அண்ணா சில நினைவுகள்/திரைப்படம் பார்த்ததால் உருப்பெற்ற க(வி)தை

விக்கிமூலம் இலிருந்து
திரைப்படம் பார்த்ததால் - உருப்பெற்ற க(வி)தை

போட்மெயில் எனப்படும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில் மாயூரம் சத்திப்புக்கு இரண்டுங்கெட்டான் நேரத் தில் சென்னையிலிருந்து வந்து சேரும். அதாவது-2.15 மணிக்கு. அண்ணா வருகிறாரென்பதால் முன்னதாகவே விழித்தெழுந்து ரயிலடிக்கு வந்துவிட்டேன். தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லக் கொத்தங்குடி G ராமச் சந்திரன் ஒரு காருடன் வந்து காத்திருக்கிறார். அது 1965 ஆம் ஆண்டின் மார்கழிக் குளிர்காலம்.

இதில் வந்து இறங்கியவுடன் வழக்கமாகத் தூங்குவார் அண்ணா, ஆனால் அன்றைக்கு G. R. வீடு போய்ச் சேர்ந்ததும், ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டு, தன் பெட்டியைக் கேட்டார். ஜியார் எடுத்து வந்தார். அண்ணா அதைத் திறந்து ஒரு கற்றைத் தாள்களைக் கையி லெடுத்தார். எழுதப்பட்ட காகிதங்கள் 30, 40 பக்கமிருக்கலாம். “ஏண்ணா, படுக்கலியா?” என்று கேட்ட என்னை, “அப்புறம் படுக்கலாம். நீ இங்கே வந்து உட்காரு” என அழைத்தார்கள். அருகிலேயே போய் அமர்ந்தேன். “இந்தப் பேப்பரை வச்சுக்கோ, வீட்ல போயி படிக்கலாம். இப்ப நான் சொல்ற கதையெக் கேளு. போன வாரம் டெல்லியிலே ஒரு இங்லீஷ் படம் பார்த்தேன். அந்தக் கதை என்னெ ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணினதாலே, அதை அப்படியே இதிலே எழுதி பிருக்கேன், நீ உன்னுடைய பாணியிலே அதைக் கவிதையா ஆக்கிக் கொடு! “காஞ்சி” பொங்கல் மலரில் வெளியிடலாம்” என்ற பீடிகையுடன் கதை தொடங்கினார்கள்,

அமெரிக்க மக்கள் எவ்வளவுதான் செல்வந்தரா யிருப்பினும், இருப்பதுடன் மனநிறைவடையாமல், மேலும் செல்வத்தைத் தேடி அலை வார்கள் என்பதே மய்யக் கருத்து. அவர்களுக்கு வாழ்வின் இன்பங்களைத் துய்க்கத் தெரியாது. காதல், மணவாழ்க்கை, மக்கட் பேறு இவற்றையெல்லாம் உணர்ந்து சுவைக்க நேரமின்றி, விரைவில் அழியும் பொருட் செல்வத்தை நாடி, நிம்மதி இழந்து தவிப்பார்கள்.

காதல் வயப்பட்டாள் ஒரு பெண். காதலனுடன் வாழத் துவங்கும் போது அவன் மறைந்து விடுகிறான். பிறகு வேறொருவனை மணக்கிறாள். அவனோ, கண வனாக இருந்து கடமை ஆற்றாமல், பொருள் நாடி மடிகிறான். அடுத்து ஒருவன்! மீண்டும் வேறொருவன்! ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் மாண்டு போகிறார்கள். ஆனால் இவளுக்கோ அவர்கள் விட்டுச் சென்ற செல்வம் மலை மலையாய் வந்து குவிகிறது. கடைசியில், யாவற்றையும் துறந்த ஏழ்மை நிலையில் தான் அவள், வாழ்க்கை இன்பங்காண்கிறாள்!

கதை சொல்லி முடிக்க அரை மணி நேரம் ஆனது. அண்ணா அப்போது, தமது காஞ்சி வார இதழில், சில நேரங்களில் சில் கட்டுரைகளை, இப்போது புதுக்கவிதை என்கிறார்களே அது போன்ற புதிய நடையைத் தாமே உருவாக்கிக்கொண்டு-அந்த நடையில் எழுதுவதை வழக்க மாக்கியிருந்தார்கள். இந்த சினிமாக்கதை முழுவதையும் அதே நடையில் டெல்லியிலேயே எழுதினார்களாம். அதில் ஏனோ தெரியவில்லை-அவர்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லையாம். மாயூரம் சென்றவுடன் கருணானந்தத் தைப் பிடித்து, அவருடைய கவிதை வடிவில் எழுதச் சொல்ல வேண்டும் எனத் தீர்மானித்து, மறவாமல் அந்தத் தாள்களைத் தம்முடன் எடுத்து வந்துள்ளார்களாம்.

