ஆறுமுகமான பொருள்/சூரசம்ஹாரம்
முருகனுடைய வரலாறுகள் பலப்பல. அவற்றில் சிறப்புடையது அவன் தேவர்களுக்கு இடையறாது இடையூறு செய்த சூரபதுமன், சிங்கமுகன், பானுகோபன் முதலியவர்களை எல்லாம் கொன்று குவித்து தேவர்களுக்கும் மக்களுக்கும் அருள் புரிந்ததே. அசுரர்கள் என்றால் ஏதோ விகார உருவம் படைத்தவர்கள் என்பது மாத்திரம் அல்ல. நமது உள்ளத்திலே உதிக்கும் அகங்காரம், காமம், குரோதம் முதலியவைகளைத் தான் உருவகப்படுத்தி அசுரர்கள் என்று கூறப்படுகிறது. இந்த அசுரர்களைத் தொலைத்து சூரசம்ஹாரம் நடத்துவதற்கு, முருகன் அருள் பாலிக்கத்தானே வேண்டும்.
சூரசம்ஹாரம் புராணங்களில் எல்லாம் ஒரே விதமாகக் கூறப்படவில்லை. ‘ஏதிலாக் கற்பம் எண்ணில சென்றன, ஆதலால் இக்கதையும் அனந்தமாம்’ என்று சொல்லி கந்த புராண ஆசிரியர் இத்தனை கதைகள் அந்தப் புராணங்களில் இருப்பதற்கு சமாதானம் சொல்லி விடுகிறார். ஆனால் எல்லோரும் ஒப்புக் கொள்ளும் கதைதான் கந்த புராணத்தில் சொல்லப்படுகிறது. கதை இதுதான்.
பிரம்மாவின் புத்திரன் தக்கன் ஒரு வேள்வி செய்கிறான். அந்த வேள்வியிலே தன் மருமகன் ஆம், தாக்ஷாயணியின் கணவன், சிவபிரானுக்கு அழைப்பில்லை. அங்கு அவன் கௌரவிக்கப்படவும் இல்லை. இது தெரியாமல், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், முதலிய தேவர்கள் எல்லாம் அந்த வேள்விக்குச் சென்று விடுகிறார்கள். இது காரணமாக சிவனுடைய அம்சமான வீரபத்திரனால் இவர்கள் எல்லாம் தண்டிக்கப்படுகிறார்கள். காணும் காணாததற்கு, சூரபதுமன் முதலிய அசுரர்களாலே துன்புறுத்தவும் படுகிறார்கள். தேவர்கள் தங்கள் துயரம் தாங்க முடியாமல் சிவபிரானிடமே சென்று முறையிடுகிறார்கள். சிவபெருமானும் அவர்கள் துன்பத்தை நீக்க ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார். சொன்ன சொல்லைக் காப்பாற்ற தன்னுடைய ஐந்து திருமுகங்களோடு அதோ முகமும் கொள்கிறார். ஆறு திருமுகத்தில் உள்ள ஆறு நெற்றிக் கண்களில் இருந்து ஆறு பொறிகள் கிளம்புகின்றன. அந்தப் பொறிகளை வாயு ஏந்திச் சென்று அக்னியிடம் கொடுத்து விட்டுத் தப்பித்துக் கொள்கிறான். அக்னியும் அந்தப் பொறிகளின் வெம்மையைத் தாங்காது கங்கையிலேயே விட்டு விடுகிறான். கங்கை இந்தப் பொறிகளை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்கிறாள். அங்கு ஆறு பொறிகளும் ஆறு திருக் குழந்தைகளாக மாறுகின்றன. இது நடந்தது வைகாசி மாதத்தில் விசாக நாளில். இப்படித்தான் விசாகன், பிறக்கிறான் இவ்வுலகிலே.
ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கிறார்கள். இந்த கார்த்திகேயனைக் காண சிவபெருமான் உமையம்மையொடு சரவணப் பொய்கைக்கு வருகிறார். அங்கு அம்மை குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுத்து அணைக்கிறாள். தன் மார்பகத்தில், ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறான். கந்தன் எனப் பெயர் பெறுகிறான். ஆறுமுகன் என்று எல்லோராலும் அருமையாக அழைக்கப்படுகிறான்.
