உள்ளடக்கத்துக்குச் செல்

கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/பாலும் பாவையும்

விக்கிமூலம் இலிருந்து


7. பாலும் பாவையும்

—‘விந்தன்’—

சென்னையில், கந்தசாமி கோயில் பகுதியில் ஒரு புத்தகக் கடையில் கனகலிங்கம் அலுவல் பார்த்தான். மாதத்திற்கு முப்பது நாட்கள் தானே? ஆகவே அவனுக்குச் சம்பளமும் முப்பதுதான்! சமுதாயத்தில் அவ்வப்போது பெரிய மனம் காட்டிக் கை நீட்டிய ‘துட்டு’ பல வடிவத்தில் அவனுக்குக் கை கொடுத்தது என்னவோ நூற்றுக்கு நூறு உண்மைதான். அவன் உடல் கறுப்பு என்றாலும், உள்ளம் மாத்திரம் வெள்ளை. அதனால் அவன் கடையைத் தேடி வந்த எழுத்தாளரிடம், “இங்கே செத்துப்போன நூலாசிரியர்களின் நூல்களைத்தான் வெளியிடுவது வழக்கம்..” என்று தன் முதலாளியின் அருமைக் குணத்தைப்பற்றி அப்பட்டமாகச் சொல்கிறான்.

கலைஞானபுரம் என்ற ஊரிலே, தமிழ் வளர்த்த அகத்தியனுக்கு - குடமுனிக்கு விழாவென்று , கனகலிங்கம் புறப்பட்டான். நளவிலாஸம் புகல் தந்தது. இரவு உணவு கொண்டு, துயில் கொள்ளும் பொழுது, பெண்மணி ஒருத்தியின் விம்மல் ஒலி அவன் காதில் விழுந்தது.

இனி, கதை சூடுபிடிக்கக் கேட்கவா வேண்டும்?

அந்தப் பெண் நல்ல அழகி. ஏழ்மையின் இரங்கத் தக்க அழகல்ல; செல்வத்தின் செருக்கு மிக்க அழகு. அவள் திடுதிப்பென்று அப்பாவி கனகலிங்கத்தை நெருங்கி, “ஐயா...இனி... நீங்கள்தான்...எனக்குத்துணை!” என்று ஒரு போடு போட்டுவிடுகிறாள். அப்பாவி திணறக் கேட்பானேன்? அந்தோ, பரிதாபம்!...

அகல்யா என்ற அந்தப் பெண் இந்திரன் என்ற இளைஞனால் ஏமாற்றப்பட்ட கதையை அறிகிறான் கனகலிங்கம். ஆயினும், அவள்பால் அவனுக்குச் சபலம் தட்டாமல் இல்லை. பாலுணர்வு அவன் மனக் கதவைத் தட்டாமலும் இல்லை! ஒரு இரகசியம். “பெண்மையை இழந்துவிட்ட அவளுக்காக, நான் ஆண்மையை இழந்து விடுவதா? முடியாது; முடியவே முடியாது!” என்று உட்குரல் எடுத்துப் பேசவும் துணிகிறான் அவன்.

அகல்யாவும் கனகலிங்கமும் துணிந்து, சென்னைக்குப் புறப்பட்டார்கள். அங்கே கனகலிங்கத்தின் அருமையான வேலை-உத்தியோகம் பெருமையாகப் போய்விடுகிறது. பழைய பாணியில் புதுக் காதலர்கள் அலைகிறார்கள். 

“உன்னைக் காதலிக்காமல் கொல்வதைவிட காதலித்தே கொன்றுவிடுகிறேன்!” என்று சொன்ன கனகலிங்கம், கடைசியில் ஒரு நாள் கொலை செய்யப்படுகிறான். பாவம் அகல்யா அனாதையாகிறாள்! இளைஞர்கள் பலரின் முச்சந்தியாகிறாள் பேதைப் பாவை! தசரத குமாரின் திருப்பார்வைக்குக் குறியாகிறாள். “எங்கேயாவது கெட்ட பால் நல்ல பாலாகுமா, ஸார்?” என்று வேலைக்காரன் கேட்ட வினா, அவன் ஞானக் கண்ணைக் திறந்து வைக்கிறது.