அண்ணாவின் தொடக்க வரிகள் சிலவற்றையும், முடிவு வரிகள் சிலவற்றையும், அக்கருத்தை வைத்து நான் வெண்பாத்தளையில் எழுதிய வரிகள் சிலவற்றையும் இங்கு பார்ப்போமா?

சின்னாட்களுக்கு முன்பு நான்
சிரிப்பைக் கிளறிடும் படமென
செப்பினர் நண்பர்கள் என்பதால்
சென்றேன் கண்டிட ஆங்கிலப் படமதை.
சிந்தனை தன்னைக் கிளறியதப்படம்
சிரிக்கவும் வைத்தது என்னை மெத்தவும்.
ஆங்கிலப் படமது: ஆகவே அதிலே
ஆங்கில வாழ்க்கை முறை இருந்தது.
-இது அண்ணா.
ஆங்கிலம் பேசும் அழகுத் திரைப்படத்தைப்
பாங்குடன் கண்டு பரிந்துரைத்தார் நண்பர்,
விருப்போடு வேண்டியதால் சின்னாள்முன் சென்றேன்.
சிரிப்பினை மூட்டியே, சிந்தனைக்கும் நல்விருந்தாய்
நேர்ந்தது, மேனாட்டார்.நேர்த்திமிகு வாழ்வுரைக்கத்
தேர்ந்த சிறந்த கதை; சீராம் கருத்துக்கள்.
-இது நான்.
பணம் படுத்தும் பாடுதனை உணர்த்திடவும்
பணம் தேடும் அரிப்பினால் ஏற்பட்டுவிடும்
பாழ்நிலையை, விபத்ன்த் விளக்கிடவே
படம் மெத்தத் தர்மரக்ப் புலன் அளித்திடவே
பார்த்ததில் சிரித்து மகிழ்ந்ததுடன்
சிந்தைக்கு விருந்து பெற
வழி இருந்திடக் கண்டு
மகிழ்ந்திருந்தேன் நானே!
-இது அண்ணா.
பார்த்துவந்த பின்புநான் பாடம் மறக்கவில்லை!
“செல்வத்தைத் தேடித் திரிவதால், ஒடுவதால்,
பல்விபத்தும், பாழும், பயனில்லா வாழ்வுமே
சித்திக்கும் என்று, சிரிப்பூட்டும் நற்படத்தில்
தித்திக்கும் நன்மருந்து சிந்தனைக்கும் தந்தாரே!
ஆளுந் திறனென்ன அற்புதமாய்-என்றெண்ணி
நாளும் மகிழ்ந்திருந்தேன் நன்கு.
-இது நான்.

அண்ணாவின் கையெழுத்துப் பிரதிகளைப் பத்திரமாக வைத்துக்கொண்டு, நான் எழுதிய கவிதையை அடுத்த வாரமே சென்னைக்குப் போய் அண்ணாவிடம் தந்தேன். ஆனால் அதற்கும் அடுத்த முறை சென்னை சென்றபோது “கருணானந்தம், உன் கவிதையை எங்கேயே misplace செய்துட்டேன். வேறு எழுதித்தாய்யா, முடியுமா?” எனக் கேட்டார்கள். “ஒரிஜினல் மாயூரத்தில் வைத்திருக்கிறேன். அண்ணா. போனதும் எழுதி எடுத்து வருகிறேன்” என்று சொல்லி, மீண்டும் வேறொரு நகல் எழுதித் தந்து, அது 1966 “காஞ்சி” பொங்கல் மலரில் ‘செல்வத்தைத் தேடி’ என்ற தலைப்பில் வெளியாயிற்று. அந்தப்படத்தின் பெயர்” What a way to go. நீண்ட நாள் கழித்துச் சென்னையில் பார்த்தேன்.

நான் எழுதிக் கொடுத்தேனே தவிர, அண்ணா எழுதியது மிகவும் அருமையாக இருந்ததால், அதை எப்படிப் பயன்படுத்தலாமென யோசித்து வந்தேன். நல்வாய்ப்பாக அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தேன். அதனால், 1970-ஆம் ஆண்டில், என் இரணடாவது கவிதைத் தொகுப்பான “கணியமுது” நூலில், அண்ணாவின் எழுத்தோவியத்தை ஒருங்க்கமும், அதற்கு மாற்றாக நான் எழுதியவரிகளை எதிர்ப்பக்கமும் வெளியிட்டேன். ஒவ்வொன்றும் 32 பக்கங்கள் வந்தன.

“பூக்காடு” நூல் 1966.ல் தொகுத்தபோது, அண்ணா, தினைவுடன் என்னைக் கேட்டு, நான் தவறவிட்ட கசாதகப் பொருத்தம்’ என்ற கவிதையினையும் தேடிப் பிடித்து, இந்தக் கனியமுது என்னும் இரண்டாம் தொகுப்பில் இணைத்தேன்.

ஆனால் இது நடந்தது 1970-ஆம் ஆண்டில் அல்லவா?

அண்ணனின் விருப்பத்தை நிறைவேற்றினேன். ஆனால் அவரது விழிகளின் பார்வையில் விழ வைத்தேனா?