்த ஆண்டிற்குப் புதிய பாடங்கள் வேண்டின் அதற்கு முந்திய ஆண்டு அக்டோபர் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது விதி. முன்பெல்லாம் அவ்வாறு வந்த விண்ணப்பங்களை ஆய்ந்து, தகுதி அறிந்து, அவற்றை ஆய்வதற்கென ஆய்வுக்குழுக்களை (Inspection. Commission) சனவரி 31க்குள் அனுப்பப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்யும். அவற்றின் பரிந்துரைகளை ஆய்ந்து, பிப்ரவரி அல்லது மார்ச்சில் நடைபெறும் ஆட்சிக் குழுவின் கூட்டம் முடிவெடுத்து, மார்ச்சு முடிவுக்குள் அவ்வக் கல்லூரிகளுக்கு முடிவினைத் தெரிவிக்கும். கல்லூரி நடத்துபவர்களும் அவற்றின் அடிப்படையில் ஏப்பிரல், அல்லது மே திங்களில் விளம்பரங்கள் செய்து கல்லூரி திறக்கும்போது, சூன் மாதத்தில் மாணவர்களைச் சேர்ப்பர். இந்த முறை மாணவர்கள் சேரவும் ஆசிரியர்களை நியமிக்கவும் பிற ஏற்பாடுகளைச் செய்யவும் சிறந்த முறையாக அமைந்தது. ஆனால் தற்போதோ, ஒட்டு மொத்தமாக எல்லாக்கல்லூரிகளையும் இணைத்து ஏதாவது ஒரு காரணம்காட்டி, ஒரு பாடமும் தரமுடியாது என்று ஐந்து அல்லது ஆறு மாதங்கள், சில வேளை கல்லூரி திறந்த பிறகும் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு அத்தகைய பொதுஅறிக்கை ஒன்று 13-8-91இல்-ஆகஸ்டில்கல்லூரிகள் திறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு வந்தது. இந்த விதிக்கு விலக்களித்தும் சில கல்லூரிகளுக்குச் சில பாடங்கள் தரப் பெறுகின்றன என்பர். இந்த ஆண்டு அறிஞர் குழு அறிக்கை வந்தபிறகும் செப்டம்பர் இடையில் ஒரு கல்லூரிக்குப் புதிய பாடம்-அதுவும் நவம்பர் டிசம்பரில் தேர்வு எழுத வேண்டிய பருவமுறைப் பாடம் தரப்பெற்றதாம் என்னே கொடுமை. எவ்வாறு மாணவர் தெளிவு பெறுவர்? சென்ற ஆண்டும் ஒரு கல்லூரிக்கு ஆகஸ்டு கடைசியில் பாடங்கள் அளித்து, செப்டம்பர் 15 வரையில் சேர்க்கவும் இசைவும் தந்தனர். அதுவும் பருவத்தேர்வாயின் எவ்வளவு தொல்லையுற வேண்டியிருக்கும் என எண்ணிப் பார்ப்பதில்லை. எப்படியும் இந்தக் கூட்டு முறையின்றி, தனித் தனியே ஒவ்வொரு கல்லூரிக்கும் (அதுவே உரிய செலவுத் தொகையினையும் உறுப்பினர்களுக்கு உரிய தொகையினையும் தந்து விடுகின்றது) தனித்தனிக் குழு அனுப்பி நேரில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு ஒரு கல்லூரி கணிப்பொறி உயர் வகுப்பு வரும் என்ற நிலையில் சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு கணிப்பொறி, குளிர் சாதனப் பெட்டி மேசை நாற்காலி போன்றவற்றிற்குச் செலவு செய்தது. ஆயினும் செப்டம்பர் முடியும் வரையில் அதற்கென ஒரு பதிலும் பல்கலைக் கழகம் அனுப்பவில்லை. இந்த நிலை நீடித்தால் கல்லூரிகள் நிலை என்னவாகும்?
