உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தரகாண்டம்/16

விக்கிமூலம் இலிருந்து

16

“எம்புள்ளிய எப்படின்னாலும் காப்பாத்தச் சொல்லுங்க தாயி, அவெ அப்படியெல்லாம் நடக்கிறவனில்ல தாயி! காடுகழனி வெள்ளாம இல்லாம, இங்ஙன பஞ்சம் புழைக்க வந்து, பாடுபடுறம். என்னமோ படம் வரயிவா. கடயில வேலை செய்திட்டிருந்தவனக் கூட்டிட்டுப் போயி, படம் நல்லா வரயிறான்னு, வச்சிட்டாங்க. கட்சில சேத்திட்டாங்க. அக்கா தங்கச்சின்னாக்கூட எட்ட இருந்துதா பேசுவா தாயி. அவம் போயி, ரோட்டுல போற பொண்ணப் புடிச்சி இழுத்தான்னு புடிச்சிட்டுப் போயிட்டுது தாயி!”

வீடு துடைத்துக் கொண்டிருக்கும் அவள் திடுக்கிட்டாற்போல் பார்க்கிறாள். அவளுடன் வழுக்கை மண்டையும், குங்குமம் திருநீறுப் பொட்டுமாக ஒரு பெரியவர் நிற்கிறார். எங்கோ பார்த்த நினைவு.

இவள் நிமிரும் போது, அந்தப் பஞ்சைத்தாய், இவள் காலடியில் விழுந்து கண்ணீரால் நனைக்கிறாள்.

“இந்தாம்மா எழுந்திரு...” என்று எழுப்புகிறாள். சட்டென்று அந்தப் பெரியவரின் நினைவு வருகிறது. இவள் பணம் வாங்கச் செல்லும் வங்கியில் இவர் பழக்கம். ராமலிங்கம் என்று பெயர். பென்சன் வாங்கிக் கொண்டு விட்டார். ஒரே பையன் கிறிஸ்தவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு மதம் மாறிப் போனான்.

“...வாங்கையா எங்கே இம்புட்டுத் தூரம்? எல்லாம் நல்லாருக்கீங்களா?...”

மடமடவென்று வாளியையும் சுருணையையும் பின் பக்கம் கொண்டு வைத்துக் கைகழுவிக் கொண்டு வருகிறாள்.

“இந்த ஏழைப் பெண்ணுக்கு ஒரு வழி செய்யணும். உங்களால் தான் முடியும். இந்த அரசியல் கட்சிக்காரங்க என்ன அக்கிரமம் செய்தாலும் கேட்பார் கேள்வி இல்லேன்னு ஆயிடிச்சி. இந்தம்மா காஞ்சிபுரத்திலேந்து அவல் கொண்டு வந்து தெருத் தெருவா விப்ப. இருக்கிறது அங்கதா. வள்ளுவர் குருகுலத்துல ஒம்பது படிச்சிட்டிருந்தப்ப, ஒருநா வாத்தியார் அடிச்சாரு. காது சரியா கேக்கலன்னு சொல்றா. என்ன விசயம்னு புரியல. படிப்பு நின்னு போச்சு. ஒரு கடையில, இங்கதா மளிகைக் கடையில வேலைக்கு வச்சா. காது சரியா கேக்கலன்னு சொல்ல முடியாது. கொஞ்சம் மந்தமா இருப்பான். ஒருதரத்துக்கு ரெண்டு தரம் சொல்லணும். முதலாளி வீட்டில மாடில, கடைப்பையன்கள் அஞ்சாறு பேர்- தட்டிமாடி அங்கேயே படுத்துப்பாங்க. பின் பக்கம் வெளில வெறகு, மட்டை, அது இது வச்சி பொங்கித்திம்பாங்க. ஒரு நேரம் அப்ப ஒருநா, ஒரு கரியை வச்சிட்டு, பின் பக்க சுவரில, கிணறு, தென்னமரம், சூரியன்னு வரஞ்சிருக்கிறான். மத்தியானம் குளிச்சிட்டு, முதலாளிக்கு வீட்டிலேந்து சோறு கொண்டு போகணும். கடைக்கும் வூட்டுக்கும் சைகிள்ல போனா, பத்து நிமிசம் ஆகும். ரயில் கேட்டு மூடிட்டா, ரொம்ப நேரமாயிரும். இவன் பின்னாடி வெள்ளயடிச்ச சுவரப் பாழு பண்ணிருக்கறத பாத்து, செவிட்டுப்பயல, அவருக்கு சோத்து நேரம் தப்பினா தாங்காது, சக்கர நோயிக்காரரு என்று செமையாக அடித்து விட்டாள். அழுது கொண்டே பையன் முதலாளியிடம் நேரமானதைச் சொல்லி மன்னிப்புக் கேட்டிருக்கிறான்.

