அட்லாண்டிக் பெருங்கடல்/அட்லாண்டிக் போர்
கப்பல் போர்
அட்லாண்டிக் பெருங்கடல் இரண்டாம் உலகப் போரில் போர்க்களமாக அமைந்தது. அட்லாண்டிக் போர் என்பது இரண்டாம் உலகப் போரின் தொடர்பாக 1939-ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை நடை பெற்ற போராகும். இது உண்மையில் கப்பல் போரே.
நிலைகள்
இப்போர் எட்டு நிலைகளில் நடைபெற்ற போர். அந்நிலைகள் யாவை என்பதை இனிக் காண்போம்.
முதல் நிலை: இது 1939 செப்டம்பர் 13 முதல் 1940 ஜூன் வரை நீடித்தது. பிரிட்டிஷ் கப்பல்களும் ஜெர்மன் கப்பல்களும் குறைவாகவே மூழ்கின.
இரண்டாம் நிலை: இது 1940 ஜூன் முதல் 1941 மார்ச் வரை நீடித்தது. இப்பொழுது நிலை மோசமாயிற்று. ஜெர்மனியின் U-கப்பல்கள் எண்ணிக்கையில் அதிகமாகத் தாக்கின. பிரிட்டனிடமோ பாதுகாப்புக் கப்பல்கள் குறைவாக இருந்தன. தவிர, ஜெர்மனி நீர் மூழ்கிக் கப்பல்களோடு நீண்ட எல்லை விமானங்களையும் பயன்படுத்திற்று. பிரிட்டன் விமானப் பாதுகாப்பையும் உருவாக் கிற்று. வாணிபக் கப்பல்கள் அதிகம் அழிந்தன. ஜெர்மன் கப்பல் ஒன்றுகூட அழியவில்லை.
மூன்றாம் நிலை: இது 1941- ஆம் ஆண்டு வரை நீடித்தது. இப்பொழுது ஜெர்மன் கப்பல்களும் மூழ்கின.
நான்காம் நிலை: இது 1942 ஜனவரி முதல் ஜூலை வரை நீடித்தது. இப்பொழுது அமெரிக்கா போரில் கலந்து கொண்டது. எதிர்ப்பு நாடுகளுக்குக் கப்பல் அழிவுகள் அதிகம் ஏற்பட்டன.
ஐந்தாம் நிலை: இது 1942 ஆகஸ்டு முதல் 1943 மே வரை நீடித்தது. எதிர்ப்பு நாடுகளுக்குக் கப்பல் அழிவுகள் ஏற்பட்டன. ஜெர்மன் கப்பல்கள் அதிகம் அழிந்தன. இப்பொழுது எதிர்ப்பு நாடுகளுக்குச் சாதக நிலை உருவாயிற்று.
ஆறாம் நிலை: இது 1943 ஜூன் முதல் ஆகஸ்டு வரை நீடித்தது. பாதுகாப்புக் கலங்கள் அதிகம் பயன்பட்டன. எதிர்ப்பு நாடுகளின் கப்பல்கள் மூழ்குவது குறையத் தொடங்கிற்று. பகைவர்களின் கப்பல்கள் மிகக் கடுமையாக அழிக்கப்பட்டன. இந்நிலையில்தான் திருப்பம் ஏற்பட்டது. ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பல்கள் மூழ்கின. தோல்வியின் சாயல் ஜெர்மானியரின் மீது விழத் தொடங்கியது.
ஏழாம் நிலை : இதில் இத்தாலி சரண் புகுந்தது. மையத் தரைக்கடல் வழி மீண்டும் திறக்கப்பட்டது.வட அட்லாண்டிக்கில் ஜெர்மன் U-கப்பல்கள் அதிகம் மூழ்கின. ஜெர்மனிக்குத் தோல்வி மேலும் மேலும் ஏற்படும் சூழ் நிலைகள் உருவாயின. ஜெர்மனி புதுமுறைகளைக் கையாண்டு போரில் வெற்றி காணத் திட்டமிட்டது.
எட்டாம் நிலை: இது போரின் முடிவு நிலையாகும். இதில் ஜெர்மன் தோற்றது; பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகள் வெற்றி பெற்றன. ஜெர்மனியின் கடல் ஆதிக்கப் பேராசைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
ஜெர்மானியர் பெரிதும் தங்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை நம்பி இருந்தனர். ஆனால், பலத்த விமானத் தாக்குதலை அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை; தோல்வியை அரவணைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது; ஆக, 1939-இல் தொடங்கிய அட்லாண்டிக் போர், 1945-இல் கடும் போராட்ட முறைகளுக்கிடையே ஒருவாறு முடிந்தது. பிரிட்டன் வெற்றி வாகை சூடியது; ஜெர்மன் தோற்றது.
போரின் தன்மை
உறுதியோடும் திறமையோடும் ஓயாமல் ஒழியாமல் இரு பக்கமும் போர் நீண்ட காலம் நடைபெற்றது. ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பல்கள் 1939-45- ஆம் ஆண்டுகளுக்கிடையில் பிரிட்டிஷ் தீவுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைந்துள்ள செய்தித் தொடர்புகளைத் துண்டிக்க முயன்றன. இத்தொடர்புகள் பிரிட்டனுக்கு உயிர்ப்பானவை. இம் முயற்சியைக் குலைக்க, பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகள் ஜெர்மனியோடு போரிட்டன.
நாடுகள்
இப்போரில் வலியத் தாக்கிய நாடு ஜெர்மனி ஆகும். ஜெர்மனிக்குத் துணையாக இத்தாலியும் நின்றது. எதிர்த்த நாடு பிரிட்டன் ஆகும். பிரிட்டனுக்குத் துணையாக அமெரிக்கா நின்றது. போர் இந்தியப் பெருங்கடலிலும், அட்லாண்டிக் பெருங்கடலிலும் பரவலாக நடைபெற்றது.
போர் முறைகள்
பிரிட்டன் கன்வாய் முறையைத் (convoy-system) தொடக்கத்திலிருந்தே பின்பற்றியது. கன்வாய் என்பது பாதுகாப்புடன் செல்லும் கப்பல் கூட்டத்தைக் குறிப்பதாகும். ஒரு கப்பல் கூட்டத்தில் 40 கப்பல்கள் இருக்கும். அவை வரிசையாக ஒன்றன் பின் ஒன்று செல்லும். இக்கப்பல்கள் தாக்குவதற்குப் பயன்பட்டன.
ஜெர்மனி உல்ப் பேக் முறையைக் (wolf pack system) கையாண்டது. இதில் பல U-கப்பல்கள் குறிப்பிட்ட தோற்றத்தில் அடங்கி இருக்கும். இக்கப்பல்கள் இரவில் தாக்கும். இம்முறையைத் தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல.
தவிர, விமானத் தாக்குதலும் இரு பக்கங்களிலும் சரமாரியாக நடைபெற்றது. போரின் இறுதிக் காலத்தில் நட்பு நாடுகளின் விமானங்கள் கடலில் இருந்தும், கரையிலிருந்தும் வலுவாகத் தாக்கின. இதைத் தாக்குப்பிடிக்க இயலாமல் இறுதியாக ஜெர்மனி தோற்றது.
.