அண்ணா சில நினைவுகள்/தஞ்சைக்கு ஏன் வந்தார்?

விக்கிமூலம் இலிருந்து
தஞ்சைக்கு ஏன் வந்தார்?
[அண்ணா அவர்களுக்கு 21 வயது நிறைய 5 நாட்கள் இருக்கும்போது, ராணியம்மாளைத் திருமணம் செய்துவைத்தனர். அதாவது, 10.9.1930 அன்று சின்னக் காஞ்சிபுரம், வரகுவாசல் தெரு, 51-ஆம் எண் இல்லத்தில். திருமண சமயத்தில் அண்ணியார் குடும்பம் தஞ்சாவூரில் இருந்ததாம்.]

“நான் ராணியைத் திருமணம் செய்து கொண்ட புதிசில் தஞ்சாவூருக்கு அடிக்கடி வந்திருக்கேன். அப்போ இங்கே வேற யாரையும் தெரியாது. ஒரு Platform ticket வாங்கிக்கிட்டு நேரெ ரயில்வே ஸ்டேஷனுக்குள்ளே வந்து, இந்த ஹிக்கின்பாதம்ஸ்லெ மணிக்கணக்கா நிண்ணு, புத்தகங்களெ வாங்கிப் படிச்சி, பொழுதெக் கழிப்பேன்!” என்று அண்ணா சொல்லி முடிப்பதற்குள்...அண்ணாவின் இணைபிரியாத நண்பர் நகைச்சுவை நாயகர் சி. வி. ராஜ கோபால், “அதனாலெதான் இப்ப நம்ம கருணானந்தம் பிளாட்பாரத்திலேயே நிக்கிது” எனவும், அண்ணாவுடன் வந்திருக்கும் B.V. K. சம்பத். “அது சரிதாண்ணா சிவியார் சொல்றது! நாம தஞ்சாவூர்லெ இறங்காம, தஞ்சாவூர் வழியா வேற எங்காவது போனாக் கூட, நம்ம கருணானந்தம் கரெக்டா பிளாட்பாரத்துக்கு வந்துட்றாரே-” என்றார் வியப்போடு!

என்னை முன்னால் வைத்து இவர்கள் ‘தமாஷ்’ பேசிக் கொண்டே, தஞ்சாவூர் ரயிலடியைவிட்டு வெளியே வந்து, நேரே ‘கம்பெனி வீடு’ நோக்கிச் சென்றனர். நான் என் பங்காக என்னுடைய குறையைச் சொல்ல ஆரம்பித்தேன், இதுதான் தக்க தருணமென்று! “நான் ஒருத்தன். தஞ்சாவூர்க்காரன் இருக்கேனே—என்னைப் பார்க்கிறதுக்காகண்ணு அண்ணா எப்பவாவது விசேடமா வந்ததுண்டா?” என்றேன். “அட, நீ தஞ்சாவூர்க்காரன்கிற ஞாபகமே வர்றதில்லியே அய்யா! நீ எப்பவாவது இங்கே இருந்திருக்கியா இதுக்கு முன்னே? ஒன்னை தான் ஈரோட்டிலேயே பார்த்துக்கிறேனே"—உடனே அண்ணா என்னை மடக்க, நான் விடவில்லை. மேலும் தொடர்ந்து “சரி என்னெ விடுங்க. நம்ம டி. கே. சீனிவாசன், ஏ. கே. வேலன், கரந்தை சண்முகவடிவேல், இவுங்களோட பொன்மலை பராங்குசம் : எல்லோருமே தஞ்சாவூரிலே இல்லியா—ஆனா இப்ப கே. ஆர். ஆர். கம்பெனியை தஞ்சாவூர்லெ ஆரம்பிக்கச்சொல்லி, அதுக்காகவே நீங்க. அடிக்கடி தஞ்சாவூர் வர்றிங்க. எப்படியோ, நீங்க. வர்றதிலே எங்களுக்கு மகிழ்ச்சிதான் அண்ணா!” என்று முடித்துக்கொண்டேன். கம்பெனி வீடும் வந்து விட்டது. அது மானோஜி அப்பா வீதியில் பெரிய மாடிக் கட்டடம்.

வாயிலிலேயே பெருங் கூட்டம். நமது நடிகத் தோழர்கள் அனைவரும் ஆரவாரத்தோடு அண்ணாவை வரவேற்றனர். வாத்தியார் எம். எஸ். முத்துகிருஷ்ணன், நடிகமணி டி. வி. நாராயணசாமி, சிவாஜி கணேசன், பி. எஸ். தட்சணாமூர்த்தி, எஸ். எஸ். சிவகுரியன், வி. எஸ் . நடேசன், ஏ. எம். மருதப்பா, லெட்சுமிபதி. எம். என். கிருஷ்ணன், எஸ். சி. கிருஷ்ணன், டி.என். கருணாகரன், டி. என். கிருஷ்ணன், சிதம்பரம், ஜி. எஸ். மகாலிங்கம், மணி, கடைசியாக Booking clerk இராம. வீரப்பன்...இன்னும் பலர் இருந்தனர்.

