உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நண்பர்கள்/நல்ல தமிழன் பேச்சுடன் கண்டேன்

விக்கிமூலம் இலிருந்து
நல்ல தமிழன்
பேச்சுடன் கண்டேன்

ம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள். ஊர் திருச்சி. இடம் நகர சபை நாடகக் கொட்டகை. நீதிக் கட்சி மாநாடு ஒன்று பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மகாநாட்டிற்கு வந்திருந்த கட்சித் தலைவர்கள் தங்களின், “ஆங்கிலப் பேச்சுக்களை மொழி பெயர்த்துக் கூறச்செய்யுங்கள்” எனக் கேட்டுக்கொண்டனர். முன்னேற்பாடு இல்லாத இத்திடீர்த் திட்டத்தையும் நடத்திவிட முயன்றேன். ஆங்கிலம் தெரிந்த அனைவரையும் அணுகினேன். மறுத்து விட்டனர். வழக்கறிஞர் ஒருவரை நெருங்கினேன். மன்னிக்கும்படி வேணடினார். விட்டு விலகினேன். இவ்வளவு பெரிய கூட்டத்தில் மொழி ஆற்றல் உள்ள தமிழன் ஒருவனும் இல்லையே என வருந்தினேன். வருந்தியது அதிகமா? வெட்கப்பட்டது அதிகமா? தெரியவில்லை.

இந்த நிலையில் ஒருவர் என் அருகில் வந்து, “மொழி பெயர்க்க ஆள்வேண்டுமா?” என்றார். “வேண்டும், யார் அது?” என்றேன். “கல்லூரி மாணவர் ஒருவர் வந்திருக்கிறார்; மொழி பெயர்ப்பார்” என்றார். எனக்கு இன்னும் சிறிது அதிகமாகக் கோபம் வந்தது. பெரிய தலைவர்களின் அரசியல் பேச்சுக்களை பள்ளிக்கடத்துப் பிள்ளைகளைக் கொண்டு மொழி பெயர்ப்பதைவிட, ஆங்கிலப் பேச்சு ஒன்றே மகாநாட்டைச் சிறப்பித்து வைக்கும் என நம்பிச் சும்மா இருந்துவிட்டேன். “மொழி பெயர்க்க ஆள்வந்து விட்டதா?” என்ற கேள்வி தலைவர்களிடமிருந்து என்னிடம் வந்தது. வேறு வழியில்லாமல், அதே மாணவரிடமே சென்று, “தம்பீ, நன்றாக மொழி பெயர்ப்பாயா?” என்றேன். “ஏதோ கொஞ்சம் தெரியும்” எனக் கூறினார். அந்தப் பதிலிலேயே கொஞ்சம் குறும்பும் கலந்திருந்ததாக எனக்குத் தோன்றியதால், சிறிது நம்பிக்கை ஏற்பட்டது.

மொழி பெயர்ப்பு முடிந்து, அருகிற் சென்று பெயர் வினவினேன். ‘அண்ணாத்துரை’ என்றார். மகாநாட்டினர்க்கு மகிழ்ச்சியோடு அறிவித்தேன். வழக்கறிஞரிடஞ் சென்று, “மறுத்தீர்களே. பார்த்திர்களா?” என்று பெருமிதமாகக் கேட்டேன். “மறுத்ததினால்தான் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைத்தார்” எனக் கூறினேன். அவரும் ஒரு சிறு சிரிப்புச் சிரித்தார். சொற்பொழிவு செய்தவரைக் கண்டு “மொழி, பெயர்ப்பு எப்படி?” என வினவினேன். “அதில் சிறிது சன்னப் பொடியும் கலந்திருந்தது” எனக்கூறி புன்னகை புரிந்தார்.

இந்த வகையில் நண்பர் சி. என். அண்ணாத்துரை எம்.ஏ., அவர்களை, முதன் முதலாகப் பேச்சோடு கண்டு மகிழ்ச்சியடைந்தேன். தமிழகத்தின் எதிர்கால நலனுக்கு இத்தகைய கல்லூரி மாணவர்கள் பலர் தேவை என எண்ணினேன். எனது எண்ணம் அன்றும் வீணாக்வில்லை, இன்றும் வீணாகவில்லை, என்றும் வீணாகப் போவதுமில்லை. இது எனது நம்பிக்கை.

