அண்ணா சில நினைவுகள்/கார் தள்ளிய படலம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
கார் தள்ளிய படலம்

“வாங்க சார், காஞ்சிபுரம் போயி அண்ணாவைப் பாத்திட்டு வந்திடலாம்! கணேசு! P. A. P. கிட்டெ கார் கேட்டிருந்தேனே, பாருங்க!” சொன்னவர் மூனாகானா என அப்போது,எங்கள் அனைவராலும் அழைக்கப்பட்டவர். அவர் முதலில் விளித்தது என்னை, இரண்டாவதாக சிவாஜிகணேசனை. அவரும் அப்போது ‘கலைஞர்’ ஆகவில்லை. இவரும் ‘நடிகர் திலகம்’ ஆகவில்லை.

பராசக்தி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலம். மாலை வேளை, இடம் ஏவி எம் ஸ்டுடியோ. சிவாஜி, பராசக்தி தயாரிப்பாளர் பி. ஏ. பெருமாள் அவர்களின் செல்லப்பிள்ளை. அதனால் அவரே ஆணையிட்டார் “கண்ணா! பாண்டியாக் வண்டியை எடுத்துவா!” என்று சிவாஜி முன் சீட்டிலும், நாங்களிருவரும் பின்சீட்டிலும் ஏறிக்கொள்ள, வண்டி காஞ்சிமா நகரை நோக்கி விரைந்தது. என் மனக்குதிரையோ பின்னோக்கி விரைந்தது...

அண்ணாவின் அறிவுரைப்படி 1946-ஆம் ஆண்டு தஞ்சையில் “கே. ஆர். ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா” துவக்கி முகாமிட்டிருந்தனர். கரந்தை என். எஸ். சண்முகவடிவேல், நாடிமுத்துப் பிள்ளையின் மருமகன் ஆயினும் நமது இயக்கத் தோழர். எனக்கு உறவினர். அவருக்கு ஜில்லா போர்டு ஆபீசில் அலுவல். எனக்கு ஆர். எம். எஸ். சார்ட்டர் வேலை. இருவருக்கும் சம்பளம் உண்டு. நாடகக் கம்பெனிதான் எங்களுக்குப் பொழுது போக்கும் இடம், சிவாஜி அங்கிருந்தபோது அசைவ சாப்பாடு சரிவரக் கிடைக்காத சூழ்நிலை. நாங்களிருவரும் அவரை அழைத்துக் கொண்டுபோய், ‘மீனாட்சி விலாஸ் ராவுஜி மிலிட்டரி ஓட்டலி’ல் ஒருபிடி பிடிப்போம். சிவாஜியின் அண்ணன் W. C. தங்கவேலுவும் அவர்கள் அன்னையாரும், நல்ல சம்பளம் தரக்கூடிய வேறு ஒரு கம்பெனியில் சிவாஜியைச் சேர்த்து விடுமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டனர். நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை எங்கள் உறவினர். அவரிடமிருந்து பிரிந்து தனியே சக்தி நாடக சபா அமைத்திருந்த டி. கே. கிருஷ்ணசாமியும் எங்கள் உறவினர். அதனால் திண்டுக்கல்லில் முகாமிட் டிருந்த சக்தி நாடக சபாவில் சிவாஜி கணேசனைக்கொண்டு போய்ச் சேர்த்து, அடிக்கடி சென்று பார்த்து வந்தோம். அங்கும் பெண்வேடம் புனைந்தார் கணேசன். அவர் தான் இன்று பராசக்தியில் முக்கிய பாத்திரத்தில் சினிமா நடிகராக அறிமுகம் ஆகிறார். பாவலர் பாலசுந்தரத்தின் நாடகத்திற்குத் திரைக்கதை வசனம் மு. கருணாநிதி. டைரக்ஷன் கிருஷ்ணன்-பஞ்சு. இசை சுதர்சனம்.

