சொன்னார்கள்/பக்கம் 31-40

விக்கிமூலம் இலிருந்து



பணவசதி படைத்தவர்கள், பிள்ளை வாரிசு இல்லாதவர்கள், கல்வித்துறைக்கு நிதி உதவவேண்டும். அவர்கள் இந்தத் தலைமுறையில் செய்யும் உதவி பல தலைமுறை மாணவர்களுக்கு பயன் அளிக்கும். கல்வித் துறையில் நாம் போதிய முதலீடு செய்து முன்னேறாவிட்டால், உலக நாடுகளுடன் நாம் எந்தத் துறையிலும் போட்டிப் போட முடியாது.

—இரா. நெடுஞ்செழியன் (2-7-1974)
(தமிழக கல்வி அமைச்சர்)

மூன்று வருடத்திற்கு முன் நான் பட்டத்துக்கு வந்தது முதல், குழந்தை மணத்தை நிறுத்துகிற விஷயமாய்க் கவனம் செலுத்தி வந்தேன். இந்த விஷயத்தைப் பற்றி நான் தீர ஆலோசித்ததில், இந்தத் தீமையை நிறுத்த வேண்டுமாயின் அதற்கு ஒரே வழிதானுண்டு. அது, சட்டம் செய்வதுதான் என்ற முடிவிற்கு வந்தேன். இதனால்தான் எனது பிறந்த நாள் தர்பாரில், பாலிய விவாகத்தைத் தடுக்கும்படி சட்டம் செய்யத் தீர்மானித்திருப்பதாக அறிவித்தேன்.

—மண்டிராஜா (13-4-1928)
(லாகூரில்)

இந்திய சட்ட சபையைப் பற்றிய சட்டத்தில் கேள்வி கேட்கும் சுதந்தரம், கொஞ்சம் பிரதிநிதித்வம் போன்ற அனுகூலமான சில பாகங்கள் இருக்கின்றன. அதிகாரிகள் இந்தியப் படிப்பாளிகளிடத்தில் அவநம்பிக்கை வைக்காமல் அவர்களே விசுவாசித்து அவர்கள் தேச அரசாட்சியில் ஈடுபடும்படி செய்ய வேண்டும். அவர்களைப் பகைவர்களாகும்படி அதிகாரிகள் நடந்துகொள்ளக்கூடாது. இந்தியாவின் தரித்திரம், ஆட்சி முறையின் அமைப்பினால் ஏற்படுகிறதே யொழியத் தனிப்பட்ட அதிகாரிகளால் ஆக்கப்படுகிறதில்லை.

-
—தாதாபாய் நவ்ரோஜி
(1893-ல் லாகூரில் நடைபெற்ற ஒன்பதாவது காங்கிரஸ் மாநாட்டில்.)

நான் செய்யும் ஒவ்வொரு செயலும், நான் அனுபவிக்கும் ஒவ்வொரு வேதனையும், என்னை எல்லாவிதத்திலும் புதிய மனிதனாக மாற்றுகின்றன. வறுமை, அன்பு, அதிகாரம், கோபம், நோய், துயரம், வெற்றி எல்லாம் என் மனத்தில் புதைத்து கிடக்கும் பல்வேறு சக்திகளை வெளிக்கொணர்கின்றன. இவைகளினால் எனது அற்ப ஆசைகள் பாதிக்கப் பட்டாலும் எனது மனோசக்தி பெருகுவது தடைப்படுவதில்லை.

—கவிஞர் எமர்சன்

நானே பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்தான். பணம் கட்ட வசதியின்றி உபகாரச் சம்பளம் பெற்றுத்தான் படித்தேன். ஆகவே, பணம் கட்டிப் படிப்பதில் உள்ள கஷ்டம் எனக்குத் தெரியும்.

