ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/இந்து மதத்தினின்று வெளியேற வேண்டும்
மதமற்ற நிலை, மதச் சார்பற்ற நிலை, தமிழ் மதம் சார்ந்த நிலை ஆகிய மூன்று கோட்பாடுகளில் தமிழினம் இயங்க வேண்டும்!
பார்ப்பனியமே இந்து மதம்! தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனியத்திற்கு அடிமைகளாக இருக்க ஒப்புக் கொள்பவர்களே, இந்து மதத்தை விரும்புகின்றனர். அவர்களுக்கும் விழிப்பூட்ட வேண்டும்!
இந்துமதக் கோட்பாடுகளே இந்தியாவின் அரசியலாக, பொருளியலாக, கலை, பண்பாடுகளாக, உருவாகியிருக்கின்றன என்று சொன்னால் எவரும் மறுத்து மெய்ப்பித்துவிட முடியாது. இந்துமதமே முழுவதும் பார்ப்பனீயத்தையே அடித்தளமாகக் கொண்டது. எனவே, இந்தியாவைப் பொறுத்த அளவில் பார்ப்பனீயம் இல்லாமல் அரசியல் இல்லை; பொருளியல் இல்லை; கலை, பண்பாடுகள் இல்லை. இன்னும் சொன்னால் மக்கள் தொடர்புள்ள வேறெதுவுமே இல்லை. மக்களுள்ளும் தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனீயத்திற்கு - பார்ப்பனர்க்கு அடிமைகளாக இருக்க ஒப்புக் கொள்பவர்களே, இந்துமதத்தை விரும்புகின்றனர்; அதை நிலைப்படுத்த முயற்சிகள் செய்கின்றனர். அவர்களுக்கு விழிப்பூட்ட வேண்டுவது நம் கடமை!
பார்ப்பனீயத்தின் எந்தக் கூறுமே ஒரு நச்சுமரத்தைப்
போன்றது! அதன் வேர், அடிமரம், கிளைகள், இலைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள், கொட்டைகள், பருப்புகள், இன்னும் அது வெளிப்படுத்தும் மணம், அதைத் தழுவி வெளிவரும்காற்று - என்று இவ்வாறு அனைத்தும் நச்சுத்தன்மை கொண்டவையே! இதை இந்து மதச் சார்புள்ள அல்லது சார்பற்ற எந்தக் கொம்பனாலும் பொய் - தவறு என்று கூறிவிட முடியாது; கூறி மெய்ப்பித்துவிட முடியாது. ஏனெனில் அதுபற்றிய அத்தனை உண்மைகள் அடிப்படைகளாக - அடை அடையாக உள்ளன.
இந்த நிலையில், யார் எந்த வகையான அரசியல், பொருளியல், மொழியியல், கலை, பண்பாட்டியல் முயற்சியைச் செய்தாலும், அதைப் பார்ப்பனியத்தை எதிர்த்துக் கொண்டுதான் செய்ய வேண்டியுள்ளது. அதற்குப் பார்ப்பனீயம் முழுவதும் தன் முழு மூச்சுடன் எதிர்ப்புக் காட்டித்தான் ஆகும். அவ்வெதிர்ப்பை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. காரணம் இந்தியாவைப் பொறுத்தமட்டில், மக்கள் தொடர்புடைய அத்தனை ஆற்றல்களும் பார்ப்பனியத்தின் கைகளிலேயே உள்ளன. அதற்குத் துணையாக வலிவான ஆற்றலாக இருப்பதுதான் இந்து மதம். எனவே இந்துமதத்தை எதிர்த்துக்கொண்டு என்ன பணி - தொண்டு - செய்தாலும், அது இதுவரை வெற்றிபெற முடியாததாகவே உள்ளது. ஆகவே இந்துமதம் என்னும் அடிப்படை வலிவை நாம் அடியோடு தகர்த்தெறிந்தால் தவிர, எந்தக் கோணத்திலான நம் எந்த முயற்சியும் வெற்றிபெற முடியாததாகவே இருக்கும்.
இந்நிலைக்கு ஒரே ஓர் எடுத்துக்காட்டு போதும். அண்மையில் அரும்பாடுபட்டுக் கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்திய அரசியலில் தன் கால்களை மிகவும் ஆழமாக - அகலமாகப் - பரப்பிக்கொண்டு வேரூன்றியிருந்த ஒரு பார்ப்பனக் குடும்பத்தின் வல்லாளுமையை அகற்றிவிட்டுச் சனதாதளம் தான் அமைத்த தேசியக் கூட்டணி ஆட்சியில் கால் வைத்தது, நடுவணரசில் ஏற்பட்ட இந்த மாறுதலைப் போல் வேறு சில மாநிலங்களிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அப் பார்ப்பனிய ஆட்சிக்கு மாறான என்று சொல்ல முடியாவிட்டாலும், இசைவில்லாத ஆட்சி நடந்து வரலானது. இருப்பினும் இவ்வாட்சி மாற்றங்களுக்குங்கூட, முழு அளவில் இல்லையென்றாலும், பெரும் அளவிற்குப் பார்ப்பனியம் துணைநிற்க வேண்டியிருந்தது. இந்த நிலைதான் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தின் நிலையும்; நடுவணரசின் நிலையும்.
