உத்தரகாண்டம்/22

விக்கிமூலம் இலிருந்து

22

வர்கள் சாலையில் அடிவைக்கையில் ஒரு பஸ் வருவது தெரிகிறது இந்த ஆசிரமத்துக்கே ஒரு கும்பல் இறங்குகிறது.

“வாங்க ஏறுங்க; நாம போகலாம்?”

“வாணாம்பா, ஒரெட்டு நடந்து போயிரலாம்?”

“இப்ப இந்தப் புடிவாதம் வாணாம். ஏறுங்க” அவன் பலவந்தமாக அவளைப் பஸ்ஸில் ஏற்றுகிறான். “கே.ஜி. ஆஸ்பத்திரி. ரெண்டு டிக்கெட்” என்று சொல்லிவிட்டு மகளிர் இருக்கையில் காலியாக இருந்த இடத்தைப் பார்த்து உட்கார்த்தி வைக்கிறான்.

“கே.ஜி. ஆஸ்பத்திரியா? அங்கெ எதுக்கப்பா போவணும்? நாம மின்னாடியே எறங்கிட்டா குறுக்குச் சந்தில புகுந்து ஸ்கூல் பக்கம் திரும்பிடலாமே?”

“கொஞ்சம் வாய மூடிட்டு வரீங்களா ?”

அவன் முகம் ஏணிப்படிக் கடுப்பாக மாறவேண்டும்?

பெரிய சாலையில் அந்த ஆஸ்பத்திரி இருக்கிறது. வெகு நாட்களாகச் செயல்படும் ஆஸ்பத்திரி என்று பெயர். ஆனால் சென்று நெருங்கும் பிரபலம் பற்றி அவளுக்குத் தெரியாது.

சாலையில் அவர்கள் வந்திறங்கும் போது, பிற்பகல் மூன்று மணி இருக்கலாம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பொங்கல் என்று எங்கே பார்த்தாலும் தள்ளுபடி விழா. ஃபிரிட்ஜ், வாஷிங் மிசின் கிரைண்டர் என்று நடுத் தெருவுக்கே வருவதுபோல் கடைபரப்பி இருக்கிறார்கள். துணிக்கடைகளோ, பழக்கடையில் மொய்க்கும் ஈக்களைப் போல் மக்களைக் கவரும் பரபரக்குள்ளாக்கி இருக்கின்றன. ஒரு புறம் தலையணை மெத்தை விரிப்பு என்று மக்களைக் கூவி அழைக்கும் வாணிபம். இடைஇடையில் சிக்கன், மட்டன் மசாலா நெடி வீசும் உணவுக்கடைகள். குப்பைத் தொட்டிகளும் நிரம்பி வழியும் கழிபட்ட பிளாஸ்டிக் குப்பைகள்... ஏதோ தோசைக்கு இடையே வைக்கப்பட்ட உருளை மசாலா போல் உயர்ந்து போயிருக்கும். ஆஸ்பத்திரிக்குள் அவன் அவள் கையைப் பற்றிக் கொண்டு அழைக்கிறான்.

“யே, இப்ப எதுக்கு ஆசுபத்திரி? வுடுங்க!”

‘எதுக்கா? சொறி நாய்; வெறி நாய், விசம் நீரை உறிஞ்சி, நீர்சுண்ட, எச்சிமுழுங்க முடியாம, நாயபோல” அவள் விலுக்கென்று கையை உதறிக் கொள்கிறாள்.

“அதெல்லாம் ஒண்ணுமாகாது. அதான் அம்பாள் குங்குமம் வச்சாச்சே!”

“எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல. முரண்டு புடிக்காம உள்ள வாங்க... எதோ சக்தி உங்களையும் தள்ளிட்டு வந்திருக்கு என்னையும் தள்ளிட்டு வந்திருக்கு. காரண காரியம் புரிபடல; வாங்க..." 

