ஆறுமுகமான பொருள்/ஆறுமுகமான பொருள்

விக்கிமூலம் இலிருந்து


1
ஆறுமுகமான பொருள்


நானும் சில நண்பர்களும் ஒரு பிரபல நாடகக் கம்பெனியார் நடத்திய 'குமார விஜயம்' என்னும் நாடகத்திற்குச் சென்றிருந்தோம். நாடகத்தில் ஒரு காட்சி, குன்றுதோறாடும் குமரன் மலைமீதிருந்து கீழிறங்கி வரும் காட்சி, ஆறுமுகனான கந்தன் வேடத்தை ஒரு சிறு பையன் ஏற்றிருக்கிறான். ஒரே முகம் உடைய அந்தப் பையனை ஆறுமுகம் உடையவனாகக் காட்ட ஐந்துமுகங்களை அட்டையில் எழுதி அந்த முகங்களையும் இருக்கிற தலையிலே பிணைத்திருக்கிறார்கள். மலையினின்று இறங்கி வரும் இந்த ஆறுமுக வேடதாரி, ஒரு சிறு தோரண வாயிலைக் கடந்து வெளிவர வேண்டியிருக்கிறது. குனியாமல், நிமிர்ந்து வந்தாலோ ஆறு முகங்களில் ஒன்றிரண்டு முகங்கள் கட்டாயம் தோரணவாயிலில் சிக்கிக் கொள்ளும். இந்த இக்கட்டான நிலையில் ஆறுமுகம் கொண்டிருந்த அந்தப் பையன் மிக்க லாவகமாக முதலில் இரு பக்கத்து அட்டைத் தலைகளை ஒருக்களித்துத் தோரணவாயில் வழியாக வரவிடுத்துப் பின்னர் மற்றைய பக்கத்துத் தலைகளையும் வெளிக்கொணர்ந்து தோரண வாயிலைக் கடந்து விடுகிறான். இதனைப் பார்த்த என் நண்பர்கள் எல்லாம் கலகல என்று சிரிக்கின்றனர். பாவம், இந்தப் பையனை ஆறுமுகம் உடையவனாக்க ஐந்து தலைகள் வைத்துக் கட்டப்பட்டதனால் அல்லவா இத்தனை கஷ்டம் அந்தப் பையனுக்கு. இந்தக் குமரனுக்கு ஆறு தலை என்று கணக்கிடுவானேன் என்று கேள்வி கேட்கிறார், ஒரு நண்பர்.

இதற்குப் பதில் சொல்கிறார் மற்றவர். "இது தெரியாதா உனக்கு. கைலாசபதியாகிய பரமேசுவரன் இமவான் மகளாகிய உமையை மணக்கிறார். அவரிடம் சூரபன்மன் முதலிய அசுரர்களால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் முறையிடுகின்றனர். அவரும் தேவர் துயர் தீர்க்கத் தான் ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார். இந்த வாக்கைக் காப்பாற்றத்தான் ஐந்து திருமுகங்களோடு அதோமுகமும் கொள்கிறார், ஆறு திருமுகங்களிலும் உள்ள ஆறு நெற்றிக் கண்களினின்றும் ஆறு பொறிகள் கிளம்புகின்றன. அந்தப் பொறிகளை வாயுவும் அக்கினியும் ஏந்திவந்து சரவணப் பொய்கையில் சேர்த்து விடுகின்றனர். அப்பொய்கையில் பூத்த ஆறு தாமரை மலர்களில் இந்தப் பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறுகின்றன. இந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கின்றனர். இந்த கார்த்திகேயனைக் காண சிவபெருமான் உமையம்மையோடு சரவணப் பொய்கை வருகிறார். அம்மை, குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுத்து தன் மார்பகத்தில் அணைக்கிறாள். ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறார்கள். அவனே கந்தன் என்றும் ஆறுமுகம் என்றும் அழைக்கப்படுகிறான்" என்று முருகன் திரு அவதாரக் கதையை விளக்குகிறார், அந்தப் புராண வரலாறு தெரிந்த நண்பர்.

