இதழியல் கலை அன்றும் இன்றும்/ஒவ்வொரு பத்திரிகையும் - அரசுக்கு ஆண்டறிக்கை அனுப்ப வேண்டும்

விக்கிமூலம் இலிருந்து


16


ஒவ்வொரு பத்திரிகையும்-அரசுக்கு
ஆண்டறிக்கை அனுப்ப வேண்டும்


த்திரிகைகளைப் பற்றிய முழு விவரங்கள் அரசுக்குத் தேவை. அப்போதுதான் அவற்றை ஒரு ஒழுங்கு முறையில் நெறிப்படுத்த முடியும். அதற்கு உதவியாக பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும் அதற்கு ஆண்டு அறிக்கை அனுப்ப வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உருவாக்கி இருக்கிறது அரசு.

ஒரு பத்திரிகையாளர், அவர் நடத்தும் பத்திரிகையைப் பற்றிய அந்த ஆண்டின் முழு விவரங்களை அதாவது Annual Statement விவரத்தை, புது தில்லியிலுள்ள பத்திரிகைப் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும.

இந்த விவரங்களைப் பத்திரிகைச் சட்ட விதிப்படிவத்துள் பூர்த்தி செய்து, ஃபிப்ரவரி திங்கள் இறுதிக்குள் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும் படிவம் II-ல், கடந்த ஆண்டுக்குரிய எல்லா விவரங்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.

பத்திரிகை உடைமையையும், ஆசிரியர் பற்றிய முழு தகவல்களையும், IVம் படிவத்தில் பூர்த்தி செய்து மார்ச் மாதங்களில் வரும் இதழ்களில் வெளியிட வேண்டும்.

ஒரு பத்திரிகை 2000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாவதாக இருந்தால், அதன் சர்க்குலேஷன் விற்பனைப் பற்றிப் பதிவு செய்த ஆடிட்டரின் சான்று பெற்று, ரிஜிஸ்தார் ஆஃப் நியூஸ் பேப்பர், புது தில்லி (Registrar of News Paper, New Delhi) என்ற அலுவலகத்தாருக்கு அனுப்ப வேண்டும்.

அவ்வாறு அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு பத்திரிகை விவரங்களை அனுப்பா விட்டால், பத்திரிகைச் சட்ட விதிகளை மீறியதாக எண்ணி, அந்தப் பத்திரிகை மீது 1970ம் ஆண்டு மார்ச் மாதம் வரை செய்துள்ள சட்டத் திருத்தற்திற்கேற்பவும், 1867ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்து, பத்திரிகை, புத்தகங்கள் சட்டப் பதிவுகேற்பவும், 19K பிரிவின் படி தக்க நடவடிக்கை எடுத்துத் தண்டனையும் கிடைக்க வழி ஏற்படும்.

பதிவாளர்
ஆண்டறிக்கை

இந்தியா முழுவதிலும், அந்தந்த மாநிலங்களிலும் உள்ள எல்லாப் பத்திரிகை விவரங்களையும் மேற்கண்ட ஆண்டறிக்கை விவரங்களின்படி பெற்ற பதிவாளர்தான், இந்திய அரசுக்குரிய முழு ஆண்டறிக்கையை அளிப்பவராவார்.

எனவே, ஒவ்வொரு பத்திரிகையாளரும் அவரவர் ஆண்டறிக்கை விவரங்களைச் சரியான முறையில் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்பினால்தான் அந்த ஆண்டறிக்கையைச் சரியான முறையில் பதிவாளர் அரசுக்கு வழங்க முடியும். அப்படி வழங்கினால்தான், அந்த ஆண்டறிக்கையால் பத்திரிகைகளும் தக்க அரசு வசதிகளைப் பெற்றிட வாய்ப்பாகவும் அமையும்.

திடீரென நுழைந்து
சோதனை முறை!