இவனுக்குப் படுக்கை, பூட்டிய கதவின் பக்கம் கடையில்தான். இரண்டிரண்டு பேராக இரவு காவல். இவன் காவலிருக்கவில்லை. பஸ் ஏறி ஊருக்குப் போய்விட்டான். அவள் அம்மா திட்டி, அவல சுமந்து வருகையில் இவனைக் கூட்டி வந்து மன்னிப்புக் கேட்க வைத்தாள். “டேய், நீ நல்லா வரையிறனு ஏன் சொல்லல? உனக்கு இனிமே வரையிற வேலதா. உனக்கு வர்ணம் பிருஷ் எல்லாம் வாங்கித் தாரேன்! இந்தக் கடை வாணாம்!” என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அப்போது தேர்தல் வர இருந்தது. அவர் அரசியல் கட்சியின் பிரதான ஆதரவாளர். ஒவ்வொரு தெருவிலும் கட்சிச் சின்னங்கள், தலைவர் உருவம், சுலோகங்கள் எழுதுவது வேலையாயிற்று. பிடித்த வேலை, சம்பளம், மற்றவர் குடித்தாலும், பீடி சிகரெட் புகைத்தாலும் இவன் ஒழுக்கமாக இருந்தான். கட்சியில் இளைஞர் அணித் தலைவனாக இவள் பெயரன் நாகமணிதான் கட்சியை இளைஞர் அனைவருக்கும் உரியதாக ஆக்கினான்.

“அம்மா, இவுனப்போல வரையிறவனுக்கெல்லாம் சாராயம், பிரியாணி, இதெல்லாம் தா கொடுப்பாங்களாம். இவெ குடிக்கமாட்டா. இவுங்கப்பெ குடிச்சிக் குடிச்சிப் பாழாயிதா, நா ரெண்டு பொட்டபுள்ளகளயும் ஆத்தாளயும் கூட்டிட்டு இங்கு வந்து சந்தியில நிக்கிற. அந்த கடக்கார சாமி ரொம்ப நல்லவரு, அவுரு இவனுக்கு சம்பளமா குடுத்திடுவாரு. சாராயத்த வாங்கி ஊத்தி அடுத்த கட்சிக்காரனுவ இவனப்போல பயங்களக் கூட்டிட்டுப் போவாங்களாம். இவன ஒருக்க ராவுல போட்டு அடிச்சிட்டானுவ. மேலே பானர் எழுதிட்டிருந்தானா... எம்புட்ட நல்லா வரயிறா! தலவரு, அண்ணா படம் அச்சா வரஞ்சிருந்தா. அடிச்சி கைய ஒடச்சிட்டாங்க. சாமி, கச்சி வாணாம் அவனுக்கு கட வேலயே போதும்னு அழுத. அவருதான் புத்தூரு கட்டுப் போட கூட்டிட்டுப் போகச் சொல்லிப் பணம் குடுத்தாரு. இப்ப ஒண்ணில. பல்லாவரம் திடல்ல பெரி...ய கூட்டம். தோரணம் கட்டி, மைக்கு செட்டு போட்டு அட்டை வச்சி ஏற்பாடு பண்ண கூட்டியிருக்காங்க. அஞ்சுபேரு, ஆட்டோல பிரியாணி பொட்டலம் பாட்டில் எல்லாம் எடுத்திட்டுப் போனாங்களாம். நம்மபய்ய உள்ள, குந்திட்டிருந்திருக்கா பச்சை-சிவப்பு வெளக்கு வருமே அங்க சிவப்பு வரப்ப, வண்டியெல்லாம் நிப்பாட்டிட்டா, அப்ப அந்தப் பொண்ணு ஓரமாப் போயிட்டிருந்திச்சா நின்னிச்சா தெரி...ல... மோட்டார் பைக்கில, இளைஞர் அணித்தலவர் நின்னாருங்கறாங்க. சட்டுனு வண்டி கிளம்பறச்சே, அந்தப் பொண்ணக்கையப் புடிச்சி, ஓகோகோன்னு சத்தம் போட்டு இழுத்தாரு. அது வரல. இழுத்திட்டுப் போகுமுன்ன அது கீழ வுழ, பின்னாடி வந்த வண்டி சக்கரத்துல அடிபட்டிச்சின்னு பாத்தவுங்க சொல்றாங்க; என்ன நடந்திச்சோ ஆண்டவனுக்குத்தா வெளிச்சம். ஆட்டோவும் சாஞ்சிடிச்சி. அல்லாரும் ஓடிட்டாங்க. எம்பய்யனும், இன்னொரு பய, அவன் குடிப்பான்னு சொல்லுவா. ரெண்டு பேரையும் போலீசு புடிச்சி கொலக்கேசு போட்டிருக்கு, தாயி!”

