ஆறுமுகமான பொருள்/1நக்கீரர்
1. நக்கீரர் கண்ட முருகன்
இருஞ் சேற்று அகல் வயல்
விரிந்து வாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத்
துஞ்சி, வைகறை
கார் கமழ் நெய்தல்
ஊதி, ஏற்படக்
கண் போல் மலர்ந்த
காமர் சுனை மலர்
அம்சிறை வண்டின்
அரிக்கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து
உறைதலும் உரியன்
என்று முருகனுக்கு ஒரு விளக்கம். விளக்கம் தருபவர், கடைச்சங்கப் புலவர்களுள் தலையாய நக்கீரர். நாம் இந்த விளக்கம் பெறுவது அவர் இயற்றிய திருமுருகாற்றுப் படையில். இதைப் படித்த ஒரு அன்பர் "என்ன சார்” ஒன்றுமே புரியவில்லையே, குன்று அமர்ந்து உறைதலும் உரியன் என்று ஒரு சொல் தொடர் மாத்திரம் தானே புரிகிறது. திருமுருகாற்றுப்படை முழுவதுமே இப்படித்தானே இருக்கிறது. முருகாற்றுப்படையை பாராயணம் பண்ணினால் முருகன் அருள் பெறுவோம் என்ற ஒரே நம்பிக்கையில் தானே பலர் இதைப் பாராயணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதை கொஞ்சம் எளிதாகவே சொல்லக் கூடாதா? சொல்ல முடியாதா” என்று மிக்க ஆதங்கத்துடனே கேட்கிறார். உண்மைதான். திருமுருகாற்றுப் படையை நன்றாகப் பொருள் விளங்கும்படி எளிமையோடு இனிமையோடும் சொல்லிவிட்டால், அதைப் படிப்பவர் தொகை பல்கிப் பெருகும் அல்லவா? நிரம்பச் சொல்வானேன். மேலே சொல்லியிருக்கும் அடிகளின் பொருளே: “அழகிய சிறகுகளை உடைய வண்டுகள், கரிய சேற்றில் மலர்ந்த தாமரைப் பூக்களில் இரவெல்லம் உறங்கி, விடியற் காலையிலே விழித்து எழுந்து, நெய்தல் பூவை ஊதி, சூரியன் உதித்ததும் கண்கள் போல் மலர்ந்த அழகிய சுனைப் பூக்களில் சென்று ஆரவாரிக்கும். இத்தகைய சிறப்பினை உடைய திருப்பரங்குன்றத்திலே முருகன் வீற்றிருக்கிறான்” என்பதுதானே. இன்னும் சுருங்கச் சொன்னால், வண்டுகளுக்கு மலர்கள் தேனைக் கொடுத்து உதவுவதுபோல, அடியார்களுக்கு முருகனும் அவர்கள் வேண்டுவதைக் கொடுத்து, திருவருள் புரிவான் என்பது தானே கருத்து. இதைத் தானே இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு, அன்று செல்வாக்கு உடையதாக இருந்த அழகு தமிழ்ச் சொற்களிலே சொல்லியிருக்கிறார். இடையே இரண்டாயிரம் வருஷங்கள் கழிந்த காரணத்தால் பல சொற்கள் வழக்கிழந்து போக அச்சொற்களும் சொற்றொடர்களும் இன்று நமக்கு விளங்கவில்லை. ஆதலால் அத்தகைய அரிய நூலை படிப்பதையே நிறுத்திவிடுகிறோம் நாம்.
மேலும் ஒரு கேள்வி. 'ஆற்றுப்படை என்றால் என்ன? ஊர்தோறும் ஓடும் ஆற்றுக்கும், படை எடுக்கும் படைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்று கூடக் கேட்பவர்கள் இருக்கிறார்கள். முருகாற்றுப் படை என்றால் 'முருகனிடத்து வழிப்படுத்துதல்' என்றுதான் பொருள். முருகனது திருவருள் பெற்ற ஒரு கவிஞன், அதே அருளைப் பெற விரும்பும் மற்றவர்களுக்கு, அக்கடவுளின் தன்மை, பெருமை, இருப்பிடம் முதலியவற்றைப் பற்றி விரிவாகக் கூறி, அவர்களை நல்வழிப்படுத்துகிறான். இதுவே ஆற்றுப்படையின் அடிப்படை.