காஞ்சிபுரம் சென்றதும், அண்ணா மூவரையும் பார்த்துப் பொதுவாக வாங்க என்றார். எதிரில் மூன்று நாற்காலிகளில் அமர்ந்தோம். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோதுதான் கவனித்தேன்-அண்ணா கணேசனிடம் பேசவேயில்லை என்பதை ! கணேசனும் அதைக் காட்டிக் கொள்ளவேயில்லை! நாங்கள் புறப்பட்ட போது “சாப்பிட்டுப்போங்கள்” என்று அண்ணா சொல்ல, சாப்பாடு முடிவதற்குள் மிகப் பலத்த மழை துவங்கி விட்டது. “இவ்வளவு மழையில் போகவேண்டாம். படுத்திருந்து, காலையில் போகலாம்” என்றார் அண்ணா. “இல்லை அண்ணா. பி. ஏ. பி. வண்டியை இரவல் வரங்கி வந்தோம். மெதுவாகப் போய் விடுகிறோம்” என்றார் கலைஞர். “ஜாக்கிரதையாகப் போங்கள் நிறைய லாரிகள் வரும்” என எத்சரித்தார் அண்ணா. நள்ளிரவும் கடந்துவிட்டது.

ஆமாம்; அண்ணா ஏன் சிவாஜியோடு பேசவில்லை? கலைஞரோ நானோ அது குறித்துக் கேட்கவில்லை! கலைவாணர் சிறை சென்றவுடன் அவரது நாடகக் கம்பெனி நிர்வாகம் சீர்குலைய, அங்கிருந்த நடிகர்களில் பலரையும் காஞ்சிக்கு அழைத்து வந்து அடைக்கலம் தந்தார் அண்ணா. அதுவரையில் ஸ்திர்பார்ட் நடிகரா யிருந்த கணேசனை அடையாளம் கண்டு, ஒளிந்திருந்த திறமையை வெளிக் கொணரத் தமது ‘சந்திரமோகன்’ நாடகத்தில் சிவாஜி பாத்திரம் ஏற்கச் செய்தார். W. C. கணேசனும் சிவாஜி கணேசனானார். ஆனால் பராசக்தி திரைப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது அண்ணாவிடம் அனுமதி கேட்க மறந்தார் என்பதாக எனக்குச் செய்தி எட்டியது. என்றாலும் நான் இதுவரையும் கேட்டதில்லை.

1953 ஆம் ஆண்டு சிவாஜிகணேசன் கடைசியாகக் கலந்து கொண்ட லால்குடி தி. மு. க மாநாட்டில் “அண்ணா ஆணையிட்டால் அனைத்து ஒப்பந்தப் பத்திரங்களையும் கிழித்தெறிந்து விட்டுப் போராட்டத்தில் குதிப்பேன்” என்று முழங்கியபோதும் நான் அருகிலிருந்தவன். இயக்கத்துக்காக அவர் ஆற்றிய அருந்தொண்டுகள் அளவில. அண்ணாவின் கோபம் விரைவில் ஆறிவிடும் என்பதுதான் என் அனுபவம் ஆயிற்றே! பெரியாருக்கு ஒருவர்மீது கோபம் வந்தால் அவரைப் பார்க்காமல் செய்தித்தாளைப் படிக்க ஆரம்பித்து விடுவார். அண்ணாவுக்கு ஒருவர்மீது கோபமென்றால் அவரைப் பார்ப்பார். ஆனால் அறிமுகமில்லாதவர் போலப் பேசாமல் இருந்து விடுவார்.

அண்ணா சொன்னது சரியாகிவிட்டது. நாங்கள் திரும்பிச் சென்னை வரும் வழியில், செம்பரம்பாக்கம் ஏரியருகில், பிரேக் பிடிக்காமல் வண்டி தலைக்குப்புற விழ இருந்தது. நல்வாய்ப்பாக ஒர் அங்குலம் முன்னதாகக் கார் நின்றுபோய்-நாங்கள் தப்பினோம்-ஆனால் அதன் பிறகு கார் ஸ்டார்ட் ஆக மறுத்தது. கலைஞரை உட்கார வைத்து, கணேசனும் நானும் பூந்தமல்லி ஹைரோடு வரையில் அந்தப் பெரிய காரைத் தள்ளிக்கொண்டே வந்தோம்.

அமைந்தகரை வந்ததும் சிவாஜி ஒடிப்போய்த் தான் நடிக்கும் ‘அன்பு’ படத்தயாரிப்பாளரான நடேச னிடம் கேட்டு, வேறொரு கார் வாங்கிவந்தார், பொழுதும் புலர்ந்து விட்டது, நாங்கள் வீடு சேர்ந்தபோது,

அண்ணாவைப் பார்த்துவரச் சென்ற நாங்கள், கார் தள்ளிய படலத்தை நினைத்தால் இன்றும் நெஞ்சம் திடுக்கிடுமே !