உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நண்பர்கள்/தலைவர் காமராஜர்

விக்கிமூலம் இலிருந்து
தலைவர் காமராஜர்

ழுபது ஆண்டுகளாக எனக்கும் விருதுநகருக்கும் தொடர்புண்டு. நட்பு, வணிகம், அரசியல், சமூக திருத்தம் ஆகிய பலதுறைகளில் பலமுறை அந்நகருக்குச் சென்று வந்திருக்கிறேன். இப்பெயர் உள்ள ஒருவர் அங்கு இருப்பதாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புகூட நான் அறிந்ததில்லை. அதன்பிறகுதான் அறிந்தேன், மிக அண்மைக் காலத்தில்தான் அவரைப் பார்க்கவும், பழகவும், பேசவும் எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது.

விருதுநகர் 1939க்கு முன்பு ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. அங்குக் காங்கிரஸிற்கோ, பிற கட்சிகளுக்கோ இடமில்லை. 1924 அதாவது இன்றைக்கு அறுபதாண்டுகளுக்கு முன்பு என்று எண்ணுகிறேன். பஞ்சுத்தரகு வைத்தியலிங்க நாடார் என்ற ஒருவர் தனலட்சுமி ஸ்டோர் என்ற பெயரால் ஒரு சுருட்டுக் கிடங்கை விருதுநகரில் வைத்து நடத்தி வந்தார். அவர் காங்கிரஸின் மீதும் காந்தியடிகள் மீதும் அதிகப் பற்றுள்ளவர் என்பதை, அவர் என்னிடம் புகையிலை வாங்க வந்தபொழுது அறிந்து கொண்டேன். அவர்தான் முதன் முதலில் திரு. சத்திய மூர்த்தி ஐயர் அவர்களை விருதுநகருக்கு வரவழைத்துப் பேசச்செய்தவர். அன்று அதற்கு அவ்வூரில் இருந்த எதிர்ப்பை இன்றைக்கு நினைத்தாலும் காங்கிரஸ் கட்சியினர் பீதியடைவர். நான் நினைப்பது சரியாக இருந்தால், திரு. காமராஜ் நாடார் அவர்களும் அக்கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். அதன்பிறகே, அவர் பெயரை , தொண்டை, சிலர் அறிய முடிந்தது.

இவர் பெயரைத்தமிழ்நாடு நன்கு தெரிந்துகொண்ட காலம், இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலமே ஆகும். அதற்கு. முன்பு இவருடைய பெயரையும், தொண்டையும், அக்கட்சியைச் சார்ந்த சிலரே அறிய வாய்ப்பிருந்தது.

காமராஜன் என்ற பெயர் மன்மதனுக்கு உரிய ஒன்று. இப்பெயரைத் தமிழ்நாட்டில் பலர் அப்போது வைத்திருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை. இப்போது, இப்பெயரைப் பலர் வைத்திருக்கிறார்கள். அப்போது அவருக்கு மட்டுமே இப்பெயர் இருந்தது என்ற முடிவுக்கு வருவதானால், தமிழ்நாட்டில் ஒரே காமராஜர்தான் என்ற முடிவுக்கு வர வேண்டியதுதான். மிகவும் அழகாக இருந்ததினால் இப்பெயரை அவருக்கு இட்டிருக்க வேண்டும் என நான் நினைத்ததுண்டு. ஆனால், நேரில் பார்த்தவர்கள் அப்படி ஒன்றும் இல்லை எனக் கூறினார்கள்.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, மிகக் குறைந்த படிப்பைப் படித்து, ஏழு எட்டு ரூபாய் சம்பளத்தில் இருந்து எளிய வாழ்க்கை நடத்தி, சிறந்த குணத்தைப் பெற்று, மிகுந்த உணர்ச்சியால் பொதுத் தொண்டிற் புகுந்தவர் காமாாஜர் என்று துணிந்து கடறலாம்.

உயர்ந்த பேச்சாளி என்றோ, சிறந்த எழுத்தாளி என்றே பெயர் பெறாவிட்டாலும், மிகுந்த உழைப்பாளி என்ற பெயரை அவர் வெகு விரைவில் பெற்றுவிட்டார். 1940இல் நான் நீதிக் கட்சியின், ஆந்திரம், கேரளம், கன்னடம், தமிழகம் ஆகிய நான்ரு மாநிலங்களுக்கும் பொதுக்காரியதரிசியாக இருந்த பெரும்பதவியை, பெரியாருக்கும் எனக்கும் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தால் இராஜினாமா செய்து, அது பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு, என் தொழில்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சட்டசபை உறுப்பினர் என் இல்லத்திற்கு வந்தார். அவர்:

“நான் ஒரு காங்கிரஸ் கட்சியினன். சென்னையிலிருந்து வரும் வழியில் தங்களைப் பார்த்துப் போக வந்தேன். தலைவர் காமராஜரும் நானும் இப்பொழுது கூடத் தங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். தங்கள் மீது அவருக்கு அன்புண்டு. தங்களைப் போன்றவர்களெல்லாம் காங்கிரசில் இருக்க வேண்டுமென்பது அவரது எண்ணம். அவ்வாறு தாங்கள் விரும்பினால், அவர் தன்னுடைய பதவியைக் கூடக் காலி செய்து கொடுக்கத் தயங்க மாட்டார்” என்று கூறினார். நன்றி கலந்த வணக்கங் கூறி அனுப்பிவிட்டேன். அவர் கூறியது உண்மையாக இருக்குமானால், திரு. காமராஜர் அவர்களுக்குத் தம் கட்சியின் மீதுள்ள பற்றுதலின் அளவையும், பிற கட்சியைச் சார்ந்தவர்களின் மீது வைத்துள்ள மதிப்பின் உயர்வையும் எடுத்துக் காட்ட, இது போதுமானது என்றே கூறலாம்.