“அண்ணா! புதுநாடகம் கொண்டு வந்துட்டீங்கள் அண்ணா!” எல்லாரும் கோரஸ் பாடினர். “அடுத்த வாரம்!” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு, அண்ணா மாடிக்கு விரைந்தார். வேறென்ன அவசரம்? அப்போது இம்மாதிரி ஓய்வாகச் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சீட்டாட்டம்தான் அண்ணாவுக்குப் பொழுதுபோக்கு! சாப்பிட்டு, நாடகம் பார்த்துவிட்டுத், திரும்ப வந்தபிறகும் தொடர்ந்து சீட்டாட்டம்!

“என்னண்ணா இது? துரங்க வேண்டாமா?’ என நான் இரங்கல் மொழியில் கேட்டேன். இனிமே துரங்கினா ரயிலைக் கோட்டை விட்டுவிடுவோம். இப்படியே கொஞ்ச நேரம் விளையாடினா, நேரே மறுபடியும் ரயிலடிக்குப் போயிடலாம். நீ விடிகிற வரைக்கும் என் பக்கத்திலே விழிச்சிக்கிட்டு இருந்தா, ஒனக்கு நாலணா இனாம்” என்று தன் தவற்றுக்கு ஒத்துழைக்க என்னிடம் பேரம் பேசினார் அண்ணா. “சரி வர்றதை விடுவானேன்” என்று பின்னால் உட்கார்ந்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். சீட்டாட்டம் எனக்குப் பிடிக்காத சங்கதி, எப்போதுமே! சம்பத்தும் நானும் ஏறக்குறைய செயின்ஸ்மோக்கர்கள் அப்போது!

“ஏனய்யா ரெண்டு பேரும் இப்படி ஒயாமெ சிகரெட்டெக் குடிச்சிக் கெட்டுப் போறீங்க?” என்று அண்ணா கடிந்து கொண்டார். நாங்கள் கேட்கவில்லை. ஊதிக்கொண்டுதான் இருந்தோம். அதன் பலனை இரு வருமே அனுபவித்தோமே! சம்பத் அற்ப ஆயுளில் போய் விட்டார். நான் 45 வயதில் சுத்தமாகப் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்பது மட்டுமல்ல; அருகில் யாராவது புகை பிடித்தால் - முடிந்தால் தடுப்பேன், அல்லது விலகிப் போய் விடுவேன்! அந்த அளவுக்கு சிகரெட் புகை எனக்கு வெறுப்பைத் தருகிறது இப்போது. ஆனால், குதிரை ஒடிப் போன பிறகு இலாயத்தை இழுத்து மூடியது போல, உடல் ஆரோக்கியம் கெட்டுப் போன பின்னர் இந்த ஞானோதயம் எதற்குப் பயன்படும்? என்னுடைய அறுபதாவது வயது தொடங்கியபோது தொண்டையில் பயங்கர நோய் வந்துவிட்டதே? காரணம் யாரும் சொல்லாவிட்டாலும், எனக்குப் புரிகிறதே? அண்ணா கண்டித்த போது கேட்காததுதான் காரணம் என்று!

வெகு விரைவிலேயே நமது நடிகத் தோழர்களின் நன்மைக்காக அண்ணா ‘ஓர் இரவு’ நாடகம் எழுதித் தந்தார்கள். தஞ்சை மாவட்டம் முழுவதும் அந்நாடகம் காணத் தினமும் தஞ்சை நகருக்குப் படையெடுத்தது புதுமையல்ல. தமிழகமே அங்கே வெள்ளமென விரைந்தது! புகழாதார் யார் “ஓர் இரவு” நாடகத்தை? அப்போது வருகை தந்த கழக முன்னணியினரை நண்பர் இராம. விரப்பனுக்கு அறிமுகம் செய்வது எனக்கு வேலை!

ஆனால், அண்ணாவின் “ஒர் இரவு” நாடகம் தஞ்சையில் ராமநாத செட்டியார் ஹாலில் அரங்கேறிய சமயத்தில், முக்கியமான இரு நடிகர்கள் கம்பெனியில் இல்லை. ஒருவர் நடிகமணி டி. வி. நாராயணசாமி, இன்னொருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அண்ணாவுக்கு அதனால் சற்று மனக்குறை ஏற்பட்டது!