அருவமும் உருவம் ஆகி
அநா தியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனியாகி
கருணை கூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து அங்கு
உதித்தனன் உலகம் உய்ய
என்று அறுமுகனது அவதாரத்தைக் கூறுகிறது கந்த புராணம்
இப்படி எல்லாம் பிறந்து கந்தன் வளர்கின்ற போது சூரபதுமனும் தேவர்களை எல்லாம் பிடித்துச் சிறையில் அடைத்துத் துன்புறுத்துகிறான். உடனே கந்தன் தன் கடமையைச் செய்ய முனைகிறான். தன் தந்தையின் கட்டளைப்படி அவனுடன் புறப்படுகிறார்கள் நவவீரர்களும் மற்றவர்களும் எண்ணிறந்த படைக்கலங்களை ஏந்திக் கொண்டு. அன்னையும் பாலகனுக்கு நல்லதொரு வேல் கொடுத்து ஆசி கூறி அனுப்புகிறாள். இந்தப் படையெடுப்பில் முதலில் இலக்கானவர்கள் நரகாசுரனும், கிரௌஞ்சமலையும் தான். இவர்களை வெற்றி காணுவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லைதான். அதன் பின் தன் சேனா வீரர்களுடன் மண்ணியாற்றின் கரையை அடைந்து, அங்கு சிவனை எழுந்தருளச் செய்து வணங்கி, தன் படைக்கலங்களை இன்னும் பெருக்கிக் கொள்கிறான். சேயன் அமைத்த சிற்றூர் சேய்ஞலூர் என்று பெயர் பெறுகிறது. அங்கிருந்து புறப்பட்ட முருகன் நவவீரர்களுடன் நேரே வந்து விடுகிறான் திருச்செந்துருக்கு. ஏன்? அதை அடுத்த வீரமகேந்திரத் தீவில் கட்டிய கோட்டையைத் தானே தன் கேந்திர ஸ்தானமாகக் கொண்டு சூரபதுமன் ஆட்சி புரிகிறான். நவவீரர்களில் சிறந்த வீரபாகுத் தேவரைத் தூதனுப்புகிறான், சிறையிலிருக்கும் தேவர்களை எல்லாம் விடுதலை செய்யச் சொல்லி, சூரபதுமன் இணங்கவில்லை. போருக்கே புறப்பட்டு விடுகிறான் தன் இளைஞரோடும் வீரரோடும். குமரனும் குமுறி எழுந்து தன்னை எதிர்த்த வீரர்களையும் சிங்கமுகாசுரனையும் கொன்று குவிக்கிறான். ஆறுநாள் நடக்கிறது போர். கடைசியில் போர் முருகனுக்கும் சூரபதுமனுக்குமே நேருக்கு நேர் ஏற்படுகிறது. அந்தப் போரிலே அன்னை தந்த வேலைப் பிரயோகித்து, சூரசம்ஹாரத்தையே முடிக்கிறான். வேற்படையால் இருகூறாகிறான் சூரபதுமன். மயிலாகி வந்த கூறைத் தன் வாகனமாகவும் சேவலாகி வந்த கூறை தன் கொடியாகவும் அமைத்துக் கொண்டு தன்னுடைய உண்மையான உருவத்தைக் காட்டுகிறான் கார்த்திகேயன். இப்படி, மணம் புரிந்த தெய்வயானையையும் வள்ளியையும் தனக்கு மிகவும் உகந்த இடமான திருச்சீரலைவாய்க்கே கூட்டி வந்து தன் பக்கத்தில் நிறுத்திக் கொள்கிறான் பக்தர்கள் எல்லாம் கண்டு களிக்க.
கொங்கை குறமங்கையின்
சந்த மணம் உண்டிடும்
கும்ப முனி கும்பிடும்
தம்பிரானே
இந்தச் செந்திலாண்டவன் கோயிலில் உள்ள ஆறுமுகனைப் பற்றி அருமையான வரலாறு ஒன்று உண்டு. அதையும் தெரிந்து கொள்ளலாம் தானே.
