அண்ணா சில நினைவுகள்/மாணாக்கரின் பேரெழுச்சி
எங்களுடைய திராவிட மாணவர் கழகத்தைக் கும்பகோணத்தில் 1.12.1943 அன்று அண்ணா துவக்கி வைத்தார். 5.12.43 “திராவிட நாடு” இதழில் ‘திராவிடர் கழகம்’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதினார். நீதிக் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றி யமைக்க வேண்டுமென அண்ணா அப்போதே முனைந்து விட்டார். திராவிட மாணவர் கழகத்தைத் துவக்கியதுடன் நாங்கள் சும்மா இருந்துவிடவில்லை. மாநில முழுதும் உள்ள நமது கொள்கைப் பற்று உடைய மாணவர்களைத் திரட்டிக் காண்பிக்க வேண்டும் என எண்ணினோம். முதலிலேயே பெரியாரை அழைத்து, நிகழ்ச்சி ஏதும் நடத்தினால், மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதாகப் புரளி செய்வார்கள் என்ற அச்சத்தை, அய்யாவிடமே தெரிவித்தோம். அதனால், பெரியார் இல்லாமல், முதலாவது மாணவர் மாநாடு கூட்டினோம்.
இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. இரண்டு நாள் இரவும் பகலும்-அதாவது 1943 பிப்ரவரி 19, 20 குடந்தை வாணி விலாஸ் தியேட்டரில் மாநாடு. தவமணி இராசனும் நானும் அலைந்து திரிந்து வசூலித்த 200 ரூபாய்தான் செலவு. இரண்டு நாளும் மைக்செட் வைத்தவருக்கு ரூ. 12/- தந்தோம்.
அண்ணா மூன்று நாள் எங்களோடு தங்கியிருந்தார். பெரிய திருவிழா போல் கூட்டம். இடைவிடாத சொற் பொழிவுகள். புதுக்கோட்டை திவானாக அப்போது இருந்த கான்பகதூர் பி. கலிபுல்லா அவர்கள், ரயிலில் தனி சலூனில் வந்து, ஸ்டேஷனிலிருந்து ஒரு மிகப் பெரிய காரில் வந்து இறங்கியதைக் கண்டதும் எங்களுக்குப் பூரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று. அண்ணா எங்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் கை குலுக்கி மகிழ்வு தெரிவித்தார், அரியதோர் உரை நிகழ்த்தினார். தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவுத்ஷா பி.ஏ., பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் முத்தையா, கு. மு. அண்ணல் தங்கோ, நடிகமணி டி. வி. நாராயணசாமி, நாவலர் பாரதியாரின் மகன் லட்சுமிரதன் பாரதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கோ. சி. பெரியசாமிப் புலவர், வி. அ. அரங்கசாமிப் புலவர், புலவர் நா. மு. மாணிக்கம் ஆகிய தமிழாசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களா யிருந்த டார்ப்பிடோ சனார்த்தனம் பி.ஏ., இரா. நெடுஞ் செழியன், க. அன்பழகன், கே. ஏ. மதியழகன் இவர்களைத் தவிர அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து இரெ. இளம் வழுதி, இரா. செழியன், பூ, கணேசன், மா. நன்னன், கி. தியாகராசன், த. மா. திருநாவுக்கரசு, திருவையாறு புலவர் கல்லூரி குழந்தையா, முருகையன் ஆகியோர் கலந்து கொண்டனர் சிறப்பாக.
அண்ணா முதல் நாளும் மாணவர் நெடுஞ்செழியன் இரண்டாம் நாளும் தலைமை ஏற்றனர். இரண்டு நாட்களி லும் அண்ணா விளக்கவுரை நிகழ்த்தியபோது, எல்லா மாணவர்களும் குறிப்பெடுத்துக் கொண்டனர். ஆரியர் யார், திராவிடர் யார், திராவிட நாடு ஏன்-என்பன போன்ற தெளிவுரைகள் வழங்கினார் அண்ணா.
பெரியார் எங்கள் மாநாட்டுக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியைப் படிக்க என்னால் முடியவில்லை. அப்போது பெரியாரின் எழுத்து (Handwriting) எனக்குப் பழகவில்லை. அதனால் க. அன்பழகனிடம் தந்து படிக்கச் சொன்னேன், அவரும் படித்தார்!
“அன்புள்ள தவமணிராசன் அவர்களுக்கு ஈ. வெ. ரா. வணக்கம்.
தங்கள் 16-ந் தேதி கடிதமும் அழைப்பும் இன்று கிடைத்தது. மிகுதியும் நன்றி செலுத்துகிறேன்.