அவள் கதறலில் உடலும் உள்ளமும் மட்டும் குலுங்கவில்லை. பூமா தேவியே குலுங்குவது போல் இருக்கிறது. பூமாதேவி குலுங்கிக் குமுறுகிறாள். ‘நா இன்னு என்ன சாட்சி கொடுப்பேன்’னு ஆகாசத்த பாத்து, அன்னிக்கு சீதை, குலுங்கினாளே, அது மனசில தோணுகிறது. இவ சீதையா? அஞ்சு புருசன் இருக்கிறீங்களே, இப்பிடி மானம் உரிக்கிறானேன்னு துரோபதை கதறினாளே, அந்தக் காட்சியா இது? இவள் வயிற்றில் உதித்ததெல்லாம் துச்சாதனன் வாரிசா?...

அவளை இழுத்து அணைத்துக் கொள்கிறாள். 

அந்தக் காட்சி இவளுக்கும் கண்முன் உயிர்க்கிறது. ஆரஞ்சு வண்ண மேலாடை. முகம் சாய்ந்துகிடந்தது. இடுப்புக்குக் கீழ்... சிதைந்த கோலம்... கால் செருப்பு ஒன்று தள்ளிக் கிடந்தது. அவள் உன்னிக் கொண்டு பார்த்த காட்சி...

அவளுக்குப் புரிகிறது. வார்த்தைக்கு வார்த்தை அல்ல. தெருவில் நடக்கும் பெண் வேட்டை. அந்தக் காலத்து ராஜா ராணிக் கதைகளில், மோசமான ராஜகுமாரன் வருவான். அவன் குதிரையில் வந்தாலே பெண்கள் எல்லோரும் ஓடி ஒளிவார்கள். எவளேனும் தட்டுப்பட்டுவிட்டால், அவள் அந்தப்புரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு... கசக்கப்படுவாள்.

இங்கே அந்தப்புரம் தேவையில்லை...

“அம்மா... நீங்க மனசில வாங்கிட்டீங்களோ என்னவோ. பெத்தவங்க தேவையில்லேன்னு, தீந்து போயிட்ட காலம் இது. நீங்க ரொம்ப வயிராக்கியமா, உங்க மகன், இன்னைக்குப் பெரிய பதவியில இருக்கிறவர் வந்து ரெண்டு மாசத்துக்கு முன்ன கூடக் கூப்பிட்டதாகவும், நீங்க முகம் குடுத்தே பேசலன்னும் ரங்கசாமி சொன்னான்னாலும், இந்தப் பய்ய, அப்புராணி. அப்படிச் செய்யிறவ இல்ல. ஏதோ பிரியாணி சாப்பாடுன்னுற ஆசயிலதா போயிருக்கா. அவன் தண்ணி கிண்ணிகூடப் போடுறவ இல்ல. போர்டு எழுதுற தொழில்னு ஒண்னு நடத்துற பயல் தண்ணிலேயே மிதப்பவன். இவந்தா வேலை செய்யிறவன். கண்ணால பாத்தவங்க, உங்க பேரன் நாகமணிதா அந்தப் பெண்ணத் துரத்திட்டு வந்து கையப்புடிச்சி இழுத்தான்னு சொல்றாங்க. ஆனா அவன் விர்ருனு ஸிக்னல் எது இருந்தான்னன்னு தப்பிச்சிட்டான். பைக் மட்டுந்தா இருந்திருக்கு. எதுவும் புரியல. குற்றம் பண்ணினவங்க தப்பிச்சிடுறாங்க. இது வெறும் ஈவ் டீசிங் மட்டுமில்ல. கொலைன்னு வழக்குப்பதிவு செஞ்சிட்டாங்க. அந்தப் பொண்ணு, கல்யாணமான பொண்ணாம். புருசன்காரன் துபாய்ல பணம் சம்பாதிக்கப் போயிருக்கிறான். இது, அம்மாகூடத் தங்கி, சீட்டுக் கம்பெனி நடத்திட்டுருக்குன்னு சொல்றாங்க. நமக்கு அதெல்லாந் தேவையில்ல. நீங்க போயி உங்க மகனப் பாத்து ஒரு நாயத்தைச் சொல்லணும்.”