1648ம் வருஷம் மேல் நாட்டிலிருந்து வந்த டச்சு வர்த்தகர்கள் இங்கு வந்து தங்கியிருக்கிறார்கள். என்றோ ஒரு நாள் ஆறுமுகப் பெருமானின் திரு உருவை அவனிருக்கும் வண்ணத்திலேயே கண்டுகளித்திருக்கிறார்கள். அவர்களுடைய களிப்புக்குக் காரணம், அவன் சூரபதுமனை சம்ஹரித்த மூர்த்தி என்பதினால் அல்ல. அந்த மூர்த்தி உருவாகியிருக்கும் உலோகம் பொன்னாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான். அந்த மூர்த்தியை எடுத்துச் சென்று உருக்கினால் அளவற்ற செல்வம் கிடைக்குமே என்று எண்ணியிருக்கிறார்கள். கோயில் நிர்வாகிகள் ஏமாந்திருந்த போதோ, அல்லது நல்ல நடுநிசியிலோ மூர்த்தியைக் களவாடி தங்கள் கப்பலில் ஏற்றி இரவோடு இரவாக கடல் கடத்திச் செல்ல முனைந்திருக்கிறார்கள்.
ஆனால் அறுமுகனோ அவர்களுடன் நெடுந்துரம் செல்ல விரும்பவில்லை. அது காரணமாக கடலிலே புயல் அடித்திருக்கிறது. கொந்தளிக்கும் கடலிலே கப்பல் ஆடி இருக்கிறது. உத்பாதம் நேர்வதை அறிந்த அந்த டச்சு வியாபாரிகள் இனியும் அறுமுகனை தங்களுடன் வைத்திருப்பது தகாது என்று அவனை அலக்காய்த்தூக்கி குமுறும் கடலிலேயே எறிந்து விடுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் தலை தப்பி தங்கள் ஊர் சென்று சேர்ந்திருக்கிறார்கள்.
கோயிலில் இருந்த அறுமுகவன் காணாமற் போன செய்தியை, நாயக்க மன்னரின் பிரதிநிதியாக விளங்கிய வடமலையப்ப பிள்ளையன் அறிந்திருக்கிறார். மிகுந்த வருத்தமுற்றிருக்கிறார். என்ன செய்வது என்று அறியாதவராய், பஞ்சலோகத்தில் இன்னொரு அறுமுகனை வார்த்தெடுத்து நிறுத்த முனைந்திருக்கிறார். ஆனால் அவர் எண்ணம் நிறைவேறும் முன்னமேயே, ஒரு கனவு கண்டிருக்கிறார். கனவில் கடலுக்குள் இருக்கும் ஆறுமுகனே வந்து, தான் இருக்கும் இடத்தை அறிவித்திருக்கிறார். ‘கடற்கரையிலிருந்து ஆறு காத துரம் சென்றால் அங்கு ஒரு எலுமிச்சம்பழம் மிதக்கும். அந்த இடத்தைச் சுற்றி கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பான்; அங்கு முங்கி மூழ்கினால் நான் உந்தி வந்து விடுவேன்’. என்று கூறியிருக்கிறான். வடமலையப்ப பிள்ளையும் குறித்த இடம் சென்று ஆறுமுகனைக் கடலின் அடித்தலத்திலிருந்து எடுத்து வந்து கோயிலில் நிறுத்தியிருக்கிறார். அன்று முதல் அங்கு கோயில் கொண்டிருப்பவனே அந்தப் பழைய ஆறுமுகன், ஆம், வடமலையப்பன் தேடி எடுத்த தேவதேவன், இதன் ஞாபகார்த்தமாக ஒரு நல்ல மண்டபத்தையும் கட்டி முடித்திருக்கிறார் அவர். அந்த மண்டபமே இன்றும் வடமலையப்பன் மண்டபம் என்று வழங்கப்படுகிறது.
