உள்ளடக்கத்துக்குச் செல்

சாயங்கால மேகங்கள்/2

விக்கிமூலம் இலிருந்து

2

குலையில் வாழைக்காய் முற்றியவுடன் தானாகப் பழுப்பதில்லை. தாறு வெட்டிச் சூட்டில் மூடி வைத்துப் பழுக்கச் செய்வார்கள். அதைப்போல் சமூகத்தின் கொடுமைகளாகிய சூட்டில் வெந்துதான் சிலர் வாழ்வில் கனிகிறார்கள்.

அத்தனை அவசர அவசரமாகப் பறந்துபோயும் அவன் செய்வதற்கு அங்கு எதுவும் மீதமிருக்கவில்லை, அம்மா போய் விட்டாள். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதயநோய் எல்லாமே அவளைத் தொல்லைப் படுத்தி வந்தன. அத்தனை தொல்லைகளிலிருந்தும் இனி அவளுக்கு நிரந்தர விடுதலை.

அங்கே ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்க்கிறவரை கூடத் தாங்கவில்லை, பாதி வழியிலேயே உயிர் பிரிந்து’ விட்டது, ஆஸ்பத்திரி வாசல் வரை கொண்டு போய் விட்டுத் திரும்பினதுதான் மிச்சம், ஸ்டிரெச்சரில் வைத்து வார்டுக் குள் கொண்டு போவதற்காகத் தூக்கும் போதே சொல்லி விட்டார்கள். ‘உள்ளே அட்மிட் செய்து வார்டில் சேர்த்து இவள் இறந்து போயிருப்பதை அவர்கள் கண்டுபிடித்து, மார்ச்சுரிக்கு அனுப்பி உடலைத் திரும்பப் பெற அல்லாட வேண்டியிருக்கும்'-- என்று மற்றவர்கள் முன் கூட்டி எச்சரிக்கவே செய்தார்கள். மரணம் உலகத் தொல்லைகளிலிருந்து விடுதலை என்றால் மார்ச்சுரி மீண்டும் ஒரு சிறைதான். அம்மாவின் உடலைக் குப்பன் பையன் வீட்டுக்குத் திருப்பிக் கொண்டுபோக இருந்தபோது பூமிநாதன் அங்கே போய்ச் சேர்ந்திருந்தான். குப்பன் பையனோடு பேட்டையைச் சேர்ந்த வேறோர் ஆளும் இருந்தான். அவர்கள் இருவரும் மேலே செய்வதறியாது திகைத்துப் போயிருந்தனர். பூமியைப் பார்த்ததும்தான் அவர்களுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது.

“பாதி வழியிலேயே இட்டார்ரப்பவே மூச்சுப் பிரிஞ்சிடிச்சி.”

துயரம் கொப்புளிக்கும் குரலில் அவர்கள் இருவரும் பூமியிடம் கூறினார்கள். பூமியின் இதயத்தை ஏதோ ஒரு தாங்க முடியாத இழப்பு உணர்ச்சி இறுக்கிப் பிழிந்தது. படிப்பும் வளர்ச்சியும் நாகரிகமும் அவனை வாய்விட்டு அழ முடியாதபடி தடுத்திருந்தாலும் நெஞ்சுக்குள் உள்ளுணர்வு கோவென்று . கதறியழுதது. பாசப் பிணைப்புக்கள் குமுறித் தவித்தன. நினைவு தெரிந்து வயதும் பொறுப்பும் வந்த பின் அவன் காணும் முதல் மரணம் இது. சிங்கப்பூரில் தந்தை இறந்தபோது அவன் நினைவு தெரியாத வயதுச் சிறு பையன் மரணம் என்பதின் இழப்பு உணர்ச்சியும் அதன் ஆழங்களும் புரியாததும் பதியாததுமான பருவம் அப்போது.

இப்போது அப்படி இல்லை. நெஞ்சில் ஏதோ இருளாகவும் கனமாகவும் வந்து சூழ்ந்துகொண்டு அழுத்துவது போல் உணர்ந்தான் பூமி. ஏதோ ஒரு வகைத் தனிமை சுற்றிலும் கவிவதாகத் தோன்றியது.

அவனுக்குத் தாயின் உடலை வீட்டிற்குக் கொண்டு போக வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. அங்கே பூமிக்குச் சுற்றம், உறவு என்று யாரும் கிடையாது. அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்றும் எவரும் இல்லை. குப்பன் பையனும் கன்னையனும் போய் அவர்கள் பேட்டையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் மரணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து ‘டெத் சர்டிபிகேட்’ வாங்கி வந்தார்கள்.