ஆஸ்பத்திரியிலும் அந்த நேரத்தில் கெடுபிடி தெரியவில்லை. ஒரு பழைய வீடுதான். நுழைந்ததும் கூட மறைப்பில் தட்டி போல் ஒரு தடுப்பு. ஒழுங்கை போல் பின்புறம் செல்லும் இடத்தில் ஒரு கட்டிலில், நோயாளிப் பெண் படுத்திருக்கிறாள். சொட்டு இறங்கும் அந்த நிலையருகில் ஒரு பெண் கவலையுடன் நிற்கிறாள். பெஞ்சியில் வரிசையாக நோயாளிகளோ உறவினர்களோ குந்தியிருக்கின்றனர். எங்கோ ஒரு குழந்தை வீரிட்டுக் கத்தும் குரல் செவியில் விழுகிறது.

மருந்தகமும் உள்ளே இருக்கிறது. அருகில் உள்ள திட்டி வாசலில் சுப்பய்யா தலை நீட்டி “ஒரு நாய்கடி கேஸீங்க. ஊசி போடணும்” என்று சொல்வது செவியில் விழுகிறது.

“வளர்ப்பு நாயா, தெரு நாயா?” என்று நர்ஸ் கேட்கிறாள்.

“தெரியல. ஆனால் அது கோயில் நாய்!”

“என்னய்யா? வெளயாடுறியா? கோயில்ல நாய் வளக்கிறாங்களா?”

“ஏன், கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “அது சொறிநாய், வெறிநாய்...” என்று முடிக்கிறான்.

அவள் அவன் சட்டையைப் பற்றி இழுக்கிறாள். “ஒண்ணும் வாணாம்பா!”

“அப்ப, அந்தப்பக்கம் போயி சீட்டுப் போட்டுட்டு வாங்க. அஞ்சு ஊசி போடணும்; ஆயிரம் ரூபாய் ஆகும்.”

“இப்பவே அஞ்சு ஊசியும் போட்டுடுவீங்களா? ஆயிரம் ரூபாயும் குடுத்திட...?”

“என்னய்யா, எகன முகனயா பேசுறீங்க. இவ்வளவு ஆகும்னு சொன்னேன். சொறிநாய், வெறிநாய்னு சொன்னீங்க. அஞ்சு ஊசி போட்டாத்தான் பத்திரம். இப்ப முதல்ல முந்நூறு கட்டிட்டுச் சீட்டு வாங்கிட்டு வாங்க!”

அவன் அந்தப் பக்கம் நகர்ந்ததும் இவள் வந்த வழியில் நடையைக் கட்டுகிறாள். கோயிலுக்குப் போனாள், நாய் கடித்தது, சரி. இவனைப் பார்த்து எத்தனை வருசம் ஆயிருக்கிறது? இப்ப தீரும் என்று வந்த வழியில் ஆயிரம் ரூபாய்க்கு ஊசியா? முருகா? இவள் மாசச் செலவு கூட அவ்வளவு ஆகாதே?

விடுவிடென்று கடைகளூடே அவள் நடக்கையில் அவன் விரைந்து வந்து அவள் கையைப் பற்றி நிறுத்துகிறான். கைப்பிடி இறுகுகிறது எலும்பும் நரம்புமாகத் தெரியும். அந்தக் கைக்கு இத்துணை வலிமையா?

‘என்னம்மா? திரும்பப் பாக்குமுன்ன எதோ பி.டி. உஷான்னு ஓடுறீங்க? நா முந்நூறு கட்டிச் சீட்டு வாங்கிட்டே! வந்து ஊசி போட்டுக்குங்க?”

“எனக்கு ஊசிகீசி ஒண்ணும் வாணாய்யா, நா அப்படி நாய் மாதிரி ஊளையிட்டுச் சாவணும்னு விதியிருந்தா, சாவறேன். என்ன வுடய்யா!”

அவன் விடையே கூறாமல் அவளை இழுத்து வருகிறான்.