அபலை அகல்யாவுக்கு ஆழி இடம் அளிக்கிறது!... ஆனால் அவள் வலிந்து ஏற்றுக் கொண்ட பழியை அதனால் மாய்க்க முடியுமா, என்ன?...


மதிப்புக்கு உகந்த விந்தன் அவர்களுக்கு,
இதயம் தோய்ந்த அஞ்சலிகள்.

உங்களுடைய முதல் நவீனம் ‘பாலும் பாவையும். அதைப் படித்துமுடித்த சகோதரி சரளா உங்கள் முன்னே முகம் காட்டத் துணிவு கொள்ளாவிட்டாலும், அகம் காட்டி, அதில் ‘புறத்தை’யும் காட்டி உங்களுக்குக் கடிதம் எழுதத் துணிந்திருக்கிறாள். அந்தச் சகோதரியின் துணிச்சலை எந்த அப்பாவியும் பாராட்டாமல் இருக்கமாட்டான். சரளாவின் திருமுகம் கிடைக்கப் பெற்ற நீங்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறீர்கள். மரபை ஒட்டிய பண்பாடு. நன்றியும் கூறியிருக்கிறீர்கள். உங்களுடைய நாவலை மனத்திண்மை மாறாமல், பெண் ஒருத்தி படிப்பதென்பதோ , படித்த பிறகு உங்களுக்குத் தன் கருத்தை வெளியிடுவதென்பதோ லேசுப்பட்ட காரியமா, என்ன? ஒரு முறை என்ன, ஓராயிரம் தடவை வேண்டுமானலும் நீங்கள் நன்றி சொல்லலாமே?

‘பெண்குலத்தை மாசுபடுத்துவதற்காகத் தாங்கள் இப்புதினத்தைத் தயாரித்திருக்கிறீர்கள்!’ - சரளாவின் கட்சி இது. கட்சி என்று எழுதுவதைவிட, குற்றச் சாட்டு என்றே எழுதிவிடுவதுதான் பொருத்தம்.

“இல்லை. இல்லை. பெண் குலத்தைத் தூய்மைப்படுத்தவே நான் இக்கதையை எழுதியிருக்கிறேன்!” பெண்ணுடன் போட்டி போட்டுக்கொண்டு நீங்கள் 'கச்சை' கட்டிப் பேசியிருக்கிறீர்கள். உங்கள் பேச்சிலே ‘பயம்’ தொனிக்கிறது, நீங்கள் உணர்வீர்களோ, என்னவோ? நான் உணருகிறேன். உங்களுடைய அந்தப்‘பயம்’ வாழட்டும்! ஏனெனில், அந்தப் பயம்தான் உங்களுக்கு அகல்யாவைப்பற்றி-அதாவது இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த ‘பதில்வெட்டு அகல்யா’வைப்பற்றி எழுத உங்களுக்குத் ‘துணிச்சலை’ வழங்கியிருக்கிறது. அந்தத் ‘துணிச்சலையும்’ வாழ்த்தத்தான் வேண்டும். .

அகல்யா!-சிரிப்புக்குரிய ஒர் அபலை. காதலை நம்பி, வாழ்க்கையைக் கைநழுவவிட்ட பைத்தியக்காரி!

கனகலிங்கம்!-அனுதாபத்துக்குரிய ஓர் அப்பாவி! வாழ்க்கையை நம்பி உயிரைக் கைநழுவ விட்டவன்!

