அறிவுக் கதைகள்/பல்லக்கும் கன்றுக்குட்டியும்
ஒரு மடத்திற்குச் சொந்தமான கன்றுக்குட்டியைக் காணாமல் தவித்த அந்த மடாதிபதி, தம் பல்லக்குத் தூக்கும் ஆட்கள் நால்வரையும் அழைத்து, கன்றுக் குட்டியைத் தேடி வரும்படி ஏவினார் அவர்கள் நால்வருமாகச் சேர்ந்து,
“சாமி, பல்லக்குத் தூக்குவதுதான் எங்கள் வேலை; கன்றுக்குட்டியைத் தேடுவது எங்கள் வேலையல்ல” என்று சொல்லிவிட்டனர்,
உடனே மடாதிபதி, “சரி, நானே கன்றுக்குட்டியைத் தேடப் புறப்படுகிறேன். பல்லக்குத் தயாராகட்டும்” என்றார். வெற்றிக் களிப்புடன் பல்லக்கைக் கொண்டு வந்தனர்.
மடாதிபதி அதில் ஏறி அமர்ந்து, ஊர் முழுவதும் பெரிய சாலைகள் எல்லாம் அலைந்து, பிறகு, சந்து பொந்து மூலை முடுக்குகளில் எல்லாம் பல்லக்கைக் கொண்டுபோகச் சொன்னார். மிகக் குறுகிய, நெருங்கடியான சந்துகளில் எல்லாம் போகமுடியாமல் கஷ்டப் பட்ட அந்த நால்வரும், பல்லக்கைக் கீழே இறக்கி வைத்து,
“சாமி, தாங்கள் இங்கேயே இருங்கள். நாங்களே போய்க் கன்றுக்குட்டியைத் தேடி வருகிறோம்” என்றனர்.
உடனே மடாதிபதி புன்னகையுடன் அவர்களைப் பார்த்து, “இவ்வளவு தூரம் நீங்கள் பல்லக்கையும், என்னையும் சுமந்துவந்து இங்கே இறக்கிவிட்டு, இப்போது தேடுவதை அப்போதே தேடியிருக்கலாமே!” என்றார்.
அவர்கள் வெட்கித் தலைகுனிந்து கன்றைத் தேடப் புறப்பட்டனர்.
இப்படிப்பட்ட வேலையாட்களும் உண்டு.