கட்டுக்கட்டும் இடத்தில் ஒரு நர்ஸ் பெண், அவள் சேலையை அகற்றி, காலில பட்ட கடிக்காயத்தைப் பார்க்கிறாள். முழங்காலுக்குக் கீழ் ஆடு சதையில் கவ்வி இருக்கிறது. இரண்டு சுற்றுச் சீலையும் கிழிபட்டிருக்கிறது. இரத்தம் பட்டிருக்கிறது.

கடிவாயை மருந்து நீர் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கிறாள்.

“பல் ஆழமா மூணெடத்துல பதிஞ்சிருக்குபாரு... ஏம்மா போயி சொறி நாயக்கடிக்கிறீங்க இந்த வயசில...?” அவள் சிரிக்காமலே கடிபட்ட இடத்தில் மருந்துத்துணி வைக்கிறாள். 

“இந்தம்மாக்கு, புள்ள குட்டி, பேரன் பேத்தின்னு இல்ல. பொழுது போகல நேரா கோயிலுக்குப் போயி, சொறி நாயக் கடிச்சிட்டாங்க, போனாப் போவுதுன்னு, நா கோயிலுக்கு வந்தவ, இவங்கள தத்து எடுத்துக்கலான்னு இருக்கே...”

“அதும் சரிதா. வயசு எழுபத்தெட்டுன்னு போட்டிருக்கிங்க. இது இரண்டாவது குழந்தைப் பருவம். தத்தெடுக்கிறது சரிதான்..”

பஞ்சால் நன்றாகத் துடைத்து, பதமாக பிளாஸ்திரி போடுகிறாள்.

பிறகு, இடது கையில் ஊசியும் போடுகிறாள் இன்னொரு நர்ஸ்.

“ரொம்பத் தண்ணி படாம வச்சுக்குங்கம்மா ? நாளக்கழிச்சி வாங்க. அடுத்த ஊசி போட்டுக்கலாம்.”

வெளியே வருகிறார்கள்.

சுப்பய்யா ஓர் ஆட்டோவைக் கூப்பிடுகிறான்.

“ஏம்ப்பா, உங்கிட்டக் காசு ரொம்ப இருக்குதா? பொடி நடையா நடந்து போயிரலாமே?”

“உங்க கால்ல செருப்பில்ல. கால்ல காயம். ஏறி உக்காருங்க...” அவள் உட்காருகிறாள்.

“பள்ளிக்கூட வாசலில் கலகலப்புக் கூட்டம் இல்லை.

திரும்பும்போது, சங்கரி இருந்த வீட்டுக்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன... சொரேலென்கிறது...

“ஏம்ப்பா... கொஞ்சம் நிறுத்து?...”

அவன் தாண்டிப் போய் விடுகிறான். வீட்டுப் பக்கத்தில் அய்யப்பன் வாழைகள் இலைக்குப்பைகள் அலங்காரங்களை இரண்டு மூன்று நோஞ்சான் மாடுகள், பன்றிகள் இழுத்துப் போட்டிருக்கின்றன.

அவள் வண்டியில் இருந்து இறங்குகிறாள்.

“த...சூ...” என்று கை ஓங்கிப் பன்றிகளை விரட்டுகிறாள்.

இடுப்பில் இருந்த சாவியை எடுத்துக் கதவைத் திறக்கிறாள். வீட்டில் அடி வைத்ததுமே, வயிறு கூவுகிறது.

“உள்ள வாங்க... வாப்பா...” என்று திருத்திக் கொண்டு, பின் புறமிருந்து துடைப்பம் எடுத்து வந்து முன் வாசல் அலங்கோலங்களைப் பெருக்குகிறாள். அந்த வாழைக் கழிவுகளை உண்ணும் மாடுகளில் கொல்லையில் கட்டப்பட்டிருந்த செவலையும் இருக்கிறது. இவளைக் கண்டதும் அது தானாக வீட்டுப் பக்கம் போகிறது. உள்ளே வந்து பின்புறக்கதவைத் திறந்து அழைத்துக் கொள்கிறாள். சேலை நுனியில், இரத்தக் கறை தெரிகிறது. கசக்கியும் முழுதும் போகவில்லை.

