நேரு தந்த பொம்மை/நேரு தந்த பொம்மை

விக்கிமூலம் இலிருந்து

நேரு தந்த பொம்மை


நேரு காரில் வருவதை
நேரில் காணும் ஆசையால்,
ஊரி லுள்ளோர் அனைவரும்
ஒன்று திரண்டு வந்தனர்.

தெருவில் நேரு செல்கையில்
சின்னச் சின்னப் பொம்மைகள்
ஒருவர் விற்கக் கண்டனர்;
உடனே கீழே இறங்கினர்.

அந்தப் பொம்மைக் காரரின்
அருகில் நேரு சென்றனர்;
"இந்த அழகுப் பொம்மைகள்
என்ன விலையோ?” என்றனர்.

பொம்மைக்காரர்:
ஒன்றின் விலையைக் கூறவா?
ஓர் அணாத்தான் விற்கிறேன்.

நேருஜி:
நன்று. பொம்மை யாவையும்
நானே வாங்கிக் கொள்கிறேன்.

பொம்மைக்காரர்:
ஐந்து ரூபாய் தானங்யா
அத்தனைக்கும் மொத்தமாய்.

நேருஜி:
இந்தா ரூபாய் தருகிறேன்.
எல்லாம் எடுத்துக் கொள்கிறேன்.

நேரு நோட்டை நீட்டினார்
நிறையப் பொம்மை வாங்கினார்,
யாருக் காக வாங்கினர்.
யாவ ருக்கும் தெரியுமே!

அங்கு நின்ற பிள்ளைகள்
அனைவ ருக்கும் நேருஜி
தங்கக் கையால் பொம்மைகள்
தந்து தந்து மகிழ்ந்தனர்.
அருமை மாமா நேருஜி
அன்பாய்ப் பொம்மை தந்ததைப்
பெருமை யோடு பிள்ளைகள்
பேசிப் பேசிக் களித்தனர்.