பெயர் மாற்றத்துக்கும் பிறவற்றிற்கும் கல்லூரி தொடங்குவதற்கும் அரசு முன் ஆணை தந்தால்தான் பல்கலைக் கழகம் செயலாற்றமுடியும். ஆனால் தமிழக அரசு பாடங்களைத்தர ஒருமுறைக்கு இருமுறை கடிதம் எழுதியும் தர மறுத்துப் பல்கலைக் கழகம் தன்னிச்சையாக இயங்குகிறது. அரசாங்கச் சார்பாக அதன் கல்விச் செயலரும் கல்லூரிக் கல்வி இயக்குநரும் நியமன உறுப்பினரும் இருந்தும் இப்படிப் பல்கலைக் கழகம் தன்னிச்சையாக இயங்குவது வருந்துதற்குரியதாகும். வருந்தத்தக்க மற்றொன்றையும் கூறவேண்டும். சென்ற ஆண்டு 1990 மார்ச்சு ஏப்பிரலில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவருக்கு இந்த ஆண்டு மே வரையில் (1991-மே) உரிய பட்டச் சான்றிதழ் வழங்கவில்லை எனின் அப்பிள்ளைகளின் நிலை என்னாவது ‘Indian Express’ என்ற நாளிதழில் (11-9-91) K.K. ரங்கன் என்ற மாணவர் (Varsity Lapses) அத்தகைய அவல நிலையில் தான் மட்டுமன்றி இன்னும் பலர் நிலையினையும் சுட்டி எழுதியுள்ள கடிதம் பல்கலைக்கழக அவல நிலையினை விளக்குகின்றது.
பல்கலைக்கழக அறிஞர் கூட்டமும் பேரவையும் பிறவும் நடைபெறும்போது ஒருவர் காண நேரிட்டால் அது ஒரு போர்க்களமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும் என்பர். ஆசிரியர் குழுவினர் எழுப்பும் வினாக்களுக்குப்பதில் சொல்ல முடியாமல் அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லல் உறுவது பரிதாபமாக இருக்கும். பல கல்லூரிகள் தவறு இழைக்கின்றன. அதைத் தட்டிக் கேட்க வேண்டிய பல்கலைக் கழகமும் கல்லூரி இயக்ககமும் வாளா இருப்பதோடு, அவற்றை ஆதரிக்கவும் செய்கின்றன. அவற்றின் தலைவர்களே ஆட்சிக் குழுவில் இருப்பதாலோ, அன்றி வேறு உயர்மட்ட நிலையில் ஆணை செலுத்துவதாலோ அன்றி லட்சக்கணக்கில் வாங்கும் பணத்தை வாரி இறைப்பதாலோ விசாரித்துத் தண்டனை வழங்க வேண்டியவர்கள் வாய்மூடி மெளனியாகிக் கிடக்கிறார்கள். நாட்டுக் கல்வி நலமுற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் தத்தம் பதவியால் தம் வளனைப் பெருக்கிக் கொள்ள விரும்புகிறார்கள். அவரவர்கள் தற்போதுள்ள பதவிக்கு வருமுன் எந்தெந்த வழியால்- யார் யாரை மிதித்தும் துவைத்தும் வந்தோம் என்பதைத் திரும்பிப் பார்க்கவேண்டும். அப்போது பல உண்மைகள் அவர்களுக்கே விளங்கும். அரசாங்கமும் இத்தகைய களைகளை உடன் களைய ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையானால் புரையோடி, கல்வி எனும் காரிகைக்கே இறுதி யாத்திரைக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள். உள்புகுந்து ஆராயின் களைய வேண்டியவை பல என அறியமுடியும். புகுவார் புகவில்லை, எனவே வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற வகையில் பல்கலைக்கழகம் இயங்குகிறது.
இங்கே இரண்டொன்றையே சுட்டினேன். இன்னும் பல உள. இந்த அளவே அமையும் என்று கருதி மேலே செல்கிறேன். தமிழ் நாட்டில் மற்றைய பல்கலைக் கழகங்களோ இந்திய நாட்டுப் பிற பல்கலைக் கழகங்களோ எப்படி, இயங்குகின்றன என்பதை நானறியேன். எனினும் இந்திய நாட்டுத் தொன்மையான ஒரு பல்கலைக் கழகம் இத்தகைய அவல நிலைக்குத் தள்ளப்பட்டமை அறிந்து அனைவரும் கவலைப்படுவதோடு, அரசாங்கத்தோடு இணைத்து இதனை முன்னைப் பெருமை பெறக் கூடிய நெறியில் ஆற்றுப்படுத்தி ஆவன செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளுகிறேன். ஆம்! அதன் மகன் என்ற முறையில் அல்லல்பட்டு ஆற்றாது வேண்டுகிறேன்.
