உள்ளடக்கத்துக்குச் செல்

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/வாழையடி வாழையென; வ.உ.சி. வக்கீலானார்!

விக்கிமூலம் இலிருந்து

2. வாழையடிவாழையென
வ.உ.சி. வக்கீலானார்!

பண்டைக் காலத்தில் தமிழகத்தின் மதுரை, நெல்லை மாவட்டப் பகுதிகள் எல்லாம் பாண்டிய மன்னன் செங்கோலில் செழுமையாக இருந்து வந்தன. அறநெறி பிறழாத அரசர்களும், போர்முனையில் புறங்காட்டி ஓடாத வீரர்களும், நாணயம் தவறாத வணிகர் பெருமக்களும், வாய்மையே உயிரென வாழ்ந்த, புலவர் பெருமக்களும், “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று நம்பி வாழ்ந்த நெறி பிறழாத மக்களும் வாழ்ந்த நாடு. மூவேந்தர் வாழ்ந்த தமிழ்நாடு! அந்நாடுகளுள் ஒன்று பாண்டியர் நாடு!

இத்தகைய புகழ் பெற்ற மண்ணான நெல்லை மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் என்ற சிற்றறூரில்தான் “வரியா? வெள்ளையனுக்கா? தரமாட்டேன்” என்று மறுத்து வீறு கொண்டெழுந்த கட்டபொம்மன் பிறந்தான்!

இதே மண்ணில்தான் ‘ஆற்காட்டு நவாப்பா? உனக்கேன் வரி? எதற்காக நான் கொடுக்க வேண்டும்’ என்று ஏறுபோல முழக்கமிட்ட பூலித்தேவன் என்ற மாவீரன் பிறந்தான்.

ஒட்டப்பிடாரத்திற்கு வடக்கே உள்ள எட்டையபுரம் என்ற ஊரிலேதான், மக்கள் கவிஞன் பாரதி தோன்றினார். நாவலர் எஸ்.எஸ். சோமசுந்தர பாரதி பிறந்தார். இத்தகைய பெருமைகளுக்கும், புகழுக்கும் சிகரமாக விளங்கிய சிற்றூரான ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதன் பிள்ளைக்கும், பரமாயி அம்மையாருக்கும் மகனாக, வ.உ.சிதம்பரனார் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று பிறந்தார். அவருடன் நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் பிறந்தார்கள்.

சிறுவன் வ.உ.சிதம்பரம், திண்ணைப் பள்ளிக் கூடத்தில், வீரப்பெருமாள் அண்ணாவி என்ற வாத்தியாரிடத்திலே ஆரம்பக் கல்வியைக் கற்றார். ஆசான் அண்ணாவி விதைத்த தமிழ் வித்து அருகம்புல்போல வேரோடி ஆல் போல விழுது விட ஆரம்பித்தது. ஆங்கில மொழியை வழக்குரைஞர் உலகநாதன் பிள்ளை சிதம்பரம் பிள்ளைக்குப் போதிக்கலானார்!

ஏனென்றால், அக்காலத்திலே ஆங்கிலம் கற்பிக்கும் கல்விக்கூடம் ஒட்டப்பிடாரத்திலும் சரி, சுற்றும் முற்றும் உள்ள முக்கிய ஊர்களிலும் சரி இல்லை என்றே கூறலாம். அதனால் ஆங்கிலம் போதிக்கும் பள்ளியை உலகநாதன் பிள்ளை தனது சொந்த செலவிலேயே ஆரம்பித்தார். தனது மகன் சிதம்பரத்துக்காகத் துவங்கப்பட்ட அப்பள்ளியில் அவர் மகன் ஒருவர் மட்டுமே படித்தார். பிறகு நாளடைவில் அவ்வூர் பிள்ளைகளும் ஆங்கில மொழியைக் கற்க ஆரம்பித்தார்கள்.

அந்தப் பள்ளிப் படிப்பை படித்து முடித்தவுடன் சிதம்பரம், தூத்துக்குடி செயிண்ட்பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் சேர்ந்து படித்த பின்பு, கால்டுவெல் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் கல்வியை முடித்தார். இவ்வாறு சிதம்பரம் ஆங்கிலத்திலும் தமிழறிவிலும் சிறந்து விளங்கினார்.