முருகன் வீற்றிருக்கும் இடம் ஆறு. அவை முறையே திருப்பரங்குன்றம், திருச்சீர் அலைவாய் என்னும் திருச்செந்தூர், ஆவினன்குடி என்னும் பழநி, ஏரகம் என்னும் சுவாமிமலை. ஏனைய குன்றுகள், பழமுதிர்சோலை என்பனவாம். முதலில் திருப்பரங்குன்றத்தின் இயற்கை அழகுகளையும் தெய்வ மகளிர் ஆடிப் பாடுவதையும் முருகன் காட்சி தருவதையும் விளக்குகிறார் நக்கீரர். பின்னர் திருச்செந்தூரில் முருகன் கடல் அருகே கவின்பெற விளங்கும் தன்மையையும், யானையின் மேல் ஏறிவந்து தரிசனம் கொடுப்பதையும், ஆறுமுகங்களும் பன்னிரண்டு கரங்களும் உடைய அவன் திருக்கோலத்தையும் சொல்கிறார் கவிஞர். மூன்றாவதாக ஆவினன்குடியில் அந்த முருகன் அற்புதக் கனியாக விளங்குவதையும் முனிவர் கந்தருவர் முதலியவர்கள் சென்று வழிபடும் முறையையும் விரிவாகவே கூறுகிறார் நல்லிசைப் புலவர். நான்காவதாக திருவேரகத்தில், பிரணவப் பொருளறியாத பிரமனை குட்டிச் சிறை இருத்தி, தன் தந்தையாம் சிவபெருமானுக்கும் பிரணவப் பொருள் உணர்த்தும் ஞானாசிரியனாக நிற்கும் முருகன் நமக்கு அறிமுகப்படுத்தப் படுகிறான். மேலும் குன்றுதோறாடல் என்னும் ஐந்தாம் பகுதியிலே குன்றுகள் தோறும் முருகன் எழுந்தருளி உலக மக்களுக்குக் காட்சி கொடுப்பதையும், அங்கெல்லாம் குன்றவர் குரவை ஆடி மகிழ்வதையும் விளக்குகிறார் நக்கீரர். கடைசியாக பழமுதிர் சோலைக்கு அழைத்துச் சென்று அந்த மலை கிழவோனை நமக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு விடை பெற்றுக் கொள்கிறார்.
இதற்கெல்லாம் பீடிகையாக நம்மைப் பார்த்து ‘அன்பர்களே அளவிடற்கரிய புகழுடையவனும், சிவந்த வேலை ஏந்தியவனுமான முருகன் திருவடிகளை தூய சிந்தையோடு நினைந்து அவனிடம் போவதை நீங்கள் விரும்பினால், உங்கள் விருப்பம் திட்டமாய் நிறைவேறும்’ என்றும் கூறுகிறார்.
எய்யா நல்இசை செவ்வேல் சேய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கை புலம் புரிந்து உரையும்
செலவு நீ நயந்தனையாயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே
என்று நல்லாசி கூறுகிறார் நக்கீரர். இதை எல்லாம் தெரிந்து கொண்டபின், நக்கீரர் கண்ட முருகன் என்ற தலைப்பிலே ஒரு சில வார்த்தைகள் உங்களுக்கு நான் கூறினால் விஷயம் தெளிவாகும். அத்தோடு முருகாற்றுப்படை படித்துப் பாராயணம் பண்ணவும் ஓர் ஆசையே பிறக்கும் அல்லவா?
