அறிவுக் கதைகள்/அபாயமும் உபாயமும்
வேற்றூர்க்குப் பயணமாக நடந்து கொண்டிருக்கிறான் ஒருவன். வழியிலே பாழ் மண்டபம். அதில் இரண்டொரு தூண்கள் விழுந்தும் உடைந்தும், மண்டபத்திலே கருங்கற்கள் சில சிதைந்தும், சிதறியும் கிடந்தன.
அதைக் கண்டதும், வழிப்போக்கன், ‘இதன் உள்ளே நுழைந்து சென்றால் நம்முயிர்க்கு ஆபத்து; மண்டபத்தின் கருங்கற்கள் நம் தலைமீது விழுந்துவிடும்’ இவ்வாறு சற்று நேரம் சிந்தித்தான் சுற்று முற்றும் பார்த்தான்.
மண்டபத்தைச் சுற்றி ஒற்றையடிப் பாதை இருந்தது. அதிலே நடந்து சென்றான் இருள் கவ்வும் நேரம், செடி கொடிகள் நடுவே படுத்திருந்த பாம்பை அவன் மிதிக்கவே, அது கடித்தது; கீழே விழுந்தான்; உயிர் துடித்தது.
அப்போது ‘அவன் : நினைப்பு’
“அபாயம் வரும் என்று நம்பி ஒர் உபாயம் தேடினேன். உபாயம் தேடிய வழியிலேயே அபாயம் வந்தது. சிறிதும் சிந்திக்காமல், மண்டபத்தைக் கடந்து வந்திருக்கலாம்; இந்த அபாயமும் வந்திராது மண்டபமும் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு உபாயம் தேடியதுதான் தவறு."
அதிகமாகச் சிந்தித்து — உபாயம் தேடியதே— அபாயமாய் முடிந்தது. இம்மாதிரி அனுபவம் தம் வாழ்க்கையில் பலருக்கு நேரிடுவதுண்டு. என் செய்வது? ‘அளவுக்கு மீறிய யோசனைகளால் ஆபத்து வருவது உண்டு’—என்பதற்கு இதுவும் ஒரு சான்று.