அடுத்தடுத்து அவரே தமிழ் நாட்டுக் காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த பொழுது, அவருக்ருக் கட்சியிலும் நாட்டிலும் செல்வாக்கும் மதிப்பும் உயர்ந்துகொண்டே வருவதை மக்களால் நன்கு அறிய முடிந்தது. நேர்மையும், ஒழுக்கமும், சட்டதிட்டங்களில் ஒழுங்கும், பண வரவு செலவுகளில் கண்டிப்பும் உடையவரென நான் கேள்விப்பட்ட பொழுது பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன்.

ஜஸ்டிஸ் கட்சிக்கு நாடார் சமூகத்தில் அசைக்க முடியாத செல்வாக்கு இருக்கிறதென்றும், அதற்குக் காரணம் சௌந்திரபாண்டியனுக்குக் கட்சியில் செல்வாக்கு இருக்கிறதென்றும், அதை ஒழித்து அச்சமூகத்தில் காங்கிரசிற்குச் செல்வாக்கு ஏற்பட வேண்டுமானால், நாடார் சமூகத்திலிருந்தே காங்கிரசிற்குத் தலைவர்களைக் கொண்டுவர வேண்டுமென்றும் எண்ணியே திரு சத்தியமூர்த்தி ஐயர் அவர்கள் திரு. காமராஜ் அவர்களைக் கொண்டு வந்தாரென அப்போது கூறப்பட்டதுண்டு. ஆனால், அதே சத்தியமூர்த்தி ஐயர் அவர்கள் சமூகத்திற் பிறந்த என் நண்பர் ஒருவர், மதுரை நகரில் அப்போது கூறியது இதுதான்: “ஐஸ்டிஸ் கட்சியின் தலைமைப் பதவியும், செல்வாக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியும் செல்வாக்கும் நாடார் சமூகத்துக்குள் புகுந்து கொண்டன. என்ன செய்வது?” என்பதே. எப்படி இந்தப் பெருமூச்சு.

திரு. காமராஜர் அவர்களின் தன்னலமற்ற சேவையை, திறமையை, நேர்மையை அறிய எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அது பெரியார் காந்தியடிகள் ‘கிளிக்’கென்ற சொல்லம்பை தமிழ்நாட்டில் எய்த காலம். அன்று அவ்வம்பு தன் மீது படாமல், பதவியை உதறித் தள்ளித் தடுத்து நின்றார் காமராஜர். அன்று என் கண்களுக்கு அவர் வீரராக விளங்கினார்; வாழ்த்தினேன்.

அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, அவர் தன்னுடைய தலைமைப் பிரசங்கத்தைத் தமிழ் மொழியில் நிகழ்த்தியதைக் கண்டு என் உள்ளம் குளிர்ந்தது. இந்தியா முழுவதிலுமுள்ள எல்லா மொழியினரும் அங்கு வந்து கூடி இருந்து, திரு காமராஜ் அவர்கள் தமிழில் பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்றசெய்தி.என்னைப் பெருமகிழ்ச்சியடையச்செய்தது. அன்று தமிழகமே உயர்ந்து விட்டதாகக் கருதினேன். ஓர் உருண்டை உணவு அதிகமாக உண்டு மகிழ்ந்தேன். பிறகு, அவரது செல்வாக்கு இந்தியாவின் பிரதமமந்திரியை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்தது கண்டு. இந்நாடே பெருமைப்பட்டது.

ஒரு சிற்றுாரில் சிறு தொண்டராகத் தொடங்கி ஒரு நாட்டின் தலைமைப் பதவியை ஏற்கிற அளவுக்குத் திரு காமராஜர் அவர்கள் உயர்ந்தது, தொண்டு புரிவதன் அருமையையும், பெருமையையும் விளக்குவதாகும்.

அவர் எனக்கு மாறுபட்ட கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவரது தொண்டு மாசற்றது என்பது என் எண்ணம். அவர் மிகுந்த இளைஞராய் இருந்தபோதும், திருமணம் செய்து இல்லற வாழ்வு வாழும் எண்ணமே இல்லாது, இந்நாட்டையே தனது குடும்பமாக எண்ணிப் பொதுத் தொண்டையே இன்ப வாழ்வாகக் கருதியவர், பொது மக்களுக்காகவே பொதுவாழ்வு வாழ்ந்துவருபவர் அன்பர் திரு காமராஜர் எனக் கூறலாம். அவர் இன்னும் பன்னெடுங் காலம் நல் உடல் நலத்தோடு நல்வாழ்வு வாழவேண்டுமெனவும், அவரது தொண்டு பொதுவாக இந்தியாவிற்கும், சிறப்பாகத் தமிழகத்திற்கும், தமிழிற்கும் பயன்பட வேண்டுமெனவும் வாழ்த்தினேன். என்செய்வது என் எண்ணம் நிறைவேறவில்லையே!