தாவிப் பாயும் தங்கக் குதிரை/16

விக்கிமூலம் இலிருந்து


மேகமாலை திருமணம்

அன்றே அவர் அவனுக்குத் தங்கக் குதிரையைக் கொடுத்தார். அதற்கு மறுநாளே தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

திருமணம் முடிந்தவுடன் அவன் சில நாட்கள் விருந்துண்பதற்காகத் தங்கினான். பிறகு தன் நாட்டுக்குப் புறப்பட்டான்.

தங்கக் குதிரையைப் பிரிவதுகூட அரசருக்குப் பெரிதாகப்படவில்லை. தன் மகளைப் பிரிவதுதான் பெரும் துயரமாக இருந்தது.

“அப்பா, நீங்கள் கவலைப்பட வேண்டாம் நாங்கள் அடிக்கடி உங்களை வந்து பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று மேகமாலை கூறினாள்.

கடைசியில் அவர்கள் ஒருநாள் புறப்பட்டு விட்டார்கள். வெற்றிவேலன் தன் மரக்கலத்தைப் புறப்படுவதற்குத் தயாரித்தான். அதைப் பார்த்த மேகமாலை, “மரக்கலத்தில் உங்கள் வீரர்கள் வரட்டும். நாம் தங்கக் குதிரையிலேயே செல்வோம்” என்றாள்.

“எப்படி?” என்று கேட்டான் வெற்றிவேலன்.

“இப்படித்தான்!” என்று சொல்லி அவள் சில மந்திரங்களைத் தங்கக் குதிரையின் காதில் கூறினாள். உடனே அது தன் இறக்கைகளை அசைத்தது. அதற்கு மூச்சு வந்து விட்டது. அரசரிடம் விடைபெற்றுக் கொண்டு வெற்றிவேலனும் மேகமாலையும் தங்கக் குதிரையில் ஏறி உட்கார்ந்தார்கள். அது தாவிப் பாய்ந்து வானில் ஏறி மேகமண்டலங்களின் வழியாகச் சென்றது. வெற்றிவேலன் நாட்டை நோக்கிப் பறந்தது.

வெற்றிவேலனின் சிற்றப்பன் அன்று அரண்மனை உப்பரிகையின்மேல் காற்று வாங்கிக் கொண்டு நின்றுகொண்டிருந்தான். அப்போது வானில் ஒரு மின்னல் ஒளி தோன்றியது. நிமிர்ந்து பார்த்தான். தாவிப் பாய்ந்து தங்கக் குதிரை பறந்து வருவதைக் கண்டான். அதன்மீது ஓர் இளவரசியுடன் தன் அண்ணன் மகன் ஏறிவருவதைக் கண்டான்.

எதிர்பாராமல் அவன் திடீரென்று கண்ட காட்சி அவன் மூளையைச் சிதறடித்து விட்டது. “ஐயோ! இனி நான் பிழைக்கமாட்டேன்!” என்று கூறியபடி கீழே தடாலென்று வீழ்ந்தான். அவ்வளவுதான்! அவன் மூச்சு நின்றுவிட்டது.

வெற்றிவேலன் அந்த நாட்டை மேக மாலையின் உதவியுடன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். தாவிப்பாயும் தங்கக் குதிரையில் ஏறி மேகமாலை அடிக்கடி தேன்கதலி நாட்டுக்குச் சென்று தன் தந்தையையும் தம்பியையும் பார்த்து வந்தாள். எல்லோரும் இன்பமாக இருந்தனர்.



எங்கும் இன்பம்
    தங்கவே
இனிய கதையும்
    முடிந்ததே!


தமிழாலயம் வெளியீடுகள்


நாரா நாச்சியப்பன் எழுதியவை


 1.  நாச்சியப்பன் பாடல்கள் I 15-00
 2.  நாச்சியப்பன் பாடல்கள் II 15-00
 3.  மூன்று திங்களில் அச்சுத்தொழில் 10-00
 4.  புதுமுறை பஞ்சதந்திரக் கதைகள் 15-00
 5.  நாயகப் பெருமான்  4-00
 6.  ஏழாவது வாசல்  5-00
 7.  அசோகர் கதைகள்  2-00
 8.  பறவை தந்த பரிசு  4-00
 9.  மாயத்தை வென்ற மாணவன்  5-00
10.  அப்பந் தின்ற முயல்  5-00
11.  தாவிப்பாயும் தங்கக் குதிரை  4-00
12.  பள்ளிக்குச் சென்ற சிட்டுக் குருவிகள்  5-00
13.  குயில் ஒரு குற்றவாளி  5-00
14.  பாடுபாப்பா  4-00
15.  நான்கு பார்வைகளில் பாரதிதாசன்  7-00
16.  பாசமுள்ள நாய்க்குட்டி  5-00

தமிழாலயம்: 137, ஜானிஜான் கான் தெரு.

சென்னை.600 014.