ஐந்து செல்வங்கள்/தாய்ச் செல்வம்

விக்கிமூலம் இலிருந்து
1. தாய்ச் செல்வம்

“செல்வம் இரு வகைப்படும். அவை முறையே கல்விச் செல்வம், பொருட் செல்வம் எனப்படும்” என அறிந்திருக்றோம். ஆனால், இன்று ஒரு புதிய செல்வத்தைப்பற்றி ஆராய்வோம். *

செல்வம் பலவகைப்படும். அவை முறையே மனை, மனைவி, மக்கள், தாய், நெல், நீர், நிலம், கால்நடை, கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வலிமை, பொன், பொருள், போகம் எனப் பதினாறு வகைப்படும் எனக் கூறலாம்.

'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும்' எனப் பெரியோர்கள் வாழ்த்தக் கேட்டிருக்கிறோம் அல்லவா? அது பதினாறு பிள்ளைகளைப் பெறுவது என்பதல்ல என்றும், மேற்கண்ட பதினாறு செல்வங்களைப் பெறுவதே என்றும், நமக்கு நன்கு விளங்குகின்றது. ஆம்! அவை அனைத்தும் ஒவ்வொரு மனிதனும் பெறவேண்டிய பெரும் பேறுகளாகிய செல்வங்களேயாம். இச்செல்வங்களில் எது ஒன்று குறையினும், நமது வாழ்வு சிறக்காது என்று நன்கு தெரிகிறது.

இப் பதினாறு செல்வங்களுள் தாயும் ஒரு செல்வமாகும் தாயைப் பலர் தெரிந்திருப்பர். ஆனால், தாயார்? தாய் +யார்? என அறிந்திருப்பவர் மிகச் சிலரே எனத் துணிந்து கூறலாம்.

எல்லாச் செல்வங்களிலும் சிறந்தது தாய்ச் செல்வமாகும். பிற செல்வங்களை இழந்து விடுவோமானால், முயன்றால் அவற்றைத் திரும்பப் பெற்றுவிடலாம். தாய்ச்
6

செல்வத்தை இழந்துவிட்டால், அதை எவராலும் எவ்விதத்தும் திரும்பப் பெறமுடியாது. இழந்தது இழந்தது தான். அச்செல்வம் இருந்த இடத்தை நிரப்பவோ, ஈடு செய்யவோ எக்காலத்தும் இயலாத அவ்வளவு உயர்ந்த செல்வமாகும் அது. ஆகவே, செல்வங்களனைத்திலும் தலையாய செல்வம் ஆதலின், அதனைத் “தாய் செல்வம்” எனவும் கருதலாம்.

‘பட்சம், பாசம், பக்தி, கடாட்சம், கிருபை’ என வடமொழியாளர் கூறுவதும், ‘அன்பு, இரக்கம், பற்று காதல், கண்ணோட்டம்’ எனத் தமிழ் மொழியாளர் கூறுவதும், மக்கள் மனம் இளகிநிற்கும் நிகழ்ச்சி ஒன்றையே குறிக்கும். இச்சொற்கள் இடவேறுபாடு, மன வேறுபாடு ஆகியவைகளுக்குத் தக்கவாறு கையாளப் பெறும். என்றாலும், தாய் தன் பிள்ளையிடத்துக் காட்டுகின்ற அன்பே தலையாய அன்பாகும். இதனையே அறிஞர்கள் ‘தாயன்பு’ எனக் குறிப்பிட்டுக் கூறுவர்.

சிறந்த துறவிகளில் இருவர் துறந்தும் துறவாதவர். ஒருவர் இளங்கோவடிகள்; மற்றொருவர் பட்டினத்தடிகள், இளங்கோவடிகளால் நாட்டை, முடியை நல்வாழ்வை, பொன்னை, மணியை, பூவணையை, பட்டதைத், பல்லக்கை, பட்டுடையைத் துறக்க முடிந்தது. ஆனால், அவரால் தமிழைத் துறக்கச் சிறிதும் முடியவில்லை. அவரது துறவாத தமிழ்ப் பற்றிற்குச் சிலப்பதிகாரம் இன்றும் சான்று கூறிக் கொண்டிருக்கிறது.

பட்டினத்தடிகளும் அவ்வாறே. அனைத்தும் துறக்க முடிந்தும், துறந்தும், தாய்ச் செல்வத்தைத் துறக்க அவரால் முடியவே இல்லை.