அவரவர்களுடைய ஆட்டோவை பக்கத்திலேயே ஒரு பெட்ரோல் பங்க்கில் சொல்லி ‘பார்க்’ செய்துவிட்டுத் தெரிந்த டிரைவர் ஒருவனுடைய டாக்ஸியில் பிரேதத்தை கிருஷ்ணாம்பேட்டைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். அவர்கள் குடியிருந்த அந்தப் பேட்டையில் அம்மாவுடன் பழகிய நாலைந்து பெண்கள் அழுகையும் புலம்பலும் ஒப்பாரியுமாக மயானத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களில் தளர்ந்த மூதாட்டி ஒருத்தி.

"அம்மான்னு சொல்லி இந்தப் பிள்ளை
அழைக்க ஆளில்லாமல் போயிட்டியே”.

என்று ஒப்பாரி இயற்றித் தன்னருகே இருந்த பூமியைச் சுட்டிக் காட்டி அழுதாள்.

கொள்ளி போடும்போது பூமிக்கும் கண்கலங்கிவிட்டது தள்ளாடிய பூமியைக் கன்னையன் தாங்கிப் பிடித்துக் கொண்டான். கிருஷ்ணாம்பேட்டையிலிருந்து அவர்கள் வீடு திரும்பும் போது பிற்பகல் மூன்றரை மணிக்கு மேலாகியிருந்தது.

"நாலு நாளைக்கு நீ வண்டி ஓட்ட வேண்டாம். குமாரு வண்டி ரிப்போருக்காக ‘ஷெட்டுலே’ நிக்கப் போவுது. உன் வண்டியை நாலு நாளைக்கி அவன் ஓட்டட்டும்” --என்று கன்னையன் யோசனை கூறினான். கன்னையனின் யோசனையைப் பூமி மறுக்கவில்லை.

மைலாப்பூர் வீரப்பெருமாள் முதலித் தெருவில் ஊடுருவும் ஒரு சிறிய சந்தில் பூமிநாதன் வசித்து வந்தான். சென்னை நகரத்தின் ஆயிரக்கணக்கான ஆட்டோ டாக்ஸி டிரைவர்களில் படித்தவன்--பட்டம் பெற்றவன் என்பதாலும், சிங்கப்பூரில் இருந்தபோதே, கராத்தே-குங்ஃபூவில் நல்ல தேர்ச்சி பெற்றவன் என்பதாலும் பூமிக்கு நண்பர்களும் தோழர்களும் நிறையவே இருந்தனர். சிலர் அவனிடம் கராத்தே-குங்ஃபூ ஆகியவற்றைக் கற்றும் வந்தனர். தகவல் தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக அவனைத் தேடித் துக்கம் விசாரித்து விட்டுப் போக வந்தனர். இரவு பதினொரு மணி பன்னிரண்டு மணி வரை கூட அந்தக் குறுகிய சந்தில் ஆட்கள் தேடி வந்து அவனது துயரத்தில் பங்கு கொண்டார்கள்.

அன்றிரவு அவனைத் தனியே விட்டுவிடக் கூடாதென்று கன்னையனும் குப்பன் பையனும் அங்கேயே படுத்திருந்தனர், அவர்கள் குறட்டை விட்டுத் தூங்கிய பின்னும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. முன்னும் பின்னுமாகத் தொடர்பின்றி மனம் நினைவுகளில் புரண்டது.

காலையில் காபி அருந்த உணவு உண்ண எல்லாவற்றுக்கும்- ‘அடேய் பூமி!’ என்று அன்பொழுக அழைக்கும் அந்தப் பழகிய குரலை இனி அவன் கேட்க முடியாது. அந்தக் குரலையும் குரலுக்குரியவளையும் அவனும் உலகமும் இழந்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டன. ‘அன்னம் ஊட்டிய தெய்வ மணிக்கரம்’ என்ற பாரதியாரின் கவிதை வரி நினைவுக்கு வந்தது. கூடவே காலையில் அருள்மேரி கான்வென்ட் முகப்பில் சந்தித்த அந்தப் பெண் சித்ராவும் நினைவுக்கு வந்தாள். பாரதியின் நினைவும் கவிதையின் நினைவு வரும் போதெல்லாம் அவளும் நினைவுக்கு வந்தாள். அவளது தலைகுனியாத நிமிர்ந்த நடையும், நேரான பார்வையும் படிப்பும் நினைவுக்கு வந்தன. சித்ரா என்கிற அந்த அழகிய பெண் அவனைப் பற்றி என்ன நினைத்தாளோ நினைக்கவில்லையோ, அவன் அவளைப் பற்றி எல்லாமே நினைத்தான். இளம் பெண்கள் உடற் கட்டும் அழகும் உள்ளவர்கள். எதனையோ நாட்களில் எத்தனையோ பேர் அவனுடைய ஆட்டோவில் ஏறி இருக்கிறார்கள், அவர்களை எல்லாம் பற்றி அவன் இவ்வளவு தூரம் நினைத்ததில்லை. பொருட்படுத்தியதுமில்லை. இரவு மணி இரண்டு. இன்னும் அவனுக்கு உறக்கம் வரவில்லை, ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்று ஒரு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை அலமாரியி லிருந்து எடுத்தான், பக்கங்கள் புரண்டன.

