உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணா சில நினைவுகள்/வாழ்க வள்ளுவரும் குறளும்

விக்கிமூலம் இலிருந்து
வாழ்க வள்ளுவரும் குறளும்!


ம் வீட்டிலிருக்கிற சின்னக் குழந்தையெ-‘Dining table-ல் வந்து உக்காந்து சாப்பிடப்பா’ எண்ணு கூப்பிட்டா, அது கேக்காது. அது ஒக்காந்திருக்கிற எடத்துக்குத் தாயாரு போயி, சாதத்தை வாயிலே ஊட்டி விட்டா, ரெண்டு மடங்கு தின்னும்” என்று அண்ணா என்னிடம் சொன்ன போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்னண்ணா இது? திடீருண்ணு குழந்தெ சைக்காலஜி பத்திப் பேசுறீங்க! கையிலெ திருக்குறள் மாதிரி ஏதோ வச்சிருக்கீங்க!” என்று விசாரித்தேன்.

“இது திருக்குறள் தான்யா! நேத்து நம்ம தோழர் ஒருத்தர் கிட்டெ முக்கியமான, புழக்கத்திலேயிருக்கிற, ஒரு குறளில் பாதியெச் சொல்லி, மீதியைச் சொல்லும்படிக் கேட்டேன். அவரு திருதிருண்ணு முழிக்கிறாருய்யா அதனாலெதான், அவருமாதிரி ஆளுங்ககிட்டே எப்படித் திருக்குறளைக் கொண்டு போய்த் திணிக்கிறதுண்னு யோசிக்கிறேன்!” அண்ணா கவலையுடன் சொன்னார்.

“நான் ஏதாவது இது சம்பந்தமா செய்யனுமா அண்ணா?” -நான் கேட்டேன் அதே கவலை தொனிக்க.

ஆமாய்யா. அடுத்தபடியா தஞ்சாவூர்லெ நம்ம மாவட்ட மாநாடு வருதில்லெ, நீ ரெண்டு நாள் முன்னே அங்கே போயிடு. ஒரு நூறு திருக்குறளை நீயே செலக்ட் பண்ணிக்க. போஸ்டர் டைப்பிலே, அதை வெள்ளைத் தாளிலே ஒரு நானூறு ஐந்நூறு காப்பி பிரிண்ட் பண்ணிக்கோ. அப்புறம், பெரிய ஜவுளிக் கடைகளிலே கேட்டாக் கெடைக்கும். துணி பீஸ்களை மடிப்பதற்கு, நல்ல திக்கான ரெண்டு பவுண்டு அட்டையில்லே, Card board, அதெ உள்ளே வச்சிருப்பாங்க. அதை Cheap பான வெலைக்கு வாங்கலாம். அதை வாங்கி ஒரே சைசாக் Cut பண்ணி, திருக்குறள் வாசகங்களெ அது மேலே ஒட்டி, மாநாட்டுப் பந்தலுக்குக் கால் நடுவாங்க இல்லியா, அதுலே ஆணி அடிச்சி, இதையெல்லாம் ஒவ்வொரு காலுக்கு ஒண்ணா மாட்டிடு, வரக்கூடிய மக்கள் மணிக் கணக்கா சேர்ந்தாப்போலே பந்தலுக்குள்ளே உக்காந்திருக்கறப்போ, ஏதோ நாலு திருக்குறளையாவது அடிக்கடி படிச்சுப் படிச்சு, அது அப்படியே மனப்பாடம் ஆயிடும்!” என்றார், நீண்ட பிரசங்கம் போல,

“இது நல்ல ஐடியாதான் அண்ணா! கட்டாயம் இதை நானே செஞ்சுடறேன். நீங்க வந்து பாத்துப் பாராட்டுவீங்க!” எனச் சொல்லி விடை பெற்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மாவட்ட இரண்டாவது மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது. 1954-இல் என்று நினைவு(?) தஞ்சைத் தோழர்களான பெத்தண்ணன், பதி ஆகியோர் வணிகத் துறையிலுள்ள கழகச் செயல் வீரர்கள். எனவே அவர்களை அணுகி, அண்ணாவின் யோசனைகளை எடுத்துச் சொல்லி, திருக்குறள் அச்சடிக்க ஏற்பாடு செய்தேன். அதே போல் கெட்டியான அட்டைத் துண்டுகள் வாங்கி, ஒரே அளவில் தயாரித்துக் கொண்டேன். அண்ணா மாநாட்டுப் பந்தலைப் பார்க்க வருவதற்குள் எல்லாக் கம்பங்களிலும் வள்ளுவர் இருக்க வேண்டுமே!

நான் ஒருவனாகவே அந்தப் பணியை மேற்கொண்டேன். “என்னா பிள்ளை! எல்லாம் புதுசா சவுக்குத் தோப்பிலேயே போயி, பச்சையா வெட்டின கம்பு. ஈரமாவே இருக்கு. ஆணி அடிச்சா கஷ்டமில்லாமெ எறங்கும். செய்ங்க!” என்றார் பெத்தண்ணன். ஒரு பெட்டி நிறைய இரண்டங்குல ஆணிகள். பந்து பந்தாய்ச் சணல் கயிறு. ஒரு சுத்தியல். ஒரு கத்தி. ஒரு முக்காலி மொத்தம் 600 கால்கள் நடப்பட்டிருந்ததாகக் கணக்கிட் டேன். தொடங்கினேன் இரவு 8 மணிக்கு. பத்து அல்லது பன்னிரண்டு மணிக்குள் எல்லாத் தூண்களிலும் ஆணி யடித்து மாட்டி விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டேன்; சீக்கிரம் துரங்கப் போகலாம் என!