சிறுவயதில் துடுக்குத்தனம் செய்பவராக சிதம்பரம் இருந்ததால், அவரது தந்தை அடிக்கடி அடித்து விடுவார். அதனால், வீட்டைவிட்டு சிதம்பரம் ஓடி விடுவார். ஒரு சமயம் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி, தலையை மொட்டையடித்துக் கொண்டு பட்டினத்து அடிகளைப் போல துறவியாகி விட்டார். கட்டிய கோவணத்துடன் அவர் ஊர் ஊராகச் சுற்றி வந்தார். வெளியூரிலே இருந்து சிதம்பரம் தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய ஒரு கடிதம் உலகநாதன்பிள்ளையின் கைக்குக் கிடைத்ததும், அவர் மதுரை மாநகரிலே திரியும் தனது மகனைச் சென்று பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.

சிதம்பரத்தின் குறும்புத் தனங்களை எப்படியும் குறைத்து அவரை நல்வழிப்படுத்த எண்ணிய உலகநாதன் பிள்ளை, ஒட்டப்பிடாரம் ஊரிலே உள்ள ஒரு வட்டாட்சி அலுவலகத்தில் தனது மகனைக் குமாஸ்தா பணியிலே சேர்த்தார். ஆனால், அந்த வேலையில் அவர் சில மாதங்களே பணியாற்றினார். பிறகு, வழக்குரைஞர் படிப்புப் படிக்க அவருக்கு ஆர்வம் மேலிட்டது. அதனால், தனது மகன் சிதம்பரத்தை அவர் தந்தை, திருச்சியிலே அவரது சட்டத்துறை நண்பர்களான கணபதி ஐயர், ஹரிஹர ஐயர் என்பவர்களது கண்காணிப்பிலே சட்டப்படிப்பைக் கற்க வைத்தார். கி.பி.1890- ஆம் ஆண்டில் சிதம்பரம் சட்டப்படிப்பில் தேர்வாகி, வக்கீல் பட்டம் பெற்று, வழக்குரைஞரானார். மீண்டும் அவர் தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்துக்கு வழக்கறிஞராகத் திரும்பி வந்தார்.

சிதம்பரம், சிவில் கிரிமினல் இரண்டின் வழக்குகளையும் ஏற்று நீதிமன்றத்திலே புகழ் பெற்றார். ஆனால், அவருக்கு கிரிமினல் துறையிலேதான் அதிக வழக்குகள் வாதாட வந்து கொண்டிருந்ததால், அவரது முழுக் கவனமெல்லாம் கிரிமினல் துறையிலேயே பதிந்தது. நாளடைவில் அவர் புகழ் பெற்ற கிரிமினல் வக்கீலாகப் பெயரெடுத்தார். வருமானமும் நாளுக்கு நாள் பெருகியது. அவர் எடுத்துக் கொண்ட கிரிமினல் வழக்குகளில் எல்லாம் வெற்றிமேல் வெற்றி பெற்று வந்தார். அப்பகுதியிலே அவருக்கு கிரிமினல் வக்கீல் என்ற புகழ் பெருகி வரலாயிற்று.

சில வழக்குகள் வெற்றி பெறாது என்று அவர் உணர்ந்தால், அப்படிப்பட்ட வழக்குகளில் வாதாடி அவரது நேரத்தை வீணாக்காமல், பெயரையும் கெடுத்துக் கொள்ளாமல்; அந்த வழக்குகளைச் சமரசம் செய்து வைத்துத் தனது கட்சிக்காரர்களைத் திருப்திப் படுத்துவார். இது, அவரது நுட்பமான வாதாடும் புத்திக்கு வெற்றிப் படியாக அமைந்தது.

வழக்குக்காக வரும் கட்சிக்காரர்களிடம் ஏற்றத் தாழ்வு காட்டாமல், எல்லாரிடமும் அன்புடன் பேசி, எடுத்துக் கொண்ட வழக்குகள் தோல்வியுறாமல் வழக்குகளை நடத்தும் அவரது திறமைகளை உணர்ந்த அப்பகுதி மக்கள், அவரிடம் தனியொரு மதிப்பும், மரியாதையும் காட்டி மகிழ்ச்சியடைந்தார்கள்.

ஏழை மக்கள் மீது போலீசார் பொய் வழக்குகளைத் தொடுத்துள்ளார்கள் என்பதை அவர் நெஞ்சார உணர்ந்தால் - அந்த ஏழைகளிடம் பணமே பெறாமல் வழக்குகளை அவர் ஏற்று வாதாடி வெற்றி தேடித் தருவார்.

