கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/வ.உ.சி. புலமை வல்லமை; இராஜாஜி குறள் கற்க ஆசை!

விக்கிமூலம் இலிருந்து

3.வ.உ.சி. புலமை வல்லமை
இராஜாஜி குறள் கற்க ஆசை!

வயது 23 சிதம்பரத்துக்கு! தந்தை உலகநாதன் பிள்ளை மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பி, திருச்செந்தூர் சென்று சுப்பிரமணிய பிள்ளை என்பாரின் மகள் வள்ளியம்மை என்பவரைப் பார்த்து மணம் செய்து வைத்தார் தமிழ் படித்த பெண் வள்ளியம்மை. தமிழ் இலக்கிய வகைகளை நன்கு கற்றுத் தேர்ந்த கன்னிகை. இந்த மாதரசி, திருக்குறள் போன்ற தமிழ்மறை நூல்களை தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களை வைகறையில் எழுந்து அதனதன் பொருளுடன் ஓதி கற்றுணர்ந்த தமிழ்க் கன்னியாக இருந்தார்.

அந்தப் பெண் சிதம்பரனாருடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு துன்பம் வந்த காலத்து இன்பமளிக்கும் ஊன்றுகோலாகவும், அறுசுவை உணவளிப்பதில் அன்னை போலவும், ‘நன்றும் தீதும் பிறர் தர வாரா’ என்பதைப் படித்துணர்ந்த பாவையாதலால் வ.உ.சி. பெயருக்கும், புகழுக்கும் ஏணியாக விளங்கி இல்லற வாழ்வை நல்லறமாக நடத்தி வந்தார்.

சிதம்பரனார், தனது குடும்பத்துக்குத் துணையாக, ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த ராமைய தேசிகர் என்பவருக்கு தம் இல்லத்தில் இடமளித்துக் காப்பாற்றி வந்தார். அவர் கண்களின் ஒளி இழந்தவர்; ஆனால், அந்த ஞானி அகக்கண்களை இழக்காத ஆன்மிகவாதியாக இருந்தார். அத்தகைய கண்பார்வை இழந்தவருக்கு சிதம்பரனார் இல்லத்தரசி அன்புடன், மனிதாபிமான நேயத்துடன் அவருக்குரிய பணிவிடைகளை முகம் சுளிக்காமல் நாள்தோறும் செய்து வருவார்!

உறவினர்களும் - அக்கம் பக்கத்தவர்களும் இதைக் கண்டு ஊமையாக இருப்பார்களா? இழிகுலத்தானை வீட்டில் வைத்துள்ளார்கள் என்று துற்றி வந்தார்கள்.

சிதம்பரம் தனது மனைவியிடம் கூறினார். அதற்கு அந்த மாதரசி, ‘துறவிக்குக் குலம் ஏது? உயிர்தேன்றும் இறைவன் உறைந்திருக்கிறான் என்று எனக்குக் கூறியது தாங்கள்தானே! தூற்றுவார் தூற்றட்டும். அவர்கள் ஒரு நாள் போற்றும் காலம் வரும். பொறுத்திருப்போம், நல்வழி நடப்போம்’ என்று பதிலளித்தார்.

இத்தகைய ஓர் அபூர்வ மங்கை திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக உயிர் நீத்தார்! எப்படி இருக்கும் சிதம்பரனாருக்கு? கவலையே உருவான கடலாக வாழ்க்கையோடு அலைமோதி சிதம்பரம் வாழ்ந்தார் இருப்பினும் காலம் அவர் மனத்தை மாற்றியது. அந்த வள்ளியம்மையாரின் குடும்பத்திலேயே அவரது தந்தையார் வேறோர் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார். அந்த அம்மையார் பெயர் மீனாட்சி. இருவரும் இல்லறவாழ்வில் இணைபிரியா மனமுடன் வாழ்ந்து வந்தார்கள்.

வள்ளியம்மை, ‘துறவிக்கு சாதி ஏது?’ என்று எவ்வாறு கேட்டாரோ அதே பண்புடன் மீனாட்சியும், சிதம்பரமும், மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு என்ற சாதி மனப்பான்மையை வெறுத்து, கடவுள் படைப்பிலே எல்லாரும் சமமே, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற தமிழ்த் தத்துவ நெறிக்கேற்றவாறு வாழ்ந்து வந்தார்கள்.

சிதம்பரம் சில மாதங்கள் சென்னை மாநகரில் வசிக்கும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. அப்போது சென்னையில் ரிப்பன் அச்சுக்கூடம் என்ற ஓர் அச்சகம் புகழ் வாய்ந்த பெயருடன் இருந்தது. அங்கே, தமிழ் சம்பந்தப்பட்ட பல அறிவாளர்களும், அரசியல் தொடர்புடைய சிலரும் அடிக்கடி வந்து போகும் அச்சகம் அது.

