எனது நண்பர்கள்/தொழிலதிபர் வி. சேஷசாயி

விக்கிமூலம் இலிருந்து
தொழிலதிபர் வி. சேஷசாயி

தொழிலறிஞர்

திருச்சிராப்பள்ளி பல தமிழறிஞர்கனையும், இசைப் புலவர்களையும், உயர்ந்த நடிகர்களையும், சிறந்த வணிகர்களையும் பெற்று உதவியது மட்டுமல்ல, அது நல்ல தொழிலறிஞர்களையும் பெற்றுத்தந்து பெருமையடைந்திருக்கிறது. அத்தகைய தலைசிறந்த தொழிலறிஞர்களில் திரு. வி. சேஷசாயி அவர்களும் ஒருவர்.

பெருமகன்

தமிழகத்தின் பெருநகரங்களில் ஒன்றாகிய திருச்சியின் கடும் இருளைப்போக்க மின் விளக்கை ஏற்றிவைத்து ஒளிதந்த பெருமகன். இம்முயற்சியில் கொல்லி மலையிலிருந்து மின்சாரம் கொண்டுவர மேலைநாட்டு அறிஞர்கள் முயன்று தோல்வி அடைந்ததைக் கண்டும், பெரும் முயற்சி செய்து வெற்றிகண்ட பேரறிஞர் அவர்.

ஆலை அதிபர்
திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்கள் பலவற்றிலும் விஞ்ஞானத் துறையில் ஆலைகளை அமைத்து பல்வேறு பொருள்களை உண்டு பண்ணிக் கொடுத்து இந்நாட்டின் தேவைகளை நிரப்பிவந்த ஆலை அதிபர் அவர்.
ஏழை பங்காளர்

தமது நுண்ணறிவால், அருந்திறனால், ஏறக்குறைய 7000 பேர்களுக்கு உழைக்க வழிவகுத்து அவர்களின் உழைப்பின் மூலம் ஏறக்குறைய இருபதாயிரம் பேர்கள் பசியின்றி வாழ வகைசெய்து வாழ்ந்து மறைந்த ஏழை பங்காளர் அவர்.

தமிழ்ப் புலவர்

மிகக் குறைந்த நாட்களில் என்னிடம், திருக்குறளைப் படித்து ஆராயத் தொடங்கி, மிக விரைவில் குறள் முழுவதற்கும் பொருள் கூறும் அறிவையும் ஆற்றலையும் பெற்றுவிட்ட ஒரு சிறந்த தமிழ்ப்புலவர் அவர்.

சாஸ்திரிகள்

வால்மீகி இராமாயணத்தை எழுத்தெண்ணிப் படித்ததோடு, கம்பராமாயணத்தையும் நன்கு கற்று, இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் கற்பனை நயங்களையும் எடுத்துக் கூறும்பொழுது ஒரு சிறந்த சாஸ்திரியாகக் காட்சியளித்தவர் அவர்.

எளிய தோற்றம்

அவரது ஆடம்பரமற்ற எளிய தோற்றமும், அன்புகலந்த இன்சொல்லும் நண்பரை மட்டுமல்ல, பகைவரையும் பணியச் செய்யும் வலிமை வாய்ந்தவை.

உயர்ந்த பண்பு
பிறருடைய தேவையை உணரமறுப்பதும், பிறருடைய உரிமையை ஒப்பமறுப்பதும் ஆகிய இரண்டும் மட்டுமே நாட்டில் நடைபெறும் போராட்டங்களுக்குக் காரணம் என்பதை நன்குணர்ந்து, அதற்கேற்றபடி நடந்து காட்டிய உயர்ந்த பண்பாளர் அவர்.
பெருங்குணம்

ஏழை மக்களுக்கு இரக்கம் காட்டுதல், மாறுபட்ட கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்தல், பிடிவாதக்காரர்களுக்கு விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, தாராள மனப்பான்மை ஆகிய ஐம்பெருங் குணங்களையும் ஒருங்கே பெற்றிருந்த குணக்குன்று அவர்.

நல்லறிஞர்

குடும்பத்திலும் தொழிலிலும் பங்கு பெற்று, வாழ்விலும் தாழ்விலும் உற்ற துணையாகி, எப்போதும் உடனிருந்து உழைத்து மறைந்த மைத்துனர் திரு. ஆர். சேஷசாயி அவர்களை உள்ளத்தே வைத்து வாழ்ந்த நன்றி மறவா நல்லறிஞர் அவர்.