தன்னாட்சிக் கல்லூரிகள்
பல்கலைக்கழக எல்லையிலேயே சில கல்லூரிகளுக்குத் தனி உரிமை வழங்கப் பெற்றுள்ளது. அவை தமக்கெனவே தனியாகப் பாடங்களை அமைத்துக் கொண்டு தேர்வு நடத்திப் பட்டம் பெறப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வழி உண்டு. இந்த நிலையில் தரம் உயரும் எனச் சிலரும் தரம் தாழும் எனச் சிலரும் கூறுகின்றனர். பரந்த அளவில் தேர்வு நிலை இருந்து முன்பின் அறியாதார் நேரிய வகையில் விடைத் தாள்களைத் திருத்தினால்தான் மாணவர் உண்மையான நிலை தெரியும். அறிந்த ஆசிரியரோ-அன்றிப் பயிற்றிய ஆசிரியரோ வினாத்தாள் அமைத்து விடையும் திருத்தும் முறை, நேர்மையுடன் அமையுமாயின் சாலச் சிறந்ததுதான். ஆனால் அந்த நிலை பலவிடங்களில் மாறுபடுகின்றதே! எனவேதான் பலர் அத்தகைய கல்லூரிகளை ஆய்ந்து தெளிவு காண ஒரு தனிக்குழு அமைக்க வேண்டும் என வேண்டுகின்றனர். அப்படியே ஆட்சிக்குழுவில் உள்ளவர்தம் கல்லூரிகளும் சரிவர இயங்கவில்லை என்ற குறைபாட்டு ஒலியும் காதில் விழுகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்து ஒழுங்குபடுத்தாவிடின் நாட்டின் கல்வி நலிவுறும். நாடு நாடாக இராது. நாம் மனிதராக இரோம்! உடன் ஆவன காண வேண்டும்.
தன் நிதிக் கல்லூரிகள்
நாட்டை உலகுக்கு உண்ர்த்தும் உயர்கல்வி நிலை நன்கு பேணப் பெறல் வேண்டும். பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை போன்றவற்றிற்கென அமைந்த பல்கலைக்கழகங்களும் அதனைச் சார்ந்த கல்லூரிகளும் கூடத் தரம் உயர்த்தப் பெறவேண்டிய நிலையில் உள்ளன. தனியார் கல்லூரிகள்-சுயநிதிக் கல்லூரிகளாக முளைத்து இலட்சக்கணக்கில் பொருள் பெற்றும் தக்க வசதிகள் இன்றிச் செயல்படுவதாகச் சில செய்திகள் வருகின்றன. நாட்டில் அத்தகைய கல்லூரிகள் நாள்தொறும் பெருகிக்கொண்டே வருகின்றன. எனவே அவற்றின் தரம்-நிலை காக்கப் பெறல் வேண்டும்.
அனைத்து இந்தியாவுக்கும் ஒரே வகையான கல்வி முறை அமைய வேண்டும் என்று அனைவரும் கூறி வருகின்றனர். பள்ளிகளிலே வேண்டுமானால் மாநிலங்கள் தொறும் மொழி, வாழ்வு நெறி முதலியன மாறுபடுதல் போன்று கல்விமுறையும் மாறுபடலாம். ஆனால் கல்லூரிகளில்-பல்கலைக் கழகங்களில்-ஒருமை நெறி இயங்க வேண்டாமா? தமிழகம் தவிர, பிற மாநிலங்களில் பட்ட வகுப்பில் மூன்று பாடங்கள் முக்கிய பாடங்களாக (Main) உள்ளன. தமிழகத்தில் ஒரு பாடம் முக்கியமானதாகவும் அதன் தொடர்பான மற்றொன்று சார்புநிலை பெற்றதாகவும் உள்ளன. ஆழ்ந்து சிந்திப்பின் தமிழகக் கல்லூரிப் பாட முறையே சிறந்தது எனத்
தோன்றும்-உண்மையும் அதுவே. ஏதேனும் ஒன்றில் திறம் பெறின், அவன் பின், ஆசிரியனாகவோ வேறு வகையிலோ வாழ்க்கையில் புகும்போது அதில் தெளிந்த அறிவுடையவனாய்ப் பிறரை ஆற்றுப்படுத்தித் தானும் செயல்பட முடியும். மூன்று என்றால் மூன்றில் ஒன்றிலும் முழுமை பெறா நிலையில் ஒருவன் வாழ்வு எப்படிச் சிறக்கும்? அதனாலேயே பிற மாநிலங்களில் பயின்று பட்ட்ம் பெற்றவர் ஆசிரியர் பயிற்சி பெற்ற போதிலும் அவர்களைத் தமிழ் நாட்டுப் பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்க அஞ்ச வேண்டி உள்ளது. பல பள்ளிகள் நியமிப்பதும் இல்லை. இந்த நிலையில் இந்திய அரசாங்கம்-கல்வியைத் தன்னொடு கட்டிப்பிடித்துள்ள அரசாங்கம். ஒரு பொது விதியை அமைக்க வேண்டும். அப்படியே எந்த முறைக் கல்வி, இருப்பினும் பள்ளிகளில் அவை இயங்கும் மாநிலத்தின் மொழி மூன்றில் ஒன்றோ-இரண்டில் ஒன்றோ கட்டாயமாக இருக்க வேண்டும் எனவும் விதி செய்ய வேண்டும். இத்தகைய பொது விதிகள் நாட்டின் ஒருமைப்பாட்டினை வளர்ப்பதோடு மொழி அறிவினையும் கல்வித் தெளிவினையும் தரும் என்பது உறுதி.