“குடியிருந்த வீட்டுக்குக் கொள்ளியை வைக்க.”
“வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பலாகுதே.”
“அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு.”
“பூமானே என்றழைத்த வாய்க்கு.”
“எப் பிறப்பிற் காண்பேன் இனி?”

என்ற அவரது சொற்கள், முற்றும் துறந்தும், தாயைத் துறவாத அம் முனிவரின் மன நெகிழ்ச்சியை நமக்கு நன்கு அறிவிக்கின்றன.
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.”

என்பது ஒளவையின் வாக்கு. மனிதன் தன் கண்முன்னே முன்னதாக அறியப்படுகின்ற கடவுள் தாயே யாம் என்பதை இது நன்கு விளக்குகிறது.

தெய்வம் மட்டுமல்ல; கோயிலும் கூடத்தான் என்பதை “தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை” என்பதால் நன்கு அறியலாம். பெற்ற தாயைப் புறக்கணித்து விட்டு, புண்ணியம் கருதிக் கோயில் குளங்களுக்குச் சென்று வருவது பயனற்றது என்பது கருத்து. தன் பிள்ளைக்காகப் பரிந்து பேசுபவர் தாயைவிட வேறு எவரும் இவ்வுலகில் இல்லை என்பது முடிந்த முடிபாகும். இதனை அறிந்துதான், மாணிக்கவாசகர் இறைவனைக் குறித்து வேண்டும் பொழுது, “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என வேண்டியிருக்கின்றார். இதிலிருந்து தாயைவிட அதிகமாகப் பரிவு காட்டுகிறவர்கள் தெய்வங்கள்தாம் என்பதும், மக்களில் எவரும் இல்லை என்பதும் விளங்கலாம்.

எத்தகைய துன்பம் வந்தாலும், சான்றோர்கள் பழிக்கின்ற தீய செயல்களை ஒரு போதும் செய்யலாகாது என்பது, தமிழ் மக்களின் பண்புகளில் ஒன்று. பெற்ற தாயின் பசியைக் கண்ணால் கண்டு துடிக்கும் மகன் கூட தவறான வழியில் பொருளைத் தேடித் தன் தாயின் புசியைப் போக்கலாகாது என்பது தமிழரின் நெறி. இதனைக் கூறவந்த பேரறிஞர் திருவள்ளுவர்,

“ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை”

என அறுதியிட்டுக் கூறிவிட்டார். இதிலிருந்து, மக்கள் படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றிலும் தலைசிறந்தது தாயின் பசியைக் காண்பதுதான் என்பதும், பெற்ற வயிறு பசிக்கக் காண்பது பிறந்த மகனுக்குப் பெரிய இழிவு. என்பதும் நன்கு விளங்குகின்றது. தாயை யார் என நன்கு அறிவிக்க, வள்ளுவர் மற்றொரு குறளையும் கூறியிருக்கிறார். அது,

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி”

என்பது. தாயின் தன்மை எக்குற்றத்தையும் பொறுக்கும் இயல்புடையதாகும். பிள்ளையை வெறுக்கும் குணம் (தந்தைக்கு வந்தாலும்) தாய்க்கு வாராதாம். தன் பிள்ளையைத் திருடன் என்று கூறத்கேட்டாலும் நம்பாளாம். ‘திருட்டுப் பிள்ளைகளோடு சேர்ந்து போயிருப்பான்’ என்றே எண்ணுவாளாம். விலைமதர் விட்டுக்குச் சென்றான் எனக்கேட்டாலும் நம்பாளாம் ‘தெருவிலுள்ள பிற பிள்ளைகள் அவனைத் தவறான வழியில் அழைத்துச் சென்றிருப்பர்; விரைவில் திருந்திடுவான்’ என்றே எண்ணுவாளாம். கொலைக்காரன் எனக் கூறக் கேட்டாலும் ஒப்பாளாம். ‘ஆத்திரத்தால் நேர்ந்திருக்குமோ’ என ஐயப்பட்டு, ‘அவனை விட்டுவிடுங்கள்’ எனப் படபடத்துத் தன் மகனை உயிரோடு திரும்பப்பெற ஓடியாடி அலைந்து உருக்குலைவாளாம்.

