உள்ளடக்கத்துக்குச் செல்

இதழியல் கலை அன்றும் இன்றும்/செய்தியாளரும் ஒரு - தசாவதானக் கலைஞரே!

விக்கிமூலம் இலிருந்து


17


செய்தியாளரும் ஒரு -
தசாவதானக் கலைஞரே!


வேளாண்மை செய்யும் விவசாயி ஒருவனுக்கு எப்படி வயலும் வாய்க்காலும் மாடும் கிணறும் அவசியம் தேவையோ, அதுபோல, பத்திரிகையாளருக்கும் செய்தி சேகரிப்பாளர்கள் அவசியம் தேவை!

பத்திரிகை துவங்கிய காலத்தில், அவரவர் செய்திகளை அஞ்சல்களிலும், அவசரச் செய்திகளானால் தந்தி, டெலிபோன், ட்ரங்கால்களிலும், இறுதியாக ஆட்கள் மூலமாகவும், அந்தந்தப் பத்திரிகைகட்குரிய உள்ளுர் விற்பனை முகவர்களாக இருக்கும் ஏஜெண்டுகள் மூலமும் பத்திரிகை அலுவலகத்திற்குச் செய்திகள் வந்து சேரும்.

கடிதம் மூலமாக பெரும்பாலும் பத்திரிகைக்கு வருவது தான் சர்வ சாதாரணச் செயலாக இருக்கிறது. கடிதத்திற்கு வடமொழியில் ‘நிருபம்’ என்று பெயர். அவர்கள் அன்றாடம் நிகழும் செய்திகளை ‘நிருபம்’ மூலமாக எழுதியனுப்புவதால், அவர்களுக்கு நிருபர் என்று பெயர் வந்தது. இங்லீஷ் மொழியில் அவர்களை Reporters என்று கூறுவார்கள். தமிழில் நாம் அந்தச் சொல்லைச் செய்தியாளர் என்கிறோம்.

கட்டுரையாளர்கள், கதை, கவிதை எழுதுவோர்களது பெயர்களைத்தான் முன்பெல்லாம் பத்திரிகைகள் வெளியிட்டன. அதனால், அந்தப் பெயர்கள் அத்தகைய எழுத்தாளர்களுக்கு மக்கள் இடையே செல்வாக்கும், சொல்வாக்கும் ஈட்டித் தந்தன.

ஆனால், இப்போது செய்தியாளர்கள் பெயரும் செய்திகட்குக் கீழே பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அதனால் நாள்தோறும் மக்கள் இடையே பழகும் வாய்ப்புடைய செய்தியாளர்கள் பெயரும் புகழும் பெறுகிறார்கள். அவரவர் ஊர்களிலே செய்தியாளர்களுக்கு சொல்வாக்கும், செல்வாக்கும் நாளும் பெருகுகிறது.

உள்ளூர் காவல்துறை, நீதித் துறை, அரசுத் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் பிறத் துறைகளிலிருந்தும் செய்திகளைச் சேகரிக்கும் பணி - மதிப்பும், மரியாதையும் அவர்களுக்கு உருவாக்குகின்றது.

அதனால், அந்தச் செய்தியாளர்கள், ஆட்சியர், காவல் துறை உயர் அதிகாரி, தாசில்தார், மருத்துவத் துறை, நீதித்துறை போன்றவற்றில், தான் ஒரு பத்திரிகைச் செய்தியாளர் என்று அடையாள அட்டையைக் காட்டி விட்டு - எந்தக் காரியத்தையும் சுலபமாகச் சாதித்துக் கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகின்றன.

எனவே, ஒரு நாளேட்டிற்குச் செய்தியாளர்கள் இல்லையென்றால் நாளேடு நடக்காது; பத்திரிகைகள் இல்லையென்றால் செய்தியாளர்களுக்கும் மரியாதை கிடையாது. பழைய பெருங்காய டப்பாக்களைப் போல ஊரில் உலா வருவர். அவ்வளவுதான் எதுவும் நடந்தவரை மிச்சம்.

