அறிவுக் கதைகள்/தன்னம்பிக்கை

விக்கிமூலம் இலிருந்து

45. தன்னம்பிக்கை

வன விலங்குகளிலே புலி சிறுத்தை முதலியன வாழும் குகைகள் மிகவும் நாற்றமடிக்கும். அழுகல் இறைச்சியும் தோலும் முடியும் சிதறிக் கிடக்கும்.

ஆனால், சிங்கம் வாழும் குகையோ தூய்மையாக இருக்கும். அதற்குக் காரணம், நாளைக்கு வேண்டுமென்று இன்றைக்கே உயிர்களைக் கொன்று குகையில் கொண்டு வந்து இறைச்சிகளைச் சிங்கம் சேர்த்து வைப்பதில்லை. குகையினுள் பல நாள் படுத்து உறங்கும். இனி பசி தாங்காது என்றதும் மெல்ல எழுந்து குகையின் வாயிற் படிக்கு வந்து உடலை அசைத்து தலையை ஆட்டி—ஆ என்று கர்ச்சிக்கும்.

அந்த ஒலி எதிர்மலையிலே தாக்கித் திரும்பவரும். அங்கே காடு முழுதும் பரவியுள்ள மானும் முயலும் இதோ சிங்கம்—அதோ சிங்கம் என்று பயந்து நடுங்கிக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிவரும். அப்போது,

தன் குகை வாயிலண்டையிலே வருகிற ஒரு விலங்கை அடித்துத் தின்று, மீதியை அங்கேயே போட்டுவிட்டு. உள்ளே போய்ப் படுத்துக்கொள்ளும்.

எந்தக் கணம் தேவைப்படுகிறதோ அந்தக் கணமே தனக்கு உணவு தன் வாயண்டை வரும் என்ற திடமான நம்பிக்கை அதற்கு உண்டு. அவ்வளவு நம்பிக்கை சிங்கத்திற்கு!

பகுத்தறிவில்லாத வனவிலங்குகளுக்குள்ள இந்தத் தன்னம்பிக்கை—பகுத்தறிவு பெற்ற மனிதர்கள் பலரிடத்திலே இருப்பதில்லை.

தன் அறிவை நம்புவது; தன் பலத்தை நம்புவது; தன் பொருளை, தன் சமுதாயத்தை நம்பி வாழ்வது; இதுதான் தன் நம்பிக்கை!

இதைப் படிக்கிற நாம். இனியாவது தன்னம்பிக்கை கொண்டு வாழ்க்கை நடத்துவோமாக.