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்து நின்றவர் தமிழ் மக்கள். இவர்கள் தாங்கள் வாழ்ந்த நாட்டை நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு வாழ்ந்தார்கள் என்பதை பழந்தமிழ் நூல்கள் எல்லாம் விரிவாகவே கூறுகின்றன. தொல்காப்பியத்திலேயே நாட்டில் நால்வகை நிலங்கள் பேசப்படுகின்றன. அந்த அந்த நில வகைகளுக்கு ஏற்ப மக்கள் பழக்கங்களும், ஒழுக்க முறைகளும் இருந்தன என்றும் அறிகிறோம். இதையெல்லாம் ஆராய்ந்தால் தொல்காப்பியர் காலமான அந்த தொல்காலத்திற்கு முன்னரேயே தமிழ் மக்கள் குறிஞ்சியிலும், முல்லை, மருதம், நெய்தல் நிலங்களிலும் குடிபுகுந்து வாழ்வு நடத்தி இருக்க வேண்டும். தமிழ் மக்களது வாழ்வு துவங்கிய இடம், மலையும் மலைசார்ந்த குறிஞ்சியுமே. பின்னர்தான் அவர்கள் படிப்படியாக, காடாகிய முல்லையில் இறங்கி, வயலாகிய மருதத்தில் தவழ்ந்து, நெய்தலாகிய கடற்கரை வரை சென்றிருக்க வேண்டும். ஆதலால் இறைவழிபாடு முதல் மலைநாடாகிய குறிஞ்சியிலே தோன்றியதில் வியப்பில்லை: நீண்டுயர்ந்த மலையிலே பிறந்த இறை வழிபாடு அகன்று பரந்த கடற்கரைக்கே நடந்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாகத்தான் காடாகிய முல்லையிலும், வயலாகிய மருதத்திலும் பரவி இருக்கிறது. இந்நாடுகளிடையே எழுந்த பல பல குன்றுகளிலும் சில சில சோலைகளிலும் புகுந்திருக்கிறது.
இந்த உண்மையை எல்லாம் அறிந்த நக்கீரர் இறைவழிபாட்டை மலையான திருப்பரங்குன்றத்திலே துவங்கி, கடற்கரையாம் திருச்செந்தூரிலே நடத்தி, காடாகிய ஆவினன்குடியிலும், வயல்வெளியாகிய ஏரகத்திலும், சோலையாகிய பழமுதிர் சோலையிலும் பரவவிட்டிருக்கிறார். பின்னும் நாட்டின் பல பகுதிகளில் உயர்ந்துள்ள குன்றுகளிலும், இறைவழிபாடு ஏறி நின்றதையும் சொல்ல மறக்கவில்லை. இப்படி நாட்டில் இறைவழிபாடு நடந்த இடமெல்லாம் நம்மை ஆற்றுப்படுத்தி அங்கெல்லாம் இறைமையைக் காண வகை செய்திருக்கிறார் அவர்.
நக்கீரர் கண்ட இறைவன் முழுக்க முழுக்க முருகனே. நமக்குத்தான் தெரியுமே சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்த நக்கீரரைப் பற்றி. மதுரையிலே இறைவனாம் சோமசுந்தரனே, தருமிக்குப் பொற்கிழி அளிக்க விரும்பி ஒரு பாட்டுப்பாட அந்தப் பாட்டு குற்றம் உடையது என்று சொன்னவர் ஆயிற்றே அத்துடன் நிறுத்தினாரா? அந்த இறைவனாம் சிவ பெருமானே நேரில் வந்து வாதிட்ட போதும், "மால் தருமருட்சியால் கண் வடிவேலாம் காட்டினாலும் சாற்றிய செய்யுள் குற்றம், சடைகொண்டு வெருட்டல் வேண்டா" என்று வழக்காடியவர் ஆயிற்றே, இந்த அஞ்சா நெஞ்சன். நக்கீரனது இதயத்தில் இறைவனாம் சிவபெருமான் இதனால் தான் அதிக இடம் பெறவில்லை போலும், அவரது இதயத்தில் பெரியதோர் இடத்தை இந்த முருகனே ஆக்கிரமித்துக் கொள்கிறான். முருகன் என்றதுமே அவரது உள்ளத்தில் ஒரு மோகம் பிறந்திருக்கிறது. முருகன் என்ற சொல்லே மிக்க பழமையான தமிழ்ச்சொல். மணம், இளமை, கடவுள் தன்மை, அழகு என்றெல்லாம் விரிந்த பொருளிலே தான் முருகு என்ற சொல் ஆதியில் தமிழில் வழங்கப்பட்டிருக்கிறது. முருகை யுடையவன் இறைவன் என்று எண்ணிய தமிழ் மக்கள் அவனுக்கு முருகன் என்று பெயரிட்டு வாழ்த்தியதும், வணங்கியதும் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. இந்த முருக வழிபாட்டைத் துவங்கியவர் யாராயினும் ஆகுக. ஆனால் அந்த வழிபாட்டுக்கு ஓர் உயரிய ஸ்தானம் அளித்து ஆதித்தமிழ் மக்களிடத்தே நின்று நிலவச் செய்தவர் நக்கீரர் மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டியவர் அல்லவா?
