என் தமிழ்ப்பணி/மனமும் இனமும்

விக்கிமூலம் இலிருந்து
11. மனமும் இனமும்

செயல், புறத்தே நிகழ்வது; உணர்வு அகத்தே எழுவது , செயல் புலப்படக்கூடியது: உணர்வு புலப்பட மாட்டாதது. புறத்தே நிகழும் செயல் அகத்தே எழும் உணர்வை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதுவே இயற்கையுமாகும். உணர்வு ஊற்றெடுக்கும் அகமும், அவ்வுணர்வை வெளிப்படுத்தும் நாவும், அதன் வழிச் செயல்படும் மெய்யும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவாகும் இம்மூன்று நிலையாலும், மனிதர் தூய்மையுடையராதல் வேண்டும். இதை வலியுறுத்தவே, உண்மை, வாய்மை, மெய்ம்மை என ஒரே பொருள் குறிக்க, மூன்று சொற்களைப் பெற்றுளது தமிழ் மொழி, உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்வுத் தூய்மையை உணர்த்துவது உண்மை. வாயடியாக எழும் சொல்லின் தூய்மையை உணர்த்துவது வாய்மை. மெய் அடியாக எழும் செயல் தூய்மையை உணர்த்துவது மெய்ம்மை.

சொல்லும் செயலும், உணர்வை அடிப்படையாகக் கொண்டே எழும். உணர்வின்றிச் சொல் எழாது. உணர்வின்றிச் செயல் நிகழாது. உணர்வு உண்டாகிவிடின், அது தொடர்பாகச் சொல் எழுவதையோ, செயல் நிகழ்வதையோ தடுத்து நிறுத்த இயலாது. அவைதாமாகவே எழும்: நிகழும், ஆகவேதான் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆகிய செயல் பற்றியதே அறம் ஆயினும், அவற்றிற்கு அடிப்படை அறவுணர்வே என்பதால், “மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறம்” என அறத்தை மனத்தின் தொழிலாகக் கூறினார் வள்ளுவர். தாம் கூற விரும்பியனவற்றை வள்ளுவர் குறளினும் சுருங்கிய வாய்பாட்டால் கூறுவதையே வழக்கமாகக் கொண்ட ஒளவையார், “அறம் செய்” என்பதே சுருங்கிய வாய்பாடாகவும், அது கொள்ளாது. அறவழி வாழ எண்ணிவிட்டால் அறவழி வாழ்ந்து விடுவர் என்ற துணிவினால் “அறஞ் செய விரும்பு” என மேலும் ஒரு சொல் விரிந்த தொடரை மேற் கொண்டுள்ளார்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்” என்ற வள்ளுவர் வாய் மொழியும், “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்ற மக்கள் வாய்மொழியும் காண்க.

மனிதனை மதிப்பிடத் துணைபுரிவன, அவன் செய்யும் செயலும், உரைக்கும் சொல்லுமே ஆம். “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்பது திருக்குறள். “மனத்தது மாசாக மாண்டாரின் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்” என்பதற்கேற்ப உணர்வு ஒன்றாக, சொல்லும் செயலும் அவ்வுணர்வுக்கு, மாறுபட்டனவாக வாழும் வன்கணாளரும் உலகில் உலவுகின்றனர் என்பது உண்மையே என்றாலும், வேடமிட்டு நடிக்கும் அந்நாடகம் விரைவில் கலைந்து போகும் ஆதலின், ஒருவன் நல்லவன், நல்லவனல்லன் என்பதை அவனாற்றும் செயல் கொண்டே உலகம் மதிப்பிடும். அச்செயல், அவன் உணர்வையே அடிப்படையாகக் கொண்டு நிகழும் ஆதலின் மனிதன் அவன் உள்ளத்து உணர்வுக்கு ஏற்பவே மதிப்பிடப்படுகிறான் என்பதே உண்மை.

