எனது நண்பர்கள்/ஒப்பற்ற தலைவர் செல்வா!
செல்வநாயகம் எனது நண்பர். அவரது அருந்தொண்டுகளை நான் பல்லாண்டுகளாக நன்கறிவேன். உழைப்பிலே கடுமை, தொண்டிலே தூய்மை, சொல்லிலே எளிமை, வாழ்விலே நேர்மை-என்றால், அது செல்வ நாயகம் என்று பொருள். அதனாலேயே, அவர் ஈழத்தின் தந்தை என அருமையாக அழைக்கப்பெற்று வருகிறார்.
அவரது எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்று. அது நாடு செழித்து, மொழி வளர்ந்து, மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே. இந்த ஒரே நோக்கத்திற்காக அவர் பல்லாண்டுகள் இராப்பகலாக உழைத்து வருகிறார்.
ஏறத்தாழ எங்கள் இருவருக்கும் ஒரே வயது என்றாலும், அவர் நாட்டிற்காக, மக்களுக்காக ஓயாது உழைத்து உருக்குலைந்து அதிக வயதினராகவே காணப்படுகிறார். இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களில் பலர் நாடு அழிகிறதே, மொழி அழிகிறதே, வாழ்வு பாழாகிறதே என்று எண்ணி எண்ணி, வருந்தி உடல் நலம் கெட்டு இளைத்துப் போயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைத்துப்போன மக்கள் பலரைக் கண்டதனாலேயே திரு செல்வநாயகம் அவர்களின் உடலும் இளைத்துப் போய் விட்டதெனத் தெரிகிறது.
நான் இலங்கைக்கு ஏழு தடவைகள் சென்று வந்திருக்கிறேன். அவர் இல்லத்திற்கு நானும், என் இல்லத்திற்கு அவரும் வந்துபோனதுண்டு, அப்போதெல்லாம் அவரது அரிய தொண்டுகளைப் பார்த்தும் கேட்டும் அறிந்து வந்திருக்கிறேன். அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு சொற்றொடரிலேயே கூற வேண்டுமாயின் , அவர் ஒரு ஒப்பற்ற தலைவர் எனக் கூறிவிடலாம்.
இலங்கை அவரைப் பல முறை சிறைப்படுத்தியிருக்கிறது. அதில் ஒரு தடவை அரசின் அனுமதி பெற்றுப் பார்க்கச் சென்றிருந்தேன். அவரைச் சுற்றி இரும்புத் தொப்பிகளை அணிந்த பயங்கரமான காவலாளர்கள் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போதும், அவர் என்னிடம் பேசிய பேச்சுக்கள் நாடு, மொழி, இனம் பற்றியதாகவே இருந்தது. இது எனக்குப் பெரு வியப்பை அளித்தது.
சென்ற தடவை நான் இலங்கைக்குச் சென்றிருந்த போது, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புவரை பல கூட்டங்களில் பேசி வர நேர்ந்தது. அப்போது நான் கூறி வந்த ஒன்று... “இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வு விரைவில் வளம் பெற வேண்டுமானால்—அதற்குரிய ஒரே வழி, செல்வநாயகம், தொண்டமான், ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகிய மூவரும் ஒன்று சேர்வதே” என்பது. அது இப்போது நடைபெறுவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இனித் தமிழ் மக்களின் நல்வாழ்வு வெகுதூரத்தில் இல்லையென நினைத்தேன்.
அறிஞர் செல்வநாயகம் அவர்கள் இன்னும் பன்னெடுங்காலம் நல்ல உடல் நலத்துடனிருந்து நாட்டிற்கும் மொழிக்கும் மக்களுக்கும் நற்றொண்டு புரிந்து நல்வாழ்வு வாழ்ந்து சிறப்படைய வேண்டுமென முழு மனத்துடன் வாழ்த்தினேன். இதுவும் நிறைவேறவில்லை. வருந்தினேன்.