சேரன் செங்குட்டுவன்.
முதலாம் அதிகாரம்:—-
முன்னுரை.
புண்ணிய பூமியாகிய இப்பரதகண்டத்துள்ள புராதன ராஜ்யங்களுள்ளே, சேர சோழ பாண்டிய நாடுகள், தட்சிணத்தில் விளங்கிய முக்கிய தேசங்களென்பது யாவரும் அறிந்ததே. இவ்வரசியல்களை முதன்முதல் நாட்டிய முன்னோர் இன்னாரென்றேனும், இவை தாபிக்கப்பெற்ற காலம் இஃதென்றேனும் இதுவரை எவரும் அளந்து கண்டவரல்லர். வான்மீகம் போன்ற புராதன வடமொழிக் காவியங்களிலும், அசோக சக்கரவர்த்தியது போன்ற ஆதி சிலாலிகிதங்களிலும் இம்மூன்று தமிழ்நாட்டாரையும் பற்றிக் கௌரவமான பிரஸ்தாபங்களே கேட்கப்படுதலால், இன்னோரது பழமையும் பெருமையும் ஐயமின்றி அறிஞர்களாற் கொள்ளப்படுகின்றன. சுருங்க உரைக்குமிடத்து, 'படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டுவருங்குடிகள் இம் மூவேந்தரும்' என்று பரிமேலழகியார் எழுதிய முறையே[1] நாமுங்கூறுதல் பொருந்து மெனலாம். இவ் வேந்தர்களாட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பு முழுதும் 'வடவேங்கடந் தென்குமரி'கட்கு இடைப்பட்டதாகும். வண்புகழ்மூவர் தண்பொழில்வரைப்பின்”[2] என்றார் தொல்-