‘உறங்குவது போலும் சாக்காடு’ என்கிறார்கள் அனுபவசாலிகள். அந்தத் தூக்கத்தில் அகல்யாவையும் கனகலிங்கத்தையும் கட்டுண்டிருக்கச் செய்துவிட்டீர்கள். உங்களுக்கு எவ்வளோ வேலை மிச்சம். ‘நல்லவர்கள் வாழ்வதில்லை!’ என்ற அபாய அறிவிப்பு வரிகளுடன் நீங்களும் 'கோழித்தூக்கம்' போட ஆரம்பித்துவிட்டீர்கள். உங்களது இந்தத் தூக்கம்தான் எனக்கு விழிப்புச் சக்தியைக் கொடுத்திருக்கிறது. வாழ்க. உங்கள் உறக்கம்!

சந்தேகமே இல்லை. கனகலிங்கம் அப்பாவி தான். முப்பது நட்களுக்குக் கிட்டும் முப்பது ரூபாய்ச் சம்பளத்தினால் ஆறுதல் கனியாவிட்டாலும், அந்தப் புத்தகத் கடையில் தான் விரும்பியதை இனாமாகப் படிக்க முடிந்ததில் அவன் பெரிதும் தேறுதல் பெற்றான். காதலைக் கட்டுக் கதை என்றும், அதைக் கதைகளிலும் காவியங்களிலும் படித்து அனுபவிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் உணரக்கூடிய அளவுக்கு அவனுக்குப் பரிபக்குவம் அளித்திருக்கிறீர்கள். இந்த லட்சணத்தில் அவனுக்கு இதயம் வேறு இருந்து தொலைத்தது. உள்ளமோ வெள்ளை. அதனால்தான், வாழ்க்கைக்குக் காதலை உயிர் நாடியென மதித்த அகல்யா, காதலை இழந்ததுடன் நிற்காமல், கற்பையும் இழந்து, ‘என்னைப் போன்றவர்களை உங்களைப்போன்ற இதயமுள்ளவர்கள்தான் ஆதரிக்க வேண்டும்’ என்று பீடிகை போடத் துணிகின்றாள் போலும்! நப்பாசையின் தோள்களை நைந்த ஆசை பற்றுவதற்கு முன்னமேயே அவர்களுக்குள் காதல் மறுபிறவி எடுத்துவிடுகிறது. காதல் எனும் பசியை அடக்கித் தூங்கவைக்கக் காசு பணம் குவிக்க வேண்டுமென்று தவம் இருக்கிறான் கனகலிங்கம். ஒன்றியாகப் போனவன், கலைஞானபுரத்திலிருந்து திரும்பு கையில், ஒன்றில் ஒன்றாகித் திரும்புகிறான் ரெயிலடியில், அவனுடன் அகல்யாவைக் கண்ட அவளது. முதலாளி அவனைத் தவறுபடக் கருதிவிடுகிறார். வந்தது ஆபத்து! அவனே தன் தமையனாரின் மகளைக் கெடுத்தவன் என்று தீர்மானித்து, அவனை வேலையைவிட்டு நீக்கியதோடு திருப்திகொள்ளாமல், அவனை ஆள்வைத்துக் கொன்று உலகத்தைவிட்டே நீக்கி விடுகிறார். அகல்யாவைக் கெடுத்தவனோ இந்திரன்! ஆனால், ஆள் மாறாட்டம் உம்மைப் பழவினையின் உருவத்தில் வந்து சிரிக்கிறது. பாலும் பாவையும் கெட்டுவிட்டால் பயனில்லை என்ற சமுதாயத் தத்துவம் சமையற்காரன் மூலம் அவள் காதுகளில் ஒலிக்கிறது. உடனே அவளது கண்கள் திறக்கின்றன. எளிய முறையிலே அவளைச் சாகடித்து விட்டீர்கள். எழுத்தாளர்களின் தலைவலியை மிக எளிதில் போக்கவல்லது ஆயிற்றே ஆழி? “செத்துத்தான் சமூகத்தின் அனுதாபத்தைப் பெறவேண்டுமானல் அந்தப் பாழும் அனுதாபம் எனக்கு வேண்டவே வேண்டாம்!” என்று வீரம் பொழிந்த அகல்யாவை நீங்கள் ஏன் அவ்வளவு துரிதப்பட்டுக் கொன்று போட்டீர்கள்? உங்களுக்குக்கூட அவள்பால் இரக்கம் பிறக்கவில்லையா? “நான் உன்னைக் காதலிக்காமல் கொல்லுவதைவிடக் காதலித்தே கொன்றுவிடலாமென்று நினைக்கிறேன்!” என்று உங்கள் கனகலிங்கத்தைப் பேச வைத்தீர்களே, அதன் நிமித்தம்தான் அவளுக்கு வாழ்விலிருந்து ‘விடை’ கொடுத்தீர்களா?