மலை உச்சியில் நிற்பது போல இருக்கிறது. சறுக்கிக்கீழே விழும் அபாயம் நாகமணின்னா, மரகதம் பெத்த புள்ளதான். ரஞ்சிதத்துக்கு மூத்தது மகள். ரஞ்சிதத்தை மணக்கு முன்பே, பாட்டுசான்ஸ் என்று வந்து வலையில் மாட்டிக் கொண்டு கர்ப்பமான நிலையில்தான் அவள் மீன் கழுவவும், கறிவாங்கி வரவும் மசாலை அறைக்கவும் வருவது போல் வந்து ஊன்றினாள். அவளே தான் வந்து சேர்ந்ததாகத் தெரிந்தது.

முழுகாமல் இருக்கும் மகளை ஆடிமாசத்துக்கு முன்பே வந்து வளையலடுக்கிக் கூட்டிச் செல்கையில் அவள் மகன் வீட்டில்தான் இருந்தாள். வளையல் அடுக்கும் வைபவத்தை இங்கேயே பெரிதாகக் கொண்டாடினார்கள்.

“அத்தே, நீங்க இந்த வீட்டிலிலே இருங்க...” என்று மருமகள் அவள் கையை பற்றிச் சூசகமாகச் சொல்லிவிட்டுக் காரில் சென்று ஏறிக் கொண்டாள்.

கார் அகன்றதும், உறமுறைகள் எல்லாரும் சென்றதும், விறிச்சிட்டுக் கிடந்த வீட்டில் அவளும் மரகதமும் மட்டுமே இருந்தார்கள்.

அந்தப் பெண் தடாலென்று அவள் காலில் விழுந்தாள். “அத்தே, நீங்கதா இப்ப எனக்குத் தெய்வம். இப்ப, ஒரு தாலிக்கவுரு போட்டதால, பணம் இருக்கிறதால, வளையல், நகை, சீலைன்னு விருந்து கொண்டாடுறீங்க. ஆனா, என் வயித்தில சுமக்கிறது உங்க மகன் மூலமான புள்ள. அப்பவே என்னக் கலியாணம் பண்ணிக்கிங்கன்னு கெஞ்சுனேன். ராயப்பேட்டையில கமலவேணி அம்மா வீட்ல இருக்கையிலேயே அடிக்கடி வருவாரு. ஒருநா, ரூமுக்கு வந்து பாடிக் காட்டுன்னு அழச்சிட்டுப் போனாரு. பாடுனே. ‘கங்கைக்கரைத் தோட்டம்னு பாடின.’

“ரொம்ப நல்லாப் பாடுற. பாட்டோட எனக்கு ஒன்னியும் ரொம்பப் புடிச்சிருக்கு"ன்னு சொன்னாரு.

கண்களில் நீர், நடந்ததை உணர்த்தியது.

“பிறகு கட்சிக்கூட்டம் நடக்குற எடத்திலல்லாம், பாட்டுப்பாட அவுரே எழுதின பாட்டப்பாடச் சொல்லிக் கூட்டிப் போனாரு. போஸ்டரெல்லாம் போட்டாங்க. ரெண்டு தபா, மருந்து குடிச்சி கருவக் கலச்சிட்டேன். ‘எப்பங்க நம்ம கலியாணம்’பே. எலக்சன் முடியட்டும். நாம ஜெயிச்சதும் முதல் கலியாணம் நம்முதுதான்னு தலமேலடிச்சி சத்தியம் பண்ணிட்டு, இப்படித் துரோகம் பண்ணிட்டாரு. அத்தே!...”

