அண்ணா சில நினைவுகள்/பிரசாதமல்ல, தின்பண்டம்

விக்கிமூலம் இலிருந்து
பிரசாதமல்ல, தின்பண்டம்

திரே ஒரு தட்டில் புளியோதரை, லட்டு, வடை, தேன் குழல் முதலிய தின்பண்டங்களுடன் அண்ணா ஒரு நாள் காஞ்சிபுரம் இல்லத்தில் அமர்ந்திருக்கும்போது நான் போக நேரிட்டது. “வாய்யா! இந்தா, சாப்பிடு!” என்றார்கள். “ஏதண்ணா இந்த நேரத்தில் இதெல்லாம்?” என்று விசாரித்தேன். “நம்ம வரதராஜ சாமி பிரசாதம்” என்று சாதாரணமாகச் சொன்னார். எனக்கோ பேரதிர்ச்சி! “என்னண்ணா? கோயில் பிரசாதம் என்று கூசாமல் சொல்கிறீர்கள்! நீங்கள் எப்படி இதைச் சாப்பிடலாம்? உங்கள் பேச்சைக் கேட்டதனால் நான் கோயிலுக்குப் போவதில்லை. சாமி கும்பிடுவதில்லை. பண்டிகை கொண்டாடுவதில்லை. புரோகிதர் வைத்துத் திருமணம் செய்தால் உறவினர் வீடுகளுக்குக் கூட போவதில்லை”...... என்று சிறிது பதற்றத்துடன் சொல்லிக் கொண்டே போனேன்.

சாவதானமாக அண்ணா கையமர்த்தினார். நானும் பேச்சை நிறுத்திவிட்டு, ஆவலை விழியில் கூட்டி, அண்ணா என்ன பதில் உரைக்கப் போகிறார் என எதிர்பார்த்தேன். “இரய்யா. நீ சொன்னது எல்லாமே சரிதான். ஆனா, நான் செய்யிற இந்தக் காரியம், அடியோட வேறெ சமாச்சாரம்! நான், என் வீட்டுக்கு இவ்வளவு பக்கத்திலெ இருந்தாலும், இந்த வரதராஜர் கோயிலுக்குப் போனதில்லே. எங்க ஊரிலேயே இருந்தாலும், சங்கராச்சாரியாரைப் பார்த்ததில்லே. எந்தக் கோயிலுக்கும் அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை பூஜை செய்றதில்லை. ஆனா இந்தப் பிரசாதம் ஏதுண்ணு கேட்டியானா, இது நைவேத்யம் செய்த பிரசாதமில்லை. பணம் கொடுத்து வாங்கி வந்த தின்பண்டம் (snacks) நொறுக்குத் தீனி ஒட்டலில் வாங்குவது போல! ஆனா ஒட்டலை விட இதெல்லாம் நல்லாயிருக்கும். அதிலும், பெருமாள் கோயில் மடைப்பள்ளிகளில் செய்தவை மிகவும் ருசியாயிருக்கும். இதிலெ தோஷமில்லை; சாப்பிடலாம்” என்றார் நகைத்துக்கொண்டே!

என்னுடைய கடுமையான விரதத்தை உடைத்தேன் அன்றையதினம்! அதற்குப் பிறகு, திருப்பதி லட்டு, பழனிப் பஞ்சாமிர்தம் - இவை விலைக்கு வாங்கிவரப்பட்டு என்னிடம் தரப்பட்டால், ரசித்துச் சாப்பிடுவேன். பிரசாதம் என வெறுத்து ஒதுக்கி வந்த என் கொள்கையால், அபூர்வமான ஒரு தின்பண்டத்தை இழக்க இருந்தேன்! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அக்கார அடிசில் என்னும் சர்க்கரைப் பொங்கல் அது! Full திட்டம் என்று பெயராம். அதில் தண்ணிருக்குப் பதில் நெய்யை ஊற்றி அரிசியை வேக வைத்திருப்பார்களோ? அரிசியை விட முந்திரிப் பருப்பும் திராட்சையும் அதிகமோ? அடடா! என்ன ருசி! திகட்டலான ருசி!