—அறிஞர் அண்ணா (23-3-1967)

இலக்கியத்தை நான் கற்றேன் இல்லை. நான் நினைத்ததைப் பிறர் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எனது மொழி எனக்கு உதவவேண்டும். அதுவரையில் எனது மொழியறிவு எனக்கு உதவுகிறது என்று நம்புகிறேன்.

—எம். ஜி. ஆர். (23-12-1975)

முன்பெல்லாம் யோசனை சொல்வதற்காகச் சிலரும், அதைக் கேட்பதற்காகப் பலரும் இருந்தார்கள். அதனால் யோசனை சொல்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தன. ஆனால், இப்போதைய நிலைமை அப்படியில்லை. நேர்மாறாகப் போய்விட்டது. யோசனைகளைத் தேடி, நாம் எங்கும் போக வேண்டியதில்லை. நம் இருப்பிடம் தேடித் தாமாக யோசனைகள் அடுக்கடுக்காய் வந்து குவியும் நாள் இது.

—அகிலன்

உண்மை என் உடலில் ஊறிக் கிடக்கிறது. என்னிடமிருந்து அதனை எதனாலும் அகற்றிவிட முடியாது.

—காந்தியடிகள்

தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கு, முழுக்க முழுக்கப் பிறரை நம்பியிருக்கும் ஒரு நாடு உதவாக்கரை நாடாகும்.

—நேரு (27-11-1962)

பிரசங்கம் செய்வது எனக்கு எப்பொழுதும் பிடிக்காது. அக்காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி, ஆனாலும் பிரசங்கம் செய்யாமலே இருக்கமுடியவில்லை. தனியே பிரசாரம் செய்யப் போன போதோ, அல்லது பிறர் வற்புறுத்தலினாலோ பேச வேண்டியிருக்கிறது. அப்படி நான் முதன் முதலாகப் பிரசங்கம் செய்தது எளிங்க நாய்க்கன்பட்டி என்ற கிராமத்தில் அவ்வூர் விருதுநகருக்குச் சுமார் 5 மைலில் உள்ளது. சுமார் 200 வீடுகள் கொண்ட சிறு கிராமம். சுப்பராய பந்துலு என்ற மற்ருெரு காங்கிரஸ் ஊழியர் என்னுடன் வந்திருந்தார். கூட்டம் 500 பேர் இருக்கும். அதாவது அந்தக் கிராமத்தார் எல்லோருமே வந்திருந்தார்கள்.

— காமராசர்

கல்யாண வயதை உயர்த்த வேண்டாம்; ருது சாந்திக் காலத்தைத் தள்ளி வைத்துக் கொள்வோம் என்று வைதீகர்கள் சமாதானம் சொல்லுகிறார்கள். அவ்வாறு செய்வதற்குப் பதிலாகக் கல்யாண வயதையே தள்ளி வைத்தாலென்ன முழுகிப் போய்விடும்? என் சென்னை நண்பர்கள் அறிந்திருப்பதுபோல் சமஸ்கிருதத்தில் எனக்கு அவ்வளவு புலமையில்லாவிடினும் நானும் ஏதோ சிறிது சமஸ்கிருதம் அறிந்த வரையில், பண்டைக்காலத்தில் இந்துக்கள் அவ்வப்போது காலப் போக்குக் கேற்றவாறு நடந்து கொண்டதனால்தான் மேன்மை பெற்று விளங்கினர்கள் என்றறிந்தேன். அத்தகைய உத்தமமான முறையை இந்துக்கள் தத்துவஞான விவாதங்களாலும் நம்நாடு ஒரு நாளும் முன்னேற்றமடையாது.

—லாலா லஜபதிராய் (14 - 4 - 1928)
(சென்னை கோகலே ஹாலில்)

இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ஆண்களே எதிர்க்கிறார்கள். அதனால் அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மேலும், பழங்காலந் தொட்டு திருமணங்களில் வாழ்த்துகிறவர்கள் ஏராளமான குழந்தைகளைப் பெறும்படி வாழ்த்தி வருகிறார்கள். அந்தப் பழக்கம் இன்னமும் நீடிக்கிறது. மக்கள் செல்வம் தான் பெரிய செல்வம் என்ற எண்ணம் இன்னமும் நீடித்து வருகிறது. குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றி பெறாததற்கு அதுவும் ஒரு காரணம்.