கலைத் தலைவன்

கல்லூரியில் வருந்திக் கற்று, “கலைத்தலைவன்” என்ற எம்.ஏ. பட்டமும் பெற்று, பிறகு ஆசிரியர் துறையிலோ வழக்கறிஞர் துறையிலோ, வணிகத் துறையிலோ புகாமல், பொதுவாழ்வுத் துறையில் புகுந்தவர்—தமிழ் நாட்டில் முதன் முதலாக அன்பர் அண்ணாத்துரை ஒருவரே ஆவர். சுருக்கமாகக் கூறவேண்டுமானால், தமிழ் மக்களின் வாழ்வுக்காகத் தன் வாழ்வைப் பாழ்படுத்திக் கொண்டவர் எனக் கூறலாம். இதற்காக நண்பர் அண்ணாத்துரை அவர்களுக்குத் தமிழ் மக்கள் நன்றி கூறவேண்டும். அதைவிட அதிகமாக அவரை வளர்த்து, ஊக்குவித்து, நாட்டின் பொதுவாழ்வுக்கு தந்துதவிய அவருடைய “தொத்தாவுக்கு” (சிறிய தாயார்) நன்றியும், வணக்கமும் செலுத்தத் தமிழ் மக்கள் என்றும் கடமைப்பட்டவர்களாவர்.

இந்தி எதிர்ப்பு

1938–இல் நமது மாகாணத்தில் இந்தி எதிர்ப்புப் போர் நடைபெற்றது. அதை நடத்தியவர்களின் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே எனக் கூறலாம். அப் பேரை நடத்துவதற்கென்றே திருச்சியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டின் பொருட்டாகப் பெரும் பொறுப்புக்கள் சிலவற்றை நான் ஏற்றேன். பெரியார் சிறை சென்றதும், முழுப்பொறுப்பும் என்மீதே விழுந்தது. அப்பொழுதெல்லாம் அன்பர் அண்ணாத்துரை அவர்களைப் போன்ற பலருடைய ஒத்துழைப்பும், தொண்டும் இல்லாதிருக்குமானால், என்னால் ஒன்றும் செய்ய முடிந்திராது. இந்தியை எதிர்த்தும், அரசாங்கத்தின் கொள்கையைத் தாக்கியும் பேசிய குற்றத்திற்காக அவர் ஆறுமாதம் சிறைத்தண்டனையைப் பெற்றார். அப்போதுதான் தமிழ்நாட்டு மக்களிற் பலருக்கு அவரை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

அறிமுகம்
தமிழ்நாட்டு மக்களுக்கு அன்பர் அண்ணாத்துரையை அறிமுகப்படுத்தி வைத்தது யார்? என்று யாரோ கேட்டதாகத் தெரிகிறது. அவருக்குப் பதில் கூறுவதாயிருந்தால் “கேள்வியே தவறு” என்றுதான் பதில் கூறவேண்டும். கேள்வி, “அறிமுகப்படுத்திவைத்தது எது?” என்று இருக்கவேண்டும். அவ்விதம் இருக்குமானால், அது “அவரது தாய்மொழிப் பற்றும்,சீர்திருத்த உணர்ச்சி கலந்த பேச்சும்” என்று பதில் கூறலாம்.
மொழிப்பற்று

ஆங்கிலம் கற்றவர்களிற் பலர் அம்மொழியிலேயே ஆழ்ந்து விடுகின்றனர். இரண்டொருவர் கரை ஏறினாலும் அவர்கள் ஏறியது தமிழ்நாட்டுக் கரையாக இருப்பதில்லை. ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க்கரை ஏறிய அறிஞர்களுள் அன்பர் அண்ணாத்துரையும் ஒருவராவர். இத்துறையில் இதற்கு முற்பட்டவர்கள் பா. வே. மாணிக்க நாயக்கர், ச.சோ. பாரதியார், கா சுப்பிர மணியப்பிள்ளை, கோவை சர்.ஆர்.கே. வு.ண்முகம், இன்ஸ்பெக்டர் பவானந்தம் பிள்ளை, சி. கே. சுப்பிரமணிய முதலியார், எஸ். சச்சிதானந்தம்பிள்ளை, கே.எம். பாலசுப்பிரமணியம் முதலியோர் ஆவார். பிற மொழியிற் கண்ட கலை அறிவை தாய்மொழி வளர்ச்சிக்குப் பயன் படுத்துவதே தலையாய மொழிப்பற்று ஆகும். இத் துறையில் அன்பர் அண்ணாத்துரையின் கலை அறிவும், மொழிப்பற்றும் எவராலும் போற்றற்குரியனவாம்.

