அட்லாண்டிக் பெருங்கடல்/அட்லாண்டிக் தந்தி

விக்கிமூலம் இலிருந்து

6. அட்லாண்டிக் தந்தி

தந்தி முறையைக் கண்டறிந்தவர் மார்ஸ் என்னும் விஞ்ஞானி என்பதை நாம் நன்கறிவோம். அட்லாண்டிக் பெருங்கடல் வழியாகத் தந்திச் செய்தி அனுப்பலாம் என்னும் கருத்தை இவர் முதன் முதலில் 1843இல் கூறினார்.

முதல் அட்லாண்டிக் தந்தி 1858-இல் அயர்லாந்து, நியூபவுண்ட்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கிடையே இடப்பட்டது. அதே ஆண்டில் ஆகஸ்ட் 13 ஆம் நாள் புதிய உலகிற்கும் பழைய உலகிற்கும் இடையே முதல் தொலைவரைவுச் செய்தித் தொடர்பு ஏற்பட்டது. இது அவ்வளவு அமைதி தருவதாய் இல்லை. மற்றொரு கம்பி 1865-இல் கிடத்தப்பட்டது. இதுவும் முறிந்தது. இறுதியாகக் கம்பியைக் கிடத்து வதில் முதல் வெற்றி 1866-இல் கிட்டியது; வாணிப நோக்கில் சிறப்பு உண்டாயிற்று.

இதைத் தொடர்ந்து நான்காவது கம்பியைப் பிரிட்டன் 1873-இல் கிடத்தியது. 1879- இல் பிரான்சு ஒரு கம்பியைப் போட்டது. இதைப் பின்பற்றி ஜெர்மனி 1885 இல் கம்பி ஒன்றைப் போட்டது.

இதன் விளைவாகக் கம்பிகளைச் செய்வதிலும், இடுவதிலும் திருத்தங்கள் ஏற்படலாயின. கடல் வழித் தந்திப் பணியும் வளரலாயிற்று.

1871-இல் இரட்டை முறைத் தந்தி, செயல் நிலையில் நடைபெற்றது. இதில் இரு திசைகளிலும்  செய்திகள் அனுப்பப்பட்டன. ஒரு நிமிடத்திற்கு 2,500 சொற்கள் அனுப்பப்பட்டன.

ஒரே சமயத்தில் பல செய்திகளை விரைவாகக் கடத்தும் முதல் கம்பி 1931-இல், அசோர்ஸ் வழியாக இங்கிலாந்துக்கும் நியூபவுண்ட்லாந்துக்கும் இடையே போடப்பட்டது.

1946-இல் 21 கம்பிகள் அட்லாண்டிக்கில் போடப்பட்டு இணைக்கப்பட்டன; செயல்படத் தொடங்கின.

தற்பொழுது ஆறு கம்பிகளைத் தவிர மற்ற எல்லாம் உயர்ந்த ஒரு நீர் மூழ்கு மலைத் தொடரில் போடப்பட்டுள்ளன. இத்தொடர் ஒரு சமவெளியே. இதற்குத் தொலைவரைச் சமவெளி என்று பெயர்.

முதல் கம்பியை இடும்பொழுதும் இச்சமவெளி கண்டு பிடிக்கப்பட்டது. இது தகுந்த மட்டமுடையது; 2 மைல் ஆழமுள்ளது. இதில் குழைவான சேறு உள்ளது. இச்சேற்றில் கம்பிகள் பதிந்து கிடக்கின்றன; பழுதுபார்க்க இங்கிருந்து எடுப்பது எளிது. இது குறுகிய எடைக் குறைவான கம்பிகளைப் பயன்படுத்த ஏதுவாக உள்ளது.

1929 அக்டோபர் 18- இல் கடலுக்குக்கீழ் ஏற்பட்ட நிலநடுக்கம் முக்கிய 12 கம்பிகளைத் துண்டித்தது. இதனால், செய்திப் போக்குவரத்து ஆறு வாரங்கள் வரை நடைபெற முடியவில்லை.

.