உள்ளடக்கத்துக்குச் செல்

இதழியல் கலை அன்றும் இன்றும்/பத்திரிகை நடத்துவோர்க்குரிய

விக்கிமூலம் இலிருந்து
422050இதழியல் கலை அன்றும் இன்றும் — பத்திரிக்கை நடத்துவோர்க்குரியஎன். வி. கலைமணி


11


பத்திரிகை நடத்துவோர்க்குரிய
பொதுவான அடிப்படைச் சட்டங்கள்

1. மான இழப்பு
வழக்குச் சட்டம்

வேளாண்மை செய்யும் உழவனுக்கு எப்படி ஏர் உழும் கருவியும், மாடும் தேவையோ, அதைப்போல பத்திரிகை நடத்த விரும்புபவர்களுக்கு மனம்போனபடி எழுதும் உணர்சிகளுக்கு அடிமையாகாத எச்சரிக்கையும், பொறுப்பான கவனமும், கட்டுப்பாடும், கண்ணியத்தோடு சிந்தனைகளை ஓடவிடும் கடமையும் தேவையாகும். தவறினால் ஒருவரின் பெருமையைச் சிறுமைப் படுத்தும் மான இழப்புக்கு; எழுத்தும், கருத்தும் காரணங்களாகிவிடும். அதனால், குற்றவியல் சட்டத்திற் கேற்ப Criminal Law வழக்கையும், சமுதாயவியல் சட்டத்தின்படி Civil Law நடவடிக்கைகளையும் சந்திக்கவேண்டிய நிலைகள் உண்டாகும்.

தனிப்பட்ட ஒருவரைப் பத்திரிகையாளர் ஒருவர் இழிவுபடுத்தி அவதூறாக (Scandal) எழுதினார் என்ற குற்றத்திற்கும், எழுத்து வாயிலாக அவதூறானக் கருத்தைப் பத்திரிகையில் வெளியிட்டார் Libel என்ற குற்றத்திற்கும் அந்த இதழாளர் ஆளாக நேரிடலாம். இந்தியக் குற்றவியல் PC சட்டத்தின் 499-ம் பிரிவுப்படி எந்தக் குற்றம் அதற்குப் பொருந்துகிறதோ, அதற்கேற்றவாறு, 500-ஆம் பிரிவுச் சட்டப்படி தண்டனையை ஏற்கவேண்டிய நிலை எழும்.

ஒருவரை அவமதிக்கும் வகையில் பேசுவதோ அல்லது எழுதுவதோ, சைகைகள் மூலம் வெளிப்படுத்துவதோ, அவமதிப்புக் குற்றத்தின்கீழ் வருமானால், அதற்கு மூன்று காரணங்கள் அமைந்திருக்கவேண்டும். அவை:

1. எந்த ஒரு மனிதனையாவது அவமதித்திருக்க வேண்டும்.

2. அத்தகைய அவதூறைப் பேசிய அல்லது மற்றவர்கள் படிக்க வேண்டுமென்று எழுதிய சொற்களாலோ, ஜாடை மாடைகளால் அதைப் புரிந்து கொள்ளக்கூடிய மறைமுக முறைகளாலோ அந்தக் குற்றம் அமைந்திருக்க வேண்டும்.

3. அந்த அவதூறு ஒருவரின் பெருமையைச் சிறுமைப் படுத்தும் குறிக்கோளோடோ அல்லது அவரின் சமுதாயத் தகுதிகளை அவமானப்படுத்தப்பட வேண்டும் என்பதை வேண்டுமென்றே அறிந்து எழுதப்பட்டதாகவோ, பேசப்பட்டதாகவோ இருக்கவேண்டும்.

அவதூறுத் தொடர்பானவற்றை - வெறுப்பைக் - கிண்டலை, கேலியைத் - தூண்டக் கூடியவையாக இருக்க வேண்டும்.

அதனால், சம்பந்தப்பட்டவரை மக்கள் வெறுத்தோ, புறக்கணித்தோ, ஒதுக்கப்படக்கூடிய சூழ்நிலைகளோ அமைந்திருக்க வேண்டும்.

