உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணா சில நினைவுகள்/அனுமதி வழங்கப்பட்டது, வா!

விக்கிமூலம் இலிருந்து
அனுமதி வழங்கப்பட்டது, வா!

திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணா அவர்களுக்குக் கருணானந்தம் எழுதிக் கொண்ட விண்ணப்பம். நாளை ஈரோட்டில் நடைபெற இருக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் நானும் ஒரு பார்வை யாளராக உள்ளே அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கவனிக்க எனக்கு அனுமதி அளிக்க வேண்டுகிறேன். என்னுடன் மாயவரம் சின்னய்யா மகன் காந்தியும் வருவார். தங்கள் அன்புள்ள S. கருணானந்தம் (முகாம் திருச்சி). பெறுநர் அறிஞர் அண்ணா அவர்கள், தி.மு.க. பொதுச் செயலாளர், மே|பா தோழர் E.V.K. சம்பத், பழைய ரயில்வே ஸ்டேஷன், ஈரோடு-இவ்வகையிலான ஒரு Inlaind letter எழுதித் திருச்சியில் RMS வண்டியில் தபாலில் சேர்த்தேன். அது அடுத்தநாள் காலையில் ஈரோடு சேர்ந்துவிடும்.

நானும் காந்தியும் திருச்சியில் இருக்கிறோம். இன்றிரவு இங்கென்ன அலுவல் எங்களுக்கு? நண்பர் எம். எஸ். மணி பங்கேற்கும் “அரும்பு” என்ற நாடகம் தேவர் ஹாலில் நடைபெற இருக்கிறது; மு கருணாநிதி தலைமையில்; நடிகர் எம். ஜி. ராம்சந்தர் முன்னிலையில்-என்று விளம்பரங்கள் செய்யப் பெற்றுள்ளன. இதைப் பார்த்துவிட்டுக், கலைஞருடன் சேர்ந்து ஈரோடு செல்வதெனத் திட்டம் தீட்டித் திருச்சிக்கு வந்திருக்கிறோம்.

அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கியவுடனே, கோவை மாவட்டத்தில் பெரியதொரு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள். அத்தருணத் தில் நான் ஒருநாள் ஈரோடு சென்றிருந்தன். சம்பத்து வீட்டுக்கு அண்ணா அவர்கள் வந்தபோது, காலை மலரும் வேளை. உடன் நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமியும், பெத்தாம்பாளையம் பழனிச்சாமியும் இருந்தனர். “இந்த நேரத்தில் எப்படி அண்ணா வந்தீங்க?” என்றேன் வியப்புடன். “நீ என்னய்யா நெனச்சே என்னை! தேர்தல் கூட்டம் மாதிரி விடிய விடியப் பொதுக்கூட்டம் நடக்குது இப்போ. சலிக்காமெ பேசிக்கிட்டுவர்றோம்” என்று சொல்லி, அணிந்திருந்த சில்க் சட்டையைக் கழற்றினார். “எப்போ அண்ணா சில்க்சட்டை போட ஆரம்பிச்சிங்க?“ என்றதற்கு “அட, நீ ஒண்ணு. நம்ம ராமசாமி யோட சட்டை. பயங்கர டூர்லே என் சட்டையெல்லாம் அழுக்காப் போச்சு. இங்கதான் துவைக்கணும்!” என்றார்.

“பாத்திங்களாண்ணா! எங்கே சுத்தினாலும், அழுக்கைப் போக்க ஈரோட்டுக்குத்தான் வந்தாகனும் நீங்க! ஆமா ; இவ்வளவு சுறுசுறுப்பை இப்ப காட்டுற நீங்க, இதிலே பத்திலே ஒரு பங்கைப் போன வருஷம் காட்டியிருந் தீங்களானா, அய்யா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார். பிரிஞ்சி போற நெலமையும் வந்திருக்காதே!” என்னும் போது என் கண்கள் கலங்கி, நீர் முத்துகள் தோன்றின.

“அது கிடக்கட்டும்! அய்யாவைப் பார்த்தியா! என்ன சொன்னார்?”