—பிரதமர் இந்திரா காந்தி

எதுவும் பேச்சு வாக்கில் 'கி' என்ற அடைமொழியைப் பெற்று வரும். எப்படி? பணம், கிணம், சங்கம், கிங்கம், சினிமா, கினிமா, நாடகம், கீடகம், கட்சி, கிட்சி, வீடு, கீடு, சோறு, கீறு, காப்பி, கீப்பி, என்று வரும். அதனால்தான் நந்தனாரை கிந்தனர் என்று பெயர் வைத்தேன். ஆனால் என் பெயரை மட்டும் நீங்க அப்படிச் சொல்லலாம் என்றால் ஏமாந்து போயிடுவீங்க. ஆமாம், ஆமாம், சொல்லிப் பிட்டேன். கிருஷ்ணன் - கிருஷ்ணன்தான். -

—கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்

நான் உண்மையில் யாரையாவது பிரதிபலிக்கின்றேனா என்று வியப்பதுண்டு. பலர் என்னிடத்தில் அன்பு செலுத்துகிறார்களென்றாலும், நான் யாரையும் பிரதிபலிக்கவில்லை என்றுதான் நினைக்கின்றேன். நான் கீழ் நாடும் மேனாடும் சேர்ந்த ஒரு விந்தையான கலப்புப் பேர்வழி. நான் எந்த இடத்துக்கும் சேராதவன். ஒருவேளை என்னுடைய எண்ணங்களும், போக்கும் கீழ்நாட்டைவிட மேனாட்டுக்குப் பொருந்தியவையாக இருக்கலாம். ஆனால் கணக்கற்ற வழிகளில், இந்தியா தன் எல்லா மக்களையும் பற்றிக்கொள்வது போன்று என்னையும் பற்றிக் கொள்கின்றது.

—நேரு

நாம் சிரார்த்தம் என்னும் பேரால், பல தானங்களும், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் பாத்திரங்களும், அரிசி, காய்கறிகளும் குறிப்பிட்ட சமூகத்தவர்க்குக் கொடுத்தல் அவசியமெனக் கருதி அவ்வாறு செய்து வருகின்றோம். இதனால் நம் பிதிர்கள் சுவர்க்கத்தை யடைவார்கள் என்றும் நம்புகிரறோம். இவ்வாறு பிள்ளைகள் செய்வதால், தந்தை தான் செய்த பாபத்தினின்றும் மீளுவது உண்மையாயின் நமது தத்துவமான ‘அவனவன் செய்தவினை அவனவனைச் சாரும்’ என்பது பொய்யாகப் போகின்றதன்றோ? ஒருவன் செய்த குற்றத்திற்காக அவனைச் சார்ந்தார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், கோர்ட்டார் விடுவார்களா? உண்மை நீதிபதி விடமாட்டான். லஞ்சம் வாங்குபவனே அதற்கு ஒருப்படுவான்.

—வ. உ. சி. (3 - 3 - 1928)

(காரைக்குடியில்

என்னுடைய நண்பர்கள் ஏழெட்டுப் பேர்கள் சொல்லி வைத்ததுபோல, தொடர்ந்து அவரவரின் 42வது வயதிலே ஒருவர்பின் ஒருவராக செத்துக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள் 42 வயதில் இறந்து விடுகிறார்கள். நாமும் 42வது வயதில் இறந்துவிடப் போகிருறோம் என்று எண்ணினேன். ஆனால் எனக்கு 43 - 44 ஆகியும்கூட நான் சாகவில்லை. பிறகுதான், நான் பொதுத் தொண்டில் இறங்க ஆரம்பித்தேன்.