தான் பெற்ற மகன் சூதாடுவதற்குத்தான் பொருள் கேட்கிறான் என்பதைத் தாய் அறிவாளாம். என்றாலும், புத்தி சொல்லி, சில தடவை தந்தாலும், ஒரு தடவை மறுப்பாளாம். தர மறுத்த தாயை மகன் கன்னத்தில் அடிப்பானாம். அடிபட்ட தாயின் வாய் இரத்தம் கசிய, ‘பாவிப்பயலே! ஏண்டா என்னை அடிக்கிறாய்?’ எனக் கூறுமாம். ஆனால், அவளுடைய உள்ளமோ “தான் பெற்ற மகனுக்கு எவ்வளவு வலு இருக்கிறது?” என எண்ணி மகிழுமாம். இத்தகைய தாய்கூட தன் மகன் குடித்து வெறித்திருக்கிறான் எனக் கண்டால். வெட்கிப் போய் முகஞ்சுளித்து வெறுத்து விடுவாளாம். “பெற்ற தாய் முகத்தும்கூடக் குடி வெறுக்கப்படுமானால், சான்றோர் முகத்தின் முன்னே அது என்னாகும்?” என்பதே வள்ளுவரின் கேள்வியாகும். இதிலிருந்து, ஒரு சிறு குற்றம் செய்தாலும் வெறுப்பவர் சான்றோர் என்பதும், எக்குற்றம் செய்தாலும் பொறுப்பவள் தாய் என்பதும் நன்கு விளங்குகிறது. பெற்ற தாயின் பெருமையை, அவள் தன் உள்ளக் கிடக்கையை நன்கு விளக்க வள்ளுவர் கையாண்ட இம்முறை வியக்கத் தகுந்ததும், மகிழ்ச்சிக்குரியதுமாகும்.

இராவ்பகதூர் ப. சம்பந்த முதலியார் அவர்கள். “மனோகரன்” என ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார். அந்த நாடகத்தின் உயிரோட்டமெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது,

“தன்னைப் பழித்தவன் தந்தையா யிருந்தாலும் விடாதே!

ஆனால், தாய் தடுத்தால் விட்டுவிடு” என்பதேயாம்.

தாய்ச் செல்வத்தின் பெருமையை அந்நாடகம் மக்களுக்கு நன்கு அறிவிக்கிறது. அக்கதையை எழுதுவதற்கென்றே பிறந்தவர் சம்பந்த முதலியார் என்பதும், மனோகரனாக நடிப்பதற்காகவே பிறந்தவர்கள் டி. கே. சண்முகமும், கே. ஆர். இராமசாமியும் என்பதும், அந்த நாடகத்தைப் பார்த்து மகிழ்வதற்காகவே பிறந்தவர்கள் நம் போன்றவர்கள் என்பதும், அந்த நாடகத்தைப் பார்த்துத் திருந்துவதற்காகப் பிறந்தவர்கள் பெற்ற தாயைப் புறக்கணிக்கும் மக்கள் என்பதும் நமது கருத்து.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒரு கவிதை புனைந்திருக்கிறார் அக்கவிதை மனோகரன் கதையை ஒரு படி அதிகமாகத் தாண்டியிருக்கிறது. அது,

“தன்னைப் பழித்தவனைத் தாய் தடுத்தால் விட்டுவிடு தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே!”

என்பதாகும். இவ் வுறுமொழியை ஒவ்வொரு தமிழனும் கூற வேண்டுமென்பது நமது விருப்பம். கவிஞர், “தாய் தடுத்தால்’’ எனக் கூறுவதிலிருந்து, ஒரு வீர மகனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் எத்தகைய வீரனுக்கும் இல்லையென்பதும், பெற்ற தாய் ஒருத்திக்கே உண்டு என்பதும் நன்கு புலப்படும். தாய்ச் செல்வத்தின் பெருமையைப் புலவர் இச் சொற்களைக்கொண்டு கூறாமல் கூறியிருப்பது அறிந்து மகிழத்தக்கது.

தாயின் சொற்களைத் தட்டிவிட்டால், பின்பற்றி நடப்பதற்குப் பிற சொற்கள் இல்லையென்பது ஓர் அறிஞரின் முடிவு. இதை அவர், “தாய் சொல் துறந்தால் வாசகமில்லை” என்ற சொற்களால் கூறிவிட்டார். பிறர் கூறுகின்ற புத்திமதிகளில் ஒருகால் வஞ்சகம் கலந்திருந்தாலும் இருக்கலாம்; ஆனால், தாயின் சொற்களில் இது அடியோடு இராது என்பது அவரது கருத்து.