என் ஆழ்ந்த அனுதாபங்கள் அகல்யாவுக்கு உரியனவாகுக. ஏன் தெரியுமா? அவள் செத்துப் போனாளே என்பதற்காகவா?-அன்று. அவள் அருமை மிகுந்த இந்தத் தமிழ் மண்ணில் பிறந்தாளே என்பதற்காக!

“ஒரு காலத்தில் சொர்க்கத்திற்கு இருந்த மதிப்பு காதலுக்கு இருக்கிறது. இரண்டும் கற்பனையே என்றாலும், காதலைக் கைவிட நம்மால் முடிவதில்லை!” 

‘அமிர்தம்’ என்ற என்னுடைய சிறு கதைத் தொகுப்பிற்கு தாங்கள் அருளிய முன்னுரையின் இடையிலே தலைகாட்டும் வாசகம் இது.

காதலை எழிற்கனவுக்கு அடிக்கடி நான் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். நம் இருவருடைய காதல் விளக்கங்களும் ஏறக்குறைய ஒரே குரலில்தான் ஒலிகாட்ட முடியும் சொர்க்கத்திற்கும் கனவுக்கும் நடுவில் அகப்பட்ட அகல்யா, இந்திரனிடம் அகப்பட்டு ஏமாந்து, அப்பால் கனகலிங்கத்தினிடம் அகப்பட்டு அனுதாபப் பொருளாகிறாள்.

இந்த அனுதாபமே கதைக்குக் கருப்பிண்டம் என்பது என் எண்ணம்.

இந்த அனுதாபம் தான் கதையின் பிரதான பாத்திரம்! அனுதாபத்தின் இருவேறு கிளைகள்தாம் அகல்யாவும் கனகலிங்கமும்.

அகல்யாவின் துயரக் கதையைக் கேட்டு வருந்தும் கனகலிங்கம் அவள் பேரில் அனுதாபம் கொண்டு, அதன் விளைபயனாக, நம்முடைய அனுதாபத்தையும் சுவீகரித்துக்கொள்ள முயன்றான். அவன் ‘உத்தமன்!’

கற்பனை மெருகிழந்த தன் துயரப் பெருங்கதையைச் சொன்ன அகல்யாவுக்கு வாழ ஆசை துடிக்கிறது. எனவே கனகலிங்கத்தையே தன்னுடைய உயிர்ப் பிடிப்பாகப் பற்றக் கனவு காண்கிறாள். அதுவே சொர்க்கமெனவும் மகிழ்கிறாள். சமுதாயத்தின் அனுதாபத்தை அடைய வேண்டு மென்பதற்காகச் சாக விரும்பாத அவள் தசரத குமாரனாலும் கைவிடப்பட்டு நடுத்தெருவிலே நிற்கும் நிலையில், ‘அட கடவுளே! பாலும் பாவையும் ஒன்றென்று எண்ணியா நீ என்னைப் படைத்தாய்?’ என்று நெட்டுயிர்க்கின்றாள். அடுத்த கணம், ‘யார் இடம் அளிக்கவிட்டாலும், இந்த உலகத்தைவிட இரண்டு பங்கு பெரிதான கடல்கூடவா நமக்கு இடமளிக்காது?’ என்ற 'ஞானம்' அவள் உள்ளத்தில் பளிச்சிடுகிறது. ஒரு முறை இந்திரனுடைய அன்புக்குப் பாத்திரமான அகல்யா, இப்போது கடலின் அன்புக்கும் பாத்திரமாகிவிடுகிறாள்.