இன்னும் இந்த புராண வரலாற்றை கச்சியப்பரது கந்த புராணத்திலேயே படித்த அன்பர் ஒருவர்,

அருவமும் உருவம் ஆகி
அனாதியாய், பலவாய், ஒன்றாய்
பிரம்மமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து
உதித்தனன் உலகம் உய்ய

என்ற பாட்டையே பாட ஆரம்பித்து விடுகிறார்.

'இந்தப் புராணம் - பாட்டுக்களை நான் நம்பத் தயாராயில்லை' என்கிறார் நான்காவது நபர். இந்த விவாதங்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நான் இடைபுகுந்தேன்.

“தமிழ் நாட்டில் தெய்வ வடிவில் உருவாகியிருக்கும் வடிவங்களுக்கு எல்லாம் அடிப்படையில் ஒவ்வொரு தத்துவ உண்மையிருக்கும். எல்லாம் வல்ல இறைவனை பகவான் என்று அழைக்கிறோம். பகவான் என்னும் சொல்லுக்கு ஆறு நல்ல பொருள் அமைந்தவன் என்பதே பொருள். ஞானம், வைராக்கியம், வீரியம், ஐசுவரியம், கீர்த்தி, அறம் ஆகிய ஆறும் எவனிடத்து ஒன்று சேர்ந்திருக்கின்றனவோ அவனே பகவான். இந்த ஆறினுள் ஏதேனும் ஒன்று சிறப்பாக ஒருவனுக்கு அமைந்துவிடுமானால் அவனே பெருமகன் ஆகிவிடுகிறான். ஆறும் ஒன்று சேர்ந்து ஒருவனிடம் குடியிருக்குமானால் அவன் கடவுளே ஆகிவிடுகிறான்”. இப்படி எண்ணியிருக்கிறான் தமிழன்: தமிழ்நாட்டுக் கலைஞன். அப்படி தமிழன் கற்பனை பண்ணிய தமிழ்க் கடவுளே முருகன்.

"இவ்வளவுதானா? இல்லை. இன்னும் பேரொளி படைத்தவன், அடியார்க்கு எளியவன், வேள்விக் காவலன், ஞானபண்டிதன், வீரப்பெருமகன், இன்பத் தலைவன் எல்லாம் அவனே என்று காட்டவே அவனுக்கு ஆறு திருமுகங்களைக் கற்பனை பண்ணியிருக்கிறான்” என்றெல்லாம் அறுமாமுகவனுக்கு விளக்கம் கூறினேன்.

சந்தேகப் பேர்வழியான நண்பருக்கோ, இதனால் எல்லாம் சந்தேகம் தீர்ந்த பாடாக இல்லை. இவரை மடக்குவதற்கு, அவர் பெரிதும் போற்றும் பெளதிக விளக்கம் கூறத்தான் வேண்டும் என்று எண்ணினேன், சொன்னேன்;

“இந்தப் பெளதிக உலகம் பரம்பொருளின் ஸ்தூல தோற்றமே. பரம்பொருளைக் காரண வஸ்து என்றால் இந்த உலகைக் காரியவஸ்து என்று வைத்துக் கொள்ளலாம் தானே. இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது. இந்தப் பூதப் பொருள்களைப் பகுத்துக் கொண்டே போனால் பகுக்க முடியாத ஒரு நிலையில் அதனை அணு என்கிறோம். அந்த அணு. இயங்கும் போது புரோட்டான், எலக்ட்ரான் என்று இரண்டு வடிவங்கள் எடுக்கின்றன. புரோட்டான் அசையாது நிலைத்து நிற்கிறது. அதைச் சுற்றி சுற்றி எலக்ட்ரான்கள் சுழல்கின்றன. அத்தகைய பூதப்பொருள்களில் கரி (carbon) என்பது ஒன்று. அதில் புரோட்டான் ஒன்றும் எலக்ட்ரான் ஆறும் இருக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த எலக்ட்ரான் எண்ணிக்கையில் ஆறுக்கு அதிமாகப் போய்விட்டாலும், குறைவாய்ப் போய்விட்டாலும் உயிர்த் தத்துவத்தை ஊட்டும் சக்தியை அது இழந்துவிடுகிறது. கரியில் ஆறு எலக்ட்ரான் சேர்ந்திருக்கிறது.