ஒரு நாள் அந்த அச்சகத்துக்கு சிதம்பரனார் சென்றார். அங்கே சகஜானந்தர் என்ற ஒருவர் இருந்தார், வ.உ.சி. அவரை அணுகி ‘நீர் என்ன சாதியோ? என்றார். உடனே அந்த சகஜானந்தர், ‘ஐயா நான் நந்தனார் வகுப்புப் பிள்ளை’ என்றார்.

உடனே சிதம்பரனார் அவரது இரு கைகளையும் இறுகப் பற்றி, நீர் உண்மையை ஒளிக்காமல் கூறியதால், ‘நீர் தான் உண்மையான அந்தணர்’ என்று மகிழ்ந்து அவரை அனைத்துக் கொண்டு ஆரவாரம் செய்தார். சகஜானந்தரைத் தனது ஊருக்கு உடன் அழைத்து வந்தார். மனைவியை உணவளிக்குமாறு கூறி, அவரின் விவரத்தை மனையாளுக்குத் தெரிவித்தார்.

நாள்தோறும் சகஜானந்தருக்கு சிதம்பரனார் திருக்குறள் போன்ற சிறந்த நூல்களை எல்லாம் கற்பித்தார் அப்போதெல்லாம் தூத்துக்குடியிலே உள்ளவர்களில் சில தமிழார்வம் கொண்டவர்கள், தினந்தோறும் அவரது வீட்டுக்கு வந்து தமிழ் நூற்களை இலக்கண இலக்கிய உணர்வுகளோடு கற்று வந்தார்கள். இதுபோல தமிழ்ப் பாடங்களைப் பலர் சிதம்பரனாரிடம் படித்தார்கள்.

தமிழ்க் கல்வியைச் சிதம்பரனார் பிறருக்குப் போதிக்கும் போது ஒரு நிபந்தனையை விதிப்பார் விதிப்பார் என்றால் அது உதட்டளவில் அல்ல; உணர்வளவில் செயலளவில் கடைப்பிடிக்க வேண்டும் என்பார்.

என்ன அந்த விதி என்கிறீர்களா? வேறொன்றுமில்லை. முதல் நாள் கற்க வந்தவர்களுக்கு என்ன பாடத்தைச் சிதம்பரனார் கற்றுத் தருவாரோ, அதை அப்படியே பொருள் புரிந்து, மறுநாள் எழுத்துத் தவறாமல் ஒப்புவிக்க வேண்டும். அவ்வாறு, மனனம் செய்யாதவர்களுக்கு மறுநாள் வேறுபாடத்தை நடத்தவே மாட்டார். இதுதான், சிதம்பரனாரின் கல்விச் சித்தாந்தம்.

இதனை அறிந்த ராஜாஜி, சிதம்பரனாரிடம் திருக்குறள் பாடம் பெற வேண்டும் என்று விரும்பினார். சிதம்பரனார் சென்னை வந்து சில மாதங்கள் தங்கும் வாய்ப்புப் பெற்றிருந்த போது, இராஜாஜி வ.உ.சி.யிடம் சென்று தனக்குத் திருக்குறள் பாடம் பயிற்சித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தனது கல்விச் சித்தாந்தத்தின் விதியை சிதம்பரனார் விளக்கிக் கூறினார். ராஜாஜி அதைச் சரியென ஏற்றார். ஆனால், சிதம்பரனார் சித்தாந்தத்தின் படி நடக்க ராஜாஜிக்குப் போதிய கால வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் வேறு பாடம் பயிற்சித் தர அவர் மறுத்து விட்டார். இதைக் கண்ட ராஜாஜி, ஐயா சிதம்பரம், எனக்குப் பாடம் சொல்லித் தரும் பொறுமை உமக்கும் இல்லை தங்களிடம் பாடம் கேட்கும் பொறுமை எனக்கும் இல்லை என்று கூறி, அன்று முதல் பாடம் கேட்கும் பேற்றை இழந்தார் ராஜாஜி!

சென்னை மாநகரிலே இருந்த சிதம்பரனார் மீண்டும் ஒட்டப்பிடாரம் சென்றார். உடன் சகஜானந்தரையும் மீண்டும் அழைத்துச் சென்றார். எல்லா விழாக்களுக்கும் சகஜானந்தரை எங்கு போனாலும் அழைத்துச் செல்வார்! செலவாயிற்றே என்பதை அவர் பொருட்படுத்தமாட்டார்.

எவராவது தன்னுடன் இருக்கும் சகஜானந்தரை நெருங்கி அவரது சாதியைப் பற்றி விசாரித்தால். அவர் துறவி! யோகிகளிடம் சாதியை விசாரிப்பது தவறு என்று சிதம்பரம் கூறுவார்! ஒரு முறை சகஜானந்தரிடம் சிதம்பரனாரின் வழக்குரைஞர் நண்பர்கள் கேட்டபோது, “என்னைச் சிதம்பரனார் தனது பிள்ளையைப் போல பாசத்துடனும், நேசத்துடனும் வளர்த்த பெருந்தகை வள்ளல்” என்றார்.