நக்கீரர் அழகை ஆராதிப்பவர்தான். இளமைக்கு வணக்கம் செலுத்துபவர்தான் என்றாலும் அவரது உள்ளம் எல்லாம் முருகனிடம் அவர் கண்ட இறைமையிலேயே பதிந்து நின்றிருக்கிறது. பாட்டின் துவக்கத்திலேயே சூரியனைப் போன்ற ஒளி உடைய திருமேனியும், அடைந்தோரைக் காக்கும் திருவடிகளும், பகைவரை அழிக்கும் படைகள் தாங்கிய திருக்கரங்களும் உடையவன் முருகன் என்று அறிமுகம் செய்து வைக்கிறார். அத்தோடு தெய்வயானையின் கணவன் அவன், கடம்ப மாலையை மார்பிலும், காந்தள் கண்ணியை முடியிலும் தரித்தவன், வேற்படையால் சூரன் முதலியவர்களை அழித்தவனும் அவனே என்று புகழ்கிறார்.
'சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல்' அவர் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை. இந்த சூரசம்ஹாரம் நடத்த அவன் அந்தத் திருச்சீரலைவாயிலிலே கார்த்திகேயனாக, அறுமா முகவனாக எல்லாம் உருப்பெற்று வளர்ந்ததைச் சொல்கிறார். ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு திருக்கரத்திலும் ஈடுபட்டு நின்று அவன்
தெய்வத் தன்மையை எல்லாம் விளக்கிக் கொண்டே போகிறார். ஆவினன்குடி இருக்கும் அண்ணலைத் தேடி வருபவர் தொகையும் என்ன கொஞ்சமா? பிரணவப் பொருள் அறியாப் பிரமனைச் சிறையிட, அவனது படைத்தல், தொழிலே நின்றுவிடுகிறது. படைப்பு இல்லாவிட்டால் காத்தல் ஏது? அழித்தல் ஏது? இப்படி முத்தொழிலும் ஸ்தம்பித்து நிற்க கடவுளர் மூவரும் தத்தம் தொழிலை இயற்றவும், பிரமனைப் பழைய நிலையிலே இருத்தவும் விரும்பும் முனிவர், கந்தருவர், திருமால், ருத்திரன், இந்திரன் எல்லோருமே ஒரு நடை வருகிறார்கள். புள் அணி நீள் கொடிச்செல்வன், மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன், யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன், முதலியவர்கள் வருகின்ற வரிசையை எல்லாம் வகை வகையாக எடுத்துக் கூறுகிறார் கவிஞர். இதை எல்லாம் சொன்னவர் வழிபாட்டுக்கு உகந்த இடம் ஏரகம் என்பதைச் சொல்லி
உச்சி கூப்பிய கையினர்
...தற் புகழ்ந்து
ஆறு எழுத்து அடக்கிய
அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில்
நவிலப்பாடி
விரை அறு நறுமலைர்
ஏத்தி
வழிபடும் முறையை எல்லாம் இன்னும் விரிவாகவே விவரிக்கிறார். மேலும் மேலும் அவன் புகழ் பாடி
அறுவர் பயந்த
ஆறு அமர் செல்வ!
ஆல்கெழு கடவுள்
புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே!
மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க்
கொற்றவை சிறுவ!
இழை அணி சிறப்பில்
பழையோள் குழவி!
வானோர் வணங்கு
வில்தானைத் தலைவ!
மாலை மார்ப, நூல் அறிபுலவ!
என்றெல்லாம் கூவியழைக்கிறார். நக்கீரருக்கு முருகனது இறைமைத் தன்மையில் எத்தனை நம்பிக்கை! நூல் முழுவதும் அவர் கூறுவது இதனைத்தான். நக்கீரர் கண்ட முருகனே அவரது இறைவன். ஏன் தமிழ் மக்கள் கடவுளும் அவன்தானே!