இது ஏதோ கற்பனைக் கதை அல்ல. எம்.ரென்னல் என்னும் பிரெஞ்சு அறிஞர். 1785ல் ஜெர்மனியில் பெர்லின் நகரத்தில் இருந்து வெளியிடப்பட்ட சரித்திர இந்தியா என்ற புத்தகத்தில் இந்தத்தகவலை ஒரு டச்சு மாலுமியிடம் இருந்து தான் தெரிந்து கொண்டதாக குறித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி 1648ல் நிகழந்தது என்றும் உறுதியாக உரைத்திருக்கிறார். 1648ல் கடலுக்குள் சென்ற ஆண்டவன் 1653ல் தான் வடமலையப்ப பிள்ளையின் மூலமாக வெளிவந்திருக்கிறான். ஐந்து வருஷம் கடலுக்குள் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்து பக்தர்கள் உய்ய நல்ல தவம் பண்ணியிருக்க வேண்டும். தவத்தால் அடைந்த புதிய சக்தியோடு வெளிவந்து பக்தர்களுக்கு அருள் செய்ய திருவுளம் கொண்டிருக்க வேண்டும். பக்தர்களும் இந்தப் புனர் நிர்மாணத்தை 1953ம் வருஷத்தில் முன்னூறாவது ஆண்டு விழாவாகக் கொண்டாடி, ஆண்டவன் கருணையை நினைந்து வாழ்த்தி, மகிழ்ந்து இருக்கிறார்கள்.
இதை ஒட்டியே இன்னொரு வரலாறு. இப்படி கடலில் இருந்து எழுந்தருளிய ஆறுமுகனை அன்று முதல் வடமலையப்ப பிள்ளையன் மண்டபத்திலே எழுந்தருளச் செய்து அங்கு மண்டபப்படி நடத்துவது வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. இந்த நிலையில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்ம நாயக்கர் ஒரு புதிய மண்டபம் கட்டி திருவீதி, உலாப் போந்த ஆறுமுகப் பெருமானை, வடமலையப்பிள்ளையன் மண்டபத்திற்குக் கொண்டு செல்லாமல், நேரே தன் புதிய மண்டபத்திற்கே எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். பாளையக்காரரின் ஆதிக்கத்தை அறிந்த வடமலையப்ப பிள்ளையனோ, இதைத் தடுக்க முனையவில்லை என்றாலும் ஆண்டவன் அறியானா அவர் உள்ளம் துயர் உறுவதை. அவ்வளவுதான், இறைவன் திரு உலா வந்த போது காற்றும் மழையும் கலந்தடித்து அல்லோலகல்லோலப் படுத்தியிருக்கிறது. பல்லக்குத் தூக்கியவர்களோ மேலே செல்ல இயலாதவர்களாய்ப் பக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்திலேயே பல்லக்கை இறக்கி விட்டு உட்கார்ந்து விடுகிறார்கள். மழை நின்று புயல் ஓய்ந்தபின் பார்த்தால் பல்லக்குத் தங்கியிருக்கின்ற மண்டபம், பிள்ளையன் மண்டபமாக இருப்பதைக் காண்கிறார்கள். கட்டபொம்மன் தன் தவறை உணர்கிறார். பிள்ளையனிடம் மன்னிப்புக் கோருகிறார். பிள்ளையனும் ஐயன் கருணையை நினைந்து நினைந்து உருகுகிறார்.
இன்னும் ஒரு வரலாறு. ஆங்கில அன்பர்கள் சிலரையும் ஆண்டவன் பெற்றிருந்தான் என்பதற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலே திருநெல்வேலியிலே கலெக்டராக இருந்தவர் லஷிங்டன் துரைமகனார் (S.R.Lushinglion). அவரை, ஆண்டவன் ஆட்கொண்டிருக்கிறான். 1803ம் வருஷம் அவர் வெள்ளிப் பாத்திரங்கள் பலவற்றை இக்கோயிலுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அத்துடன் இவர் திருச்செந்துரை அடுத்த வீரபாண்டியன் பட்டினத்திலேயே ஒரு பங்களாக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. தமிழர் தெய்வமான முருகன் ஆங்கிலேயர்களையும் தன் அன்புக்கு ஆளாக்கி இருக்கிறான் என்று காண்கிறோம் இவ்வரலாற்றில் இருந்து.
கொங்கணர் ஆரியர் ஒட்டியர்
கோசலர் குச்சலர் ஆம்
சிங்களர் சோனகர் வங்காளர்
ஈழர் தெலுங்கர் கொங்கர்
அங்கர் கலிங்கர் கண்ணாடர்
துருக்கள் அனைவருமே
தங்கள் தங்கட்கு இறை நீ
என்பர் பேரரிச் சரவணனே