சீர்திருத்தவாதி

தான் தோற்றிய தென்சென்னை மின்வழங்கும் நிறுவனத்திற்ரு என்னைத் தலைவனாக்கி, அதை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்புவித்து மகிழ்ந்து, சாதி வேற்றுமை, சமய வேற்றுமை, நாட்டு வேற்றுமை, மொழி வேற்றுமை, கட்சி வேற்றுமை, நிற வேற்றுமை, உணவு வேற்றுமை ஆகிய அனைத்தையும் பாராது, எல்லோரையும் தம்மவராய்க் கொண்டு நடந்து காட்டிய ஓர் உயர்ந்த சீர்திருத்தவாதி அவர்.

பேச்சுக் கலைஞர்
அதிகாரிகளோடு பேசுவது எப்படி? அன்பர்களோடு பேசுவது எப்படி? நிர்வாகிகளோடு பேசுவது எப்படி? தொழிலாளிகளோடு பேசுவது எப்படி? மனைவியோடு பேசுவது எப்படி? மக்களோடு பேசுவது எப்படி? என்பதை நன்குணர்ந்து, அருமையாகப் பேசிப் பிறரையும் தம்மைப் பின்பற்றிப் பேசும்படி செய்த பேச்சுக் கலைஞர் அவர்.
கொடை வள்ளல்

சலியாமல் முயற்சித்து, ஓயாமல் உழைத்து, நேர்மையாக நடந்து, நல்லவழியில் பொருளைத் தேடி, சிக்கனமாகச் செலவிட்டு, எஞ்சிய பொருளை நல்ல அற நிலையங்கள் பலவற்றிற்கு வாரி வழங்கி மகிழ்ந்த கொடைவள்ளல் அவர்.

பேரிழப்பு

இத்தகைய உயர்ந்த தொழில் நிபுணரும், சிறந்த மொழி அறிஞரும், நிறைந்த பண்புடையவரும், கனிந்த சொல்லுடையவரும் ஆகிய சான்றோர் ஒருவரை இழந்தது, பொதுவாகத் தமிழகத்திற்கும், குறிப்பாகத் திருச்சி நகருக்கும் ஒரு பேரிழப்பு ஆகும்.

புகழுடம்பு

அவரது பொய்யுடல் மறைந்தாலும் புகழுடல் மறைவதற்கில்லை. அவர் கொடை வழங்கிவந்த பல அற நிலையங்களும், தொடங்கிவைந்த பல தொழில் நிலையங்களும், அரியமங்கலத்தில் தோற்றிவைத்த தொழில் நுணுக்கப் பள்ளியும் நிலைத்து நிற்கும்வரை, மேட்டுர் கெமிக்கல்ஸ் உள்ளவரை, ஈரோடு காகித ஆலை உள்ளவரை, அவரது புகழுடம்பு அழியாது. எனினும், அவரது பெயரால் ஒரு பொறிஇயற் கல்லூரியையும் தோற்றிவைக்க வேண்டியது தமிழக மக்களின் நீங்காக் கடமைகளில் ஒன்றாகும்.

ஆறுதல்

“இப்படிப்பட்ட ஒருவர் திருச்சியில் இருப்பதை நான் இவ்வளவு நாள் அறியாமற் போனேனே” என்று அவர் என்னைப்பற்றி பிறரிடம் கூறிய சொற்கள் என் காதில் விழுந்தபொழுதுதான், “இப்படிப்பட்ட ஒருவர் திருச்சியில் இருப்பதை நான் இவ்வளவு நாள் அறியாமற் போனேனே” என்று நானும் எண்ணினேன். எனது கண்கள் இன்பக் கண்ணீரை துளிர்த்தன. அடுத்து மிக விரைவில் நேர்ந்த அவரது பிரிவு துன்பக் கண்ணீரை உதிர்க்கும்படி செய்து விட்டது. நாடு கலங்கிற்று. நாமும் கலங்கினோம். யார் யாருக்கு ஆறுதல் கூறுவது? மெல்ல நகர்ந்து செல்லும் காலம்தான் நம் அனைவர்க்கும் நல் ஆறுதல் அளிக்கவேண்டும்.