இதனால், போலீஸ்துறை அவருக்கு விரோதமாகி விடுமே என்று அவர் அச்சப்பட்டதே இல்லை. இந்தப் பழக்கம்தான் அவருக்கு எதிர்காலத்திலே வெள்ளையர் ஆட்சியை வேரறுக்கும் அஞ்சாமை உணர்வை உருவாக்கியது எனலாம்.

ஆனால், போலீஸ் துறையானது அவருக்கு அன்று முதலே பகையானது. வ.உ.சி. போலீசாரிடையே எப்போது வகையாகச் சிக்குவார் என்று சமயத்தை காவலர்கள் எதிர்நோக்கியே இருந்தார்கள். அதற்கேற்றவாறு, போலீஸ் அதிகாரிகள், தலைமை போலீஸ்காரர்கள் ஆகியோர், சுப்பிரமணியம் என்பவரைக் கொலை செய்ததாக வந்த ஒரு வழக்கில் வ.உ.சி.யையும் சேர்த்துக் குற்றவாளியாக்கி வழக்குப் பதிவு செய்தார்கள்.

சுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டதாக வந்த அந்த வழக்கில், வ.உ.சியை நீதிமன்றத்தில் வாதாட விடக்கூடாது என்ற அச்சத்தாலேயே அவரையும் சேர்த்துக் குற்றவாளியாகப் போலீசார் வழக்கைப் பதிவு செய்தார்கள்.

இந்த நுட்பத்தை அறிந்த வ.உ.சி., அந்த வழக்கிலே தான் வாதாடவில்லை என்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, அவ்வழக்கிலே இருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டார். ஆனால், அந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, எதிரிகளுக்காகத் திறமையோடு வாதாடி, அந்த வழக்கிலே வெற்றியையும் அவர் பெற்று விட்டதால், போலீசாரின் ஆத்திரம் என்ற நெருப்புக்கு - வழக்கு தீர்ப்பு என்ற நெய்யை ஊற்றியது போல ஆனது. அதனால், போலீசார் வ.உ.சி. மீதே வேறு ஒரு வழக்கைத் தொடர்ந்தார்கள்.

வ.உ.சி. மீது தொடுக்கப்பட்ட வழக்கை மாஜிஸ்திரேட் விசாரித்து, அது பொய் வழக்கு, ஜோடனை வழக்கு என்று காரணம் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். இந்த வழக்கை நடத்த சிதம்பரத்துக்கு ஆன செலவுகளையும் நஷ்ட ஈடாகத் தருமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். எந்த போலீஸ் அதிகாரி பொய் வழக்கை வ.உ.சி. மீது தொடுத்தானோ அவனுடைய வேலையையும் அவன் இழந்து விட்டான்.

தன் மீது போலீசார் தொடுத்த வழக்கில், நீதித்துறை லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியாற்றியதை நன்குணர்ந்த சிதம்பரம், ‘நீதித் துறையும் லஞ்சம் வாங்குவதா?’ என்ற கோபத்தில், லஞ்சம் வாங்கிய சப்-மாஜிஸ்திரேட் ஏகாம்பரம் என்பவர் மீது வழக்குத் தொடுத்து, அவருக்கும் தண்டனையைப் பெற்றுத் தந்தார் வ.உ.சி.! மற்ற இரு அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுள்ளதை சாட்சிகளுடன் நிரூபித்து, அவர்களுக்கும் கடும் தண்டனைகளைப் பெற்றுத் தந்தார் சிதம்பரம்.

தன்மீது அதிகாரிகள் லஞ்சம் பெற்று வழக்குப் போட்டதை நிரூபித்து வ.உ.சி. அவர்களுக்குத் தண்டனைப் பெற்றுத் தந்த சம்பவம், அவரது தந்தை உலகநாதப் பிள்ளைக்கு ஒருவித அச்சத்தை உண்டாக்கியது. ஏனென்றால், போலீஸ்துறை, நீதித்துறை அதிகாரிகளை தனது மகன் பகைத்துக் கொள்வது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால், தந்தையின் சொற்படி வ.உ.சி. ஒட்டப்பிடாரம் நீதிமன்றத்திலே இருந்து துத்துக்குடி நீதிமன்றத்துக்கு 1900 ஆம் ஆண்டு சென்று பணியாற்றலானார்.