செய்தியாளர்களால் பத்திரிகை தகுதி பெறுகின்றது. பத்திரிகையால் செய்தியாளர் தகுதி பெறுகின்றார்கள். அதனால் செய்தித் திரட்டுவோரால் ஒரு பத்திரிகையை உருவாக்கவும் முடியும், உருக்குலைக்கவும் முடியும்.

இதைத்தான் திரு. ரெங்கசாமி பார்த்தசாரதி என்பவர், தனது ‘அடிப்படை - பத்திரிகைக் கொள்கைகள்’ (Basic Journalism) என்று நூலில் குறிப்பிடும்போது, “ஒரு செய்தித் தாளின் புகழும், நம்பிக்கையும், செய்திகளையே சார்ந்துள்ளது. அதனால், அவர்களால் ஒரு செய்தித் தாளை ஆக்கவோ, அழிக்கவோ முடியும். அவர்கள்தான் ஒரு செய்தித் தாளுக்கு வாழ்வளிக்கும் இரத்தம் போன்றவர்கள்” என்கிறார்.

‘ஒரு நாட்டின் செவிகளும், விழிகளும் பத்திரிகைகள் என்றால், செய்தி சேகரிப்போர் அதன் கால்களும் கைகளும் போல ஓடியாடி உழைப்பவர்கள்’ என்கிறார். பழநியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட ‘செய்திகள்’ என்ற நூலில் திரு. எம். செல்லையா என்பவர்.

இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? ஒரு பத்திரிகையின் அடிப்படைக் காரணமாக இருப்பவர் Reportersகளே ஆகும்! இவர்களுக்கு நிருபர் என்று பெயர்தானே தவிர, இந்த செய்தியாளர்கள் தேனியைப் போல பறந்து பறந்து ஒவ்வொரு மலர்களையும் ஊடுருவதைப் போல, ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் செய்தி என்ற தேன் துளிகளைத் திரட்டும் கலைஞர்களாக உள்ளவர்களே செய்தியாளர்கள்!

‘தினமணி’ நாளேட்டின் சிறந்த செய்தியாளராகப் பணியாற்றியவர் திரு. ஏ.என். சிவராமன் என்ற வார்த்தைச் சித்தர். போர்க் காலக் களங்களில் செய்திகளைச் சேர்த்திட இந்தியா வந்தவர்தான் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருமுறை இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்.

எனவே, செய்தி திரட்டுவது என்பது அவ்வளவு சுலபமான பணியன்று. கடலில் மூழ்கி முத்தெடுப்பதைப் போல, ட்சுனாமி என்ற கடல் பேரழிவுக்கும் அவர்கள் அஞ்சாமல் பணியாற்ற வேண்டியவர்களாவர்.

அமெரிக்காவில் மெல்வைல் இ. ஸ்டோன் என்பவர் அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) என்ற ஒரு செய்தி நிறுவனத்தை அமைத்தபோது, ‘ஓர் ஆசிரியரின் அறிவைவிட செய்தி சேகரிப்போர் அறிவு செல்வாக்கும் சிறப்பும் உடையது’ என்று குறிப்பிட்டார்.

சமுதாயத்தில் நடமாடும், ஒவ்வொரு மனிதனும் செய்தியாளன்தான்! அவனவன் அறிவுக்கு ஏற்றவாறு மக்களிடையே செய்திகளைப் பரப்பி விடுவான். ஆனால், அவன் செய்வது செய்தியாளன் பணியன்று. வதந்தியாளன் செயலாகவும் (Rumour) இருக்கக் கூடுமில்லையா? அதனால், அவரைப் போன்றவர்களல்லர் செய்தியாளர்கள். மக்களே போல்வர் ‘கயவர்’ என்றார் திருவள்ளுவர் பெருமான் - கயவர்களை அடையாளம் காட்டும்போது. அதுபோலவே வதந்தி பரப்புவோனும் வேறு மனிதனைப் போலவே நடமாடுவான்.

எப்படி Reporterரைக் அடையாளம் காண்பது? செய்திகளைப் பரப்புகின்ற வாசகர்களின் எண்ணிக்கையை வைத்து அடையாளம் காணலாம்! அதெப்படி?