உயிர்த் தத்துவத்தை வளர்க்கும் நடைமுறையை விளக்கவே ஆறு கார்த்திகைப் பெண்களால் இறைவனாம் முருகன் வளர்க்கப்பட்டான் என்று உருவகப்படுத்தியிருக்கின்றனர். ஆறு பெண்கள் வளர்த்த ஆறு பிள்ளைகளையும் இணைத்தே ஓர் அறுமாமுகனை உருவாக்குகிறாள் உலகெலம் புகழ்கின்ற அன்னை உமை.

“என்ன அன்பரே விளங்குகிறதா உமக்கு இப்போது, ஆறுமுகமான பொருள் ஏன் எப்படி, அறுமாமுகனாக உருவாகியிருக்கிறது என்று” என்று ஒரு போடு போட்டேன். நண்பர் வாயடைத்துப் போய்விட்டார்.

இப்படி ஆறுமுகமான பொருளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுதுதான் அருணகிரியார் பாடிய பாடல் ஞாபகத்துக்கு வந்தது. ஆம் எல்லோருக்கும் தெரிந்த அந்த திருப்புகழ்தான்.


ஏறுமயிலேறி விளை
யாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி
பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை
தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி
நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை
வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர
வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள்
நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம்
அமர்ந்த பெருமாளே.

என்ற பாட்டைத்தான் எத்தனை முறை நாம் படித்திருக்கிறோம், பாடியிருக்கிறோம். பாடிப்பாடி மகிழ்ந்திருக்கிறோம். இந்தப் பாட்டு என் எண்ணத்தில் சுழலச் சுழல, இந்த ஆறுமுகமான பொருளை தமிழ்நாட்டுக் கலைஞர்கள் எப்படியெல்லாம் கல்லிலும் செம்பிலும் உருவாக்கியிருக்கிறார்கள் என்று காண என் உள்ளம் விழைந்தது. அந்த விழைவு காரணமாக நான் கண்ட ஆறுவடிவங்களே, ஆறுமுகமான பொருளை விளக்கும் வடிவங்களாக உங்கள் முன் வருகின்றன.

“அருணதள பாத பத்மம் அனுதினமுமே துதிக்க அரிய தமிழ் தானளித்த மயில் வீரனை” மயிலுடன் சேர்த்தும், பார்த்திருக்கின்றோம். மயில்மேல் ஆரோகணித்து வருவதையும் கண்டிருக்கிறோம். வந்தித்து வணங்கி இருக்கிறோம். ஏறுமயில் ஏறி விளையாடும் முருகனை நாம் எல்லாத் தலங்களிலும் காண முடிவதில்லை. மயில்மேல் ஆரோகணித்து வருவதோடு அதன் மேல் ஏறி விளையாடிக் கொண்டே வரும் கோலக்குமரனது வடிவம் ஒன்று மாயூரத்தை அடுத்த நனிபள்ளி என்னும் தலத்திலே செப்புச்சிலை வடிவத்திலே இருக்கிறது. சின்னஞ்சிறு விளையாட்டுப் பிள்ளையாக மயில்மேல் ஏறி விளையாடும் கோலம் சிறப்பாய் இருக்கிறது.

குருவாய் அரனுக்கு உபதேசம் செய்த குகனைக் காண நாம் அந்த ஞானபண்டிதன் இருக்கும் திரு ஏரகத்திற்கே விரைவோம். அங்கே மூலவனாக நிற்பவனோ கோவனாண்டியாக நிற்கிறான். செப்புச் சிலை வடிவிலும் அவன் அங்கு உருவாக வில்லை, ஏதோ முன் மண்டபத்து மாடியில் சுதை உருவில் மட்டுமே உருவாகியிருக்கிறான். அதுவும் இருபதாம் நூற்றாண்டுக் கலைஞர்கள் கைவரிசையே ஒழியப் பண்டைத் தமிழகத்துச் சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவானவன் அல்ல.

