உள்ளடக்கத்துக்குச் செல்

இதழியல் கலை அன்றும் இன்றும்/செய்தி என்றால் என்ன? தேர்வு செய்வது எப்படி?

விக்கிமூலம் இலிருந்து
422057இதழியல் கலை அன்றும் இன்றும் — செய்தி என்றால் என்ன ? தேர்வு செய்வது எப்படி?என். வி. கலைமணி

18


செய்தி என்றால் என்ன ?
தேர்வு செய்வது எப்படி?


செய்திகள் பத்திரிகைக்குச் செய்திகள் என்பவை தான் மூலப் பொருட்கள்! செய்திகள் இல்லையானால் செய்தித் தாள்கள் இல்லை. எனவே, செய்தி என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன என்பதை நாம் புரிந்து கொள்வது நல்லதல்லவா?

செய்தி என்ற தமிழ்ச் சொல்லுக்கு இங்லீஷில் News என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

News என்ற சொல்லில் உள்ள முதல் மூன்று எழுத்தை New என்று சொல்லுகின்றோம். New என்றால் புதிய, முன்னில்லாத, முதன் முதலாகத் தெரிவிக்கப்படுகின்ற, முன் உணரப்படாத, தெரிய வராத, முன் கேட்டறியாத, முன் கண்டறியாத, அண்மையில் தோன்றிய, புதிதாக ஆக்கப்பட்ட, அண்மையில் செய்து முடிந்த, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, புதிதான, பழக்கமில்லாத, மாறிய, மாறுபாடான புது மாறுதலுடைய, புதுப்பிக்கப்பட்ட, புதிதாகச் சேர்க்கப்பட்ட, கெடாத, புது நிலையிலுள்ள, பழமைப்பட்டு விடாத, தேய்வுறாத, தளராத, பளபளப்புக் குறையாத, புத்தாக்கம் பெற்ற, புத்துயர்வு பெற்ற, வேறு வகையான, அனுபவமற்ற, புதுமுறையான, புதிதாக என்ற 32 விதமான பொருட்களை அந்த New என்ற இங்லீஷ் சொல் அறிவிக்கின்றது என்று ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம் என்ற அகராதி கூறுகின்றது. இந்த நூலை சென்னைப் பல்கலைக் கழகம் 1965-ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது.

இந்த பொருட்களுக்குரிய விளக்கங்களை, சம்பவங்களை ஒவ்வொன்றாக விளக்கினால் நூல் விரியும் என்பதால் New என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ்ப் பொருட்களை மட்டுமே கொடுத்துள்ளோம். காரணம், “A word having the same form in its many parts of speech is treated as one word-if its etymons are the same’ என்பதற்கேற்ப, ஒரு சொல்லை பல சம்பவத்தின் மூலவேர்ச் சொல் பேச்சு வழக்குக்கு ஏற்றவாறு நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால், விளக்கம் தேவையில்லை என்று கருதிச் சுருக்கமாகப் பொருளை மட்டுமே இங்கே குறித்துள்ளோம்.

எடுத்துக்காட்டாக, New Comer காலம் தாழ்ந்து வந்து சேர்ந்தவர் New Look தற்கால உடை பழக்கம், புத்தம் புதிய தோற்றம், New Moon முதற் பிறை நிலா; New Year வரும் ஆண்டு; The New Woman புதுமை பெண் என்பவைக்கறேப New என்ற சொல்லைச் சம்பவத்திற்குகந்தபடி பயன்படுத்திக் கொள்வது ஆங்கில மரபு. அதாவது, வேர்ச் சொல் மாறாமல் பயன்படும் பல்வகைப் பேச்சு வழக்கு முறைக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம்.

எனவே, News என்றால், செய்தி, புதுத் தகவல், புதிய நிகழ்ச்சிகளின் விவரம் என்றும் கொள்ளலாம்.

இந்த News என்ற சொல்லிலிருந்து News Agent (செய்தித் தாள் சேகரிப்பவர்); News Boy (செய்தித் தாள் கூவி விற்கும் சிறுவன்); News Letter (செய்தி மடல்); News Monger (ஊர் செய்தி வம்படிப்பவர்); News Paper (செய்தித்தாள்); News Print (செய்தித் தாளை அச்சிடும் தாள்); News Room (செய்தி வாசிக்கும் அறை) போன்று News என்ற சொல் எந்தெந்த தொழிற் சம்பவங்களோடு இணைகின்றதோ அதற்கேற்ற சம்பவங்களுக்குப் பொருள் கொள்ளலாம். இதுபோல தமிழ் மொழியிலும் உண்டு.

எனவே, New என்பது புதியது என்ற பொருளைத் தரும் சொல்லாகும். அது ‘S’ சேர்ந்து பன்மையில் வரும்போது ‘புதியன’ என்பது பொருளாகும்.