நிருபர் கொடுக்கின்ற செய்தி எப்படிப்பட்டதாக இருக்கின்றது? அதனால் மக்களுக்கு உண்டான உண்மை என்ன? நன்மை என்ன? செய்தியாளர் செய்த அறிவுப் பணிகளின் ஆக்கச் செயல்கள்; செய்தியாளர் அந்தச் செய்தியை எந்த வடிவத்தில் வெளியிட்டார்; அவர் பிரசுரித்த செய்தியால் விளைந்த நோக்கம், ஊக்கம், ஆக்கம் என்னென்ன? ஆகிய சில வித்தியாசமான செய்திகளது வெளியீட்டால் அவர் மக்கள் இடையே ஒரு தனி அடையாளமாகக் காணப்படுவார்! அவர் தான் திறமையான செய்தியாளர்!

எனவே, செய்தியாளர்கள் திறமைகளைப் பத்து வகைகளாகப் பிரிக்கலாம். தமிழ்ப் படித்தவர்கள் இந்த உண்மைகளை உணர்வார்கள்.

செய்தியாளர்கள்
அவதானிகளே!

தமிழ்க் கலைகளில் அவதானக் கலை என்பது ஓர் அற்புதக் கலை. அந்தக் கலையிலும் அட்டாவ்தானம், தசாவதானம், சோடசாவதானம், சதாவதானம் என்று பல வகைகள் உண்டு. பொதுவாக, அவதானம் என்றால் என்ன என்பதைத் தெரிவது நல்லது.

அவதானம் என்றால் ஒரு கலையை அல்லது செய்தியைக் கிரகித்தல், சாதுரியம், நிதானம், நினைவு, பாவனை, பின்தொடர்தல், அவதானம் பண்ணல், நினைத்தல், பாடம் பண்ணல், திறமைக்கு வித்தாதல், பண்புகளைப் பெற்று ஒரு சவாலை, காரியத்தைச் செய்து முடித்தல் என்பவையே!

அட்டாவதானம் என்றால் எட்டு வகை அவதானம், தசாவதானம் என்றால் பத்து வகை அவதானம். சோட சாவதானம் என்றால் பதினாறுவகை அவதானம், சதாவதானம் என்றால் நூறு வகை அவதானங்களை மேடையில் மக்கள் முன்பு செய்வதில் வல்லவராக இருக்க வேண்டும்.

அவதானம் என்றால் என்ன என்பதை மேலே விளக்கியுள்ளோம்! அதற்கேற்ப, எண்ணிக்கைக்குரியவாறு அவரவர் திறமைகளை அவதானப் பயிற்சிப் பெற்றோருக்கு அவை நன்கு தெரியும். ‘சதாவதானி’ செய்குத் தம்பி பாவலர், ‘அட்டவதானி’ பூவை கலியான சுந்தர முதலியார் போன்ற சிலர் அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்கள்.

செய்தியாளர்கள் செய்யும் தசாவதான இயல்பு வகைகள் எவை? அவர்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம்!

1. தலைநகரச் செய்தியாளர்கள்

செய்திப் பத்திரிகைகள் பெரும்பாலும் முக்கியமான நகரங்களிலே இருந்து வெளிவந்தால்தான் அவற்றுக்குச் செய்திகள் திரட்டிட வசதிகளாக இருக்கும். அந்தந்த நகரங்களிலே உள்ளூர் செய்திகளைத் திரட்டுபவர்கள் City Reporters என்ற நகர செய்தியாளர்கள் ஆவர்.

இவர்கள் அன்றாடம் அந்த நகரப் பகுதிகளிலே நடைபெறும் நன்மை தீமைகளைத் தரும் செய்திகளைச் சேகரித்துத் தங்களது தொடர்பான பத்திரிகைகளுக்கு வழங்கப் பணிபுரிவார்கள்.

2. ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகர்ப் பகுதிகளிலிருந்து செய்திகளைச் சேகரிப்பவர்களுக்கு நகர்ப்புறச் செய்தியாளர்கள் (Mofussil Reporters) என்று பெயர்.

