அடிமனம்/மன வசியம்

விக்கிமூலம் இலிருந்து

மனவசியம்

னம் என்பது சூட்சுமமானது. அதிலே பலவேறு நிலைகள் இருக்கின்றன. பலமாடிகள் கொண்ட ஒரு மாளிகையை மனத்திற்கு உபமானமாகக் கூடச் சொல்லலாம். ஏனென்றால் மனத்திலே அத்தனை நிலைகள் உண்டு. ஆனால் மாடி வீட்டைப் போலத் தனித்தனியான பிரிவினை மனத்திலே கிடையாது. மனம் என்பது ஒன்றேதான். அது சாதாரணமாக வெளிப்படையாகத் தொழிற்படும் நிலையை வெளிமனம் அல்லது நனவு மனம் என்றும், அதையொட்டினாற் போலவே இருந்து தொழிற்படும் பகுதியை நனவடிமனம் அல்லது இடைமனம் என்றும், மறைந்து நிற்கும் பகுதியை அடிமனம் அல்லது மறைமனம் அல்லது நனவிலிமனம் என்றும் கூறுகிறோம். பொதுவாக மனம் என்று கூறும்போது நனவு மனத்தையே குறிப்பிடுகிறோம். இவற்றைப்பற்றி யெல்லாம் மனமெனும் மாயக் குரங்கு என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். மனத்தைப் பற்றிய வேறு பல உண்மைகளையும் அதில் விளக்கியிருக்கிறேன். ஆதலால் அவற்றையே இங்கு மீண்டும் எழுத விரும்பவில்லை.

ஆனால் மனத்தைப் பற்றி ஓரளவு முதலில் தெரிந்து கொண்டால்தான், அம்மனத்தில் ஏற்படும் சிக்கல்களையும் தாழ்வுக் கோட்டங்களையும் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

மனத்தில் நனவிலி மனம் என்னும் ஆழ்ந்த பகுதி யொன்று இருப்பதாக நன்கு எடுத்துக் காட்டியவர் சிக்மாண்ட் பிராய்டு (Sigmund Freud) என்ற அறிஞராவார். அவருடைய ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மனத்தைப் பற்றிய கருத்துக்களிலேயே ஒரு புரட்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறலாம். அவர் எவ்வாறு நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்தார் என்பதைப் பின்னால் கூறுகிறேன்.

பிராய்டு ஆஸ்திரியா நாட்டில் பிறந்தவர். மனப் பிரமை போன்ற உளநோய்களை ஆராய்வதிலே இவர் தம் நாட்டின் தலைநகரான வியன்னாவில் ஈடுபட்டிருந்தார். அவர் ஜோசப் பிராயர் (Joseph Breuer) என்பவரோடு சேர்ந்து உளநோய்களைக் குணப்படுத்தும் தொழிலை நடத்திவந்தார். பிராயர் இவருக்குச் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் துறையில் நுழைந்தவர்.

ஹிஸ்டிரியா என்னும் உளநோயைக் குணப்படுத்துவதற்கு பிராயர் மனவசிய முறையைக் கையாண்டார்.

நாம்பு மண்டலக் கோளாறுகளாலும், ஸ்திரமான மன நிலையற்றவர்களிடத்திலும் ஹிஸ்டிரியா உண்டாகிறது. நாம்புகளிலோ அல்லது உடலிலோ எவ்வித மாறுபாடும் ஏற்படுவதில்லை; இருந்தாலும் இந்த நோய் மட்டும் தோன்றுகிறது.

மன வசியம் என்பது யாராவது ஒருவரைத் தூக்கத்தைப் போன்ற ஒரு நிலையில் இருக்கும்படி செய்வதாகும். அந்தத் தூக்கத்திற்கு மனவசிய உறக்கம் என்று பெயர். மனவசியத்தைக் கையாளுகின்றவர் யாரை உறங்கும்படி செய்ய நினைக்கிறாரோ அவரிடம் மெதுவாகப் பேசித் தமது கருத்துப்படி நடக்கச் செய்துவிடுவார். எல்லோரையும் இவ்வாறு மனவசிய உறக்கத்தில் ஆழ்த்த முடியாது. அப்படிப்பட்ட உறக்கம் கொண்டவர்களிலும் சிலர் ஆழ்ந்த உறக்கம் கொள்ளமாட்டார்கள்; மனவசிய உறக்க நிலையில் அவர் செய்வதெல்லாம் விழித்த பிறகு நினைவிலிருக்கும். சிலர் ஆழ்ந்த மனவசிய உறக்கம் கொண்டுவிடுவார்கள்; அவர்கள் அந்த நிலையில் செய்யும் காரியங்கள் அவர்களுக்குத் தெரியா.

