உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணா சில நினைவுகள்/எங்கள் தொழிற்சங்கத்தில் சிங்கம் நுழைவு

விக்கிமூலம் இலிருந்து
எங்கள் தொழிற் சங்கத்தில் சிங்கம் நுழைவு

ண்ணா என்னிடம் காஞ்சிபுரத்தில் சொல்லியிருந்த வண்ணம், தஞ்சை ராமநாதன் செட்டியார் மன்றத்துக்குச் சரியாக மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். வரக்காணோம்! மெல்ல மெல்ல வெளியே வந்து, தெற்கு. நோக்கி நடந்து நடந்து, வண்டிக்காரத் தெரு வந்து விட்டேன். நாகப்பட்டினத்திலிருந்து அண்ணா அந்த வழி யில் தானே வரவேண்டும்! அதோ கார் வந்து விட்டது.1 அண்ணாவின் சம்பிரதாயப்படி ஒரு மணி நேரம் தாமதம். காரை நிறுத்தி ஏறிக் கொண்டேன்.

2.6.1957 ஆர். எம். எஸ். ஊழியர்களின் மூன்றாவது மாநில மாநாடு அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கே. துளசி அய்யா வாண்டையார் வரவேற்புக் குழுத்தலைவர். தஞ்சை ஆர். எம்.எஸ். கே. சண்முகம் ஏற்பாடுகளின் பொறுப்பாளர். அப்போது எங்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் P. H. V. S. பாண்டியன், அண்ணா இந்த மாநாட்டுக்கு வரவேண்டுமென்பதில் அளவில்லாத ஒரு பைத்தியமே கொண்டிருந்தார். இத்தனைக்கும் அவர் நமது இயக்கத்தில் நேரடித் தொடர்புடையவரல்லர். அதனாலேயே சென்னைத் தோழர்கள் வஜ்ரவேலு, கோவிந்தராஜன், வீராசாமி போன்றார் இவரை விரும்ப வில்லை எனினும் சுவரொட்டிகள் எல்லாம் அச்சடித்து, அரிய முறையில் விளம்பரங்கள் செய்து, பெருங் கூட்டம் திரட்டியிருந்தோம்.

மாநாட்டு மேடையில் அப்போதைய காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களான கிருஷ்ணசாமி கோபாலர், சாமி நாத மேற்கொண்டார் ஆகியோர் உள்ளனர். திருச்சி ஆர். எம். எஸ். ஊழியராயிருந்து கொண்டே அகில இந்திய அனைத்துத் தபால் தந்தி ஊழியர்களுக்கும் ஒப்பற்ற தலை வராகப் பல ஆண்டுகள் வீற்றிருந்த எங்கள் வழிகாட்டி ஏ. பி. துளசிராம் மேடையில். திருச்சி ஆர். எம். எஸ். சார்ட்டராயிருந்த நாவலாசிரியர் நண்பர் அகிலன் என்கிற பி.வி. அகிலாண்டம், மேடையில்.

இவர்களிருவரையும் அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். ஏற்கனவே அறிமுகமான காங்கிரஸ் சட்டமன்ற சகாக்களுடன் அண்ணா சகஜமாக உரையாடுகிறார். பல்லாயிரம் பார்வையாளர்களும், சட்டமன்ற உறுப்பின ராகியுள்ள அண்ணா இந்தத் தபால் ஊழியர் மாநாட்டில் என்ன பேசப்போகிறார் என்று ஆவலை முகத்தில் தேக்கி ஆர்வத்துடன் எதிர் நோக்கியுள்ளவர். என்னைத் தனக்குப் பின்புறம் உட்காரச் சொல்லி நான் என்னய்யா பேசுவது? என்கிறார் அண்ணா. நண்பர்களின் வேண்டு கோளின்படி அண்ணாவை அழைத்து வந்தேனே தவிர நானும் அதுவரை எங்கள் தொழிற் சங்கத்தின் தீவிர அலு வலராக இருந்ததில்லை. முன்புறமிருந்த எங்கள் பெரியவர் திரு A.F.T. அவர்களைப் பார்த்துச் சாடை செய்தேன். உடனே இரண்டொன்று குறித்துத் தந்தார். இன்னொரு புறமிருந்த அகிலனும் சில சொன்னார் அண்ணாவிடம்.

அண்ணாவுக்கு இது போதாதா? எழுந்து நின்றார் . எழுந்த கை தட்டலால் அதிர்ந்தது மண்டபம், தஞ்சை யிலிருந்து கொண்டு, தளபதி C. N. அண்ணாதுரை MA MLA டெல்லியிலுள்ள எங்கள் மத்திய அரசுக்கு அறை கூவல் விடுத்தார். இயந்திரங்கள் பழுதடைந்தால் உடனே ரிப்பேர் செய்கிறோமே. இந்த மனித இயந்திரங்கள் இரவிலும் பகலிலும் உழைத்துத் தேய்ந்து உருக்குலைந்து போகிறார்கள். இவர்களைப் பழுதுபார்க்க வேண்டாமா? இவர்களின் உடல்நலம் பேணிக் காப்பாற்றப்பட வேண்டாமா? இவர்களைச் சார்ந்திருக்கின்ற மனைவி மக்கள் உற்றார் உறவினர் சுற்றத்தார் யாவரும் இவர்களை மதிக்க வேண்டாமா?