கொதிக்கும் நெஞ்சோடு, அந்தத் தலையைச் சார்த்திக் கொண்டு ஆறுதல் மொழிந்தாள்.

‘நீங்க விட்டுப் போட்டுப் போயிட்டீங்க. அவுங்க, குளிக்கப்போயிருக்கப்ப, என்னக் கூப்பிட்டுக் கன்னத்தில அடிச்சாரு. “ஏண்டி? நீ திட்டம் போட்டுட்டு இங்க வந்திருக்கியா? நன்றிகெட்ட நாயே! குடுக்கிற பணத்த வாங்கிட்டு எங்கினாலும் போயிச் சாவு! நீ இங்க வந்து என்ன பயமுறுத்துறியா? வேசி!”ன்னு வெரட்டினாரு... அவுங்க குளிச்சிட்டு வந்து “ஏ மரகதம் என்னமோ மாதிரி இருக்க? அழுதியா”ன்னாங்க...”

“இல்லங்க ஒட்டட அடிச்சனா, தூசி விழுந்தி டிச்சி..."ன்னு சொல்லிச் சமாளிச்சேன்.

“இப்ப நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது அவுரு எப்படீன்னாலும் ஒருநா வீட்டுக்கு வருவாரு. நீங்க அவுர மரீச்சி, அவரு கையால என் கழுத்தில ஒரு மஞ்சக் கவுறு கட்டச் சொல்லணும். என் வயித்தில இருக்கிற புள்ளக்கு அப்பா இவுருன்னு எல்லாரும் அறியணும். நான் வேசியில்லன்னு நீங்கதான் உலகுக்குச் சொல்லணும்...”

ஒரு வாரம் அவன் வீடு திரும்பவில்லை.

ஓர் அதிகாலைப் பொழுதில் வந்து கதவைத் தட்டினான்.

அவளும் மரகதமும் முன் கூடத்தில்தான் படுத்திருந்தார்கள். அவன் மேவேட்டி விசிற மேலே ஏறிப்போனான். காலையில் பத்தரை மணிக்கு அவன் கிழிறங்கி வந்து, குளியலறையில் பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டான். “காபி கொண்டா, மரகதம்?” என்று சட்டமாக ஆணையிட்டுவிட்டு முன் கூடத்தில் சோபாவில் உட்கார்ந்து பத்திரிகையைப் பிரித்துக் கொண்டிருக்கையில் காபியுடன் இவள் சென்று நின்றாள்.

“ஏ கெளவி! உனக்கென்ன வேலை இங்க? ஏ இங்க வந்து தாவறுக்கிற? ஒரு தரம் சொன்னாப் புரியாது?”

“புரியிதுரா! புரியிது! நான் நீ இங்க சொன்னாலும் நிக்கப் போறதில்ல. போயிட்டே இருக்கிற. அதுக்கு முன்ன ஒரு காரியம் இருக்கு. அது ஆனதும் இந்த நிமிசமே கிளம்பிடுவ...”

“என்ன நீ? வெவகாரம் பண்ணுற? இதபாரு, ரஞ்சிதத்துக்கும் எனக்கும் எடைல புகுந்து எதுனாலும் பண்ண... பெறகு உன்னப் பெத்தவன்னு கூடப் பாக்கமாட்டே?”

“நீ பாக்கமாட்டன்னு தெரியிண்டா எனக்கு. அந்தப் பொண்ணு நல்லபடியா பெத்துப் பொழக்கணும். என் வாரிசு வெளங்கணும்னுதா இருக்கே. நீ போயி காபி குடிச்சிட்டு குளிச்சு முழுவி சித்த சுத்தியோட வா... உனக்கு சாமிபூதம்னு ஒண்ணும் நம்பிக்கை இல்லேன்னாலும், அவுங்களுக்கு இருக்கு. நீ அறிஞ்சோ அறியாமலோ, நம்பிக்கை உள்ளவங்ககூட சம்பந்தம் வச்சிட்டே. அதுனால...’

“அதுனால... ?”

“ஒரு நேர்ச்சடா... நீ குளிச்சி முழுவிட்டு வா, அது கும்பிட்டு முடிஞ்சதும், நானே கெளம்பிப் போயிடுவ..."