முறை
பெரியார் ஈ.வெ.ரா அவர்களுடன் நெருங்கிப் பழகிய இயக்க அன்பர்களிற் பலர், வெளியேறிக் கொண்டே இருப்பது வழக்கம். இது முறையாக நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். பிரிந்தவர்களை வெறுத்தும்: பெரியாரை ஆதரித்தும் வந்தவர்களில் நானும் ஒருவன் தான். காலக்கிரமத்தில் நானும் நெருங்கிப் பழகியதால் என்னுடைய முறையும் வந்துவிட்டது. காலியான என் இடமும் உடனே நிரப்பப் பெற்றது. என்னுடைய பணிகளில் காரியதரிசி வேலைக்கு அண்ணாத்துரையும், பொருள் வசூலிக்கப் பொன்னம்பலனாரும், சமாதானம் சொல்ல சாமி சிதம்பரனாரும் அமர்த்தப்பட்டனர், பின்னர் அவர்கள் மூவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வழக்கப்படி அவர்கள் வெளியேறும் முறையும் வந்து விட்டது. ஒரே அறிக்கையில் மூவரும் கையெழுத்திட்டு பெரியாரிடத்திலிருந்தும் ‘விடுதலை’யிலிருந்தும் விடுதலை பெற்றுக் கொண்டனர்.
தமிழர் நாடு

1941 இறுதியில் அன்பர் அண்ணாத்துரை அவர்கள் “திராவிட நாடு” என ஒரு இதழைத் தொடங்கப் போவதாக எழுதியிருந்தார். நான் அதைத் “தமிழர் நாடு” எனத் தொடங்கும்படி எழுதியிருந்தேன். பல முன்னேற்பாடுகள் நடைபெற்று விட்டதனால், இனிமேல் எதுவும் செய்வதற்கில்லையென அறிவிக்கப் பெற்றேன்.

இளைஞர் மாநாடு

1942 தொடக்கத்தில் சென்னை மாகாண ஜஸ்டிஸ் மாநாடு ஒன்றை சென்னையில் கூட்டுவதற்குப் பெரு முயற்சிகள் நடைபெற்றன. அம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் அன்பர் அண்ணாத்துரையே ஆவர். என்னைத் தலைமை வகிக்கும்படி மாநாட்டு அமைச்சர் எழுதியிருந்தார். தகுந்த காரணங்களைக் காட்டி மறுத்து விட்டேன். அக்கடிதத்தை அன்பர் அண்ணாத்துரை பார்வையிட்டு ஒரு வற்புறுத்தல் கடிதம் எழுதியிருந்தார். அது, இது :—

“அன்புள்ள தோழருக்கு,

வணக்கம்! தங்களை நேரில் காணவேண்டும் என ஆவல் எனக்கு அதிகம். என்றாலும், இது சமயம் வேலை மிகுதியினால் அங்குவர இயலவில்லை, என வருந்துகிறேன். தாங்கள் டில்லியிலிருந்து திரும்பியதும் தங்களுடன் ஒரு நாள் முழுதும் கலந்து பேசவேண்டும்.

சென்னை மாநாட்டிற்குத் தாங்களே தலைமை வகிக்கவேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறேன். மறுக்க வேண்டாம். திராவிட நாட்டுப்பிரிவினை பற்றிப் திருவாரூரில் தீர்மானம் நிறைவேறியிருப்பதால் அது குறித்து எதிர்ப்பது முறையாகாது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். தங்களுக்கு அது விருப்பமில்லாவிடில், தமிழ் நாடு தனி மாகாணம் ஆவதின் அவசியம் பற்றித் தலைமை உரையில் விளக்குங்கள். மற்றப்படி கட்சிகளின் ஆக்க வேலைகளைப் பற்றியும், கொள்கைகளைப் பற்றியும், நாம் இருவரும் ஒரு கருத்துக்கொண்டவர்களே.

திராவிட நாட்டுப் பிரிவினை என்பது, தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு முரண் அல்ல என்பதை இப்போதே கூறிவிடுகிறேன். மற்றவைகள் தாங்கள் டில்லி சென்று திரும்பியதும்.