இவர்கள் ஆரோக்கிய வாழ்வு பாதுகாக்கப்பட,குறைகள் தீர்க்கப்பட, service conditions மேம்பட நிறைய பொருள் தேவை; பணத்துக்கு நாங்கள் எங்கே போவது என்று மத்திய சர்க்கார் சொல்லுமேயானால், அதற்கு உண்டான வழி வகைகளை இவர்களையே கேளுங்கள் உங்களுக்குக் சொல்லித் தருவார்கள். வீண்விரயங்களையும் சேதாரங்களையும் மிச்சப்படுத்துங்கள். ஒட்டைகளை அடையுங்கள். ஊழல் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துங்கள். இதனால் மிச்சமாகும் பணத்தை இவர்களின் முன்னேற்றத் துக்குச் செலவிடுங்கள்!

இவை அனைத்துக்கும் முன்னே-இந்தத் தபால் தந்தித் துறையானது (ulility Service) யூட்டிலிட்டி சர்வீசா (commercial service) கம்மர்ஷியல் சர்வீசா என்பதைத் தெளிவுப்படுத்திவிடுங்கள். அது தெரிந்த பின்பு நாங்களே வழிமுறைகளைத் தெரியப்படுத்துவோம்.

அண்ணா ஒரு மணி நேரம் பேசினார். ஒழுங்குப்படுத்தப்பட்ட இருகரைகளினூடே ஒடும் தெளிந்த நீரோடை போல, எடுத்துக்கொண்ட தலைப்பினின்றும் ஒதுங்காமல் நகராமல் வழுவாமல் பிசகாமல் பிரச்சினைகளைப் புரிந்து தெரிந்து, தீர்க்கும் மார்க்கம் தெளிவுற வலியுறுத்தினார். அழைக்கச் சொன்னவர்களுக்கும், அழைத்து வந்த எனக்கும் ஏற்பட்ட பூரிப்பும் புளகாங்கிதமும் அளவிட முடியுமா? மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நான் நன்றி

கூட்டம் முடிந்த பின்னர் சிறிது பொழுது தங்குவதற்கு அண்ணாவை ராஜா சத்திரத்துக்கு இட்டுச் சென்றேன். அங்கே நண்பர் பி.சி. கணேசன் B.Sc.,B.T. காத்திருந்தார். அவரை அழைத்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நீங்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் சில வற்றைப் படித்தேன். இப்போது என்ன செய்து கொண் டிருக்கிறீர்கள்?’ என்று உசாவினார் அண்ணா.

“திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரி யராக இருக்கிறேன்”

“சரி, உங்களால் காஞ்சிபுரம் வந்து தங்க முடியுமா? கருணானந்தம் முன்பே சொல்லியிருப்பாரே! நான் ஒரு ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன். அதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.”

“இங்கு இருந்து கொண்டே எழுதியனுப்புகிறேனே! இருக்கிற அலுவலை விடுவதற்கு மனமில்லை.”

“அப்படியானால், காஞ்சிபுரத்திலே எங்கேயாவது இதே மாதிரி ஆசிரியர் அலுவல் ஏற்பாடு செய்கிறேனே! அப்போது வரலாமல்லவா?”

“நான் ஊருக்குப் போய் யோசித்துச் சொல்கிறேன்” என்று பி. சி. கணேசன் விடைபெற்றுப் புறப்பட்டார்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் அற்புதமாக எழுதத் தெரிந்தவர். எந்த நேரமும் அறிவுத்தாகமுடைய நண்பர்கள் புடைசூழ, விவாதம் செய்பவர். நடைமுறை யதார்த்த வாழ்வைப் புரிந்து கொள்ளாமல், கற்பனை உலகிலேயே அதிகம் சஞ்சரிப்பவர். அதனால், இவர் அண்ணாவின் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், பின்னாளில் சென்னைக்குக் குடியேறினார். அலையும் மனத்தினராய் நிலைபெற முடியாது தவித்தார். திராவிட இயக்கத்தால் அறிமுகமாகிப் பிறகு காங்கிரஸ்காரராக மாறித் திராவிட இயக்கங்களைச் சாடி - மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிவந்து-பழைமை விரும்பியாகத் தவறான நெறியில் மறுபடியும் சென்று-இப்போது என்ன கொள்கை என்பதே புரியவில்லை; வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைவூட்ட அவ்வப்போது ஏதோ நூல்கள் வெளியிடுகிறார். அந்தோ!

அண்ணா, ராஜாசத்திரத்திலிருந்து பி. சி. கணேசன் புறப்பட்டுப் போனதுமே சொல்லி விட்டார்: “இவர் சரிப்படமாட்டாரய்யா. நாம் போகலாம். நீ எ ன்னிடம் காஞ்சிபுரத்தில் இவரைப் பற்றிச் சொன்னபோதே கொஞ்சம் சந்தேகம் இருந்தது. நேரில் பார்க்கலாம் என்றுதான் உன்னிடம் சொல்லி, இங்கு அழைத்துவர ஏற்பாடு செய்தேன். சரி. பரவாயில்லை. போகலாம்” என்று.

எங்கள் மாநிலச் சங்கத்தின் பொதுச் செயலாளராக என்னைத் தேர்ந்தெடுக்கச் சென்னைப் பிரதிநிதிகள் முயன்றனர். அண்ணாவை வழியனுப்பிவிட்டு, அந்தத் தேர்வினின்றும் தப்பித்துக் கொள்ள, நான் அன்றிரவு முழுதும் கரந்தையில் போய் மறைந்து கொண்டேன்!