அவன் காபியை உதட்டில் வைத்துப் பருகிவிட்டுப் போனான். குளியலறையில் சோப்பு மணம் வந்தது. இவள் பூசையறையில் குத்து விளக்குகளை ஏற்றி வைத்தாள். சாமி படங்களுக்குப் பூச்சாத்தினாள். ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்தாள். அறையின் கதவு மறைவில் நீராடிப் பூச்சூடி, பொட்டிட்டு மங்கலகோலத்துடன் மரகதம் இருந்தாள். அவள் கையில் மஞ்சட் கிழங்குடன் கூடிய புதிய தாலிக் கயிறு இருந்தது.

“உள்ளே போயி, நல்லபடியா வமுசம் தழைக்கணும்னு வேண்டிக்கிட்டுக் கும்பிடு... முருகன் வள்ளி தேவயான கூட இருக்குற படந்தா...”

“நீ... வுடமாட்டே...?” என்று உள்ளே சென்றதும் அவள் அந்தக் குறுகலான வாயிலில் நின்று கொண்டாள்.

“டேய், அந்தத் தாலிய வாங்கி அவ கழுத்துல கட்டு?” என்றாள் உரத்த குரலில்.

குத்துப்பட்ட உணர்வை விழுங்க முடியவில்லை “யே கெளவி, இதெல்லாம் என்ன நாடகம்!”

“நா நாடகம் ஆடலடா! வீணாப் பொண்பாவம் தேடிக்காத! இவவயித்துப் புள்ளதா மொத வாரிசு! சும்மா பேசாம, தாலிய வாங்கிக் கட்டு?”

தாலியைக் கட்டினான்.

“ரகசியமா நீ குடுத்திட்டா, அது அப்பன் பேர் தெரியாம போகும்டா! ஒத்துக்கோ!...”

பேச வழியில்லை. குங்குமத்தைக் கொடுத்து வைக்கச் சொன்னாள் மரகதம். சரேலென்று அவன் வெளியேறு முன், மரகதம் அவள் காலில் விழுந்து பணிந்தாள். கண்ணீருடன் அவளைக் கட்டிக் கொண்டாள். “ஆயிசுபூர நீங்க செய்த இந்த உதவிக்கு, நான் உங்களுக்குச் செருப்பா உழைக்கணும்...” என்றாள்.

ரஞ்சிதம் செல்வத்தில் வளர்ந்த அப்பாவிப் பெண். கவடு சூது தெரியாது. ஆனால் இவள், அப்படியல்ல - நெளிந்து வளைந்து எகிறித் திமிறி, தன்னிடத்தை உறுதி செய்து கொள்ளும் குணம் படைத்தவள். சில நாட்கள் இரவில் வரமாட்டான். இவனுக்கும் தொண்டர் குழாம், மாலை, பாராட்டு என்று வருபவர் போகிறவர் அதிகமானார்கள். சமையலும் சாப்பாடும் வசதிகளும், பெருகுவதற்கு முன் இவள் கழுத்தில் காதில் மூக்கில், கையில் என்று தேடிக் கொண்டாள்.

“அத்தே, எனக்கு இவுங்க இந்த நெக்லேசு வாங்கி வந்தாங்க! நல்லா இருக்கா, பாருங்க!” என்று காட்டுவாள்.

சில நாட்களில், “அத்தே, ஷீட்டிங் இருக்குதாம். கூப்பிடுறாங்க, நானும் ஊட்டிக்குப் போறேன்”னு தெரிவித்துக் காரிலேறிக் கொள்ளும் அளவுக்கு, இவளுடைய முக்கியத்துவம் மழுங்கிவிட்டது. வாசல் பக்கம் ஒரு கொட்டகை போட்டிருந்தார்கள். சின்னு, பழனி என்று இரண்டு பிள்ளைகள் அங்கே பத்திரிகை அலுவலகம் நடத்தினார்கள். ஒருநாள் இவள் கதவைப் பூட்டிச் சாவியை அவர்களிடம் கொடுத்து விட்டுக் கிளம்பிவிட்டாள்.

“என்ன தாயம்மா? திடீர்னு வந்திட்ட?”