“குலையில் வாழைக்காய் முற்றியவுடன் தானாகப் பழுப்பதில்லை; தாறு வெட்டிச் சூட்டில் மூடி வைத்துப் பழுக்கச் செய்வார்கள், அதைப் போல் சமூகத்தின் கொடுமைகளாகிய சூட்டில் வெந்துதான் சிலர் வாழ்வில் கனிகிறார்கள்,"-என்று ஓர் இடத்தைப் படித்ததும் மீண்டும் தாயின் நினைவு வரப் பெற்றுப் புத்தகத்தை மூடி வைத்தான் பூமி. சின்னஞ்சிறு வயதில் குனிந்த தலை நிமிராத பெண்ணாகத் தந்தையோடு சிங்கப்பூருக்குக் கப்பலேறிய நாள் முதல் தாயே தன்னிடம் கதை கதையாகச் சொல்லியிருந்த அவன் வாழ்வை நினைவு கூர்ந்தான் பூமி. அந்த நாளில் அவள் எவ்வளவு சிரமப்பட்டிருக்கக்கூடும் என்பதை நினைக்கும் போதே மனத்தை நெகிழச் செய்தது.

தன் தந்தை காலமான பிறகும் சிங்கப்பூரில் தாயே சிரமப்பட்டு உழைத்துத் தன்னை வளர்த்து ஆளாக்கியதும். பின்பு அங்கு எல்லாவற்றையும் விற்றுமுடித்துப் பணமாக்கிக் கொண்டு சென்னை திரும்பியதும், கையிலிருந்ததைப் போட்டு இந்த வீரப்பெருமாள் முதலி தெரு சந்தில் தீப்பெட்டியளவு சிறிய இந்த வீட்டை வாங்கியதும், வேலை தேடி அலைந்து அலைந்து சலித்த பின் ஒரு சலிப்பிலும் விரக்தியிலும் சொந்த ஆட்டோவை பாங்க் கடன் மூலம் பெற்று ஓட்டத் தொடங்கியதும், அடுக்கடுக்காக எண்ணத்தில் மலர்ந்தன, சிங்கப்பூரிலேயே'த்ரீவீலர்' ஓட்டப் பழகி லைசென்ஸ் எடுத்திருந்தது இங்கே பயன்பட்டது. ஒரு வீம்புடனும் வீறாப்புடனும் தான் அவன் ஆட்டோ ஓட்டத் தொடங்கியிருந்தான், படித்தவர்கள் உடல் உழைப்பை ஒதுக்குவதை இயல்பாகவே அவன் வெறுத்தான்.

ஏறக்குறைய விடியும் வேளை நெருங்கி விட்டது. மணி நாலரை. காற்று குளிர்ந்து வீசியது. இருள் பிரியத் தொடங்கிவிட்டது. பூமி அந்த இரவைத் தூக்கம் இன்றியே கழித்து விட்டான். இரவும் முடியத் தொடங்கியிருந்தது.

தாய் காலமாகி ஓர் இரவு கழிந்து விட்டது. இந்நேரம் கிருஷ்ணாம்பேட்டையில் அவன் தாய் வெந்து தணிந்து சாம்பலாகி இருப்பாள்.

கன்னையனும் குப்பன் பையனும் எழுந்து சுறுசுறுப்பாகி விட்டார்கள். கன்னையன் பூமியைக் கூப்பிட வந்தான்.

“கிருஷ்ணாம்பேட்டைக்குப் போகணுமே? கிளம்பலாமா? -- ராப்பூராத் தூங்கலே போலிருக்கே...பட்டினியாத்தான் போவணும்... ரொம்ப பசியாயிருந்தா ஒரு டீ வேணாக் குடிச்சிக்க.”