ஆனால், ஈசனுடன் ஞானமொழி பேசும் அந்த அழகு முகத்தைக் காண வேண்டுமென்றால் நாம் சென்னையை அடுத்த போரூருக்கே செல்ல வேண்டும். அங்கே கருவறையைச் சுற்றியுள்ள மேலப்பிரகாரத்திலே இரண்டடி உயரத்திலுள்ள செப்புச் சிலை வடிவில் அந்த ஞான பண்டிதன் காட்சி தருவான். அப்பனின் மடிமீது இருந்துக்கொண்டே அவனுக்கு பிரணவ உபதேசம் செய்யும் கோலம் அது.

கூறும் அடியார் வினை தீர்ப்பவனது கோலத்தைத்தான் நாம் எங்கும் காணலாமே என்றாலும் ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமாளாய், அருணகிரியாரது வினைகளை எல்லாம் தீர்த்தவன் அந்த அண்ணாமலையிலே கம்பத்து இளைஞனார் கோயிலிலேயே உருவாகி இருக்கிறான். வேலோடு வில்லும் ஏந்தி, வானோர் வணங்கும் வில்தானைத்தலைவனாக இலங்கும் திருக் கோலத்தையே பார்க்கலாம் அங்கே.

குன்றுருவ வேல்வாங்கி நின்றவனையும் பல கோலங்களில் பல இடத்தும் பார்க்கிறோம். இருந்தாலும் அந்தச் செங்கோட்டு மலையின் மேல் கோழிக் கொடியும், கையில் வேலும் ஏந்தி நிற்கும் அந்த செங்கோட்டு வேலனைக் காண்பதிலே உள்ளத்திலேயே ஒரு நிறைவு ஏற்படுகிறது அல்லவா. ஆம். அந்த சேலார் வயல்பொழில் செங்கோடனைக் கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலேனே அந்த நான்முகனே என்று அருணகிரியாரே பிரலாபிக்க வேண்டுமென்றால் அவன் அழகு சொல்லும் தரத்ததாமோ.

நமக்கெல்லாம் நன்கு தெரியும் சூரபதுமனை முடிக்க இந்தக் குமரன் எழுந்தருளிய இடம், அந்த திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர் என்று. மாறுபடு சூரனை வதைத்த கையில் வேலேந்தி நிற்கின்ற குமரனது வடிவம் மிக்க அழகானது. சிறப்பானதும் கூட. சூரனை முடித்து விட்டோம் இனி அச்சம் ஒன்று வேண்டாம் என்று சொல்லி மக்களை எல்லாம் தம் பக்கம் அழைத்து அருள் செய்யும் அபய வரத ஹஸ்தத்தோடு காட்சி கொடுக்கும் அவனது கோலம் கண்கொள்ளாக் காட்சியாகும். அதிலும் அவனுக்கு விபூதி அபிஷேகம் பண்ணிக் கண்டால் அப்படியே மெய்மறப்போம் நாம்.

இத்தனைக் கோலத்தில் அவனை நாம் கண்டாலும் அவன் தன் காதலியாம் குறமகள் வள்ளியை மணக்க எந்த வடிவில் வந்திருக்கிறான் என்பதும் தெரிய வேண்டாமா? தினைப்புனம் காக்கும் வேட்டுவக் குமரியை மணக்க வேடுவனாகவே அல்லவா வந்திருக்கிறான். இந்த வேட்டுவக் கோலத்தைத் தேடித்தான் நான் பல தலங்களுக்குச் சென்றேன். வள்ளிமலையின் படிகளில் எல்லாம் ஏறி இறங்கினேன். அங்கெல்லாம் அவன் காணக் கிடைக்கவில்லை. கடைசியில் அவன் நாமக்கல்லை அடுத்த கொல்லிமலையிலே வேலுக்குறிச்சி என்ற சிறிய குன்றின் மீது வேட்டுவனாய் நிற்பதைக் கண்டுபிடித்தேன். அவனைக் கண்ட மகிழ்ச்சியிலே,


வள்ளிக் கிசைந்த
மணவாளன் வேட்டுவனாய்
அள்ளிக் கொளும் பேர்
அழகுடனே துள்ளுகின்ற
கோழியினைக் கையிடுக்கி
கொள்ளிமலைச் சாரலிலே
வாழுகின்றான் சென்றே
வணங்கு

என்று உங்களை எல்லாம் அந்த ஆறுமுகமான பொருளிடத்து ஆற்றுப்படுத்திவிட்டு நான் நின்று கொள்கிறேன்.