கதை மிகச் சிறிது, ஆனால் உலகமோ மிகப் பெரிது. அதனால்தான் இந்தப் பரந்த உலகிலே இந்தச் சின்னக் கதை பலருடைய நினைவுப் பொருளாக இன்னமும் காட்சி கொடுத்துக்கொண்டு வருகிறது. நன்றாக நடந்து வந்த ஒருத்தி வழுக்கி விழுந்து விடுகிறாள். இந்திரன் நல்லவன் அல்லன் என்றாலும், கெட்டிக்காரன். ஊரைச் சுற்றுவதற்கு உதவும் ‘லைசென்ஸாக’வும் ‘பர்மிட்’டாகவும் தரிசனம் தர அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான்; குறிக்கோளை முடித்துக்கொண்டான். ஆனால் அப்போது 'தடம் புரண்ட குறிக்கோளுடன்' அபலை ஒருத்தி தவிப்பதைப் பற்றி அவனால் கவலைப்பட முடியவில்லை. அவனுக்குத் திருமணம் நடைபெறுகிறது. அவனுடைய அவளுக்காக இரங்குகிறாள் அகல்யா. கனகலிங்கத்தின் உதவி ஒத்தாசைக்கும் சோதனை வந்தவுடன், குறுக்கிட்டு நின்ற பழைய தசரத குமாரன் அவளுக்கு அடைக்கலம் தருவதாகக் கையடித்துச் சொல்லுகிறான். கடைசியில், சமையற்காரன் ஒருவன் பாலையும் பாவையையும் ஒன்றாக்கி உவமை பேசப்போக, அவள் அக்கணமே கைவிடப்பட்டு, கடலிடைச் சங்கமம் ஆகின்றாள். இதுதான் கதை அல்லவா?

உங்களை ஒரு கேள்வி கேட்கப்போகிறேன். அகல்யா கனகலிங்கம் ஆகிய இவ்விருவரில் உங்கள் மனத்தை நிறைக்கும் உருவம் யாருடையது? என்ன, யோசிக்கிறீர்களே? இவ்விருவரையும் ‘மேலே’ அனுப்பிவிட்டதன் மூலம், உங்களுடைய அனுதாபத்துக்கு இவர்கள் இருவருமே இலக்காகவில்லையென்று ஏன் கருதமுடியாது? நான் அப்படித்தான் கருதுகிறேன்!

னித மனம் சலனம் நிறைந்தது. சபலம் நிரம்பியது. காதல் என்னும் போர்வை மூலமாகத் திரிந்த அகல் அகல்யாவுக்குக் காமமே மிஞ்சியிருந்திருக்க வேண்டும். கெட்டவள் என்று தெரிந்தும், தன் இடத்தில் தங்கப் புகலளித்து, பிறகு, நெஞ்சிலும் இடம் கொடுக்க எண்ணியிருந்த கனகலிங்கத்தின் எதிர்பாராத மரணத்தின் சூழ்ச்சியைப்பற்றி ஏற்கெனவே ஊகித்ததாக எண்ணும் அவள், முன்கூட்டியே அந்த விபத்தைக் தடுத்திருக்கக் கூடுமே? “நான் அப்பொழுதே நினைத்தேன், நீங்கள் தான் அந்தக் கொலைகாரனை அனுப்பியிருப்பீர்களென்று! நீங்கள் நாசமாய்ப் போக!” என்று ‘நாகரிகமான சாபம்’ கொடுத்ததுடன் அவள் கனகலிங்கத்தின் உயிரின் மீதும் உள்ளத்தின் மேலும் வைத்த காதலின் கதை சுபம் பெற்றுவிடுகிறதா? இதயம் பெற்றிருந்தவனை இழந்த கோலம் மாறுவதற்குள்ளாகவே, அவள் தசரத குமாரனப் பின்தொடர் வேண்டியவள் ஆகிறாளே? அகல்யாவிடம் நமக்குக் கனியும் பச்சாதாபம், பரிவு, பாசம் போன்ற சகல உணர்ச்சிகளும் இந்த இடத்தில் தான் நம்மைவிட்டுப் பிரிகின்றன. பிரிந்து அகல்யாவின் கழலடிகளில் தஞ்சம் புகுகின்றனவா? அன்று. கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளுகின்றன!

