உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நண்பர்கள்/மூன்று தலைவர்கள்

விக்கிமூலம் இலிருந்து

மூன்று தலைவர்கள்

சென்ற இதழ் நாட்டுத் தலைவர் நால்வரைத் தாங்கி வெளிவந்தது. இவ்விதழ் மொழித் தலைவர் மூவரைத் தாங்கி வெளிவருகிறது. ஆம். மொழியின் தலைவர் மூவர் மட்டுமே ஆவர்.

பெயர்

அவர்கள் உயர்திருவாளர்கள் மறைமலை அடிகளார். திரு. வி. கலியாணசுந்தர முதலியார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் ஆகிய மூவருமே யாவர்.

குறிப்பு

இம்மூவரையும் முறையே அடிகள் என்றும், திரு. வி. க. என்றும், பாரதியார் என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

பிறந்த ஊர்

அடிகளுக்கு நாகப்பட்டினமும், திரு. வி. க. வுக்கு திருவாரூரும், பாரதியாருக்கு எட்டையபுரமும் ஆகும்.

வாழ்ந்த ஊர்

அடிகள் பல்லாவரத்தையும், திரு. வி. க. சென்னை இராயப்பேட்டையையும், பாரதியார் மதுரையை யடுத்த பசுமலையையும் தங்கள் வாழ்க்கைக்கேற்ற இடங்களாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

உரிமை

தமிழுக்கு உரிமையுடையவர்கள் இம் மூவருமேயாவர். இவர்களின் அனுமதியின்றித் தமிழ் மொழியில் கைவைக்க எவருக்கும் உரிமை இல்லை. அத்தகைய மக்களும் தமிழ் கூறும் நல்லுலகில் இன்றைக்கு இல்லை.

புலமை

திரு. வி. க. ஒரு தமிழ்ப் புலவர். பாரதியார் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிப் புலவர். அடிகளார் ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மும்மொழிப் புலவர்.

வாழ்க்கை

அடிகளார் துறவி பூண்டு வாழ்பவர். பாரதியார் இல்வாழ்விலேயே இருப்பவர். திரு. வி. க. இரண்டிலும் கலந்து வாழ்பவர்.

வெறுப்பு

பாரதியார் வழக்கறிஞராயிருந்தும் அத் தொழிலை வெறுத்தவர். திரு. வி. க. மனைவியார் இறந்ததும் மனை வாழ்வை வெறுத்தவர். அடிகளார் துறவியாயிருந்தும் சந்நியாசத்தை வெறுத்தவர்.

அரசியல்

திரு. வி. க. அரசியலில் என்றைக்கும் தலையிடுபவர். பாரதியார் அரசியலில் தலையிட்டும், இடாமலும் இருப்பவர். அடிகள் அரசியலில் என்றைக்கும் தலையிடாதவர்.

தமிழ்
அடிகளின் தமிழ் சைவத் தமிழாகும். திரு. வி. க. வின் தமிழ் அரசியல் தமிழாகும். பாரதியாரின் தமிழ் இலக்கணத் தமிழாகும்.
எழுத்து

பாரதியார் அடித்தும், திருத்தியுமாவது தன் கையாலேயே எழுதும் ஆற்றலுள்ளவர். அடிகளார் அடித்தலும், திருத்தலும் இல்லாமல் அச்சுப்போல் எழுதும் ஆற்றல் படைத்தவர். திரு. வி. க. தன் கையாலெழுதும் எழுத்து வேலையை அடியோடு விட்டுவிட்டவர்.

பேச்சு

பாரதியாரின் பேச்சில் உணர்ச்சி கலந்திருக்கும். அடிகளின் பேச்சில் ஆராய்ச்சி கலந்திருக்கும். திரு. வி.க வின் பேச்சில் தீஞ்சுவை கலந்திருக்கும்.

பத்திரிகை

வாரப் பத்திரிகை நடத்தியவர் திரு. வி. க. மாதப் பத்திரிகை நடத்தியவர் அடிகளார். ஒரு பத்திரிகையும் நடத்தாதவர் பாரதியார்.

நூல்கள்

அதிக நூல்களை எழுதியவர் அடிகள். குறைந்த நூல்களை எழுதியவர் திரு. வி. க. சில நூல்களை மட்டுமே எழுதியவர் பாரதியார்.

பிள்ளைகள்
பெண்ணைப் பெற்று வளர்த்து காங்கிரசுக்கும், பிள்ளையைப் பெற்று வளர்த்து சுயமரியாதைக்கும் தந்தவர் பாரதியார். பிள்ளையைப் பெற்று வளர்த்தும் பெண்ணைப் பெற்று வளர்த்தும் தமிழுக்குத் தந்தவர் அடிகளார். எதையும் பெற்று எதற்கும் தராதவர் திரு. வி. க.
தலைமை

இம் மூவரையும் தலைமை வகிப்பதற்கென்றே எல்லோரும் அழைப்பார்கள். அத்துடன் ஒரு சொற்பொழிவும் தனியாக இருக்கவேண்டும் என்று கேட்காத சங்கங்களோ சபைகளோ தமிழ் நாட்டில் இல்லை.