அண்ணாவுக்குத் தூள் பக்கோடா தின்பதிலும் விருப்பம் அதிகம். சாதாரணத் தேநீர் விடுதிகளில் தயாரிக்கப்படும் பக்கோடாவை வைத்திருக்கும் பாத்திரத்தின் அடிப்பகுதியில், வெங்காயம் மிகுதியாய்க் கருகலான தூள் தங்கியிருக்கும். அண்ணாவிடம் இந்த ரகசியம் தெரிந்து கொண்ட பின்னர், சுவை கூடிய இந்தத் துரள் பக்கோடா சாப்பிடுவதை நானும் வழக்கமாக்கிக் கொண்டேன்.

காரில் பயணம் போகும்போது, உளுந்துர் பேட்டையில் முட்டை தோசை போடச் சொல்வி, அண்ணா சாப்பிடுவார்கள். அதையும் அண்ணாவிடமிருந்து புரிந்து கொண்டு சுவைத்துச் சாப்பிட்டேன், சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம்!

பதவி ஏற்ற பின்னர் 1968 ஏப்ரலில் ஒரு விடுமுறை நாளில் கோட்டையில் அண்ணா முதலமைச்சர் அறையிலும், கலைஞர் பொதுப் பணித்துறை அமைச்சர் அறையிலும் அமர்ந்து files பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, கோவிந்தப்ப நாயக்கர் தெருவிலுள்ள ரசிக்லால் கடையில் ஒரு பாக்கெட் dried fruits (உலர்ந்த பழங்கள்) வாங்கி வந்தேன். கல்கண்டு, திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, பேரீச்சை முதலியன கலந்திருக்கும் அந்தக் கதம்பத்தில். முன்பு எப்போதோ அண்ணா இதைக் கையில் வைத்துக்கொண்டு, விருப்பமாகச் சாப்பிட்டதைப் பார்த்தேன். அது நினைவுக்கு வரவே இதை வாங்கி, நேரே அண்ணாவின் அறைக்குப் போய் அவர்களிடம் நீட்டினேன். “என்னய்யா இது?” - “பாருங்கள்; உங்களுக்குப் பிடித்ததுதான்!” - “அது சரி; இப்ப இதைக் குடுக்க என்ன காரணம்?” - காரணம் என்ன சொல்லலாம். வெளியில் கேள்விப்பட்ட ஒரு புதுச் செய்தி உதவிற்று. “கோ. சி. மணி M. L. C. தேர்தலில் வெற்றியாம் அண்ணா!” என்று சமயோசிதம் பேசினேன். பாதி எடுத்துக் கொண்டு “மீதியைக் கருணாநிதிக்குக் கொடு” என்றார்கள்.

அண்ணா ரசிக்லால் மிக்சரைத்தான் விரும்பிச் சாப்பிடுவார்களா! அப்படியும் சொல்லிவிடமுடியாது. ஒரு நாள் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் மன்றத்தில் சிறப்புரை யாற்றச் செல்ல வேண்டும் மாலை 4 மணிக்கு, அண்ணா! அப்போதுதான் உறங்கி எழுந்தவர்கள், வீட்டுத் தோட்டத்தில் காய்த்த மாங் காய்களில் இரண்டு மூன்று பறித்துவரச் செய்து, எதிரே ஒரு தட்டில் உப்புத் தூள் மிளகாய்த்தூள் வைத்துக் கொண்டு, கத்தியால் அரிந்த மாங்காய்த்துண்டங்களை அவற்றில் அமுக்கி, ருசித்து ரசித்துச் சாப்பிடுகிறார்கள்! எதிரில் சென்ற என்னிடம் கொஞ்சம் தந்தார்கள்.

“மாங்காயா முக்கியம்? கூட்டம் துவங்கும் நேரம் கடந்துவிட்டது. காலேஜ் function ஆச்சே அண்ணா! புறப்படுங்க!” என்றேன்.

“காலேஜ் மாணவர்களுக்கும் என் பழக்கம் தெரியுமய்யா! ஒரு மணி நேரம் லேட்டாய் போகலாம்! சாப்பிடு மாங்காயை!” என்கிறார்களே ஒழிய, பதற்றப்படவில்லை.

நிரந்தினிது சொல்லுதல் வல்ல அந்தப் பேரறிஞரின் சீர்மொழிகளை, இந்த ஞாலம் காத்திருந்து கேட்டதுதான் வரலாறு கூறும் செய்தியாகும்!