உள்ளடக்கத்துக்குச் செல்

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/இவர் தான் வ.உ.சி.; அவர் எண்ணங்கள் சில

விக்கிமூலம் இலிருந்து

கப்பலோட்டிய தமிழன்
வ.உ.சிதம்பரம்


1. இவர்தான் வ.உ.சி.
அவர் எண்ணங்கள் சில

வீரம் விளைந்த பாண்டிய நாட்டின் வித்தகர்களில் ஒருவராக விளங்கியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. புறநானூற்று வீரம் போற்றும் வீரச் சிங்கமாகப் பிறந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற தொண்டு ஞானத்துக்குத் தொண்டராகத் தோன்றியவர் மாவீரர் வ.உ.சி!

வடநாட்டுத் தேசிய செருகளத்துப் போர் முனைக்கு ஒரு திலகர் வாய்த்தாரென்றால், தென்னாட்டுத் தேசியத்துக்கு சுதந்திர உணர்ச்சியை ஊட்டி வளர்த்த தந்தையாக நடமாடிய தன்மான வீரர் வ.உ.சி

இல்லையென்றால், “எங்கள் மன்னன் திலகர் உயிருடன் இருந்திருந்தால், இந்தப் பேடித்தனமான ஒத்துழையாமைத் திட்டத் தீர்மானத்தைக் கொண்டு வர இந்தக் காந்தி துணிவாரா?” என்று, கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் மகா சிறப்புச் சபையில் காந்தி பெருமானை நேருக்கு நேராகக் கேட்ட அஞ்சா நெஞ்சராக சிதம்பரம் இருந்திருப்பாரா?

வ.உசிதம்பரத்தின் இந்த உட்கட்சிப் போர் முழக்கம் கேட்ட காங்கிரஸ் மாநாடே திணறியது! இதை விட வேறு சான்று என்ன வேண்டும், ஒரு மாவீரனின் அரசியல் ஆண்மைக்கு?

அரசியல் அறப்போரோ, அல்லது மறப்போரோ, அவை எதுவானாலும் சரி, சாம, பேத தான, தண்டம் என்ற நான்கு யூகங்களையும் சமயத்துக்கேற்றவாறு வியூகங்களாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, சத்தியம், சாந்தம் என்கின்ற வைதீக மனப்பான்மைகள், விடுதலைப் போர்க்களத்திலே நல்ல, அமைதியான, வெற்றிகளைத் தேடிக் கொடுக்காது. என்ற மராட்டியச் சிங்கமான திலகரின் கொள்கைகளுக்குத் தமிழ் நாட்டின் வாரிசாக வாய்த்தவர் வ.உ.சிதம்பரனார்!

நாட்டு விடுதலைக்கு இந்திய மண்ணிலே, தியாகத்தை விதைகளாகத் தெளித்துப் பயிரிட்ட அறிவியல் வித்தகர் வ.உ.சி. இவரைப் போல வேறு யாராவது நாற்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற - அதாவது இரண்டு ஆயுள் தண்டனைகளைப் பெற்ற வீர நாயகன் யாருமே இந்திய வரலாற்றிலே இல்லை. இன்று வரை உலக சுதந்திர வரலாற்றிலே நெல்சன் மண்டேலா ஒருவரைத் தவிர வ.உசியுடன் ஒப்பிட வேறு எவருமில்லை!

தனிப்பட்ட தனது நண்பர்கள் இடையேயும் சரி, அல்லது அரசியல் அரங்குகளானாலும் சரி, அங்கே, தனது சூது வாதுகளற்ற உள்ளத்து உணர்வுகளால் தனது பெருமைகளைக் குறைத்துக் கொண்டும், மதிவன்மைகளைத் தாழ்த்திக் கொண்டும் பேசி, மற்றவர்களையும், உண்மைத் தேச பக்தர்களின் ஆற்றல்களையும் உயர்த்திப் பேசியவர்.