பொதுவாக அரசாங்கக் கல்வி நிலையங்களைக் காட்டிலும் தனியார் நிலையங்கள்-ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரையில்-செம்மையாகச் செயல்படுவதைக் காண்கின்றோம். அரசாங்கக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்களை உரிய காலத்தில் நியமிக்கா நிலை உள்ளது. அடிக்கடி ஆசிரியர்களை மாற்றும் நிலையும் உள்ளது. இவை பெரும்பாலும் மாணவர் நலனைப் பாதிக்காது இருக்குமோ!
மாணவர்களிடம் பெருந்தொகை-எந்தப் பெயரிலே வாங்கினாலும் அதற்கேற்ற வகையில் மாணவர் தேவைகளை நிறைவுசெய்யின்-தக்க ஆசிரியர்களை நியமித்து-இடையறா வகையில் கல்வி அளித்து, செயல்முறைகளைச் செம்மைப் படுத்தி, வெறும் ஏட்டுக் கல்வியொடு நாட்டுப் பற்றும்
நல்லொழுக்கமும் மாணவர் உள்ளத்தில் பதியும்படிச் செய்யின் நன்கு பயன் விளையும். ஒருசிலவாயினும் இவ்வாறு செயல்படுவதால்தான், அத்தகைய கல்வி நிலையங்கள் நாட்டில் வளர்ச்சியுறுகின்றன. மக்களும் பணத்தை வாரி இறைக்கின்றனர். சுடர்விளக்காயினும் நன்றாய் விளக்கிடத் தூண்டுகோல் ஒன்று வேண்டும்' என்பதால், இவையெலாம் செம்மையாக நடைபெறுகின்றனவா எனக் கண்டு, தவறின் நல்லாற்றின் வழி திருப்பி நடத்தும் வகையில் உயர்நிலைக்குழு-நல்ல பண்பாளர் அடங்கிய குழு ஒன்றோ பலவோ நியமிக்கப் பெறல் வேண்டும். அவை வழிகாட்ட நாட்டின் கல்வி நிலையங்கள் நேரிய பாதையில் அடி எடுத்து வைக்குமானால் தமிழகம் பாரத நாட்டில் மட்டுமின்றி உலகிலேயே உயர்ந்து விளங்கும் என்பது உறுதி. விரைந்து செயலாற்ற வேண்டும்.
கால் நூற்றாண்டுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்தது. அப்போதிருந்த சில குறைபாடுகளைப் பற்றிப் ‘பல்கலைக் கழகப் பார்வைக்கு' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினேன். அப்போது எங்கள் வீட்டுக்கு வரும் அன்பர் திரு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அவர் தம் தென்றல் இதழுக்கு என்னைக் கட்டுரை எழுதச் சொல்லுவார் ஒரு சில வெளியிட்டுள்ளார் என நினைக்கிறேன். இக் கட்டுரையும் அவர் கண்ணில் பட்டு, அவர் இதழிலோ வேறு இதழிலோ வெளிவந்தது, அதை அப்படியே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அன்பர் அன்றைய துணைவேந்தர் திரு. இலட்சுமணசாமி முதலியார் அவர்களிடம் காட்டி விளக்கினாராம்.