கட்சி வேலை சம்பந்தமாகத் தோழர் சௌந்தர பாண்டியன் அவர்களிடமும் பேசியுள்ளேன். தங்களுக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். மகாநாட்டிற்குத் தலைமை வகிக்குமாறு மறுபடியும் கேட்டுக் கொள்கிறேன். .

தங்களன்புள்ள தோழன்,

சி என் அண்ணாதுரை.


மாறுபட்டார் வேறுபட்டார் எனக் கருதும்போதும், அவருடைய அன்பையும், பெருந்தன்மையையும் கட்சியின் மீதுள்ள பற்றையும் கொள்கையின் மீதுள்ள உணர்ச்சியையும் எடுத்துக் காட்ட இக்கடிதம் போதுமானது என்றே கருதுகிறேன்.

விட்ட இடத்திலிருந்து

1942 மார்ச் 15ஆம் நாளில் சென்னை செயிண்ட் மேரிஸ் ஹாலில் சென்னை மாகாண ஜஸ்டிஸ் இளைஞர் மாநாடு பெரிய அளவில் என் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவர் அன்பர் அண்ணாத்துரை அவர்கள். இயக்கத்தின் வேலைகளைத்தொடர்ந்து நடத்த வேண்டும் எனத் தனது வரவேற்பு உரையில் குறிப்பிட்டார். இயக்கத்தின் வேலைகள் தடைப்பட்டு இரண்டு ஆண்டுகள் பாழாய்ப் போயினவே. இப்போது என் செய்வது? என எனது தலைமையுரையில் வருந்திக் கூறினேன். இதை அன்பர் அண்ணாத்துரை அவர்கள் மனதில் வைத்துக்கொண்டேயிருந்து, நன்றி கூறும் பொழுது விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடங்குங்கள்” எனக் குறித்துக் கூறினார்.இது அனைவராலும் கைதட்டி வரவேற்கப்பட்டது.

நாங்கள அல்ல

1944—ல் ஈரோட்டில் இரண்டாவது நாடகக் கலை மகாநாடு சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பெரியாரைப் பின்பற்றுவோர்க்கும், சர். ஷண்முகத்தைப் பின்பற்றுவோர்க்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வந்ததினால், மாநாட்டில் கலவரம் ஏற்படும் என்ற வதந்தி உலவியது. பேசுவதற்காக என்று: நாங்கள் சென்றிருந்தோம் அன்பர் அண்ணாத்துரை பேசும் பொழுது,

“தலைவர் தங்கள் மீது வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் தயவுசெய்து அந்த எண்ணத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். கம்ப இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று நாங்கள் கூறுவதெல்லாம், அந்த நூலின் மீது எங்களுக்குள்ள வெறுப்பைக் காட்டுவதற்கே ஒழிய, உள்ளபடியே கம்ப இராமாயணத்திற்குத் தீ வைக்கும் கயவர்கள் நாங்கள் அல்ல.”

என ஒரு விளக்கப் போடு போட்டார். தலைவர் சர். ஷண்முகம் அவர்கள் சிரித்தார். “என்ன என்றேன்?” “சரிதான்” என்றார்.

சொற்போர்
திருவாளர் ஆர்.பி.சேதுப்பிள்ளை அவர்களுடன் ஒரு முறையும், பேராசிரியர் ச.சோ. பாரதியார் அவர்களுடன் ஒரு முறையும் கம்ப இராமாயணம் பற்றிச் சொற்போர் நிகழ்த்த, சென்னையிலும் சேலத்திலும் சில அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இரண்டிலும் அன்பர் அண்ணாத்துரையே வெற்றி பெற்றாரா? மற்ற இருவரும் வெற்றி பெற்றார்களா? என்ற கேள்வி இங்கு வேண்டியதில்லை. அவர்கள் இருவரும் சொற்போர் நிகழ்த்த, ஒப்பியதே அண்ணாத்துரைக்கு ஒரு வெற்றியாக அமைந்து விட்டது.
திராவிடக் கழகம்