ராதாம்மா வந்திருந்தாள். “எப்ப வந்தீங்கம்மா? மருமகப்புள்ள வந்திருக்காங்களா?...” என்று கேட்டு, அம்மாவின் காலோடு ஒட்டி நின்ற குட்டிப் பையனைப் பார்த்து, “ராசா... எப்டீருக்கே? தாயம்மா பாட்டிய நினப்பிருக்கா?” என்று கொஞ்சினாள்.

“ஏம்மா, சாமி இல்லன்னு சொன்ன உங்க புள்ள முருக பக்தனாயிட்டான் போல இருக்கு?” என்றார் வந்த விநாயகசாமி, பழைய காலத்துக் கதர்த் தொண்டர். நிறைய கதை கட்டுரை எழுதுவார். புத்தகங்களை மாடியில் கொண்டு வந்து அடுக்குவதும், படிப்பதும் பேசுவதும் வேலை, காந்தி நூற்றாண்டென்று. அதே வீட்டில் வாசலில் ஒவ்வொரு வெள்ளியும் காந்தி பாசறை என்று நடத்தினார்கள் என்பதெல்லாம் தெரியும். விநாயகசாமி மதுரையில் இருந்து வந்திருந்தார். கல்யாணம் காட்சி இல்லாதவர்.

“என்ன சொல்றீங்க மாமா?... இப்ப வாரியார் சுவாமி பிரசங்கம்னா, கூட்டம் கொள்ளல. அன்னைக்குக் கடவுளை நம்புறவன் முட்டாள்னு சொன்னவரே, இப்ப பேச முடியாம ஆயிட்டார் போல இருக்கு...”

“இல்ல ராதாம்மா... இத, இந்தப் பத்திரிகையப் பாருங்க...” அவர் கொடுத்த பத்திரிகைத்தாளை அவளும் பார்த்தாள்.

“என்ன, குருவியாரே? இளவழுதிப்புரவலர், இரு மனைவியருடைய கடவுள் தொண்டராய்விட்டாராமே? உண்மையா?”

“அன்னையாரின் நெருக்கடிக்கு, காதும் காதும் வைத்தாற் போல் தலை குனிந்து விட்டதாகக் கேள்வி. நமக்கெதற்கையா இந்த உள்துறை சமாசாரமெல்லாம்?”

ராதாம்மா சத்தம் போட்டுப் படிக்கிறாள்.

அவள் அங்கே நிற்கப்பிடிக்காமல் பின் பக்கம் சென்றாள்.

“ஆமாம், மாமா, இந்தப் பத்திரிக்கைக் குப்பை எல்லாம் நீங்க வங்குறீங்களா?”

“ராம் ராம்! எனக்கென்ன வேற வேலை இல்லையா, காசை இப்படிச் செலவழிக்க? நம்ம அய்யா பேர் போட்டு இந்த விலாசத்துக்கு இது அனுப்பப் பட்டிருக்கு?”

அய்யா மாடியில் இருந்ததால் அவள் அன்று அவரைப் பார்க்கவில்லை.

“பத்திரிகைகள் சீரழியிது இன்னிக்கு! நா இங்க பட்டணம் வந்த புதுசில, மௌண்ட் ரோட்லயோ டவுன்லயோ எதோ பெரிய கடையில, அப்பல்லாம், பொம்பிளங்க இப்படிப் போக முடியாது, செல்லலாமோ, எதுவோ, நினப்பில்ல, ஒரு பொம்புள பொம்மை, இடுப்பளவுக்கு வச்சி, ‘பாடிசைஸ்’ அளவெடுக்கறாப்புல... எனக்கு சரியாக் கூட நினப்பில்ல. அங்கெல்லாம் அந்நியத்துணி வாங்காதேன்னு சொல்லத்தான் போவோம். அந்த பொம்மயப் பாக்கவே கூச்சமாயிருந்திச்சி. இப்ப நினச்சிப் பாக்குறேன். இந்தப் பத்திரிகை, சினிமா, சுவரொட்டி எல்லாத்திலும், பொம்புளயத் துகிலுரியிற வேலயாத்தானிருக்கு. ஒரு துரோபதயத் துகிலுரிஞ்சான் துச்சாதனன். பாரத யுத்தம் வந்தது. இப்ப, ஒரு பத்திரிகைய, குடும்பத்திரிகையைப் பார்க்க முடியல. எல்லாம் வக்கிரமாயிருக்கு?” என்று அம்மா அலுத்துக் கொண்டார்.