சாதாரண உறக்கத்திற்கும் மனவசிய உறக்கத்திற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. மனவசிய உறக்கத்திலிருப்பவர் பேசுவார், நடப்பார், எழுதுவார்; விழிப்பு நிலையிலிருப்பவரைப் போலப் பல காரியங்களைச் செய்வார். சாதாரணத் தூக்கத்திலிருப்பவர் அவ்வாறு செய்ய முடியாது.

மனவசிய உறக்கத்திலிருப்பவர் அவ்வாறு அவரை உறங்கச்செய்தவர் சொல்லியபடியெல்லாம் செய்வார். அவருடைய மனச்சாட்சிக்கு விரோதமான காரியத்தைச்சொன்னால் மட்டும் செய்யமாட்டார் என்று சிலர் கூறுவார்கள்.

ஒருவன் மனவசிய உறக்க நிலையிலிருக்கும்போது மனவசியம் செய்பவனின் ஆணைப்படி நடப்பதோடல்லாமல், “விழித்த பிறகு நீ இவ்வாறு செய்யவேண்டும்” என்று சொன்னால் விழித்த பிறகும் அவ்வாறு செய்வான் ‘'நீ விழித்த பிறகு பத்து நிமிஷத்திற்கப்புறம் உனது செருப்பைக் கழற்றி வெளியே எறியவேண்டும்" என்று சொல்லியிருந்தால் விழித்த பத்து நிமிஷத்தில் அவன் அப்படிச் செய்வானாம். நாயைக் கண்டால் பயப்படுகிற ஒருவனை மனவசிய உறக்கத்திலிருக்கும்போது, “இனிமேல் நீ நாயைக் கண்டால் பயப்படமாட்டாய்” என்று கூறினால் விழித்த பிறகு அவன் பயப்படமாட்டானாம்.

ஆனால் இந்த நிலைமை நிரந்தரமாக நீடிக்காது. சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோதான் சாதாரணமாக நீடிக்கும். சில சமயங்களில் வருஷக்கணக்காகக்கூட இருப்பதுண்டு.

மனவசிய உறக்க நிலையில் அடிக்கடி இருப்பது ஒருவனுக்கு நல்லதல்ல என்று கருதுகிறார்கள். இந்த மனவசிய முறையைக் கையாண்டு பிராயர் ஹிஸ்டிரியா நோயைப் போக்க முயன்றார்.

இந்நோய் கண்டபோது கைகால்கள் வராமற் போதல், பேச முடியாமற் போதல், உணர்ச்சியற்றுப் போதல், கண் குருடாதல், வாந்தியெடுத்தல், மூர்ச்சை போட்டு விழுதல், வலிப்புண்டாதல் முதலான தொந்தரவுகள் உண்டாகும். உடம்பைப் பரீட்சை செய்து பார்த்தால் அதில் ஒருவிதமான தவறோ குறைபாடோ இருக்காது. இருந்தாலும் நோய்மட்டும் தோன்றுகிறது.

வைத்தியர்கள் இந்நோயைப் பலவித மருந்துகளின் மூலம் குணப்படுத்த முயன்றார்கள். ஹிஸ்டிரியா உண்டாகும்போது தளர்ச்சியேற்பட்டால் உற்சாகமும் சுறுசுறுப்பும் கொடுக்கும் மருந்துகளை வைத்தியர்கள் கொடுத்துப் பார்த்தார்கள். மனக்குமுறலும் கிளர்ச்சியும் அதிகமாக இருந்தால் அவற்றை அடக்க அமைதி கொடுக்கும் மருந்தைக் கொடுத்தார்கள். இவற்றுலெல்லாம் நோய் குணப்படுவதில்லை என்று அநுபவத்திலே தெரிந்தது.

பேய் பிடித்துக் கொண்டது என்று கூறுவதும் ஒரு வகை ஹிஸ்டிரியா என்று இப்பொழுது கண்டிருக்கிறார்கள். இந்த விதமான நோயைப் போக்குவதற்குக் கிராமங்களிலே பலவித முறைகளைக் கையாளுவார்கள். பேயோட்டுவதில் கெட்டிக்காரரென்று சிலர் இருப்பார்கள். அவர்கள் மந்திர சக்தியால் பேயை ஓட்டுவதாகக் கிராமமக்கள் கூறுவார்கள். குறிப்பிட்ட சில கோயில்களுக்குச் சென்றாலும் பேய் விலகிவிடும் என்று மக்கள் நோயாளிகளை அங்கு கூட்டிச் செல்லுவார்கள். கோயில்களிலே பெண்கள் பேயாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

உள்ளத்திலே அழுந்திக்கிடக்கும் சிக்கல்களை மேலே கூறிய முறைகள் எவ்வாறு போக்க உதவுகின்றன என்பதை யாரும் இதுவரை விரிவாக ஆராய்ந்து பார்க்கவில்லை. ஆனால் இவைதான் கிராமங்களிலே பழக்கத்திலிருக்கின்றன.