அவ்வாறு அனுப்பாத பத்திரிகையாளர் அலுவலகங்களுக்கு, பத்திரிகை, புத்தகச் சட்டம் 19F என்ற பிரிவுக்கேற்ப, பத்திரிகைப் பதிவாளரோ, அல்லது அவர் அதிகாரம் பெற்றவரோ எந்த பத்திரிகை அலுவலகத்திற்குள்ளும் சென்று எப்படி நடக்கிறது பத்திரிகை என்ற விவரங்களை அறியலாம். அதைத் தடுக்கக் கூடாது; முடியாது.

சர்க்குலேஷனுக்குப் போகும் பத்திரிகைகளின் அடிப்படையில்தான் பத்திரிகைகளுக்கு அச்சுத்தாள் கோட்டா ஒதுக்கீடு செய்கிறார் பதிவாளர். அதனால், வாங்கிய பேப்பர் ஒதுக்கீடு அளவில் பிரதிகள் அச்சிடுகிறார்கள்; விற்பனை செய்கிறார்கள் என்பதற்கான ஒழுங்கான கணக்குமுறைக்குச் சரியான சான்று தேவையல்லவா? அதற்காகத்தான் பதிவாளர் அலுவலகம் சோதனை நடத்துகிறது.

எவ்வளவு இதழ்கள் அச்சடிக்கிறார்கள்? விற்பனையாகும் பிரதிகள் எவ்வளவு? விற்காத பிரதிகள் (ரிட்டர்ன்) எவ்வளவு? என்பதற்கான ஆவணங்களைச் சரியானபடி பத்திரிகை அலுவலகம் வைத்திருக்கா விட்டால், சர்க்குலேஷனுக்கு அனுப்பிய பிரதிகள் என்று கூறும் கணக்கை உண்மை என்று ஏற்றுக் கொள்ளாது புது தில்லியிலுள்ள பதிவாளர் அலுவலகம். அதற்குப் பிறகு அரசு அந்தப் பத்திரிகைக்கு குறைந்த விலையில் கிடைக்கும் தாள் ஒதுக்கீட்டை ரத்து செய்து விடும்.

ஒவ்வொரு பத்திரிகையும் அந்தந்த மாநிலத்தில் எவ்வாறு சர்க்குலேஷன் ஆகின்றது என்பதைப் பதிவாளர் அலுவலகம் அறிந்தாக வேண்டும் என்ற அக்கறைக்காகவே, அரசு நமது நாட்டை நான்கு பகுதிகளாகப் பிரித்து, அந்த ஒவ்வொரு பகுதி (Zone)க்கும் ஓர் அலுவலரை Circulation Officerராக நியமித்துள்ளார்கள்.

வடக்கு (North) மண்டலம் புது தில்லியிலேயே உள்ளது. தெற்குப் பகுதி (South) சென்னையில் உள்ளது. மேற்கு(West)ப் பகுதி மும்பையிலும், கிழக்குப் (East) பகுதி கொல்கொத்தாவிலும் பதிவாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

முதன் முதலாக எப்படிப் புதிய பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதை அறிந்து, மெட்ரோபாலிட்டன் நீதிபதி, மாவட்ட நீதிபதிகளிடம் பத்திரிகை வெளியிடுபவரும், அச்சகத்தாரும், அதற்குரிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அவர்களின் ஒப்புதலைப் பெற்றார்களோ, அதைப் போலவே பத்திரிகையை நிறுத்துவதென்றாலும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து நிறுத்தி விட்டோம் என்பதையும் அவர்களிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்றாக வேண்டும். இல்லை என்றால் தண்டனைக்குரிய குற்றமாக அதை எண்ணி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இப்போது யாரும் இந்த விதியை ஏனோ பின்பற்றப்படுவதில்லை. காரணமும் புரியவில்லை.

பத்திரிகைகள் வெளியிடுபவர்கள் அதற்குரிய விதிகளை, ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி வெளியிடும்போது நாட்டில் நடைபெறும் பத்திரிகைகள் வெளியிடும் முறைகளும் நெறிப்படுத்தப்பட்டத் துறையாகத் திகழும் அல்லவா?