திராவிடநாடு பிரிவினைப் பற்றிப் பேச்சுப் பிரசாரம் மட்டுமே நடைபெற்று வந்தது. அதன் பேரால் ஒரு கழகம் இருக்க வேண்டும் என்று எண்ணம், முதன் முதலாக அன்பர் அண்ணாத்துரைக்கே ஏற்பட்டது. அதன்படி காஞ்சிபுரத்திலேயே முதலில் திராவிடர் கழகத்தைத் தொடங்க எண்ணி முயற்சி செய்துவந்தார். பிறகு சேலம் நிர்வாகக் கூட்டத்தில் “தென்னித்திய நல உரிமைச் சங்கத்தையே திராவிடர் கழகம்” என மாற்ற வேண்டும்’ என்று தீர்மானம் செய்யப் பெற்றுத் திராவிடர் கழகத் தலைமை நிலையத்தின் உரிமையானது காஞ்சீபுரத்திலிருந்து ஈரோட்டிற்குச் சென்று விட்டது என்றாலும், அன்பர் அண்ணாதுரை அவர்கள் இதை வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை. இச்செய்தியைச் சிலரே அறிவர்.

பெரும பங்கு

தமிழ் நாட்டில் படிப்பில்லாத மக்களிற் பெரும்பான்மையோரைப் பேச்சின் மூலம் தட்டியெழுப்பிய பெருமையில் பெரும்பங்கு பெரியார் ஈ.வே.ரா அவர்களுக்கு உண்டு. அது போலவே, படித்த இளைஞர்களிற் பெரும்பான்மையோரைப் பேச்சின் மூலம் தட்டியெழுப்பிய பெருமையில் பெரும் பங்கு அன்பர் அண்ணாதுரைக்கு உண்டு என உறுதியாகக் கூறலாம்.

பேச்சாளர்

அன்பர் அண்ணாத்துரை ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்றாகப் பேசும் ஆற்றல் படைத்தவர். மேடை ஏறிப் பேசுகின்றவர்கள் பலராலும் பாராட்டப்படுபவர். இக்காலத்திய மேடைப் பேச்சுக்களில் பயனிலையை முன்னே வைத்துச் செயப்படு பொருளைப் பின்னே வைத்துப் பேசப்படுகிறது. அது “தூது அனுப்பினார், பதில் வந்தது” என்றிராமல், “அனுப்பினார் தூது, வந்தது பதில்” என்றிருக்கும். இம்முறையை நம்நாட்டில் முதலிற்புகுத்தியவர் அன்பர் அண்ணாத்துரையே ஆவர். இம் முறையானது மரபுக்கு மாறுபட்டது எனக் கூறினாலும், செவிச் சுவைக்கு வேறுபட்டது எனக் கடறிவிட முடியாது.

அவர் பேசும்பொழுது தன் குதிகாலை உயர்த்தி, உயர்த்திப் பேசுவது வழக்கம். பேச்சில் நகைச்சுவையும், வீரச் சுவையும் மாறி மாறிக் காட்சியளிக்கும். அடுக்குச் சொற்கள் அதிகமாக வந்து விழும். குறுகிய உருவமும், குறும்புப் பார்வையும், புருவ நெரிப்பும், இனிய குரலும், எடுப்பான ஒசையும், வெற்றிலை அடக்கிய வாயும்; வீராவேசப் பேச்சும், பற்றில்லாதவரையும் பற்றுக் கொள்ளச் செய்யும் பான்மையுடையனவாகும்.

சுருக்கமாகக் கடறவேண்டுமானால் தமிழ்நாட்டில் உயர்ந்த பேச்சாளர்களின் கூட்டத்தில் முதல் வரிசையில் விரல் விட்டு எண்ணக்கட்டிய சிலரில் அன்பர் அண்ணாத்துரையும் ஒருவர் என்றே கூறியாக வேண்டும்.

கலைஞர்

அன்பர் அண்ணாத்துரை பேச்சாளர் மட்டுமல்ல, எழுத்தாளருங்கூட. அவருடைய “திராவிட நாடு” பத்திரிகை தமிழ்நாட்டில் அதிகமாக வரவேற்கப்படுகிறது. அவர் பத்திரிகை ஆசிரியர் மட்டுமல்ல; நாடக நூல் ஆசிரியருங்கூட. அவரால் எழுதப் பெற்ற “வேலைக்காரியும்”, “ஓர் இரவும்” நாடகத்தின் மூலமும் திரைப்படத்தின் மூலமும், மக்களுக்குச் சீர்திருத்த உணர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றன. இவர் ஒரு பேச்சுப் புலவர் மட்டுமல்ல; நடிப்புப் புலவருங்கூட “சந்திரோதயம்” நாடகத்தில் அவர் உணர்ச்சியோடு நடிப்பது கண்ணுக்கு மட்டுமல்ல, சிந்தனைக்கும் சிறந்த விருந்தாக இருந்தது. ஆகவே, அன்பர் அண்ணாத்துரை அவர்கள் எழுத்து, பேச்சு, நடிப்பு ஆகிய முத்துறையிலும் சிறந்த கலைஞராக இருந்து வருகிறார்.