உடனே திரு. முதலியார் அவர்கள் என்னை வரச் சொன்னார். காலையில் அவர் வீட்டிற்குச் சென்றேன். என்னை உட்கார வைத்து நான் எழுதியதைப் பற்றிக் கூறி, பல்கலைக்கழகம் போன்ற பெரிய நிறுவனங்களில்,இத்தகைய தவறுகள் வருவது இயற்கை. அவற்றைச் சுட்டிக் காட்டிய உங்களைப் பாராட்டுகிறேன். இத்தகைய சுட்டிக் காட்டல்கள்
தான் நட்புக்கு அடையாளம். உங்களுக்கு நன்றி என்று கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தார். எனக்கு ‘நகுதற் பொருட் டன்று நட்டல்' என்ற குறள் நினைவுக்கு வந்தது. அவரை வாழ்த்தினேன்.
ஆனால் இன்று நான் எழுதியுள்ளதை பல்கலைக் கழகத்தில் உள்ளவர்கள் எப்படிக் கொள்வார்களோ! நல்ல உள்ளங்கள் நகுதற்பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு என்ற குறள் வழி இவற்றை ஏற்றுக் கொள்வர் என நம்புகிறேன். எப்படியாவது என்னை ஆளாக்கிய பல்கலைக்கழகம் பழைய நிலையை அடைய வேண்டும் என்பதே என் ஆசை. அதை இன்றுள்ளவர்கள் நிறைவேற்றுவார்கள் எனவும் நம்புகிறேன்.
பல்கலைக் கழகங்களிலோ கல்லூரிகளிலோ மாணவர்களைச் சேர்க்கும்போது, தரம் எண்ணப் பெற வேண்டும். பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி முதலியவற்றிற்கு 90, 95 எனக் காணும் நிலையில் பிற கல்லூரிகளுக்குக் குறைந்தது அறுபதாவது 60 இருக்க வேண்டாமா? ‘பி. பி. ஏ.’ வகுப்பில் சேர்வதற்கு மட்டும் சென்னைப் பல்கலைக் கழகம் அத்தகைய விதியினை அமைத்துள்ளது. அதேபோன்று பிற பாடங்களுக்கும் அமைத்தால் எவ்வளவு ஏற்றம் பெறும்.‘ Eligible for College Course’ என்று முற்காலத்திய பள்ளி இறுதி வகுப்பின் சான்றிதழ்களில் அச்சிடப் பெற்றிருக்கும் நல்லவேளை தற்போதைய சான்றிதழ்களில் அத்தகைய தொடர் இல்லாதது மகிழ்ச்சிக்குரியதே. எனினும் முப்பத்தைந்து வாங்கித் தேறினான் என்றால் அம்மாணவன் கல்லூரியில் சேரத் தகுதி பெற்றவனாகின்றான். பெரிய இடத்து சிபாரிசு இருந்தாலோ அல்லது பெரும் பணம் கொடுத்தாலோ அவனுக்கும் கல்லூரியில் இடம் கிடைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பெற்றோருக்கும் பிற தொழிற் கல்லூரிகளுக்கு இருப்பது போன்று ஓரளவு சலுகை தருவதில் தவறில்லை. மேலும் எத்தனை முறை படையெடுத்து, ஒவ்வொரு பாடமாகத் தேறினாலும்
அவனுக்கும் இடம் தர வேண்டிய நிலை கல்லூரிக்கு உண்டாகின்றது. இந்த நிலையில் கல்லூரியின் தரம் எங்கே நாட்டப் பெறும்? மேலும் அதுவரையில் தமிழில் எல்லாப் பாடங்களையும் பயின்ற மாணவர் பலர், ஆங்கிலம் பயிற்சி மொழியாக உள்ள கல்லூரிகளில் இடம் வேண்டுகின்றனர். ஆனால் அரசாங்கமே நடத்தும் ஒருசில கல்லூரிகள் தவிர்த்து, பெரும்பாலான கல்லூரிகள் ஆங்கிலத்தையே பயிற்சி மொழியாகக் கொண்டுள்ளன. அவற்றுள் பணிபுரியும் ஆசிரியர்களுள் சிலர் தமிழ் வாடையே அறியாதவர்கள்; சிலர் தமிழே புரியாதவர்கள். சிலர் தமிழில் சொல்லித்தருவதைத் தாழ்வாக