‘வாழ்வுக்கு உதவிகேட்ட’ இந்தக் ‘காதல் பைத்தியம்’ பெண்களின் பெயரால் வற்புறுத்தப்படும் கற்பின் பெயரால் சாக விரும்பாதவளென நீங்கள் வரம்பு வகுத்து, இறுதியில் தெய்வத்துக்குப் பதிலாக நீங்களே ‘சூத்திரதாரி’யாக ‘ஆக்ட்’ பண்ணி அவளைக் கொன்றிருக்கிறீர்கள்! பாவம், அகல்யா!

“எல்லாவற்றையும் வேடிக்கையாகக் கருதுவதால் தான் என்னால் உயிர் வாழ முடிகிறது,” என்கிறான் கனகலிங்கம். காதலினால் சாண்வயிற்றைத் திருப்திப்படுத்த முடியாதென்று இந்திரனால் பாடம் படித்துக்கொடுக்கப் பட்ட அகல்யாவின் கதையைக் கேட்ட பிறகே அவன் இவ்வாறு சொல்கிறான். நெருங்கி வந்தவளிட மிருந்து விலகும் கனகலிங்கம், ‘வேண்டாம்! பசி தீர்ந்துவிட்டால், நானும் இந்திரனைப்போல் ஓட்டம் பிடித்தலும் பிடித்துவிடுவேன்!” என்றும் அறிவிக்கிறான். அவள் ஒட்டி ஒட்டி வரும்போது, அவனோ எட்டி எட்டிப் போகிறான். சிறு சலசலப்பு. ‘ஐயோ, பாவம்! உலகம் தெரியாத அபலை. அவள் காதலை உண்மையென்று நம்பினாள். அந்தக் காதலுக்காகத் தன்னை ஒருவனுக்கு அர்ப்பணித்தாள். அவன் அவளைக் கைவிட்டான். அதற்காக அவள் செத்துப்போக விரும்பவில்லை. வாழ விரும்புகிறாள். ஆண்களுக்கு மட்டும் அந்த உரிமையை அளிக்கும் சமூகம் பெண்களுக்கு அளிக்க மறுக்கிறது —இது அக்கிரமந்தானே?’ என்ற கணநேர மௌனச் சிந்தனை அவனது தயாள சிந்தையின் கதவுகளைத் திறந்து விடுகிறது. “அகல்யா, அகல்யா’ நான் உன்னுடைய மனத்தைப் புண்படுத்திவிட்டேனா? என்ன? சொல்லு, அகல்யாசொல்லு!” என்று அவன் குழைகிறான் இந்நிலை சலனத்தின் விளைவா? அன்புப்பண்பின் பணியா? 

தடம்புரண்டவள் அகல்யா. ஆனாலும், அவள் இதயத்தை அடியோடு இழந்து விடவில்லை. 'ஆம்; அன்று நீங்கள் தான் என்னைக் காதலித்துக் கொல்வதாகச் சொன்னீர்கள். ஆனால் இன்றோ, நான் உங்களைக் காதலித்துக் கொன்றுவிட்டேன்!. என்று அவள் தன்னுள் சொல்லிக்கொள்ளும்போது, அவள் என் இதயத்தைத் தொட்டுவிட்டாள்.