3. தேசியச் செய்தியாளர்கள்

இவர்கள் திரட்டும் செய்திகள் அகில இந்திய வளர்ச்சி நிலைமைகளுக்குத் தக்கவாறு அமைய வேண்டும். அதனால் அவர்கள் தேசிய நிருபர்கள் எனப்படுவார்கள்.

4. வெளிநாட்டுச் செய்தியாளர்கள்

உலக நாடுகளின் தலைநகரங்களில் வாழ்ந்து கொண்டு அங்குள்ள உலகச் செய்திகளை தத்தங்களது நாடுகளுக்கு அறிவிக்கும் செய்தியாளர்களாவர்.

5. பகுதிநேரச் செய்தியாளர்கள்

பத்திரிகை அலுவலகத்தில் நேரடியாக வேலை செய்யாமல், தங்களது வாழ்க்கைக்குரிய நிரந்தரப் பணிகளை செய்து கொண்டு, ஓய்வுநேரங்களில் தகவல்களைச் சேகரித்துக் குறிப்பிட்டச் செய்தித் தாள்களுக்கு மட்டுமே செய்திகளை அனுப்புவர். அவற்றுக்குத் தக்கவாறு ஊதியம் பெறுவார்கள். இவர்களை Part-time Reporters என்பார்கள்.

6. ஒரு மாநிலத்தின் தலைநகரத்தில் இயங்கும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் நடைபெறும் செய்திகளை வழங்குபவர்களை மன்றச் செய்தியாளர்கள் (Lobby Correspondents) என்று குறிப்பிடுவார்கள்.

இந்த வகைச் செய்தியாளர்கள், அந்த நாட்டின் அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் அல்லது வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டிற்கு வருகை தரும் அதிபர்கள், மன்னர்கள், பிரதமர்கள் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்குப் பின்தொடர்ந்து சென்று, அவர்களுடைய சம்பவங்களைச் சேகரித்து நாடு முழுமைக்குரிய வகையில் முக்கியமானச் செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்.

7. இவ்வாறு பணிபுரியும் செய்தியாளர்களிலே Special Correspondents என்ற பெயரில் சிறப்புச் செய்திகளை மட்டுமே வழங்குபவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

8. ஒவ்வொரு ஊர் நிகழ்ச்சிகளைப் பார்த்து, அவற்றைப் பார்த்தது பார்த்தவாறே செய்திகளை அனுப்புவர்களும் Reporters இருப்பதுண்டு.

9. கண்ட செய்திகளைக் கண்டவாறும், அத்துடன் தங்களது யூகங்களைச் சேர்த்தும், செய்திகளை அனுப்பு வார்கள். இவர்களுக்கு விளக்கச் செய்தியாளர்கள் (interpretative Reporters) என்ற பெயருண்டு.

10. செய்தி வல்லுநர் எனப்படுவோர் ஒரு சம்பவத்தை நேரில் சென்று பார்க்காமலேயே அதன் முக்கியத்துவம் இதுதான் என்று உறுதியை அறுதியிட்டு எழுதுபவர்களை Expert Reporters என்று சொல்வார்கள்.

இவ்வாறு செய்தியாளர்கள் பத்து வகை ஆற்றல்களோடு ஆங்காங்கே பணிபுரிபவர்களாக விளங்குவதால், பொதுவாகச் செய்தியாளர்களைத் தசாவதானிகள் என்றும் அழைக்கலாம் அல்லவா? செய்தி சேகரிப்பதும் ஒரு கலைதானே!

செய்தியாளர்களால் நாட்டுக்கு என்ன பயன் என்றால், அவர்கள் சமுதாய விழிப்புக்கு நாள்தோறும் பணியாற்றி, ஆங்காங்கே நடைபெறும் உண்மைகளை உலகுக்கு உணர்த்தும் பொறுப்பினைச் செய்வதால் அவர்களைச் சமுதாய விழிப்புணர்வூட்டும் ஆசான்கள் என்றும் கூறலாம்.

