அண்ணா சில நினைவுகள்/குற்றாலம் கண்டேனா?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
குற்றாலம் கண்டேனா?

"குற்றாலத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதிக் கொடு. பத்திரிக்கையில் வெளியிடவேணும்” என்று அண்ணா என்னிடம் கேட்டார்கள். “குற்றாலத்துக்கும் நமக்கும் என்ன தொடர்பு? அப்படியே இருந்தாலும், இப்பொழுது அதை நமது இதழில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயத் தேவை என்ன?” என்று கேட்க நினைத்தேன். ஆனால், கேட்கச் சந்தர்ப்பம் அனுகூலமாயில்லை. “சரியண்ணா! எழுதித் தருகிறேன்” எனக் கூறிவிட்டு, ஊருக்குத் திரும்பினேன்.

அண்ணா கொடுத்த இந்தத் தலைப்பு என்னை மிகவும் சோதனைக்குள்ளாக்கி விட்டது! காரணம், குற்றாலத்தைப் பற்றிய அனுபவம் எனக்குக் கிடையாது! ஒரு முறை கலைஞ ரோடு சென்று,ஓர் இரவு அங்கே தங்க நேர்ந்தது. அப்போது கூட விடுதியின் குளியலறையில், வெந்நீரில் குளித்தேன்; அருவிக்குச் செல்லவில்லை.

அண்ணா சொன்னதனால், குற்றாலத்துக்கு நேரில் சென்று, பார்த்து வந்து எழுதலாம். ஆனால், இது ஒரு கவிஞனுடைய கற்பனைத் திறனுக்கு இழுக்கு அல்லவா? நீள யோசித்தேன்!

மாயூரத்தில் என்னுடைய அலுவலக நண்பன் நாக ராசனிடம் விசாரித்தால் என்ன? அவர் குற்றாலம் அருகில் உள்ள தென்காசி ஆர். எம்.எஸ். அலுவலகத்தில் வேலை பார்த்திருக்கிறார். இந்த இடத்தில் அலுவலில் இருந்த போதுதான், அகிலன் ‘பாவை விளக்கு’ நாவல் எழுதியதாகக் கேள்விப்பட்டிருந்தேன். நாசராசன் சொன்ன செய்திகளின் அடிப்படையில் எழுதத் தொடங்கினேன்.

மாயூரத்திலிருந்து சென்னைக்குப் பத்து மணி நேரம் நான் வேலை செய்யும் ரயிலின் ரன்னிங் டைம்! சாவகாச மாகச் சிந்தித்து, ஒடும்போது பென்சிலால் எழுதிக் கொண்டே வந்து, எக்மோரில் இறங்கியதும் பேனாவால் காப்பி செய்துவிடுவது வழக்கம். இந்தக் குற்றாலம் கண்டேன்’ என்ற செய்யுளையும் அவ்வாறே எழுதினேன். காணாததைக் கண்டதாகப் பொய் சொன்னாலும், பொருத்தமாகவே இருக்கிறதைப் பார்க்க முடியும்:–

தனிநடந்தேன் நீண்டவழி; தள்ளாடிச் சோர்ந்தேன்!
இனி நடக்க அஞ்சி, இருகால்கள் கெஞ்சுகையில்...
சிந்தை குளிப்பாட்டும் சில்லென்ற மென்தென்றல்
வந்தென் உடல்வருடி வாட்டத்தை ஒட்டிடவே;-
நேர்கிமிர்ந்து பார்த்தேன், கிகரில்லா ஒவியந்தான்!
யார் வரவை நோக்கும் இளமங்கை என் எதிரில்?
மார்பகத்தை மூடுகின்ற வண்ணத் துகில்தானோ
கூர்முகட்டைப் போர்த்திக் குவியும் முகிற்கூட்டம்!
வெண்சங்கு போல மிளிரும் கழுத்தினின்று
கண்கவரும் நெஞ்சுக் கணவாயின் மீதொளிரும்
தென்பாண்டி நன்முத்தைச் சேர்த்த சரக்தானோ
முன்பாக வீழ்ந்து முறுவலிக்குங் தேனருவி!