“வேண்டாம்! இதோ, குளித்து முடித்துவிட்டு வந்து விடுகிறேன்.”

தெரிந்த டிரைவர் ஒருவன் சென்ட்ரலுக்கு சவாரி தேடிப் போகிற வழியில் அவர்களைக் கிருஷ்ணாம்பேட்டையில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டுப் போனான். அஸ்தி சேகரித்த பின்னர் கிருஷ்ணாம்பேட்டையிலிருந்து திரும்ப வேறு ஒரு தெரிந்த டாக்ஸியைப் பிடித்துக்கொள்ளலாம் என்றான் கன்னையன். பூமிநாதனுக்கு மிகவும் தளர்ச்சியாகத்தான் இருந்தது. முதல் நாளிரவு தூங்காத அலுப்பு வேறு. உடம்பில் அசதி சுமந்திருந்தது.

சடங்குகளில் அவனுக்குப் பெரிதாக நம்பிக்கை எதுவும் கிடையாது. சுற்றி இருப்பவர்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என்ற நாகரிகத்தயக்கம் மட்டும் உண்டு. கன்னையனும் குப்பன் பையனும் ஏதோ குடம் பாத்திரம் என்று தங்களோடு எடுத்து வந்திருந்தார்கள்.

பூமி தற்செயலாக மயானத்திற்குள் நுழையு முன் வெளியே வந்து நின்ற ஒரு டாக்ஸியில் அவன் பார்வை சென்றது. அதுவரை அவன் அங்கே பார்க்கவில்லை.

டாக்ஸிக்குள் அவனுடைய பார்வையில் முதலில் பட்ட முகமே ஆச்சரியத்தை வளர்த்தது. சித்ராதான் தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தாள். விரிந்து வீழ்ந்த கூந்தலின் நடுவே தெரிந்த அவள் முகம் கருமுகிற் காட்டில் பூத்த முழுமதி போல் தோன்றியது.

அந்த டாக்ஸி, அதில் வந்திறங்கிய ஆண்களின் தோற் றம் எல்லாம் சேர்த்து அவர்கள் வீட்டிலும் ஏதோ துக்கம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

பெரிய குடும்பப் பெண்கள் மயானத்திற்குள் இறங்கி வருகிற வழக்கம் இல்லை. அவள் டாக்ஸியிலேயே இருந்தாள். ஆண்கள் இறங்கி உள்ளே போனார்கள்.

கன்னையுனோடும், குப்பன் பையனோடும் ஓர் ஓரமாகத் தயங்கி நின்ற பூமிநாதன் டாக்ஸியை அணுகிச் சென்ற போது அவளே அவனைப் பார்த்து விட்டாள்.

முகத்தில் உடனே மெல்லிய மலர்ச்சி பரவி மறைந்தது.

பூமி கேட்டான்: “என்ன...?”

“நேற்று நீங்க என்னைப் பார்த்து ஹேண்ட் பேக்கைக் குடுத்துட்டுப் போன கொஞ்ச நாழிக்கெல்லாம் வீட்டிலிருந்து ஸ்கூலுக்கு டெலிபோன் வந்தது. எங்கப்பா ஹார்ட் பேஷண்ட்: நேற்று. மத்தியானம் திடீர்னு மாரடைப்பால் போயிட்டார்.”

“உங்களைப் பார்த்துப் பையைத் திருப்பிக் கொடுத்து, விட்டு, இந்தப் பக்கம் திரும்பினதும் இதோ இவன் எங்கம்மா மூர்ச்சையா விழுந்து விட்டதாக வந்து சொன்னான். ஓடினேன், ஆஸ்பத்திரிக்குப் போகறதுக்குள்ளேயே மூச்சுப் பிரிந்து விட்டது. நேற்று இங்கே தான் எரித்தோம்...” என்று அருகே நின்ற கன்னையனைச் சுட்டிக் காட்டினான் பூமிநாதன். அவள் அவனைக் கேட்டாள்.

“எங்கே குடியிருக்கிறீர்கள்?”

“மைலாப்பூர், நீங்கள்..?”

“இங்கேதான் பாலாஜி நகர்.”

அவர்கள் இருவரும் மறுபடி சந்தித்தபோது அவன் தாயை இழந்திருந்தான். அவள் தந்தையை இழந்திருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/2&oldid=1028929" இலிருந்து மீள்விக்கப்பட்டது