News என்ற சொல்லில் உள்ள N என்பது North என்ற வட திசையையும், E என்ற எழுத்து East என்ற கிழக்கையும், W என்ற எழுத்து West என்ற மேற்கையும், S என்ற எழுத்து South என்ற தென் திசையையும் குறிக்கும் முதல் எழுத்துகளால் ஆன திசைகளது பெயராகும். அதாவது வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என்ற நான்கு திசைகளில் உள்ள நாடுகளிலிருந்து வரும் அன்றாடப் புதிய புதியச் செயல்களைக் குறிக்கும் செய்திகளாகும் என்று News என்ற இங்லீஷ் சொல் கூறுகின்றது. ஆங்கிலேயர் நான்கு திசைகளிலும் அன்றாடம் நடைபெறும் செய்திகளைக் குறிக்கவே News என்ற சொல்லை உருவாக்கியுனார்கள்.

தமிழில் அதைச் ‘செய்தி’ என்கிறோம், அந்தத் தமிழ்ச் சொல்லின் ‘தி’ என்ற இறுதி எழுத்து திசைகள் நான்கு என்று எண்ணி, அந்த நாற்திசைகளில் வரும் புதிய புதிய செயல்களைச் ‘செய்’ என்ற தமிழ்ச் சொல்லில் அடக்கி ‘செய்தி’ என்றால் உலகத்தின் நான்கு திசைகளிலிருந்து வரும் புதிய செயல்களுக்குச் ‘செய்தி’ என்று குறிப்பிடலாம் இல்லையா? சரி, என்றால் ஒப்புங்கள்; இல்லையென்றால் விட்டு விடுங்கள். அதனால் நமக்கு நட்டமில்லை அல்லவா? ஏனென்றால் செய்+தி = செய்தி தானே!

எதையாவது உலகுக்கு உரைப்பதுதானே செய்தி. இன்றைய செய்தி, நாளைய வரலாறுதானே செய்தி? அந்தச் செய்தி உலக மக்களின் கவனத்தை இழுக்கும் காந்த சக்திதானே செய்தி?

எனவே, புதுமையான செயல் எதுவோ? அது செய்தி! மனிதனுக்குச் சுவையூட்டுவது எதுவோ அது செய்தி! மக்களுக்கு ஆர்வமூட்டும் சம்பவம் என்னவோ அது செய்தி! அதைத் தெரிந்து கொள்ளும் கருவிதானே செய்தித் தாள்?

அந்தச் செய்திகள் புரட்சிகளாக இருக்கலாம்; உணர்ச்சிகளாக உந்தி எழலாம்; எழுச்சிகளை எடுத்துரைக்கலாம்; வீழ்ச்சி அழிவுகளை விளக்கலாம் சமுதாயத்தின் தனி மனித குற்றங்களாகச் சதிராடலாம்; நீதியை நிலை நாட்டும் சந்நிதானங்களாகவும் அமையலாம்; பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சிகளைத் தோற்றுவிக்கும் சந்தைகளாகலாம்; பெண் காம உணர்ச்சிகளின் களமாகக் காணப்படலாம்; மதம், சாதி, அடிதடி மோதல்களாய் கலவர மூட்டலாம்; விஞ்ஞான விந்தைகளாக விளங்கலாம்; கொலை, களவு, மர்மக் குற்றங்களாகத் தென்படலாம்; சினிமா, நாடகம், இலக்கியம், கவிதை, கலைத்துறைகளாகக் காட்சி தரலாம்; இயற்கைச் சீற்றங்களால் தாண்டவமாடிடும் ட்சுனாமி, சூறாவளி, புயல், பூகம்ப, எரிமலைக் கோரங்களின் கொடுமை அழிவுகளாக உண்டாகலாம்; பல வகையான ஆன்மீக சம்பவங்களாகத் திகழ்லாம்; எனவே, செய்திகள் என்பவை உலகத்தின் பல தோற்றங்களால் உருவாகுபவையே! அவற்றைச் சேகரித்துத் தாள்கள் மூலம் தந்து மக்களை எச்சரிக்கையோடு விழிக்க வைத்து, வாழ்க்கை நடத்த உதவுபவைகளே செய்தித் தாள்களின் அற்புதப் பணிகளாகும்.

இந்த வகையான சமுதாய மேம்பாடுகளுக்காக உழைப்பதுதான் செய்தித் தாள்கள். அதனால்தான் மக்கள் அவற்றை விரும்பி வாங்கிப் படித்துத் தெளிவு பெற்றிட விரும்புகிறார்கள்.

எந்த ஒரு சம்பவமானாலும், அதை எங்கே நடந்தது? ஏன் நடந்தது? எப்போது நடந்தது? எதற்காக நடந்தது? என்ன முடிவு? என்பதை மக்களுக்கு விவரமாகத் தெரிவிப்பதுதான் செய்தித் தாள் கல்வியாகும்!

பள்ளிப் பாடங்களைப் போதிப்பவன் பள்ளி ஆசிரியன்; நாட்டு நடப்புகளை விளக்கமாகப் போதிப்பவன் செய்தித் தாள் ஆசிரியன்! இரு ஆசிரியர்களும் நாட்டுக்கும் வீட்டுக்கும் எதிர்கால நன்மைகளை விளைவிப்பவர்கள் என்றால் அது மிகையாகாது.