நிலை

பொருளும் வசதியும் பெற்றுப் பேசச்செல்லும் நிலையில் இருப்பவர் அடிகளார், வசதி மட்டும் பெற்று பேசச் செல்லும் உடல் நிலையில் இருப்பவர் பாரதியார். வசதி பெற்றாலும் பேசச் செல்ல இயலாத உடல் நிலையில் இருப்பவர் திரு.வி.க.

வம்பு

வம்புக்கு அஞ்சுபவர் அடிகளார். வம்புக்கு அஞ்சாதவர் பாரதியார். வம்புக்கே வராதவர் திரு.வி.க

கடவுள்

கடவுளைச் சிவமாகக் காண்பவர் அடிகளார். கடவுளை முருகனாகக் காண்பவர் திரு.வி.க. கடவுளை அருவமாகக் காண்பவர் பாரதியார்.

ஆரியர்

ஆரியரை ஆரியராகக் காண்பவர் பாரதியார். ஆரியரைத் தமிழராகக் காண்பவர் திரு.வி.க. ஆரியனாகவும் தமிழராகவும் இறைவனைக் காண்பவர் அடிகளார்.

வருந்துதல்

“சைவத்தைக் குறை கூறும் மக்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்களே” என்று வருந்தியவர் அடிகளார். “தமிழைக் குறை கூறும் மக்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்களே” என்று வருந்தியவர் பாரதியார். “இவர்கள் இருவரும் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறார்களே” என்று வருந்தியவர் திரு.வி.க.

ஒரே மேடை

இம் மூவரையும் ஒரே மேடையிற் காண்பது என்பது எவராலும் இயலாது. என் வாழ்நாளிலேயே ஒரு முறைதான் அத்தகைய வாய்ப்பு எனக்கு சென்னையில் கிடைத்தது.

ஒரே பெயர்

இத் திருமூர்த்திகளையும் ஒரு மூர்த்தியாக்கி திரு.வி.க. மறைமலைப் பாரதியார் என தமிழ் உலகிற் கூறுவதுண்டு. காரணம் இம் மூவரும் தமிழே ஆழ்ந்து, தமிழே பேசி, தமிழ் உருவம் பெற்ற ஒன்றினாலேயே ஆம்.

முதுமை

ஆண்டுகள் அறுபதை மூவரும் கடந்து, முதுமையைப் பெற்று, உடலும் தளர்ந்து, உணர்வும் தளர்ந்து, பொதுத் தொண்டுகளுக்கும் ஒருவாறு முடிவு கட்டிவிட்டனர் என்றும் கூறலாம்.

இளமை

என்றாலும், இன்றைக்கும்கூட தமிழுக்கு ஊறு என்று கேள்விப்படுவார்களானால், அவர்களின் உள்ளத் லும், உணர்ச்சியிலும், உடலிலுங்கூட- இளமையின் தோற்றத்தை எளிதிற் காணலாம்.

ஒத்த உள்ளம்
“தமிழ்மொழி தனிச் சிறப்புடையது. தனித்து இயங்கும் தன்மையுடையது. எந்த மொழியின் துணையும் அதற்கு எள்ளளவுந் தேவையில்லை. தமிழன் தமிழை முன்னிறுத்தி தமிழ் வாழ்வு வாழவேண்டும்” என்பதில் இம் மூவரும் ஒத்த உள்ளம் படைத்தவர்கள்.
பெருந்தவறு

இம்மூவரையும் தமிழ் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது தமிழ்நாடு செய்த பெருந்தவறேயாகும்.

தேவை

அடிகளின் தனித்தமிழ் உணர்ச்சியும், திரு. வி. க. வின் இலக்கிய உணர்ச்சியும், பாரதியார் அவர்களின் வீர உணர்ச்சியும் தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழகத்திற்கும் தேவை.

அரும் புதையல்

பணம் படைத்தவருள் எவரேனும் ஒருவர், நல்ல மனம் படைத்து, இம் மூவரிடத்தும் ஆறு புலவர்களை அனுப்பி, அவர்கள் தம் உள்ளத்தே ஆய்ந்து, தேடி, முடக்கி வைத்திருக்கும் அரும் புதையல்களை வெளிக் கிளப்பி, எழுதி, வெளியிட்டு, நாட்டிற்கு அளித்து நல்வாழ்வு வாழ வேண்டும் என்பது நமது ஆசை.

வாழ்க மூவர் வாழ்க தமிழ்மொழி!

—தமிழர்நாடு, 21—12—1947