ஆனால்...?

‘ஐயோ! ஆண்களுக்கு ஒரு நீதி. பெண்களுக்கு இன்னொரு நீதியா? இந்த அக்கிரமத்துக்கு இன்னும் என்னைப் போல் எத்தனைப் பெண்கள் பலியாகவேண்டும்? உங்களுடைய இதயத்தில் ஈரம் இல்லையா? அந்த ஈரமற்ற இதயத்தை எங்களுடைய கண்ணிராவது நனைக்கவில்லையா?—சீர்திருத்தம், சீர்திருத்தம் என்று வாய் ஓயாமல் அடித்துக் கொள்ளும் இளைஞர் உலகம் இந்தக் கொடுமையை இன்னும் எத்தனை நாட்களுக்குச் சகித்துக்கொண்டிருக்கப் போகிறது?...

உச்சக் கட்டத்தில் ‘பகுத்தறிவுப் பாணி’யில் அவள் பேசும் ‘செயற்கைத் தன்மை’யுடைய இந்த வசனம், அவள் நெஞ்சறிந்து ஏற்றுக் கொண்ட பழியைத் துடைக்கவல்லதா? ஊஹூம்!

'கெட்டவளுக்கு’ அடைக்கலம் கொடுப்பதன் மூலமே ஒருவன் ‘நல்லவன்’ ஆகிறான். இது அண்ணலின் கருத்து. இந்நிலையிலே கனகலிங்கத்தை நீங்கள் ஏன் அதற்குள் சாகடித்தீர்கள்? நுண்ணிய கட்புலம் அமைத்து எண்ணிப் பார்க்குங்கால், கனகலிங்கம் ஒரு மின்னலெனவே தோன்றி மறைகிறான் இறந்தும் உயிர் வாழும் பாத்திரப் படைப்பாக்கவா கனகலிங்கத்தை நீங்கள் இவ்வாறு ஆக்கியிருக்கிறீர்கள்? ‘நல்லவர்கள் வாழ்வதில்லை-நானிலத்தின் தீர்ப்பு!’ என்ற வாசகத்தை மெய்யாக்க வேண்டியே நீங்கள் இவ்விருவருக்கும் விண்ணுலக யாத்திரைக்கு டிக்கெட் வாங்கிக்கொடுத்திருக்க வேண்டும்! அதனால்தான், முடிவுகூட முன்னைய இலக்கியமரபை ஒட்டிப் பழைமைப் பாணியிலேயே அமைந்து ‘சப்’ பென்று போய்விட்டது! உங்கள் கொள்கைகளுக்கு உகந்த ரீதியில் பாத்திரங்களை உருவாக்கி, அவர்கள் வாய்வழியே சமுதாயச் சிக்கல்களை அலசிப்பார்க்க முயன்ற நீங்கள், முடிவில் அகல்யாவின் இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஊடாக சிக்கலைத் தீர்த்துவைக்கும் வகையில் உங்கள் பணியை ஏற்று, அகல்யாவின் ‘எஞ்சிய வாழ்வை’க் கனகலிங்கத்தின் அன்புக் கரங்களில் ஒப்படைத்திருக்கும் பட்சத்தில், இவ்விருவரது குணச்சித்திர அமைப்புக்களும் முழுமை யடைந்திருக்கக் கூடும்! நீதிதேவனின் மயக்கம் தெளிந்து, நீதியுள்ள சமுதாயச் சித்திரமும் உருவாகியிருக்கும்! பெண் குலத்தைத் தூய்மைப்படுத்துவதற்காகவே நீங்கள் இதை எழுதியதாக வாதம் புரியும் உங்கள் பேச்சிலும் தர்க்க ரீதியான நியாயம் இருந்திருக்கும்! அன்புப் புரட்சியின் உண்மைக் குரலையும், வீரம் செறிந்த காதல் தத்துவத்தின் மனக் கனவையும் நான் உய்ந்துணர்ந்து அனுபவிக்க முடிந்திருக்கும்! சமுதாய ரீதியையும், (Social justice) சமுதாயச் சீர்திருத்தத்தையும் (Social reform) வழங்கிய பெருமை உங்களை வந்தணைந்திருக்கும்! வாழ்க்கைக்கு உரித்தான பொருளுக்கு ஓர் உரைகல்லாக அகல்யாவும் கனகலிங்கமும் அமைந்திருப்பதாக நீங்கள் திருப்திப்படுவீர்களானல், அகல்யா- கனகலிங்கத்தின் கதை அரைகுறைக் கதை தான்! ஆமாம், அரைகுறைக் கதையேதான்! காரணம் இதுதான்: அவர்களின் ‘கனவு’ நிறைவு பெருமல் நிற்பதைப் போலவே, உங்களுடைய அருமையான கதையும் நிறைவு பெறாமல் நிற்கிறது!