வேறு சேலை மாற்றிக் கொண்டு, அடுப்பைப் பற்ற வைக்கிறாள். அரிசியைக் களைந்து வைத்துவிட்டு, சேலையை சோப்புப் போட்டுத் துவைத்து உலர்த்துகிறாள். அரைமூடி தேங்காய் இருக்கிறது. அதை நசுக்கி வற மிளகாய், புளி வைத்து அறைக்கிறாள்.

சமையலை முடித்துவிட்டு அவள் வெளியே வந்து பார்க்கிறாள். மாடிப்படி அறை பூட்டி இருக்கிறது. கூடத்தில், வெளித்திண்ணையில் இல்லை. எங்கே போய்விட்டான்?

பக்கத்து மனைக்கட்டில் செங்கல் வந்து இறங்கி அடுக்கி இருக்கிறார்கள். தெருவில் கம்பி கொண்டு போகும், சிமிட்டி மூட்டை சுமந்து செல்லும் ஏதேதோ வண்டிகள் செல்கின்றன.

“எங்கே போனான், சொல்லாமல் கொள்ளாமல்? ஆனால், எங்கிருந்து எப்படி வந்தான்?...”

சூனியமாக இருக்கிறது கனவா, நிகழ்வா? 

உள்ளே சென்று சாப்பிடவும் பிடிக்கவில்லை. வாயிலிலேயே நிற்கிறாள். கறுத்து வாடிய முகத்துடன் வருகிறான்.

“ஏம்ப்பா? எங்கே போயிட்டே? நா ஒரு சோத்தப் பொங்கி வச்சிட்டுக் காத்திருக்கிறேன். பொழுது சாஞ்சு போச்சி? ஒருவேள சாப்புடத்தான் போனிங்களோ?...” வேகமாகச் சொற்கள் வருகின்றன.

“வந்து... அந்த ஓட்டு வீடு பிரிக்கிறாங்களே, அங்க யார் இருந்தாங்க?” சுருக்கென்று நெஞ்சில் கத்தி குத்திவிட்டாற் போல் வேதனை தோன்றுகிறது.

“வயசான ஓமியோபதி டாக்டர், ஏழைகளுக்கு வைத்தியம் பண்ணிட்டிருந்தார். இப்ப வரமுடியல போல இருக்கு. அவரு படப்பை பக்கத்திலேந்து வருவார்... சாப்பிட வரியா?”

“ஒரம்மா கிரீச் நடத்திட்டிருந்தாங்கன்னு சொல்றாங்களே, சங்கரின்னு...”

“அ... ஆமாம்.. அவளத்தான் நாலு மாசமாக் காணல. புறந்தவன் வந்து கூட்டிட்டுப் போயிட்டாப்பல...”

“நீ முதல்ல சாப்புட வா. எனக்குப் பசிக்கிதப்பா, ஊசிபோட்டதோ என்னமோ, என்னிக்கும் தெரியாத பசி...”

“நீங்க அவுங்களப் பாத்திருக்கீங்களா தாயம்மா...”

“முதல்ல நீ பசியாறு. பிறகு பாக்கலாம்...” இலையைப் போட்டு மணை போடுகிறாள். அவன் முகம் கழுவிக் கொண்டு வருகிறான்.

சோறு ரசம், துவையல்... மோர்...

அவன் இலையை எடுத்துக் கொண்டு செல்கிறான். இவள் கரைத்துக் குடிக்கிறாள்.

அப்போது ரங்கன் உள்ளே வருகிறான். பெஞ்சியில் கிடந்த தந்தி பேப்பரைப் பார்த்துக் கொண்டு நிற்கும் சுப்பய்யாவைப் பார்க்கிறான். என்னம்மா, சொல்லாம கொள்ளாம கதவப் பூட்டிட்டுப் போயிட்ட? காலம இல்ல, மத்தியானம் இல்ல, புள்ள வீட்டுக்குத் தான் போயிட்டியோன்னு போன் போட்டுப் பார்த்தேன், சரி வித்யாலயாவுக்குத்தான் போயிட்டியோ மனசுமாறின்னு விசரிச்சேன், அங்கும் இல்ல. எங்க போயிட்டு வரே! இவுரு யாரு?”