குற்றச் சாட்டுக்கள் .

1.“மூவர் சேர்ந்து ஒப்பந்தமாகக் கையெழுத்திட்டு அறிக்கை விட்டு வெளியேறிய பிறகு அண்ணாத்துரை திரும்பவும் பெரியாரோடு சேர்ந்த பொழுது, எங்களைக் கலந்திருக்க வேண்டும்.”

—இரு நண்பர்கள்.


2. “பாரதிதாசனுக்கு என்ன வந்தது? இரண்டு பாட்டுப் பாடிவிட்டால் ஒரு புலவர். அவனுக்கெல்லாம் பண முடிப்பு. இதற்கெல்லாம் அண்ணாத்துரை முயற்சி. எதுவும் கேட்டுச் செய்யவேண்டாமோ?

—தலைவர் பெரியார்.


3. சுவீகாரப் பிள்ளையாக நான் ஒருவன் இருக்கும் போது, இவனுக்கு என்ன இங்கு ஆதிக்கம்.

—தகப்பன் சாமி.


4. ‘ஒட்டிக் கொண்டிருந்தால் எட்டியிருந்து திட்டி எழுதுவேன். எட்டிப்போய் விட்டால் ஒட்டிக்,கொண்டு திட்டுவேன்.”

—மலைச் சாமி.


5. “கேட்டீர்களா செய்தியை. இப்பொழுது அண்ணாத் துரை இயக்கத்தைக் கவனிப்பதில்லை. நாடகம் எழுதிப் பணம் சம்பாதித்து, முதலாளி ஆகிவிட்டார்.

— கையாலாகாதவன்.


6. “கடிதம் எழுதினால் பதிலே எழுதுவதில்லை. என்ன இருந்தாலும் இப்படி இருக்கக் கூடாது.”

— எழுதிச் சலித்தவர்.


7. “பெரியார் கொள்கைக்கு விரோதமாகப் பெரிய தலையங்கம் ஒன்றை ஆகஸ்ட் 15–உ அநியாயமாக, எழுதலாமா?”

— திராவிட இளைஞர்கள்.


8. “தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டுற்கும் தொண்டு செய்யத் தமிழர் கழகம் அழைத்தும் அண்ணாத்துரை மறுத்துவிட்டது பெருங் குற்றமாகும்.”

— தமிழ் இளைஞர்கள்.

9.4. “இந்தியை எதிர்த்து மறியல் செய்தவர்களுக்கு உடந்தையாயிருந்த குற்றவாளி அண்ணாத்துரைக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கிறேன்.”

—நீதிபதி.


மேலே உள்ள குற்றச்சாட்டுக்களால் அன்பர் அண்ணாத்துரை தாக்கப்பட்டவர் என்றாலும் அவர் குற்றவாளியா? அல்லவா? என்பதை விளக்கிக் கூறியதில்லை. நீதிமன்றத்திலேயே அவர் கூறவில்லையென்றால், நாட்டிலும் ஏட்டிலும் அவர் ஏன் கூறுகிறார். ஆகவே, அவர் குற்றவாளியா? அல்லவா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான்.