—பெரியார்

ஒரு முறை நான் சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆண்டு இறுதி விழாவில் உரையாற்றினேன். இந்தச் செய்தியைத் தினமணி பேப்பரில், “ம. பொ. சி. இறுதி உரையாற்றினர்“ என்று போட்டிருந்தார்கள். இது நடந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால் நான் இன்னும் உரையாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.

—ம. பொ. சி.

சத்தென்னும் செம்பொருளை உன்னுதற்கும் போற்றுதற்கும் உரிய இடமாகக் கோயில்கள் கட்டப்பட்டன. நாளடைவில் அக்கோயில்களிலும் சாதிப்பேய் நுழைந்துவிட்டது. ஒரு கூட்டத்தார் இங்கும், மற்றாெரு கூட்டத்தார் உங்கும், இன்னொரு கூட்டத்தார் அங்கும் நின்று கடவுளை வழிபட வேண்டுமாம். கடவுள் முன்னிலையிலுமா உயர்வு தாழ்வு? கடவுளை மரம், செடி, கொடி, பாம்பு, சிலந்தி, யானை முதலியன பூசித்ததாகப் புராணங்கள் புகல்கின்றன. கடவுளின் உருவங்களின் மீது ஈக்கள் மொய்க்கின்றன. பல்லிகள் ஓடுகின்றன. இவைகட்கெல்லாம் இறைவனைத் தொடும் உரிமையிருக்கும்போது, ஆறறிவுடைய மனிதனுக்கா அவ்வுரிமையில்லை. சாதியார் கொடுமை என்னே! என்னே!

—திரு. வி. க. (7 - 5 - 1927)

(மாயவரம் சமரச சன்மார்க்க மாநாட்டில்)


நம் நாட்டைப் பொறுத்தவரையில் கேட்க வேண்டியவர்கள் கேட்க வேண்டிய முறையில் கேட்டால், ஏழை எளியவர்கள்கூட இயன்ற அளவு தருவார்கள்! ஒன்றுக்குக் கேட்டு வாங்கி, அதை வேரறொன்றுக்குப் பயன்படுத்தி, யாரேனும் அதுபற்றிக் கேட்டால், நீ யார் கேட்பதற்கு என்று சிலர் கூறுவதால்தான், மக்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது.

—அறிஞர் அண்ணா (24 - 3 - 1968)


பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்ற கொள்கையை ஆதரிப்பவன் நான். அதற்கு என்னல் முடிந்ததை நானும் செய்கிறேன். என்னுடைய டிரைவருக்கு மாதம் 550 ரூபாய் ஊதியமாகக் கொடுக்கிறேன். சமையற்காரர்களுக்கு மாதம் 250 ரூபாய் கொடுத்து இலவசச் சாப்பாடும் போடுகிறேன்.

—ஜிதேந்திரா

(இந்தி நடிகர்)

நான் வாழ்ந்து கெட்டவனில்லை ஏனென்றால் நான் எப்போதும் வாழவேயில்லை. ‘சரிதான் போடா‘ என்று எல்லாவற்றையும் தூக்கி எறிபவன். தமிழ் நாட்டிலேயே எல்லாவற்றையும் மறுக்கின்ற ஆள் நான் ஒருவன்தான்.

—கவிஞர் சுரதா (25 - 7 - 1971)

உலகம் எனக்குக் கெடுதல் செய்திருந்த போதிலும், நான் எனக்குச் செய்து கொண்ட கெடுதல் அதைவிடக் கொடியது.

—ஆஸ்கார் ஒயில்டு (1895)

பொது வாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இவை வேண்டியது இல்லை என்பதோடு, இவைகள் உள்ளவர்கள் உத்தியோகத்தில் வெற்றி பெறவும் முடியாது.