இந்த ஓர் உண்மையைக் கொண்டே, பார்ப்பனியம் என்பது, இந்தியாவைப் பொறுத்த அளவில் மக்களியல் கூறுகள் அனைத்துக்கும் எவ்வாறு அடிப்படையான ஆற்றலாக உள்ளது என்பதை நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் அந்தப் பார்ப்பனியத்திற்கு எல்லா நிலைகளிலும் இந்து மதம, தனியான, வலிவான ஒரு பேராற்றலாக விளங்குவதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு பார்ப்பனியம் இந்துமதத்தையும், இந்துமதம் பார்ப்பனியத்தையும், ஒன்றையொன்று கவ்விக் கொண்டும், இழுத்துப் பிடித்துக்கொண்டும், இருதலை நாகம் போல் உள்ளது.
இனி, எதிர்பாரா வகையில் இவ்வாறு அமைந்துவிட்ட, பார்ப்பனியச் சார்பற்ற அரசைப் பார்ப்பனர்கள் எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாகி நிற்பதை, இப் பார்ப்பனரல்லாத தலைமையரசுகளை வீழ்த்தப் பொதுவாக நடுவணரசிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் பார்ப்பனர்கள், இந்த அரசுகள் அமைந்த நாள் முதலாகத் தொடர்ந்து பல வகையிலும் குற்றம் சாட்டி வருவதையும், இனக் கலவரங்கள், மதக் கலவரங்கள், ! அரசியல் கிளர்ச்சிகள், மக்கள் போராட்டங்கள் பலவற்றை உருவாக்கி எதிர்த்து வருவதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நடுவணரசைப் பதவிவிலகச் செய்யும் கோரிக்கைகளும், தமிழக அரசைப் பதவிநீக்கஞ் செய்ய நடுவணரசுக்கு விடுக்கின்ற கோரிக்கைகளும், இப் பார்ப்பனீய - இந்துமதப் புகைச்சல்களின் விளைவே. இந்நிலையில், இனி, எதிர்காலத்திலாவது இப் பார்ப்பனீய - இந்து மதத் தாக்கங்கள் இல்லாமல், அவற்றின் வலிவுகளை நாம் குறைத்தொடுக்க வேண்டுமானால், இந்துக்கள் என்று கருதத்தக்க பார்ப்பனரல்லாத திரவிடர்கள் - தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அம்மதத்தினின்று தங்களை வெளியேற்றிக் கொள்ளுதல் மிக மிக இன்றியமையாதது.
தமிழர்களைப் பொறுத்தமட்டில் இந்துமதம் எனும் நச்சுமதம் - அவர்களை அடிமைப்படுத்தி, அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொண்டுள்ள வல்லாண்மை மதம் - உடனே அவர்களால் உதறித் தள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.
தமிழினத்தவர்களை மதக்கொள்கையின் அடிப்படையில், மூன்று பிரிவுகளாகப் பிரிந்து நிற்பவர்களாகக் கருதலாம். அவை,
மதமற்றவர்கள் இறைமை, மதம் என்கிற உணர்வே இல்லை என்பவர்கள்), மதச்சார்பற்றவர்கள் (இறைமை உணர்வுள்ளவர்கள்; ஆனால் மதம் தேவையில்லை என்பவர்கள்). தமிழ்மதம் சார்ந்த நிலை (இறைமை உணர்வுள்ளவர்கள். பண்டைத் தமிழர் மதங்களாகிய சிவனியம், மாலியம் - இவற்றை விரும்புபவர்கள்; ஆனால் ஆரியத் தொடர்பை விரும்பாதவர்கள்) - எனப் பெரும்பிரிவுகளாக அமையலாம்.
எவ்வாறேனும் இந்துமதத்தினின்று தமிழர்கள் உடனே வெளியேறியாக வேண்டும். இது தொடர்பாக உலகத் தமிழின முன்னேற்றக் கழகமும் அதன் தொடர்புடைய தோழமைக் கட்சிகளும் பங்கெடுத்துக்கொள்ளும் தமிழகம் அளாவிய ஒரு பெரும் மாநாடு விரைவில் சென்னையில் நடைபெறவிருக்கிறது என்பதை மட்டும் இப்பொழுதைக்கு இங்குக கூறிக்கொள்ள விரும்புகிறோம். அன்பர்கள் இது தொடர்பான வரவேற்பு எதிர்ப்பு எனும் இருமைக் கருத்துகளையும் நமக்குத் தெரிவிப்பார்களாக.
- தமிழ்நிலம், இதழ் எண் : 139, 1990