வ.உ.சிதம்பரனார், காந்தி பெருமானிடம் தளராத பற்றும், நம்பிக்கையும், பாசமும் – பண்பும் கொண்டவர்தான் என்றாலும் கூட, காந்தீயத்தால் இந்திய நாட்டிற்கு ஏராளமான தீமைகளே ஏற்படும் என்று, வைராக்கியமாக, விடாப்பிடியாக, ஓய்வு ஒழிச்சலின்றிப் பிரச்சாரம் செய்து வந்தார்:

அதனால்தான் தனது இறுதிக் காலத்தில் அரசியல் தொண்டிலே தனக்குத் தானே வீழ்ச்சியை விளைவித்துக் கொண்ட பிடிவாதக் குணக்குன்றாக சிதம்பரனார் நின்றார்.

யாராக இருந்தாலும் சரி, தனது கொள்கைகளுக்கு உடன் படாதவர்களது உண்மைத் தன்மைகளை, வ.உசியார் உளமார உவந்து அவர்களை வரவேற்று; ‘நம்பியவர்களுக்குத் துரோகம் செய்யாதே’, என்ற உயர்வான நோக்கத்தை அவரவர்களுக்குப் போதித்தார் என்பதை நோக்கும் போது - அவரது பண்பாடு பாராட்டக் கூடியதாக உள்ளது.

பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் அதிகார, ஆணவக் கோட்டையைத் தகர்த்தெறியப் புறப்பட்டு விட்ட ஒரு பெரும் படையின் சக்திக்கு; தென்னகத்தின் தளபதியைப் போல, தமிழன் சிதம்பரம் பிள்ளை, வெறியுடனும், மனக் களிப்புடனும் தேச விடுதலைக் களவீரராக காட்சியளித்தார்!

ஆங்கிலேயர் ஆட்சியை இந்திய நாட்டை விட்டே விரட்டுவதில் முரட்டுத்தனம் காட்டியவர். ஆனால், இளகிய மனமும் இனிய குணமும் உடையவர். அதே நேரத்தில் தன்னைச் சூழ்ந்த தொண்டர்களிடத்திலும், தன்னை நம்பிப் பின்பற்றி வரும் பொதுமக்களிடத்திலும், நலமாகவும் நாகரிகமாகவும், அவர் நடந்து கொண்டவரே அல்லாமல், எவரிடத்திலும், எங்கும், அற்பத்தனமான மரியாதைகளையோ, வாக்குவாதங்களையோ செய்தவர் அல்லர் வ.உ.சி!

தமிழ் நாட்டின் ஒழுக்கங்களிலும், தமிழ்மொழி இலக்கியங்களிலும், நமது முன்னோர்கள் எந்தெந்த நோக்கங்களைச் சிறந்தனவென்று பின்பற்றி வாழ்ந்து வந்தனரோ, அந்தக் குணச் சிறப்புகள் எல்லாம் குறைவறக் கொண்டவராவார்.

சங்க இலக்கிய நூல்களிலும், தமிழர் தம் பண்பாடுகளிலும் அவர் ஆழ்ந்த ஈடுபாடுடையவர். தமிழனுடைய லட்சியப் பண்புகளான ஆன்மீக வழிபாடுகள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கடவுட் கொள்கைகளும் கொண்டவர்.

ஒருவரிடம் இந்தப் பண்புகளில் ஒன்றிரண்டு சற்று அதிகமாக அல்லது குறைவாக அவரவர்களுடைய இயல்புகளுக்கு ஏற்றவாறு இருக்கலாம். ஆனால், இந்த நான்கில் ஒன்று குறைந்தாலும் அவன் தமிழன் இல்லை என்பது வ.உ.சி.யின் கருத்தாகும்.

நாட்டுக்காக வாழ்ந்த இந்த தேசபக்தனை நினைத்து நாமும் அவனைப் போல நாட்டுப் பற்றை வளர்த்து நாட்டுக்காக வாழ்ந்து காட்டுவோம்!