“அம்மா, இதே நான் அங்க மதுரை வாசகர் வட்டத்துல சொன்னேன். பொம்பிளகதா, இந்த மாதிரி விஷயங்களப் பார்த்து எதிர்க்கணும். அது எங்க? நாலுபேர் சேருமுன்ன? பத்துபேர் பிரிக்க வராங்களே?”

“எனக்குக் கூடத் தோணும். இப்ப நம்ம தமிழ்ப் படங்களப் பாக்கிறேன் - பத்திரிகைகளும் படிக்கிறேன். ஆனா, இதிலென்ன தமிழ் கலாசாரம் புதிசா இருக்குன்னு புரியல. கையில் டிரிங்க்ஸ் வச்சிகிட்டு பேசுறதும், ஆணும் பெண்ணும் பார்ட்னர் சேர்ந்து ‘பால்’ டான்ஸ் ஆடினதும் கலாசார மோசம்னு சொன்னாங்க. ஆனா, வெள்ளைக்காரன் போயி, நம்மை நாமே என்ன கலாசாரத்த மீட்டுக் கிட்டிருக்கிறோம்?... நம் தமிழ்ப்படங்களில், வரும் காதலிகள், நாயகிகள், உடம்பைக் காட்டுறதில்தான் எல்லாம் இருக்கு. அதுவும் ஹீரோயின் கனவில் வரும் ‘காதல் காட்சிகள்...ஆகா’ இதான் கலாசாரம்! பாம்பேல, ஒரு மராத்தி சிநேகிதி நம்ம பத்திரிகை கதைகளில் வரும் படங்களப் பார்த்துட்டு, ‘உங்க மெட்ராசில பொண்ணுக ஸாரியே உடுக்கிறதில்லையா’ன்னு கேட்டா. ‘இல்லியே! எனக்குத் தெரிஞ்சி அப்படியில்ல. படம் ஒரு கவர்ச்சிக்காகப் போடுவ’ன்னு சொன்னேன்...” என்று ராதாம்மாவும் அதே கருத்தைச் சொன்னாள். அவள் அன்று திசை தெரியாப் பிரமையில் நின்றாற்போல் உணர்ந்தாள்.

நம்மை ஆள வந்த பரங்கியன், இந்த சனங்களைப் புழுவாகப் போட்டுமிதிக்கும் வகையில் அதிரடியாகச் செய்ய முடியவில்லை. ஏனெனில் படிக்காத கிராம வாசியிடமும், ஏழையிடமும், ஒழுக்க கலாசாரம், அதனால் பற்றிய நேர்மை, பிடிவாதம் எல்லாம் இருந்தன. அந்த ஆதாரத்தில்தான் காந்திஜி, இந்த நாட்டு மக்களுக்கு உகந்தது அஹிம்சை வழின்னு செயல்பட்டார். இதெல்லாம், அடியோடு வேரறுக்க படுது இன்னைக்கு. தூலமா இருக்கிற தீவிரவாதம்கூட ஒத்துக்கலாம். ஓர் அரசியல் கட்சி, சினிமான்னு ஒரு நவீனக் கருவியை மக்களை மயங்கவைக்கும் தந்திரங்களில் கவர்ந்து...

“விநாயக மாமா, நீங்க வரவர எல்லாமே பிரசங்கம் கட்டுரைன்னு ஆரம்பிச்சுடுறீங்க. இதுக்கெல்லாம் யாரும் வரமாட்டா. வேற எதானும் யோசனை பண்ணுங்க...

அவர் தலையைத் தடவிக் கொண்டு போனார்.

அப்போதுதான் அம்மா கேட்டார்.

“தாயம்மா ? அப்ப நீதான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தனியா?”

“எனக்கு வேற வழி தெரியலம்மா? அப்பன் தெரியாத புள்ளன்னு வச்சிட்டு அவ சங்கடப்படுவாளே?”

“‘இருதாரத் தடைச்சட்டம்’ன்னாலும், இவங்க தப்பிச்சிடுவாங்க! ஏன்னா, இவங்கதானே எதையும் ஒப்புக் கொள்ளும் வோட்டு மந்தைய உருவாக்கி இருக்காங்க?”

“அதுவும் சரிதான்” என்றாள் அம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/16&oldid=1022827" இலிருந்து மீள்விக்கப்பட்டது