—பெரியார்

அரிஜன் என்றால் விஷ்ணுவை நம்புகிறவன் என்று அர்த்தம். நான் விஷ்ணுவையோ, சிவனேயோ நம்புகிறவன் அல்ல. எனவே என்ன அரிஜன் என்று சொல்வது எப்படிப் பொருத்தமாகும்? எனவே, அப்படி சொல்லாதீர்கள்.

—பசவலிங்கப்பா

கடந்த பத்தாண்டுகளாகப் பல்கலைக் கழகங்களும், பொது ஸ்தாபனங்களும் வற்புறுத்தி அழைத்ததற்கிணங்கி யான் அமெரிக்க ஐரோப்பாவில் பத்து மாதகாலம் நீண்ட பயணம் செய்தேன். எனது நீண்ட பயணத்தில் இருநூறு சொற்பொழிவுகள் செய்தேன். எங்கும் பொது மக்களுக்கு இந்தியாவைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை ஆனல் அறிய வேண்டுமென்ற விருப்பமுள்ளது. சர்வதேச அரசியலில் இந்தியா முக்கியமானதாக ஆகிவருகிறது.

—கவி சரோஜினி தேவி (22 - 1 - 1929

(பம்பாயில்)

பெண்கள், தங்களுக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நான்கூட சந்தர்ப்பங்களின் பயனாக உருவானவள்தான்.

—விஜயலட்சுமி பண்டிட் (6 - 5 - 1963)

என் தந்தையின் பேருதவியிராவிட்டால், சிறந்த கவிதைகளைத் தரம் பிரித்து உணரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்காது. நாங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளாக இருந்த போதே எங்களுக்கு அவர் அரும்பாடு பட்டுப் பாடம் கற்றுக் கொடுத்தார். என் தந்தை இல்லையென்றால் நானில்லை என்று நான் பெருமிதத்துடன் கூறுவேன்.

—தொருல தாதத் (வங்காளப் பெண் கவிஞர்)

நமது கலாசாலைகளில் தொழிற்கல்வி கற்பிக்க வேணடும். பணமுள்ளவர்கள் தேசசரித்திரம் பூகோள சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் முதலியவைகளில் தேர்ச்சி பெறுவதற்கு வேண்டிய கல்வியைக் கற்கலாம். சாதாரண மாணவர்கள் எல்லோரும் நன்கு எழுதவும் பேசவும், அவசியமானால் உபநியாசம் செய்யவும் வேண்டிய கல்வியைக் கற்பதோடு, தொழிற் கல்வியையும் கற்கவேண்டும். தந்தி வாசிக்கும் அளவு ஆங்கிலமும் கற்றுக்கொள்ள, விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றை மாணவர்கட்குப் போதிக்கவேண்டும். நன்செய், தோட்டம் ஆகியவற்றில் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தல் அவசியமாகும்.

வ. உ. சி. (3 - 3 - 1928)

(காரைக்குடியில்)

என்னுடைய அகவாழ்வும், புறவாழ்வும் என்னுடைய இனத்தாரின் இறந்தவரும், இருப்பவரும் உழைப்பினலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் நாள்தோறும் உணர்கிறேன். பிறர் உழைப்பால் நான் எவ்வளவு நன்மையைப் பெற்றாேனோ, அத்துணை நன்மையை நான் பிறருக்குச் செய்ய எவ்வளவு உழைக்க வேண்டும்.

—ஐன்ஸ்டின்

தன் குழந்தைகள் மீது அக்கறை உள்ள யாரும் அவர்களை அரசியலில் விடமாட்டார்கள். அதனால் தான் என் மகன்களை நான் அரசியலில் நெருங்க விடவில்லை.

—பிரதமர் இந்திரா காந்தி

தொண்ணூறு சதவிகித சிந்தனையின் ஆற்றல், சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துக் கொண்டே இருக்கிறான்-சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.