தாங்கள் கூட்டியிருக்கும் மாநாடு, திராவிட மாணவர் கழகம் மிகவும் அவசியமானது என்பதுடன் திராவிட நாடு முழுவதும் இம்மாதிரி கழகங்களும் மாநாடுகளும் ஏற்படும்படி செய்ய வேண்டியது உங்கள் போன்றோரின் கடமை யாகும் என்பதை மிகவும் பரிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். சமீபத்தில் வரப்போகும் ஏப்ரல் வீவு நாட்களில் சில மாணவர்கள் ஒன்று சேர்ந்து திராவிட நாடு முழுவதும் சுற்றிக் கழகத்தின் இலட்சியத்தைப் பரப்பிப் பிரச்சாரம் செய்ய வேண்டியதும் முக்கிய கடமையாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
புதிய திராவிட நாட்டை ஆக்கவும், ஆக்க வேலை செய்யவும், திராவிடர்களுக்கு இன்று மாணவர்கள்தான் இருக்கின்றார்கள். மாணவர் களால் ஆனால் ஆனதுதான். இல்லாவிட்டால் நம்ப இடமில்லை. பெரியவர்களுக்கு வேறு பல பற்றுகள் கவர்ந்து கொண்டதால், ஒழிவில்லாமல் போய்விட்டது.
மாநாடு வெற்றியுடன் நடைபெற்று, வீரத்துடன் தொண்டாற்றப் பயன்படுமாக.
தங்கள் அன்புள்ள,
ஈ. வெ. ராமசாமி
இந்தக் கடிதத்தை அண்ணா எடுத்துச் சென்று, 3-3-44 “திராவிட நாடு” இதழில் வெளியிட்டார். மேலும், அங்கு சொற்பொழிவாற்றிய மாணவர்களின் உரைகளை, அவர் களையே எழுதித் தரச்சொல்வி, அவற்றையும் ‘திராவிட நாடு’ இதழில் வெளியிட்டார், தொடர்ச்சியாகச் சில வாரங்கள்.
இந்த மாநாட்டை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் போதே, எங்கள் கல்லூரி நிர்வாகம் எங்களை மிரட்டத் தொடங்கி விட்டது. Students should not take active part in party or communal politics என்று, சென்னை கல்விச் சட்டம் ஒன்றைக் காண்பித்து, அதில் எங்களிடம் கையெழுத்து வாங்க, எங்கள் Vice principal மார்க்க சகாயம் செட்டியாரே நேரில் வந்தார். அண்ணாவிடம் யோசனை கேட்டேன். “மாநாடு முடிந்த பிற்பாடு கையெழுத்துப் போடுவதாகச் சொல்லிவிடு!” என்றார் அண்ணா.
இந்த மாநாட்டின் வெற்றி பெரிதும் பெரியாரைக் கவர்ந்துவிட்டது. அடுத்த வாரம் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் நான் அய்யாவைச் சந்தித்தபோது மகிழ்வுடன் பேசி, “கஜேத்திரனை எல்லா ஊருக்கும் அனுப்பறேன். காலேஜ் மாணவர்கள் எத்தனை பேர் முடிந்தாலும் ஈரோட்டுக்கு வாருங்கள்” என்றார். பெரியாரையும் பின்னர் எங்கள் கல்லூரிக்கே அழைத்து 1.4.44 அன்று சொற்பெருக்காற்றிடச் செய்தோம்.
புராணப் பிரசங்கம் செய்யத் தொடங்கியிருந்த கிருபானந்த வாரியார், தமது கதாகாலட்சேபத்தின் ஊடே ‘இங்கே பெரியார், என்று ஒரு நச்சு ஆறு ஒடுகிறது. அதை ஒடவிடக் கூடாது’ என்பதாகப் பேசினாராம். இவரை இம்மாதிரிப் பேசவிடக் கூடாது என்று முதன்முதலாகக் குடந்தை மாணவர்கள் முடிவு செய்தோம்!
“வாரியாரே விளக்குமின்” என்ற தலைப்பில் 16 கேள்விகளை நான் எழுதி அச்சிட்டேன். கும்பேசுவரன் கோயிலுக்குள் ஏராளமான தொண்டர்களுடன் சென்று, கேள்வித் தாளை வாரியாரிடம் தந்து, பதில் சொல்லிவிட்டுப் பிறகு பேசுமாறு சொன்னோம், மறுத்தார். அவ்வளவுதான்! பெரிய குழப்பம்!! வாரியார் போன இடம் தெரியவில்லை! முன்னும் பின்னும் பாதுகாப்புடன் வெளியேறி விட்டார்! பிரசங்கம் செய்யவில்லை!
அண்ணாவிடம் எங்கள் பிரதாபத்தைச் சொல்லி, அந்தக் கேள்வித்தாளையும் கொடுத்தேன். “நன்றாகவே எழுதியிருக்கிறாய். இதற்கு எந்த ஆத்திகனாலும் ஒழுங்காகப் பதில் சொல்ல முடியாதுதான்!” என்று பாராட்டியதோடு, அதை அப்படியே “திராவிடநாடு” ஏட்டிலும் பிரசுரித்தார் அண்ணா.
மாணவர் எழுச்சிக்கு மூல காரணகர்த்தாவும் உற்ற துணைவரும் அண்ணா தானே!