நான் அவர்மீது சாட்டுகிற குற்றச்சாட்டு ஒன்றுண்டு. அது பொய் பேசுவது என்பதுதான். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தவிடத்துக்கு ஒரு அன்பர் வந்தார். “ஒன்பதாம் தேதி கூட்டம் : வரவேண்டும்” என்றார். ஒப்பினேன். அன்பர் அண்ணாத்துரையை அழைத்தார். அவரும் ஒப்பினார். அழைத்தவர் மகிழ்ச்சியோடு சென்று விட்டார். அவர் சென்ற பிறகு “ஒன்பதாம் தேதி வேறு வேலை இருப்பதாகச் சொன்னீர்களே. எப்படி ஒப்பினர்கள்’’ எனக் கேட்டேன். “நான் போகப்போவதில்லை. சும்மா சொன்னேன்” என்றார். “இந்த உண்மையை அவரிடம் சொல்லியிருக்கலாமே?” என்றேன். சொன்னால், அவர் நம்மை விட்டுப் போயிருக்க மாட்டார். நம்மையும் பேசவிட்டிருக்க மாட்டார்’ என்றார். “இதற்காகப் பொய் சொல்லுவதா?” என்றேன். உண்மையைச் சொன்னால் ஒப்புக் கொள்ளுகிற குணம் உண்டாகிற வரையில் பொய்பேசுவதில் தவறு ஒன்றுமில்லை” என்றார். “அந்தக் குணத்தை நாம்தான் உண்டாக்க வேண்டும். அதற்காகச் சிறிது தியாகமும் செய்யலாம்” என்றேன். “உங்களால் இயலலாம்; என்னால் இயலாது” என்றார். “முயலுங்கள், இயலும்” என்றேன். நாட்டின் நலனைக் கருதி இக்குறை ஒன்று அவரை விட்டு விலக வேண்டும் என்பதே எனது ஆசையாகும்.

தொண்டு

அன்பர் சி. என். அண்ணாத்துரை எம், ஏ., அவர்கள் ஒரு சிறந்த அறிஞர், நல்ல எழுத்தாளி. உயர்ந்த பேச்சாளி. முனைந்த உழைப்பாளி. சீர்திருத்தவாதி, பத்திரிகை ஆசிரியர், நாடகக் கதாசிரியர், நடிகர் எனக் கூறலாம். இவ்வெல்லாத் துறையாலும், நாட்டுத் தொண்டு, மொழித் தொண்டு ஆகியவைகளைச் செய்து வருபவர். திட்டம் போட்டு உட்கார்ந்து, உடம்பு வணங்கி வேலை பார்க்கின்ற ஒரு தொல்லையைத் தவிர, மற்ற எல்லாத் தொல்லைகளையும் ஏற்றுத் தொண்டாற்றும் இயல்பு உடையவர்.

முடிவு

அன்பர் அண்ணாத்துரை அவர்களைத் தமிழ்நாட்டின் பல செல்வங்களில் ஒன்றாகக் கருதுதல் வேண்டும். அவர் ஒரு நல்ல தமிழர். இன்றைய இளைஞரும் எதிர்காலத் தலைவரும் ஆவர். அன்பர் அண்ணாத்துரையைப் போன்ற பலர் எதிர்காலத் தமிழ்நாட்டிற்குத் தேவை; மிகவும் தேவை. இப்போதே சிலர் தோன்றி வருகிறார்கள். இன்னும் பலராகப் பெருக வேண்டும் என்பது எனது எண்ணம். பண்டைப் பெருமையையும், பழம் புகழையும் பேசிக் கொண்டே எல்லாத் துறையிலும் அன்னியருக்கு அடிமைப்பட்டுத் தன் சிறப்பையும் மறந்து வாழுகின்ற தமிழ்நாட்டிற்கு, இத்தகைய அறிஞர்களும், தொண்டர்களும் தேவை.

மேலே குறித்த இக் கட்டுரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘அறிஞர் அண்ணாத்துரை’ என்ற நூலுக்கு நான் எழுதியது. இந்த என் எண்ணம் வீண்போகவில்லையென்பதை அவர் திராவிட முன்னேற்றக் கழகங்கண்டு, கட்சியை வளர்த்து, கழக ஆட்சியைத். தமிழகத்தில் முதலமைச்சராய் இருந்து நடத்தி, மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றதைக் கண்டு நன்கறியலாம்.

அவர் முதலில் மாணவர், பின் தொண்டர்; அடுத்துப் பேச்சாளர்; எழுத்தாளர்; நடிகர்; நாடக ஆசிரியர் பத்திரிகை ஆசிரியர்; நூலாசிரியர்; சீர்திருத்தவாதி, அரசியல்வாதி; முதல் அமைச்சர் என ஆனார்.

இவற்றால் முதலில் அவர் காஞ்சித் தலைவன் ஆனார்; அடுத்துத் தமிழகத்தின் தலைவர் ஆனார். பின் டில்லிப் பாராளுமன்றத்திற் பேசி, இந்தியாவின் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். இன்னும் இரண்டாண்டுகள் இருந்திருந்தால் உலகத் தலைவர்களில் ஒருவராக விளங்கியிருப்பார். என் செய்வது? தமிழும் தமிழகமும் பெற்ற பேறு அவ்வளவுதான்.