இவன் இப்போது எஜமானனாகிவிட்டான். வரீங்க, போறீங்ககூட இல்லை...

“இவுரு யாரு?”

“இவுரு, அந்தகாலத்து ஆளு. குருகுலத்துல வேலை செய்தவரு. பேரு சுப்பய்யா...”

சுப்பய்யா நிமிர்ந்து பார்க்கிறான்.

“வணக்கமுங்க. நீங்களே சொல்லுங்க. என்ன இந்த இடமெல்லாம் பொறுப்பா பாத்துக்க சேர்மன் அய்யா, வச்சிருக்காங்க. இப்படித்தா. சொல்லாம கொள்ளாம திடுதிடுன்னு போயிடறாங்க, வயிசாயிடுச்சி. மகன் கூப்பிடுறாங்க. அங்க போகணும். இல்லன்னா குருகுலம் பக்கமே அவுட் அவுஸ் தாரேன்னு கூப்பிடுறாங்க. அதுவும் மாட்டேன்னு இப்புடி நடக்குறாங்க. எனக்குத்தானேய்யா, பொல்லாப்பு? நீங்க எந்த டிரெயின்ல, எங்கேந்து வாரீங்க? எனக்கு ஒரு சேதி சொன்னா டேசனுக்கு வந்திருப்பேன்ல? தியாகி அய்யா சொந்தக்காரங்களா?” ரங்கனின் நிலை கொள்ளாத பரபரப்பு வெளிப்படுகிறது.

“அவங்களுக்கு ரொம்ப வேண்டியவன்தான். இப்பதா அவங்க யாரும் இல்லையே?”

“அது சரி. நீங்க எந்தூரிலேந்து வந்திருக்கிறீங்க?”

“புனா... ஒரு காரியமா வந்தேன். இந்தம்மாவை எதிர்பாராம கோயில்ல பார்த்தேன். அங்க இவங்கள ஒரு நாய் கடிச்சிட்டது. கூட்டிட்டுப்போயி ஆசுபத்திரில ஊசி போட்டுக் கொண்டாந்துவிட்டேன்.”

“அடாடா... என்னம்மா? இதுக்குத்தா நான் சொல்லிட்டேருக்கிறன். எந்த கோயிலுக்குப் போனீங்க? திருநீர்மலையா? ஏகாதசி கூட இல்லியே?...”

“இதபாரு ரங்கா. நா ஒண்ணும் வீட்டுக் கைதி இல்ல. உன் சோலியப் பார்த்திட்டுப் போ. அப்பிடிப் போனா போயிட்டுப் போறன்...”

அவன் ஒன்றும் பேசாமல் போகிறான். முகம் உப்பியிருக்கிறது.

சுப்பய்யா விளக்கு வைத்து, பிரார்த்தனை என்று அரைமணி உட்கார்ந்திருக்கிறான்.

“ஏம்ப்பா, நீ என்ன காரியமா வந்தேன்னே சொல்லல. அய்யா பாட்டுக்கு டிரஸ்ட்னு, எல்லாம் வச்சிருக்கிறதா சொல்றாங்க. ஆனா, கடைசி மூச்சை அவங்க வுடறப்ப நாந்தா இருந்தே. சுத்தப் பாலிலும் விசம் சேந்திடும்னு அப்பவே புரிஞ்சிட்டாங்க. இந்த இடத்துல, சத்தியமா, ஏழை எளிசுங்களுக்குக் கல்வியோ வைத்திய சேவையோ பண்ண, அம்மா பேரை வச்சி நடத்தணும்னு அவங்க எண்ணம். மாடில பீரோல, அம்மா, ராதாம்மா உபயோகிச்ச சாமான்கள், போட்டோ படங்கள், துணிமணி, வீணை எல்லாம் இருக்கு. அப்பவே பராங்குசம், என்னை அவங்க நெருக்கத்திலேந்து விலக்கணும்னு பார்த்தான் சுப்பய்யா. அய்யா, அம்மாவும் போன பிறகு, இந்த தேசத்த நினச்சி மனசொடிஞ்சி போனாங்க...”