எண்ணுபவர்கள். இந்த நிலையினால் ஆங்கிலமே பயிற்று மொழியாகிறது. அரசாங்கம் இந்த வகையில் கருத்திருத்தி, தம் கல்லூரிகளில் தமிழ்ப் பயிற்றுமொழி வகுப்புகளை எல்லாப் பாடங்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். தமிழில் பள்ளியில் பயின்றோம் அதே மரபினைத்தான் கல்லூரியில் பின்பற்ற வேண்டும் என மரபு ஏற்படுத்த வேண்டும். இன்றேல் பல மாணவர் மொழியறியாது தடுமாறித் தேர்வுகளில் பொருள் விளங்க மாட்டாது இடர்ப்பட்டு தோல்வியுறுகின்றனர். இந்த அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க அரசாங்கம் உடன் தக்க ஆக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
மற்றொன்றும் காணல் வேண்டும். பாடத்தில் ‘10+2+3' என மாற்றிய போது அரசாங்கப் பணி புரிபவர்க்கென்றே (Vocational Course) ஆசிரியப் பயிற்சி முதலியன புகுத்தப் பெற்றன. ஆசிரியப் பயிற்சி தற்போது கைவிடப் பெற்றது. தொழில் கலந்த கல்வி பயின்றவர் அரசாங்க எழுத்தர், தட்டச்சாளர் போன்ற பதவிகளுக்குச் செல்லவென்றே அது அமைக்கப்பெற்றது. ஆனால் தற்போது, அதில் பயின்றவருக்கும் பத்தில் ஒரு பகுதி இடம் தரும் நிலை உண்டாகியுள்ளது. இதை உண்டாக்கியவர் யார் என்று தெரியவில்லை. எனினும் இந்த முறை நீக்கப் பெறல் வேண்டும். அரசுப் பணியாளர் தேர்வாணையம் இத்தகைய மாணவர்களுக்கு
முதலிடம் அளித்து, அரசாங்க உத்தியோகங்கள் தரவழி காணவேண்டும். அதற்கும் சில திருத்தங்கள் தேவை. அந்த இருவகுப்புகளைப் பற்றி எழுதும் போது அதுபற்றி விரிவாகக் காணலாம்.
கல்வியினை மாநில, மத்திய அரசுகளோடு ஒன்றி இணைத்தமையின் பல மத்திய பள்ளிகள் தமிழ்நாட்டில் வளர்ந்தன. அப்படியே சில பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் ஆணை வழியே இயங்குகின்றன. புதுவைப் பல்கலைக்கழகம் அத்தகைய பல்கலைக் கழகமே. இந்த நிலை வேண்டத்தகாத ஒன்று. அண்மையில் அசாம் மாநிலத்தில் இரு புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் தொடங்கத் தில்லி அரசு முயன்றும் எதிர்ப்பின் காரணத்தால் கைவிடப்பட்டது என்பது பத்திரிகைச் செய்திகளால் அறியப்படுவதொன்று. அது மட்டுமின்றி அத்தகைய பல்கலைக் கழகங்களுக்குத் தனிச் சலுகையும் தனித்த உயர்நிலையும் தருவது வேண்டப் பெறுவதன்று. தேவையற்ற ஒன்றைத் தோற்றுவித்து, அதற்கெனத் தனிச் சலுகை தந்து உயர்த்துவது மாநில மக்களைக் குறைத்து மதிப்பிடுவதாகும். வேண்டுமாயின் மாநிலங்கள் அமைத்த பல்கலைக் கழகங்களுக்கு அதிக மானியம் கொடுத்து, அங்கங்கே உள்ள களைகளைக் களைந்து, காவல் துறையில் தேவையானபோது மத்திய காவல் படையினை அனுப்புவது போன்று, மத்திய உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, திருத்தம் செய்யலாம். அப்போது பல்கலைக் கழகங்கள் மட்டுமன்றி, மாநில அரசுகளும்கூட அஞ்சிச் செயல்படும். அதனால் நாட்டில் கல்வி நன்கு வளர்ச்சியுறும்.