அந்த ஆளின் பணியையோ, தொழிலையோ பாதித்து அவமானப்படுத்தியதாகவோ அந்தக் குற்றம் இருக்கவேண்டும். அல்லது அவரது வியாபாராத்தைச் சீர்குலைப்பதாக அது இருந்தாலும் குற்றமாகும்.

விதிவிலக்குகள்:

ஒருவரை அவமதிப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட பத்து சூழ்நிலைகளில் தண்டிக்க முடியாது என்று 499ம் சட்டப் பிரிவு விதி விலக்குக் கூறுகின்றது. அந்தப் பிரிவு கூறும் பத்து வகை விதிவிலக்குகள் இவை:

1. பொது நலனை எண்ணி உண்மையை வெளியீடாமல் இருப்பது.

2. பொது நன்மைகளைக் க்ருதி சிலவற்றை வெளியிடுவது.

3. அரசில் பணிபுரியும் பணியாளர்களைப் பற்றி நியாயமான எண்ணங்களைக் கூறுவது.

4. பொது நலன்களுக்குத் தேவையானது என்று தெரிந்தால் அதற்காக வாதாடுவது.

5. நல்ல எண்ணங்களோடு வழக்கு மன்ற நடவடிக்கைகளை வெளியிடுவது.

6. நீதிமன்ற தீர்ப்புப் பற்றியோ, சான்று பற்றியோ, நல்ல எண்ணத்தோடு கருத்தறிவிப்பது.

7. பொது நடவடிக்கைகள் பற்றிப் பொது நல நோக்கத்தோடு அவற்றை விமர்சனம் செய்வது.

8. சட்டப்படி அதிகாரம் உடையவர்கள் சட்ட எல்லைக்குள் கருத்து அறிவிப்பது.

9. அதிகாரத்தில் உள்ளவர்களின் குறைகளை நற்சிந்தனைகளோடு குறிப்பிட்டுக் கூறுவது.

10. பொது நன்மைகளைக் குறித்தோ, தனிப் பட்டவர்களையோ காப்பாற்றுவதற்காகச் சிலரைக் குறைக்கூறி, பொதுநலனுக்காக ஒருவரை எச்சரிக்கைச் செய்வது ஆகிய பத்து வகைச் சூழ்நிலைகளும் அவமதிப்புக் குற்றமாகாது.

வழக்குத் தொடுப்பு:

1973-ம் ஆண்டின் குற்றவியல் வழக்குத் தொடர்பின்படி 199(1) யார் அவமதிப்புக்கு ஆளானார்களோ, அவர்கள்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியும். ஆனால், இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில ஆளுநர், மத்திய, மாநில மந்திரிகள் ஆகியவர்கள் அவமதிப்புக் குற்றத்திற்கு ஆளானதாகக் கருதினால், அவர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர்கள் வழக்கைத் தொடுக்கலாம்.

அவமதிப்பு வழக்கைத் தொடுப்பவர், யார் அவமதிப்பு செய்தாரோ அவர் மீது மட்டுமின்றி, அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் பதிப்பாளர், அச்சகத்தார், அதனை எழுதிய ஆசிரியர் ஆகிய அனைவர்மீதும் அவமதிப்பு வழக்கைத் தொடரலாம். வழக்கு மன்றத்தில் அது உண்மையானதுதான் என்று நிரூபிக்கப்பட்டால் அனைவருக்கும் தண்டனை உண்டு.

தண்டனை
வகைகள்

தண்டனை பெற்ற அவமதிப்பாளர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் 500-வது பிரிவின்படி, 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ சேர்ந்து கொடுக்கப்படலாம்.

சட்டக் குழு (The Law Commission) மேற்கண்ட இரண்டு தண்டனைகளுடன், நீதிமன்றத் தீர்ப்பைப் பத்திரிகைகளில் வெளியிடவும், வழக்கு மன்றத்தில் வழக்குத் தொடுத்தோரின் செலவுகளையும் ஏற்றாக வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளது.

எனவே, மான இழப்பு வழக்குத் தொடுத்தவர் பொது சட்டத்தின்படி இழப்பீடு தொகையைப் பெறலாம். குற்றவியல் சட்டப்படி அவமதிப்பு செய்தவர் தண்டனை பெறுவார்.