—விவேகானந்தர்

அத்தந்த இனத்தவர்களை அந்தந்த இனத்தவர்கள் பாராட்ட வேண்டும். நடிகரை நடிகர் பாராட்ட வேண்டும். இசையமைப்பாளரை இசையமைப்பாளர் பாராட்ட வேண்டும். அதுதான் முறை.

— சிவாஜி கணேசன்

மற்ற மாகாணங்களைப் பார்க்கிலும் வங்காளப் பெண் மக்களின் நிலைமை மிகவும் தாழ்மையாகவே இருக்கின்றது. கல்கத்தாவில் ஒரு பெண் நீதிபதியாவது, கெளரவ மாஜிஸ்திரேட்டாவது கிடையாது.சிறுவர்சிறுமியர் நீதிமன்றத்திற்கு, அவசியம் பெண்களையே மாஜிஸ்திரேட்டுகளாக நியமித்தல் வேண்டும். படுதா பெண்கள், தாராளமாய்ப் பாங்கிகளில் பொருள் போட்டு, வரவு செலவு செய்யப் பெண்மக்கட்காக பிரத்தியேகமாக ஒரு பாங்கி இருத்தல் வேண்டும்.

—செல்வி கார்னீலியா சொராப்ஜி (11-7-1929)

(கல்கத்தாவில்)

பெரியவர்கள் எல்லாம் எழுதியிருக்கிறார்கள். அவற்றையே வாங்கிப் படிக்க மாட்டேன் என்கிறார்கள். எனக்கு என்னமோ புத்தகம் போட வேண்டும் என்றே தோன்றவில்லை ஆசைக்காகத்தான் கவிதை எழுதுகிறேன்.

—திருமதி செளந்தரா கைலாசம் (27.1.1912)

இந்தியா விடுதலை பெற்ற பிறகு நம் கல்விமுறையை அடியோடு மாற்றாமல் போனது நாம் செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்று. கல்விப் பயிற்சி என்பது வகுப்பு அறையில் பெறும் பயிற்சியுடன் நின்று விடாது. வாழ் நாட்கள் பூராவும் கல்வி கற்க வேண்டும். நூல்களிலிருந்து மத்திரமின்றி நம்மைச் சுற்றிலும் வெளி நாடுகளிலும் நடக்கும் சம்பவங்களிலிருந்தும் விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

—பிரதமர் இந்திராகாந்தி (5-1-1973)

என் குழந்தைகளின் நலனுக்காகவே கலைத்துறைக்கு வந்தவள் நான். என்னையும் என் குழந்தைகளையும் பெருமைப்படுத்தியது கலை உலகம். ஆக, தாயாக இருப்பது, கலைஉலகில் புகழ் பெறுவது இரண்டுமே எனக்குப் பெருமைதான்.

—நடிகை செளகார் ஜானகி

ஒரு பெண்ணுக்கு மிகவும் அழகான பொருள் புடவைதான். அதிக அளவு கெளரவமான பொருளும் அதுதான்.

—மரியா தெரேசா (15-12-1964)

(புராதன போர்பன் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி)

நாய்க்குச் சுவை உணர்ச்சியும் மோப்ப சக்தியும் அதிகம். யாராவது கோபித்தவுடன் நாய் அவர்கள் கையை நக்கும். இது, தங்களைச் சமாதானப் படுத்துவதற்காக என்று சிலர் நினைக்கிருர்கள். இது சரியல்ல. இன்னும் கோபம் உங்களிடம் இருக்கிறதா என்று சுவையின் மூலம் அறிந்து கொள்ளவே இப்படிச் செய்கிறது.

—ஸி. பி. ட்ரேக்

வாழ்க்கையில் ஒருவெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும். அதைச் சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோட்சத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும். அந்த மோட்சத்தைவிட இது மேலானது.

—புதுமைப் பித்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=சொன்னார்கள்/பக்கம்_31-40&oldid=1009812" இலிருந்து மீள்விக்கப்பட்டது