“பாத்தேண்ணா! ஆனா, ஒங்களைப்பத்தி அவர்கிட்டே சொல்றதில்லே நான்...... ?“

பழைய நினைவுகளில் முழ்கியவனாய், 2, 3 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றவன், “அரும்பு” நாடக இறுதியில் கலைஞர் மேடைக்குப் போனதும், சுயபிரக்ஞை பெற்றேன். என்னுடைய நெருங்கிய நண்பர் எம். ஜி. ஆர். புரட்சி நடிகர். மேலே கதராடை அணிந்திருக்கிறாரே தவிர, அவர் உள்ளம் கருப்புச் சட்டை தான் அணிந்திருக்கிறது. கோவையில் பல மாதங்கள் ஒன்றாகத் தங்கி, உண்டு, உறங்கி, குதிரை வண்டியில் சென்று, சென்ட்ரல் ஸ்டுடியோ வில் எங்கள் பொழுதைச் செலவிட்டிருக்கிறோம். தேசிய உணர்வு படைத்த அவர், எனது திராவிடக் கொள்கைகளை அப்போது ஏற்றுக்கொள்ளா விட்டாலும், பெருந்தன்மையுடன் கேட்டுக் கொள்ளுவார். அதன் பயனாக அவர் இப்போது நம்முடன் நெருங்கி வந்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர் தீவிரமாக இணையும் நாள் அதிக தூரத்தில் இல்லை. அந்த நாள் எனக்கு ஒரு வெற்றித் திருநாள் ஆகும்!” என்ற போக்கில் தலைமையுரை அமைந்தது. இரண்டு ஆண்டுகளில் அவர் கழகத்தில் சேரும் மனப்பக்குவம் பெற்றவராய், 1953-ல் லால்குடியில் அன்பில் ஏற்பாட்டில் நடைபெற்ற திருச்சி மாவட்ட இரண்டாவது தி.மு.க. மாநாட்டில் பங்கேற்றார். அப்பொழுது சிதம்பரத்தில் வில்லாளன் ஏற்பாட்டில் நடந்த தென்னார்க்காடு மாவட்ட இரண்டாவது தி.மு.க. மாநாட்டில் கண்காட்சியைத் திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர் அவர்கள்.

திருச்சியிலிருந்து பின்னிரவில் புறப்பட்ட ரயிலில் ஏறி ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். திரைப்படங்களில் பார்த்த எம். ஜி. ராம்சந்தர் என்ற நடிகரை எண்ணிப் பார்க்கிறேன். எங்களுக்கெல்லாம் தெரியும் காலகட்டத்தில், நமது இயக்க மேடைகளில் முதன்முதல் ஏறிய நடிகர், நமது நடிகமணி டி. வி. நாராயணசாமி. அவர் அப்போது சில பாடல்களும் பாடுவதுண்டு. அண்ணா “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்” என்ற ஒரு வரலாற்று நாடகத்தை எழுதியபோது, அதற்கு முன்பே “சந்திரோதயம்” எனும் சமூக நாடகத்தை அண்ணா தமிழகத்தில் ஒரு சுற்று நடத்திவிட்டார். சிவாஜி ஆரிய சூழ்ச்சிக்கு அடிபணிந்தானாயினும், அவன் மனச் சாட்சி அவனை எப்படி இடித்துக் காண்பித்திருக்கும் என்ற எண்ணத்துக்கு ஒர் உருவமாய் அண்ணா, சந்திரமோகன் பாத்திரம் படைத்தார்கள் கற்பனையாக உணர்ச்சிப் பிழம்பான அவ்வேடத்திற்கு,அன்றே பொருத்தமானவராக D. W. N, விளங்கினார். சிவாஜி பாத்திரத்துக்கு நடிகர் தேர்வு நடந்த சமயத்தில், எம். ஜி. ஆர். பொருத்தமா யிருப்பாரென அவரை D. V .N. அணுகியபோது M. G. R, இயலாமை தெரிவித்து விட்டதாக, D. W. N. என்னிடமே சொன்னது உண்டு. அதன் பிறகே அண்ணா அதுவரை பெண்வேடமிட்டுவந்த ஒருவரை சிவாஜி பாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத்துத் தயாரித்தார் - அவர் பெயரே சிவாஜி கணேசனாய் மாறிச் சரித்திரம் படைத்தது தமிழகத்தில் -ஏன்? உலகத்தில்-என்பது கண்கூடான உண்மை யன்றோ!......

ஈரோட்டில் இறங்கிச் சம்பத்து வீடு சென்றோம். அருகிலேயே பந்தலிட்டு, நாற்புறமும் அடைப்பு. அங்குதான் பொதுக்குழு. 1951-ல் அது போதுமானதாயிருந்தது. சம்பத்து வீட்டில் ஏராளமான கோழிகள் உயிரை விட்டுக் கொண்டிருந்தன. பின்னால் பிரியாணி தேக்சாக்கள். ஈ. வெ. கி. செல்வனுடன் சேர்ந்து நான் அவற்றைப் பார்த்துக் கொண்டே நின்றபோது, “யாருய்யா லெட்டர் போட்டுப் பர்மிஷன் கேட்டது. பர்மிஷன் கிராண்டட் (Permission granted.) வா உள்ளே! ஏன்யா; நீ கூட இங்கே அனுமதி கேட்டுதான் வரணுமா?” என்றார் அண்ணா; கையில் என் கடிதம் இருந்ததைப் பார்த்தேன்.

“இல்லையண்ணா! இதுதான் நேர்மையான முறை, காரணம், நான் அரசு ஊழியன், தி. மு. க. உறுப்பினர் இல்லை. மேலும், அய்யாவிடம் இன்னும் தொடர்பு வைத் திருப்பவன். அய்யாவின் ஒற்றனாயிருப்பேனோ என்று, என்னைச் சரியாகப் புரியாதவர் யாராவது இங்கு நெனைக் கலாமில்லையா?“ என்றேன்.

சிறிது நேரம்தான் பொதுக் குழு நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் கோழி பிரியாணி வாசனை மூக்கில் அவஸ்தை உண்டாக்கவே, அண்ணாவிடம் சாடை செய்துவிட்டு, வெளியே போய்விட்டேன். பொதுக் குழுவில் நடந்த மீதிச்செய்திகளை நமது என். வி. நடராசனிடம் கேட்டால் சொல்லி விடுவார் என் காதோடு!