“புரியிது...”

“என்னமோ, உன்னக் கண்டது எனக்கு இப்ப தெம்பா இருக்கு. முந்தாநா வந்து... அவ... என்ன மிரட்டுறாப்பல சொல்லிட்டுப் போயிருக்கிறா. இந்த இடம் மிச்சூடும் வளைச்சி பெரிய ஆஸ்பத்திரி; கெஸ்ட் அவுஸ், அது இதுன்னு அமெரிக்காவுக்கு மேல வரப்போவுதாம். இதபாரு, கிழக்கால, குடும்பம் குடும்பமா பொழப்பத் தேடி வந்து அல்லாடுதுங்க. எதுக்கால, அங்க பழைய பங்களா ஒண்ணு இருந்திச்சே, அதை இடிக்க வந்த சனங்களப் பாத்தேன். கடப்பாறய வச்சிட்டு வெயில்ல இடிப்பானுவ. அஞ்சும் குஞ்சுமாக இடிச்சத எடுத்து அடுக்கும். காலம அரிசி பருப்பு, கறி மீனு வாங்கி வந்து அடுப்பு வச்சிப் பொங்கும். தின்னும். எண்ணெய் காணாத முடி. அழுக்கு. சாங்காலமா தண்ணி சேந்திக் குளிக்கும். ஆம்புளங்க ராத்திரி குடிச்சிப் போட்டு கட்டயா தரயில கெடப்பானுவ. ஒரு பொம்புள, பாவம், ரெண்டு புள்ள, இங்க திண்ணையில படுக்கிறேம்பா... படுத்துக்கம்பேன்... இதையும் அப்படி இடிப்பாங்க...”

இவளுக்குத் தொண்டை கம்மிப் போகிறது. “எல்லா இடத்திலும் இதே வரலாறுதாம்மா. நா இப்ப ஒரு முக்கிய விசாரணையா நேத்துதா வந்தே. வந்ததும், விசாரிச்சேன். இந்த இடம், வீதி எனக்கு நல்லா தெரியுமே? ஆனா, இந்தத் தெருவுக்கு இப்ப, மயில் ரங்கம் தெருன்னல்ல போட்டிருக்கு! புதுநகர் காலனி அதுவும் தெரியல. மணிக்கூண்டு கிட்ட விசாரிச்சேன். அங்கே மெஸ் வச்சிருக்கிற அம்மா, அட்ரசப் பாத்திட்டுச் சொன்னாங்க. அந்த வீட்டக் காட்டினாங்க. வூடு டீச்சர் வீடு, வித்திட்டாங்க. மூணு லட்சம்னு வாங்கி ரிஜிஸ்தர் ஆயிடிச்சின்னாங்க. அப்பதா அங்க டாக்டர் இருந்ததா- வயித்தியம் பண்ணுவாருன்னு பூவிக்கிற பொம்புள சொல்லிச்சி. டீச்சரத் தேடிட்டுப் போகு முன்ன, ஸ்கூல்ல விசாரிச்சேன். வாச்மேன் சொன்னான், நீங்க விசாரிக்கிற பொம்புள, இங்க நாலு மாசமா இல்ல. அவங்க, சிவசக்தி ஆசிரமம் போகணும்னு சொன்னாங்க. அப்படியே போய்த் தங்கிட்டதாக் கேள்வி. நீங்க யாருங்கன்னு கேட்டான். நான் புனாவிலேந்து வந்திருக்கிறேன். அவங்க... அண்ணன்னேன். அப்ப நீங்க வேறயா? முன்னகூட ஓரண்ணன் இப்படித்தா வந்து விசாரிச்சாரு. அந்தப் பொம்புள ஒரு மாதிரின்னு இழுத்தா... பளார்னு அவன் கன்னத்துல ஒரு அறை விட்டிருப்பேன். அடக்கிக்கிட்டு ஆசிரமத்துல போய்ப் பார்ப்போம்னு தா வந்தே. அங்க யாரும் தங்கறாப்புலவே தெரியலேன்னாங்க...”

