அண்ணா சில நினைவுகள்/தொலைந்துபோன ஒரு படம்
முப்பது ஆண்டுகட்கு முன்னர் நான் ஒல்லியாக இருந்தேன் என்று சொன்னால், யாரும். இப்போது நம்ப மறுக்கிறார்கள். அதற்குச் சாட்சியான காட்சியாகிய புகைப்படம் ஒன்று அண்மையில் எனக்குக் கிடைத்து, ஆனால் கைநழுவிப்போய் விட்டது. 1948 ல் அண்ணா வையும் என்னையும் வைத்து நண்பர் கரூர் கூர்மீசை குழந்தைவேல் ஒரு பாக்ஸ் காமிராவினால் எடுத்தது. மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவரில் அண்ணா அமர்ந் திருக்க நான் அருகில் சாய்ந்து நிற்பேன்.
கரூரில் நம் இயக்கப் பெரியவர் புலியூர் பெருமாள் (நாடார்) இல்லத்தில், அவரது மூத்தமகன் சோமசுந்தரம் திருமண வரவேற்பு சமயத்தில், ஒய்வாக இருந்த நேரம் படம் பிடித்தார் குழந்தை. சோமுவும் அவர் தம்பி கிட்டுவும் எனக்கு நல்ல நண்பர்கள். அவர்களின் அக்காள் கணவர்தான் மதுரை டாக்டர் அருணாசலம்,
டாக்டர் இரா. சனார்த்தனம், தனது பிஎச். டி. ஆய் வுக்காக அண்ணாவின் நாடகங்கள் என்பது போன்ற ஒரு தலைப்பை ஏற்றிருந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தப் படம் அவரிடம் சிக்கியதாம். அண்ணாவுடனிருப்பது நான் தானோ என்ற சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளத்தான் அந்த போட்டோவை என்னிடம் காண்பித்தார். நானே வைத்திருந்தேன். எப்படியோ, காணாமல் போய் விட்டது. ஆயினும் என் பழைய நண்பர்களுக்குத் தெரி யும், நான் 1958 வரை ஒற்றை நாடியாயிருந்தேன் என்பது. அதனால்தானே பிற்காலத்தில் எனக்குத் தொந்தி விழுந்து விட்டதைப் பல முறை அண்ணா கேலி செய்தது! எதிரே நான் போனால் என் முகத்தைப் பார்க்காமல், வயிற்றைப் பார்த்து நகைப்பாரே!
பெருமூச்சோடு அந்தப் பழையகாலத்தை எண்ணிப் பார்க்கிறேன். நண்பர் சோமசுந்தரத்துக்குப் பெண் எடுத்தது குடந்தையில். கும்பகோணத்து மும்மூர்த்திகள் எனப்படும் இயக்கப் பெரியவர்களான கே. கே. நீலமேகம், வி. சின்னத்தம்பி, P. R. பொன்னுசாமி ஆகியோரில், திரு V. C. அவர்களின் மகள்தான் மணப்பெண். திருமணம் குடந்தையில் மிகச் சிறப்போடு நடைபெற்றது. பெரியார். அண்ணா மற்றும் இயக்கத் தோழர்கள் அனை வரும் இருந்தோம். கலை வாணர் என். எஸ். கிருஷ்ணன், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி போன்ற கலை யுலகினரும் வந்திருந்தனர்.
அப்போது ஜெமினியின் ‘சந்திரலேகா’ படம் குடந்தை டயமண்ட் சினிமாவில் வெளியாகியிருந்தது அண்ணா என்னிடம் “செகண்ட் ஷோ பார்க்கலாம் ஏற்பாடு செய்” என்றார்கள். சம்பத் முதலானோர் அண்ணாவுடன் ஒதுங்கிக்கொண்டோம். அது வரை வெளியான தமிழ்ப் படங்களிலேயே அது மிகவும் பிரம்மாண்டமான தயாரிப்பு அல்லவா? அண்ணா வெகு வாக ரசித்தார். ஆயினும் அவருக்குப் புலப்பட்ட குறை ஒன்றினையும் சுட்டிக் காட்டினார். பாருய்யா! எவ் வளவு லட்சம் செலவு பண்ணி எடுத்திருக்கான். வசதியான ஒரு Folklore subject. பெரிய சரித்திரப்படம் போல இருக்கு, ஆனாலும் ஒரு நல்ல வசனகர்த்தாவை வச்சி டயலாக் எழுதத் தெரியல்லே கிராமவாசிகூட அக்ர ஹாரத் தமிழ்லெ பேசுறாங்க. எவ்வளவு பொருத்த மில்லாமல irrelevent ஆக இருக்கு!” என்று அண்ணா உருப்படியான விமர்சனக் கருத்து ஒன்றைத் தெரி வித்தார்கள்.
திருமணத்துக்கு மறுநாள் கருவூரில் மணமக்கள் வரவேற்பு. “அதற்கும் நாமெல்லாம் போகவேண்டும்" என்றார் அண்ணா. நான் தயங்கினேன். அண்ணா கே. ஆர். ஆர். அவர்களிடம் சாடை காண்பித்தார். அவர் உடனே ஆள் அனுப்பிக் கும்பகோணத்திலிருந்து கரூர் வரையில் ரயிலில் முதல் வகுப்பில் செல்வதற்குப் பத்துப் பதினைந்து டிக்கட் வாங்கி வந்துவிட்டார். சினிமாவில் மிக உச்சகட்டத்தில் நடிப்பிசைப் புலவர் நின்றிருந்த நேரம் அது. அவரைப் போன்ற தாராள மனம் யாருக்கு வரும்?
தவமணி, சம்பத், குழந்தைவேலு, நான் எல்லாரும் அண்ணாவுடன் ஒரே கம்பார்ட்மெண்டில்-கூத்தும் கும்மாளமுந்தான். பயனுள்ள கருத்துப்பரிமாற்றங்களும் இடம் பெறாமல் இல்லை.
கரூரில் போய் இறங்கிய பிறகுதான் நண்பர் குழந்தை வேலு, தனது திறமையைக் காண்பிக்க அண்ணாவையும் என்னையும் ஒரு போட்டோ எடுத்தார். மிகச் சிறிய சைஸ் படம் அது. என் லார்ஜ் செய்யக் கருதினேன். தொலைந்து போயிற்று. அதைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.