ஒவ்வோரிடமாக நகர்ந்து, ஏறி, இறங்கி, அடித்துக் கட்டி, மாட்டித் தொங்கவிட்டு...... நள்ளிரவு நேரம் ஆன பொழுது, செய்த வேலையைவிட, எஞ்சியுள்ளதே அதிகமா யிருந்தது! கலைஞர் என்னைத் தேடிக் கொண்டு பந்தலுக்கே வந்துவிட்டார். என்ன சார்? நாங்களெல்லாம் நீலவிலாஸ் பங்களாவிலே சண்முக வடிவேல் கூடத் தங்கப் போறோம். நீங்க வல்லியா துரங்க? அய்யய்யோ. என்ன சார் இது? கண்ணு ரெண்டும் ஒரேயடியாகச் சிவந்து கிடக்குது. விடிஞ்சா கூட இந்த வேலையெ உங்களாலெ முடிக்க முடியாது. அதுக்குள்ள ஜுரத்திலெ விழப் போறீங்க. சொல்லிட்டேன்! என்று எச்சரிக்கை விடுத்தவாறே அவரும் போய்விட்டார்.

மனத்தில் மீண்டும் ஓர் உறுதியும் உத்வேகமும் பிறந்தன. டீ, வெற்றிலை பாக்கு, சிகரெட் உதவியால் சுறுசுறுப்பை ஏற்றிக் கொண்டு, விரைவாகச் செயல்பட்டுப் பணியை நிறைவேற்றினேன். பொழுதும் புலர்ந்தது. போய்ப் படுத்து விட்டேன். மாநாட்டில் எனக்கென்ன வேலை?

தி.மு.க. ஆட்சி ஏற்பட்டபோது, கலைஞர் போக்கு வரத்து அமைச்சராக இருந்தாரல்லவா? அன்று சென்னை மாநகரில் ஒடிக் கொண்டிருந்த (பல்லவன் அப்போதில்லை) பேருந்துகளில் திருக்குறளை எழுதிவைக்க வேண்டும் எனத் தீர்மானித்த கலைஞர், என்னிடம் 200 திருக்குறள் தேர்ந் தெடுக்கும் பணியை ஒப்படைத்தார். நான் எழுதித் தந்தேன். அப்போது இயக்குநராயிருந்த திரு. டி. வி. வெங்கட்ராமன் அய். ஏ. எஸ். அவற்றை ஒரு நூலாக அச்சியற்றினார். பேருந்துக்கு ஒவ்வொன்றாகத் திருக்குறளை எழுதச் செய்தார்.

அண்ணா முதல்வரானதும், திரு. வேணுகோபால் சர்மாவை அவரிடம் அறிமுகப்படுத்தினோம். அவர் தீட்டிய திருவள்ளுவர் ஒவியத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்கிடச் செய்தோம். பேருந்துகளில் அந்தப் படமும் வைக்கப்பட்டது. இதில் கூட என் பங்கு இருந்திருக்கிறது. எப்படியென்றால், புகழ் செறிந்த இந்தத் திருவள்ளுவர் உருவத்தை, மாயவரத்தில் சில மாதங்கள் தங்கியிருந்த போதுதான் வரைந்தார் வேணுகோபால் சர்மா. எனக்கும் நண்பராகையால், அடிக்கடி அழைத்துக் காண்பித்துக் கருத்து அறிவார் அங்கேயே. பிற்காலத்தில் என்னிடம் மிக்க அன்போடும் நன்றியோடும் பழகினார் சர்மா.

அண்ணாவுக்குத் திருக்குறளில் இருந்த ஈடுபாட்டை நன்குணர்ந்த கலைஞர், கடற்கரைச் சாலையில் திருவள்ளுவர் சிலை அமைத்தார். உலகிலேயே ஈடும் எடுப்புமில்லாத நினைவுச் சின்னமாகச் சாதனை படைத்த குறுகிய கால அளவில், வள்ளுவர் கோட்டத்தைச் சமைத்தார். ஆசியாவிலேயே பெரியதொரு அரங்கம் இங்குதானே உள்ளது! தேருக்குள் திருவள்ளுவர் உருவம்! இந்தப் பணி நிறைவெய்தியபோது, இதன் உள்ளே செல்லும் உரிமையைக் கலைஞருக்கு அளிக்கவில்லை மத்திய அரசு. அதனால், இந்த வள்ளுவர் கோட்டம் நிறுவிடப் பெரும்பணியாற்றிய நானும், இதற்குள் இதுவரை நுழைந்திடவில்லை! எனினும், அண்ணன் வாழ்ந்த நுங்கம்பாக்கத்திலேயே வள்ளுவரும் வாழ்கிறாரே-என்ன பொருத்தம்!