“சுப்பய்யா...!” என்று பீறிடும் அவள் குரல் அலறலாக ஒலிக்கிறது. அப்போது அவன் சட்டை உள் பையில் இருந்து அந்தக் கடித உறையை அவளிடம் கொடுக்கிறான். கை நடுங்குகிறது. அவள் பிரிக்கிறாள்.

தேவரீர், உயர்திரு, சுப்பய்யா வாத்தியார் அவர்களுக்கு, அடியாள் சங்கரி, அநேக கோடி நமஸ்காரங்கள். என்னைத் தங்களுக்கு நினைவிருக்கும். நான் இப்போது, 13 மயில்ரங்கம் வீதி, பாரதி புது காலனி என்ற விலாசத்தில் இருந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். என் பெரியண்ணன் ராஜஸ்தானிலும் சின்னண்ணன் சிங்கப்பூருக்கும் போய்விட்டார்கள். அம்மாவும் காலமான பிறகு என் நிலை மோசம். நான் உங்களை அநுமான் செளக்கில் பார்த்துப் பேச முயற்சி செய்தேன். கண்டு கொள்ளாமல் போய்விட்டீர்கள். பிறகு அண்ணன் மகனுக்கு இங்கே இன்ஜினியரிங் காலேஜில் இடம் கிடைத்தது. ஒரு வீடு எடுத்துக் கொண்டு அவனைப் படிக்க வைக்க- அவனுக்கு சமையல் பண்ணிப்போட என்று முடிவு செய்து என்னை இங்கே கொண்டு வைத்தார்கள். முதலில் மூன்று வருசம் ஒருவீட்டில் மாடியில் இருந்தோம். பிறகு அவர்கள் காலி செய்யச் சொன்னதால், பக்கத்திலேயே சிறு வீடொன்றில் இப்போது இருக்கிறேன். அண்ணன் பையன் படிப்பு முடிந்து சிங்கப்பூர் போய் விட்டான். எனக்கு அவன் இருந்த வரையிலும் பாதுகாப்பாக இருந்தது. பிறகு, நானே ஒரு ஜீவனம் தேட வேண்டி, இதே இடத்தில, வேலைக்குப் போகும் தாய்மாரின் சிறு குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த வீட்டின் வாசல் புறத்தில் ஒரு நல்ல டாக்டர், வயசானவர், ஏழைகளுக்கான வைத்தியசாலை நடத்துகிறார். இரவு எட்டு மணிக்கு அவர் போய்விடுவார். காலை பத்தரை மணிக்கு வருவார். அதனால் இரவு நேரங்களில் எனக்குப் பயமாக இருக்கிறது. இங்கே யாரையும் நம்ப முடியவில்லை. எனக்குத்திக்கு இல்லை. இந்தக் கடிதம் கண்டவுடன் என்னை வந்து ஏற்றுக் கொள்ளுங்கள். என்னைப் போன்ற ஆதரவற்ற பெண்களுக்கு இங்கே எந்தப் பாதுகாப்பும் இல்லை. உங்களைத் தான் தெய்வரூபமாக நம்பியிருக்கிறேன். உடனே தந்திபோல் பாவித்து வந்து தயவு செய்து ஏற்றுக் கொள்ளவும். தாள் பணிந்து கேட்டுக் கொள்கிறேன். அடியாள், சங்கரி...

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/22&oldid=1022834" இலிருந்து மீள்விக்கப்பட்டது