இங்கு ஒரு விஷயத்தை மட்டும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஹிஸ்டிரியா என்ற நோய் உள்ளத்தில் அழுந்திக் கிடக்கும் நிறைவேறாத இச்சைகளாலும், தகாத எண்ணங்களாலும் ஏற்படும் கோளாறே ஆகும். ஆனால் அது தொடங்குவதற்கு உடனடியாக உள்ள காரணமாக இருப்பது ஏதாவது ஒரு அதிர்ச்சியாக இருக்கலாம். திடீரென்று உண்டான பயம், காதலில் ஏமாற்றம், நட்பினர் மரணம், பெருநஷ்டம் முதலானவை காரணமாகலாம்.

ஹிஸ்டிரியாவைக் குணப்படுத்துவதற்கு ஜோசப் பிராயர் மனவசிய முறையைக் கையாண்டார் என்று முன்பே கூறினேன். அவர் பிராய்டுக்குத் தம்மிடம் வந்த ஒரு ஹிஸ்டிரியா நோயாளியைப் பற்றிச் சுவையான ஒரு செய்தி கூறினார்.

அந்த நோயாளி ஒரு இளம் பெண்மணி. அவளுடைய ஒரு கை சுவாதீனமில்லாமல் போய்விட்டது; கண் தெரியவில்லை; உணவை விழுங்கவும் முடியவில்லை. இவ்வாறு பல தொந்தரவுகளால் அவள் கஷ்டப்பட்டாள். ஆனால் அவள் உடம்பில் ஒரு குறையும் இருக்கவில்லை! அவள் மனவசிய நிலையில் இருக்கும்போது ஒரு சமயம் திடீரென்று, “எப்படி இந்த நோய் முதலில் தொடங்கியது என்று கூறினால் அது இந்த நோயைக் குணப்படுத்த உதவியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று கூறினாள். பிராயருக்கு அவள் கூறியது ஆச்சரியமாக இருந்தது; அதனால் அப்படியே கூறும்படி சொன்னார். அவள் தனக்கு ஒரு சமயம் வந்த பக்கவாத நோயைப்பற்றி மனவசிய நிலையிலிருந்து கொண்டே கூற ஆரம்பித்தாள். அதில் தொடங்கிப் பிறகு தனது அந்தரங்கமான வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் பேசலானாள் பல விஷயங்கள் தொடர்பில்லாமல் வெளியாயின; அவளுடைய ஹிஸ்டிரியா நோய்க்குச் சம்பந்தமான செய்திகளைக் கூறும் போது மிகுந்த உணர்ச்சியோடு பேசினாள். இவற்றையெல்லாம் பிராயர் அநுதாபத்தோடும் பொறுமையோடும் கேட்டுக் கொண்டிருந்தாராம். இப்படி விஷயங்களையெல்லாம் கூறியதனால் அந்த நோயாளிக்கு அதன் பிறகு நோய் குணப்பட்டதுபோல இருந்ததாம். அதனால் அதே மாதிரி பலமுறை பரீட்சை செய்து பார்த்தார் பிராயர். மனவசிய நிலையில் அவளை இருக்கும்படி செய்து அவளுக்கிருக்கும் படியான பலவிதக் கோளாறுகளைப்பற்றி வெவ்வேறு விதமாகக் கேள்விகள் கேட்டார். அவளும் அந்த மனவசிய நிலையில் தன் மனத்தில் தோன்றியவற்றையெல்லாம் கூறிக் கொண்டே வந்தாள். இப்படிக் கூறிவந்ததால் அவளுடைய மனக்கோளாறுகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கின. முன்னால் அவளுக்கு எத்தனையோ வகையான சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. மருந்து கொடுத்தல், மின்சார அதிர்ச்சிச் சிகிச்சை என்றிப்படிப் பல முறைகளைப் பல வைத்தியர்கள் கையாண்டிருக்கிறார்கள். அவற்றிலெல்லாம் குணப்படாத இந்த நோய் இந்த முறையில் குணமாகி வருவதைக் கண்டு பிராயருக்கே ஆச்சரியமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அடிமனம்/மன_வசியம்&oldid=1004442" இலிருந்து மீள்விக்கப்பட்டது