கடைசியாகச் சில வரிகள்:

பாலும் பாவையும்’ கதையில், உங்களுடைய ‘கிண்டல் பாவமும்’ நம்பிக்கை வறட்சி’யும் தோய்ந்த எழுத்து நடையை நான் மனம் பிணைத்து அனுபவித்தேன். சமுதாயத்தின் சித்திரம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், கடவுளின் பெயரால் செய்யப்பெறும் மோசடிகள், இலக்கியக் கலையுலகின் நடைமுறைப் போக்கு-இப்படிப்பட்ட சூழல்களிலே உங்கள் ‘பேனா’ சுழலும்போது, உங்கள் ‘தனித்தன்மை’யைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் உங்களுக்கே உரித்தான ‘குறிக்கோள் தன்மை’யை (Ideal Self) இந்த நெடுங்கதையில் இனம் காணவே இயலாமற் போய்விட்டது! இன்னும் ஒரு பிழை. அகல்யாவிலிருந்து சமையற்காரன் வரை எல்லோருக்குமே நீங்கள் இரவல் குரல்’ கொடுத்திருக்கிறீர்கள்!

உங்கள் நோக்கு புதிது. போக்கு, பழசு! உங்கள் கரு அற்புதம்; உரு, குறைப் பிரசவம்! ஆத்ம விசாரம் இருக்கும் அளவுக்கு ஆத்ம விசாரணை இல்லையே..!

‘வையம் பேதைமையற்றுத் திகழவேண்டுமென்று எதிர்பார்த்து, பெண்களின் அறிவை வளர்க்க இக்கதையை ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்து நீங்கள் இவ்வளவு பக்கங்களை எழுதியிருக்கிறீர்களென்றே வைத்துக்கொள்வோம். நம் தமிழ்ச் சமுதாயம் இப்படித்தான் அமைந்திருக்கிறதென்பதை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், நம் சமூகம் இப்படி இப்படி அமைந்தால் தான், இத்தகைய தவறுகளிலிருந்து அகல்யாவைப்போன்ற அபலைகள் விடிவுகண்டு வாழ வழி பெறுவார்கள் என்ற ஓர் ஊகத்துக்குரிய தார்மீக அடிப்படையாவது நீங்கள் காட்டியிருக்க வேண்டாமா?

‘விந்தன்’ என்ற பெயரைக் குறிப்பிடும்போது, ‘ஓ! பாலும் பாவையும் விந்தனா?’ என்று இன்றும் நண்பர்கள் பலர் கேட்பதை நான் கேட்டிருக்கிறேன். அதனால்தான், நான் காணும் ‘பாலும் பாவையும் விந்தன்’ அவர்களை அந்த நண்பர்களுக்கு இக்கடிதத்தின் வழியே அறிமுகம் செய்ய வேண்டியவன் ஆனேன்!

அன்பிற்கு உகந்த பூவை.”