உள்ளடக்கத்துக்குச் செல்

ஏழாவது வாசல்/நடிப்புப் பைத்தியம்

விக்கிமூலம் இலிருந்து
419997ஏழாவது வாசல் — நடிப்புப் பைத்தியம்பாவலர் நாரா. நாச்சியப்பன்இராமகிருஷ்ண பரமஹம்சர்
நடிப்புப் பைத்தியம்

ஒரு மனிதன் பணம் தேவைப்பட்ட போதெல்லாம் கடன் வாங்கிக் கொண்டிருந்தான். கடனை அடைக்கும் வகையில் அவன் தொழிலை வளர்க்கவில்லை. தேவைப்படும் போதெல்னாம் மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கொண்டேயிருந்தான். இதனால் கடன் அதிகமாகிவிட்டது. கடன் கொடுத்தவர்கள் பலர். அவர்கள் அடிக்கடி அவனைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள்.

கடனையோ அவனால் திருப்பிக் கொடுக்க முடியாது. ஆனால் கடன் கொடுத்தவர்கள் தொல்லையோ நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தது. இதிலிருந்து எப்படித் தப்புவது என்று அந்த மனிதன் யோசனை செய்தான். அவன் ஒரு வழியைக் கண்டு பிடித்தான். பைத்தியம் பிடித்தவன் போல் பாசாங்கு செய்தான். உறவினர்கள் அவனுடைய பைத்தியத்தைத் தெளிவிப்பதற்காக, வைத்தியர்களைக் கூட்டிவந்து காண்பித்தார்கள். வைத்தியர்கள் வந்து பார்த்து மருந்து கொடுத்துப் போனார்கள்.

மருந்து கொடுக்கக் கொடுக்க அவனுடைய பாசாங்கும் அதிகரித்தது. அந்த வைத்தியர் சரியில்லை, இந்த வைத்தியர் சரியில்லை என்று உறவினர்கள் வேறு வேறு வைத்தியர்களைக் கூட்டிக் கொண்டு வந்து காண்பித்தார்கள்.

கடைசியாக ஒரு வைத்தியர் வந்தார். அவர் அனுபவம் நிறைந்தவர். சிறந்த அறிவாளி. அவர் அவன் கையைப் பிடித்துப் பார்த்தார். நாக்கை நீட்டச் சொல்லிப் பார்த்தார். அவனுடைய செயல்களைக் கூர்ந்து கவனித்தார். இது உண்மையான பைத்தியம் அல்ல என்று தெரிந்து கொண்டார்.

பைத்தியக்காரனைத் தனியாக அழைத்துச் சென்றார்.

"அடே! நீ செய்வது சரியல்ல. நீண்டநாள் இப்படியே பாசாங்கு செய்து கொண்டிருந்தாயானால், உனக்கு உண்மையாகவே பைத்தியம் பிடித்துவிடும். இப்பொழுதே உன்னிடம் சில பைத்தியக் குறிகள் தென்படுகின்றன. எச்சரிக்கையாயிரு” என்று கூறினார்.

இதைக் கேட்ட அந்த மனிதன் பயந்து போனான். அன்று முதல் பைத்தியக்காரனைப் போல் பாசாங்கு செய்வதை நிறுத்திவிட்டான்.

இடைவிடாது நீ எப்படி யிருப்பதாகக் காட்டிக் கொள்கிறாயோ, அப்படியே ஆகிவிடுவாய். ஆகவே, நல்லவனாக இருப்பதாகக் கொள்வாயானால், நீ நல்லவனே ஆகிவிட முடியும்.