அந்த உணர்வு அவன் மனத்தே எழுவது; நல்லுணர்வோ தீயவுணர்வோ, மனம் எண்ணிய வழி எழுந்துவிடும்; நல்லுணர்வுடைய மனம், விரும்பிவிட்டால் அந்நல்லுணர்வைக் கைவிட்டுத் தீயவுணர்வைக் கக்கலாம்; அது போலவே, தீயவுணர்வு உடையதாக இருந்த மனம், நினைத்த அக்கணமே அத்தீயவுணர்வைக் கைவிட்டு நல்லுணர்வை வெளிப்படுத்தலாம். ஆக, அது; அவன் அகத்தே அடங்கிக் கிடக்கும் மனத்தின் நிலைக்கேற்ப உண்டாகிவிடும். ஆகவே, அவ்விரு நிலையும் அவ்விடத்திலேயே அடங்கி இருப்பன ஆகும்.

ஆனால், மக்களினத்தோடு கொள்ளும் தொடர்பால் உண்டாகும் விளைவு அத்தகையதன்று; ஒருவன் உணர்வாலும், உரையாலும், உடல் ஆற்றும் செயலாலும் எவ்வளவுதான் தூய்மையுடையவனாக இருந்தாலும், அத்தாய்மை அவன் சார்ந்து நிற்கும் இனத்தாரின் இயல்புக்கு ஏற்ப வேறுபட்டே தீரும். சார்ந்து நிற்பது நல்லினமாயின் அத்தூய்மை மேலும் வலுப்பெற்றுத் திகழும். சிற்றினத்தோடு சேர்ந்துவிடுவனாயின், அத்தாய்மை மெல்ல மெல்ல வலிவிழந்து, இறுதியில் அறவே அழிந்துபோக, தூய்மைக்கு மாறான நிலையே அவன்பால் குடி புகுந்துவிடும். சிற்றினத்தோடு சேர்ந்த பின்னரும் தூய்மையாக இருக்க இயலாது; இருக்க முயலலாம்; ஒரு சில காலம் இருக்கவும் செய்யலாம். தூய்மை கெடாமல் வாழும் அவ்வொரு சில கால வாழ்வையும், உலகம் ஐயப்பட்டே திரும்.

பனையடியில் அமர்ந்து பாலே பருகினாலும், உண்ணுவது பால் என ஏற்றுக் கொள்ளாது உலகம். மேலும், பனை அடியையே வாழ்விடமாகக் கொண்டு விட்டவனால், நீண்ட நாளைக்குப் பாலையே இயலாது. பால், பனங்கள்ளாக மாற நெடுங்காளம் ஆகாது. காலம் சிறிது ஆகும் ஆயிலும் பால்லாங் கள்ளாக மாறியே தீரும். ஆகவே, ஒருவன் உள்ளத்தால் எவ்வளவுதான் தூய்மையுடையவனாக இருப்பினும், அத்தூய்மை கெடாது நிற்க, அவ்வுணர்வுத் தூய்மை மட்டும் போதாது. அவன் சார்ந்த நிற்கும் இனமும் தூய்மையுடையதாதல் வேண்டும்.

ஆகவே ஒருவன் நல்லவன். நல்லவன் அல்லன் என்பது அவன் சார்ந்து நிற்கும் இனத்தின் இயல்புக்கு ஏற்பவே மதிப்பிடப்படும். “உன் நண்பனை அடையாளம் காட்டு: நீ எத்தகையவன் என்பதைக் கூறகிறேன்” என்ற பெரியார் வாக்கும் இதையே வலியுறுத்துவது காண்க. சார்ந்து நிற்கும் இனம் நல்லினமாயின், அவனும் நல்லவனாவன். அது சிற்றினமாயின் அவனும் தீயோனாவன். -

ஒர் உணர்வை இழந்தால் அதை மீண்டும் பெற்றுக் கொள்ள இயலும், அது அவன் மனத்தகத்தே இருப்பதால். ஆனால், ஒர் இனத்தோடு சேர்ந்து, அவர் இயல்புகளுக்கு அடிமையாகி விட்டவனால், அவ்வியல்பிலிருந்து விடுபட இயலாது. ஆகவே இனத்தைத் தேர்ந்து கொள்வதில் விழிப்பாய் இருத்தல் வேண்டும்.

“மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல்.”


என்ற குறளில், இத்துனைப் பொருளும் அடங்கி இருப்பது அறிக.