மேலை நாடுகளில் ஒரே பல்கலைக்கழகத்தே பலவகைப் பயிற்சி வகுப்புகள்- பட்ட வகுப்புகள் உள்ளன. வேறு பல கல்லூரிகள் இணைக்கப்பெறவில்லை. அந்த நிலையில் நம் நாட்டிலும் சில பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆயினும் அவற்றின் தரம், மேலை நாடுகளில் காண்பது போன்று அத்துணை வகையில் சிறந்ததாக இல்லை. தமிழ் நாட்டில் அத்தகைய பல்கலைக் கழகத்தில் பயின்று உயர்ந்த நிலையில் சிறப்புநிலை-முதல் நிலையில் பட்டம் பெற்றவராயினும் அவர்களைக் கல்லூரி ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது என்று, தமிழ் நாட்டிலேயே மற்றொரு பல்கலைக் கழகம் ஆணையிடுகிறது. இது எவ்வளவு கேவலம் என எண்ணிப் பார்ப்பதில்லை: ஒரே மானியக் குழுவின் கீழ், ஒரே அரசரின் .(Chancellor – Governor) கீழ் இயங்கும் ஒரு பல்கலைக் கழகத்தை மற்றொரு கழகம் மதிப்பதில்லை என்பது வெட்கக் கேடு அல்லவா! அதே வேளையில் அவ்வாறு மதிக்காத பல்கலைக் கழகத்தே கடலனைய குறைகள் மலிந்துள்ளதை அவர்கள் உணர்வதில்லை. இயேசுநாதர் கூறிய ‘உன் கண்ணி லிருக்கிற உத்தரத்தை எடுத்துப் போட்டு மற்றவன் கண்ணிலிருக்கும் துரும்பைப் பற்றிக் கருது’ என்று கூறிய நீதி இங்கு என் நினைவுக்கு வருகிறது.
அதே வேளையில் தன் கீழ் உள்ள தனக்கு வேண்டிய சில கல்லூரிகளுக்குத் தன்னாட்சி உரிமை வழங்கி, அவற்றுள் பல மனம் போனபோக்கில் செயல் இயற்றுவதையும் தேர்வு நடத்துவதையும் கண்டு கொள்ளாமல் பட்டம் வழங்கும் ஒரு பல்கலைக் கழகத்தைப் பற்றி அழுவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை. அண்மையில் அத்தகைய தன்னாட்சிக் கல்லூரிகளைப் பற்றி ஆராயவும், தேவையாயின் அவற்றைப் பழைய முறையில் பல்கலைக் கழகத்தோடு இணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் போவ்தாக அறிகிறேன். இன்று தமிழ்நாட்டில் அத்தகைய கல்லூரி ஒன்றின் செயல்பாட்டினால் பல இன்னல்கள் உண்டானதை நாளேடுகள் காட்டுகின்றன. அரசாங்கம் விரைந்து இத்தகைய செயல்களைத்திருத்த நலன் காணச் செயல்பட்டால் நாட்டுக்கும் நல்லது; அதற்கும் நல்லது:
தேர்வு முறை பற்றியும் முன்பே சில குறிப்பிட்டேன். இங்கே ஒன்றை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். தேர்வுகளை நடத்தும் பொறுப்பினைப் பல்கலைக் கழகமே கொண்டிருந்தாலும், அதை நடத்தத் தனி நிறுவனம் ஒன்றை:அமைத்து அதனிடம் ஒப்படைக்க வேண்டும். அது. பதிவாளர் அடியின் கீழோ வேறு வகையிலோ அடக்கமாகாது தனி நிலையில் இயங்கவேண்டும். தேர்வுக்குரியோரை- வினாத்தாள் தயாரிப்போர்- திருத்துவோர் பட்டியலைப் பல்கலைக் கழகம் தரலாம். தேர்வுகளும் நான் முன்னமே குறித்தபடி மாணவர் படித்த கல்லூரியிலேயே நடைபெறுவது தவறு.• உண்மையான அறிவுடையாரைக் கண்டறிய அது உதவாது. இதுபற்றி முன்னரே விளக்கியுள்ளேன். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்ற தேர்வுக் குழுவே தனி ஆதிக்கம் பெற்ற கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்லூரிகளுக்கும் உரிய தேர்வை நடத்தவேண்டும்.
நாளிதழ் வழியே (8.11.91-இந்தியன் எக்ஸ்பிரஸ்) ஒரு மாணவர் முறையாகப் பணம் கட்டித் தேர்வு எழுதியும் பதினான்கு மாதங்களுக்கு மேலாக அவர் தேர்வு முடிவினைத் தராத காரணத்தால், அவர் வழக்கிட, உண்மை கண்ட நீதிமன்றம் அவருக்குப் பல்கலைக்கழகம் இருபத்தெட்டாயிரம் (28,000) நட்டஈடாகத் தரவேண்டும் என ஆணையிட்டதென்பதை அறிய வருந்த வேண்டியுள்ளதல்லவா! இத்தகைய குறைகள் தவிர்க்கப் பெறவேண்டும். முறையான கவனிப்பும் மேற்பார்வையும் இருப்பின் இவை நிகழ வழி இல்லையே!.