சமுதாயத்தில் அன்றாடம் நடைபெறும் அநீதிகளை மக்களுக்குச் சுட்டிக் காட்டுவதோடு இராமல், மக்களுக்கு தீமைகள் வருமுன் காக்கும் சீர்திருத்தவாதிகளாகவும் - செய்தியாளர்கள் இருக்கின்றார்கள். அதனால், அவர்களை மக்கள் இயக்க இயங்கும் சீர்திருத்தவாதிகள் என்றும் பெருமையோடு குறிப்பிடலாம் இல்லையா?

செய்தியாளர்கள் நியமிக்கப்படாத பத்திரிகையாக இருந்தால், அந்த இடங்களுக்குப் பத்திரிகை விற்பனையாளரே (Agent) Reporterராக பணியாற்றுவதுமுண்டு. அந்தவிதமான செய்தியாளர்கள் அந்த ஊரிலே உள்ள மக்களால் பெரிதும் மதிப்போடும், மரியாதையோடும் நடத்தப்படுபவர்களாக நடமாடுவார்கள்.

எனவே, செய்தியாளர்கள் மக்கள் நம்பிக்கைக்காக உழைக்கும் உண்மைப் பணியாளர்களாக உலா வரவேண்டும். இல்லையானால், ஊராரே அவர்களை அவமதிக்கும் நிலைகளையும் பெறுபவர்களாக இருக்க நேரிடும். இதை உணர்பவர்களால்தான் செய்தியாளர்களுக்கு மரியாதையும், மதிப்பும் உருவாகும் என்பதை - நிருபர்கள் உணர்ந்து செய்திகளைத் திரட்ட வேண்டும்.

ஒவ்வொரு நகரம், வட்டம், மாவட்டம், கிராமங்களில் பணியாற்றும் செய்தியாளர்களால், அந்தந்த பத்திரிகைகளுக்கு நல்ல புகழும், மரியாதையும், மதிப்பும் உருவாக வேண்டுமானால், அந்தச் செய்தியாளர்கள் நாணயவாதிகளாய் ‘நா’நய வாதிகளாய், ஒழுக்கம் ஓம்பிகளாய், கையூட்டு ஆசை அற்றவர்களாய், நேர்மையான பண்புடையவர்களாய், பழக்க வழக்க அன்பர்களாய், கல்வியறிவுச் சிறப்புடையவர்களாய், செய்திகளைச் சேகரிக்கும் திறனாளர்களாய், மக்களுக்கேற்ற நண்பர்களாய், தன்னம்பிக்கை உடையவர்களாய், முன்கோப மற்றவர்களாய், நடுநிலையாளர் நோக்குடையவர்களாய், அழகும் கம்பீரமும் ஆற்றலுமுடையத் தோற்றமுள்ளவர்களாய், சுயநலமற்ற பொதுநல அக்கறையுடையவர்களாய், எல்லாவற்றுக்கும் மேலாகப் பத்திரிகைச் சட்டங்களையும், அரசு சட்டங்களையும் உணர்ந்தவராய், அவற்றை மதிப்பவராய், உண்மையே உருவான ஒழுக்க சீலங்களைப் பேணுபவராய் இருந்தால்தான்; அந்தச் செய்தியாளரால் நாட்டுக்கும், சமுதாய மேம்பாடுகளுக்கும் நன்மைகள் இமயம் போல் ஓங்கி நிற்கும் தன்மையராய் திகழ்வார்கள். அப்படிப்பட்ட அறிவாளிகளால் தான் அந்தப் பத்திரிகையும் வளரும், வாழும் என்பதை உணர்பவர்தான் உண்மையான, உத்தமமான செய்தியாளர் என்ற பெயரைப் பெறுவார்.

இத்தகையை அரும்பெரும் பண்புகளை உடையவர் தான், நாளை ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராகவும், வர முடியும். வரவேண்டும். அப்போதுதான் பத்திரிகைக்கு நல்ல பெயர் நடமாடும். அத்தகையவர் ஒரு நாள் நாட்டை ஆள்பவராகவும் மாறும் காலம் தோன்றும் அல்லவா? அறிஞர் அண்ணாவைப் போல; கலைஞருக்கு நிகராக; வின்செண்ட் சர்ச்சில்லாக விளங்கிடலாம் இல்லையா?