குற்றாலத்திலேயே நீண்ட காலம் குடியிருந்தவன் எழுதியது போலவே தோன்றுகிறதல்லவா? இடையில் சில வரிகளுக்கு அப்பால் தொடர்கிறேன்:–

விந்தைமிக ஆல விழுதிறங்கும் பான்மையோ,
முந்திக் கவிழ்ந்திட்ட முன்கை விரலைந்தோ,
பண்டைத் திராவிடத்தாய்ப் பாலில் கிளைத் தெழுந்த
வண்டமிழும் கன்னடமும் வாழ்தெலுங்கும் மேன்மை
குன்றா மலையாளம் கொஞ்சும் துளுவும் போல
ஒன்றிற் சுரந்தும் உருவிற் பலவாகி,
ஆடிச் சலசலக்கும் அய்ந்தருவிக் காட்சிதான்
தேடிக் களிக்கும் தெவிட்டாச் சுவையன்றோ?

குற்றால அருவியிலும் கொள்கை மணம் வீசுகிறதா? பிறகு சிலவரிகள்; இறுதியாக முடிக்கும்போது

ஒருமைப்பா டென்னும் பெருமை முலாம்பூசி,
வெள்ளியினாற் செய்த வெகுநீளச் சங்கிலியால்
அள்ளியிந்தத் தென்னாட்டை ஆரப் பிணைத்தது போல்...
ஓங்குமலை மீதிருந்து ஓடி வரும் வெள்ளருவி
நீங்கா கினைவொன்றை செஞ்சில் நிறுத்தியதே!
நீங்களங்கு செல்லும் நிலைமை நேர்ந்திட்டால்...
தாங்கிடுவீர் என்கருத்தைச் சார்ந்து!

என்று எழுதினேன். இவ்வளவு கற்பனை ஊற்றும் அருவியாய்ப் பொழிய, நான் சிரமப்பட்டு எழுதி எடுத்துக் கொண்டு போய் அண்ணாவிடம் கொடுத்தபின்னர் “ஏன் அண்ணா! குற்றாலம் பற்றி இப்போது எழுத வேண்டிய அவசியம் என்ன?” என்று ஆவல் மீதுறக் கேட்டேன். அண்ணா சொல்லிய பதில் என் ஆர்வக்கோட்டையைத் தரைமட்டமாகத் தகர்த்து எறிந்தது. என்ன? “ஒண்ணுமில்லேய்யா! குற்றாலம் அய்ந்தருவியோட (Block) பிளாக் ஒண்னு சும்மா கிடைச்சுது. அதை உபயோகப்படுத்தலாமேண்ணுதான் சும்மா ஒன்னைக் கவிதை எழுதச் சொன்னேன்” என்றார் அண்ணா சிரிப்புக்கு இடையே, “இது நல்லா இருக்கு அண்ணா! குதிரைச் சவுக்கு சும்மா கிடைச்சதுண்ணு ஒருத்தன் குதிரை வாங்கிய கதைபோல” எனச்சொல்லி, நானும் ஒர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தேன்.

எப்படி அண்ணாவின் சிக்கனம்! கவிஞர் கண்ணதாசன், “அண்ணா (Border) பார்டர்” என்று கேலி செய்வார். அது என்னவெனில், அண்ணா, பத்திரிக்கையில் தாம் வெளியிடும் கட்டுரைத் தலைப்புகளுக்குத், தனியே பிளாக் செய்யமாட்டார். பார்டர்களை அழகாக அடுக்கி, இடையில் தலைப்புக்கான எழுத்துகளை (Compose) அச்சுக்கோத்துப் போடச் சொல்லிவிடுவார். இவை யாவும் பெரியாரின் எளிய வழிமுறைகளாகும்.