உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

சேரன் செங்குட்டுவன்

களும் மிகுந்திருந்ததோடு, அவ்விடங்களில் தவமுனிவரும் ஞானிகளும் சாஸ்திரவறிஞரும் எங்கும் நிறைந்திருந்தனர். கோட்டையைச் சூழ்ந்துள்ள புறக்குடி அல்லது புறஞ்சேரியில் அரண்காவல்புரியும் படையிருப்புக்களும் அந்நியவரசர் தங்குதற்கமைந்த மாளிகைகளும் இருந்தன. கோட்டையை, ஆழ்ந்தகன்ற அகழி சூழ்ந்திருந்தது. அதனிற் பலவகை முதலைச்சாதிகளும் பெருமீன்களும் நிறைந்திருந்தன. வஞ்சிமாநகருள்ளே பெருகியோடுங் கழிநீரெல்லாம் முடிவில் அவ் வகழிக்கண்ணே சென்று சேர்வதாம். இவ்வகழுக்கும் கோட்டைக்கும் இடையிலே காவற்காடொன்று உண்டு. கோட்டைமதில், பகைவரை அழிக்கத்தக்க எந்திரங்கள் பலவற்றால் மாட்சிமை பெற்றிருந்தது. அதன் வாயிலானது, வேலைப்பாடு மிகுந்து, பல நிலைகொண்ட கோபுரத்தோடுங் கொடிகளோடும், வெள்ளிமலையொன்று உள்கிழிந்தாற்போல விளங்கியது. இவ்வாயிலைக் கடந்து செல்லின், கோட்டை வாயில் காக்கும் காவலாளர் நெருங்கியுறையும் வீதிகளும் மீன்விலைஞரும் உப்புவாணிகரும் கள்விற்போரும் பிட்டு அப்பங்கள் விற்போரும், வாசனைப்பண்டம் விற்போரும் இறைச்சிவிற்போரும் வசிக்கின்ற வீதிகளும் அமைந்திருந்தன. இவ்வீதிகளையடுத்து - மட்கலஞ்செய்யுங் குயவர், செம்பு கொட்டிகள், வெண்கலக்கன்னார், பொற்கொல்லர், தச்சர், நட்பாவைசெய்வோர், தையற்காரர், மாலை கட்டுவோர், சோதிடர், பாணர்முதலியோர் தெருக்களும், சங்கறுப்போர் இரத்தினப்பணியாளர் வீதிக்ளும், நாடகக்கணிகையர் வீதியும், நெல்லுப் புல்லு முதலிய கூலவகை விற்போர் தெருவும், சூதர் மாகதர் வேதாளிகள், பொதுமகளிர் தெருக்களும்,