நாட்டுப்புற அல்லது கிராமப்புறப் பல்கலைக் கழகங்களும் நாட்டில் சில உள்ளன. அவையும் மாநில அரசின் எல்லைக்குள்ளாகவே வரவேண்டும். கிராமங்களைப் பற்றி அறியும் வாய்ப்பு மாநில அரசுக்கே உண்டு. அங்கு வாழும் மக்களுக்கு உரிய தேவையான முறையில் கல்வி அளிக்கும் நெறி அறிந்து ஆற்றுப்படுத்தி இப்பல்கலைக் கழகங்களுக்கு வழிகாட்டும் முறை மாநில அரசுக்குத்தான் புரியும். கூடுமாயின் அத்தகைய பல்கலைக் கழகங்கள் இயங்கும் மாவட்ட ஆட்சியாளரைத் தலைவராகக்கொண்டு கற்றறிந்த நல்லவர்கள் அமைந்த ஒரு குழுவினையும் அதன் மேற்பார்வைக்கு என அமைக்கலாம். வெறும் பாடங்கள் மட்டுமன்றி. அம் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் அங்கே நிறைவு செய்யப் பெறல் வேண்டும். இன்றேல் வெறும் பெயரளவில் தான் அவை இயங்கும். இந்த நிலை முக்கியமாகக் கண்டு போற்றப்பெறல் வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் தாம் இயங்கும் அந்தந்தச் சமுதாய அமைப்பிற்கு ஏற்ப இயங்கவேண்டும். எங்கோ யாரோ வகுத்த பாடங்கள்-தேவையற்ற தெளிவற்ற எடுத்துக் காட்டுகள்-என்றோ எவரோ வகுத்த பாடமுறைகள் என்ற வகையில் இயங்காது அவ்வப்போது அதைச் சார்ந்த சமுதாயத்துக்கு ஏற்ற பாடங்களைத் திறன்றிந்து-முறை அறிந்து-சிலவற்றைத் தெளிவிக்கும் வகையறிந்து போற்றி அமைக்கவேண்டும்.
எனவே பல்கலைக்கழகங்கள் அவைஅவை வாழும் சூழலுக்கும் சமுதாயத்துக்கும் ஏற்றவகையில் பயன்படல் நலம் பயப்பதாகும். அதுவே நாடு வளர வழிகாட்டியாகவும் அமையவேண்டும்.
ஆரம்பக் கல்வி முதல் உயரிய 'டாக்டர்' பட்டம்பெறும் கல்விவரை ஒன்றற்கொன்று தொடர்பு கொண்டதாகவே அமையவேண்டும். பள்ளியில் எதையோ படித்து, மேநிலையில் தேவையற்றதைத் தேர்ந்தெடுத்து வெற்றி கண்டு, வேறு எதுவும் கிடைக்காததால் கிடைத்த எதிலோ சேர்ந்து எப்படியோ பட்டம்பெறும்நிலை படிப்பவருக்கும் நல்லதன்று; நாட்டுக்கும் நல்லதன்று. கோடி கோடியாகப் பணம்தான் வீணாகும். இவ்வாறு பயின்று, பட்டம் பெறுதல் உத்தியோகம் பெறுவதற்காகவே என்ற எண்ணமும் மக்கள் மனத்தில் உண்டாகக்கூடாது. உத்தியோகத்தைப் பட்டப்படிப்புடன் இணைத்துப் பார்க்கலாகாது என முன்னரே சுட்டியுள்ளேன். நான் மேநிலைப் பள்ளியில் சுட்டிக்காட்ட இருப்பதுபோன்று அங்கே தனியே அமைந்துள்ள கல்வி முறையில் பயின்றோரே அரசாங்க, பிற உத்தியோகப் படிப்பினைக் கற்றவரே அரசாங்கத்தும் பிறவிடத்தும் உத்தியோகம் பெறத்தக்கவர். பின் அவரவர் பணியாற்றும் நிலைக்கேற்ப வேறு தேர்வுகளில் (Departmental test) வெற்றிபெற்றுமேலே உயரலாம். இந்த நிலையில் கல்லூரியின் கனம் குறையும். அரசின் பணமும் மிச்சமாகும். சமுதாயமும் வீண்பொழுதில் காலம் கழித்தோம் எனக் கவலைப்படவேண்டி இருக்காது. இந்த வகையில் பல்கலைக்கழகங்களை உடனே திருத்தி அமைத்தல் அவற்றை உருவாக்கும் மாநில அரசுகளின் கடமையாகும் என உணர்ந்து அவை செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
(குறள்)
இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாம் உளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
(நாலடியார்)