இறைவிக்கும் இறைவனுக்கும் உவமையாகக் கூறப் பக்திமான்களுக்குக் கிடைத்த உவமைகள் கூட, தாயும் தந்தையும்தான் எனத் தெரிகிறது. இவ்வுண்மையை “அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!” என்ற மணிவாசகரின் திருவாசகம் நமக்கு விளக்கும். ‘அம்மையே! ஒப்பிலா மணியே!’ என்ற சொற்களில் தாயையும் இறைவியையும் ஒன்றாகச் சேர்த்தக் கூறி, இவர்கள் ஒப்பிலா மணிகள் என வியந்து கூறியிருப்பது உய்த்துணரத்தக்கது.

தன் குழந்தை, ‘அம்மா!’ என்று அழைப்பதைக் கேட்ட தாயின் உள்ளம் எவ்வளவு குளிர்ச்சியடைகின்றது? என்பதைக் குழந்தைகளைப் பெறாத பெண்கள் எவ்வாறு அறிவார்கள்? அவர்கள் அறியவும் முடியாது; அவர்களுக்கு அறிவிக்கவும் இயலாது. தான் பெற்ற பிள்ளை மட்டுமா? பிறர், “அம்மா!” என்றழைப்பதைக் கேட்டுவிட்டால், பெண்மக்களின் உள்ளம் இளகியே போய்விடும். இதனை அறிந்தே, பிச்சை எடுப்பவர் அனைவரும், இச் சொல்லையே துணையெனக்கொண்டு வாழ்கின்றனர் போலும்! அம்மா என்பது எவ்வளவு இனிமை கலந்த சொல்? இந்த நல்ல தமிழ்ச் சொல்லையே உலகிலுள்ள எல்லா நாட்டினரும், மொழியினரும் பெற்ற தாய்க்கு இட்டு அழைக்கின்றனர் அம்மா என்பதில் பின் எழுத்தும், தாயே என்பதில் முன் எழுத்தும் சேர்ந்தே வடமொழியில் “மாதா” ஆயிற்று. ஆங்கிலத்திலும் “மதர்” ஆயிற்று. மனிதன் தமிழ்ச்சொற்களைச் சிதைத்துக் கூறினாலும், ஆடு, மாடுகள் சிறிதும் சிதைக்காமல் நல்ல தமிழை அப்படியே வைத்து, “அம்மா” என்றே அழைத்து வருகின்றன. இச்சொல்லைக் கேட்ட தாய் மனம் இளகி எதையும் தந்துவிடுகிறாள். என்னே தாயின் உள்ளக் கனிவு!

பல ஊர்களில் பல கழகங்கள் நிறுவப் பெற்றிருக்கும். அவைகள் அனைத்தும் கிளைக் கழகங்கள் என்றே பெயர் பெறும். ஆனால், அவைகளைத் தன்னுள் அடக்கி, தாங்கி உயர்ந்து நிற்கும் கழகமோ, “தாய்க் கழகம்” என்ற பெயரைப் பெறும். இப்பெயரும் தாயின் பெருமையை நமக்கு நன்கு அறிவிக்கின்றது.

இதுகாறும் கூறியவைகளைக்கொண்டு, தாயும் ஒரு செல்வம் என்பதும், அதன் மதிப்பு மிகவும் உயர்ந்தது என்பதும் ஒருவாறு விளங்கியிருக்கலாம்.

தம்பி! உனக்குத் தாய் உண்டா? இருந்தால் விடாதே! உன் தாய் உயிரோடு இன்றிருந்தால், நீ ஒரு சிறந்த செல்வத்தை பெற்றிருக்கிறாய் என்று கருது. இன்றோ, நாளையோ, இன்னும் சில ஆண்டுகளிலோ, அச்செல்வம் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். பிறகு அச்செல்வத்தைத் திரும்பத் தேட உன்னால் முடியுமா? என்று நினைத்தப் பார். அதனை இப்போதே நன்குபயன் படுத்திக்கொள் வாயாரப் போற்றி, கையார அள்ளிக் கொடு! மனத்தை மகிழச் செய்! வயிற்றைக் குளிரச் செய்!

வாழுங்காலத்தில் வயிறு எரியச் செய்து மாண்ட பிறகு மனம் புழுங்கி அழும் மக்களும் உண்டு. அவர்களைக் கண்டால், அவர்களுக்காக இரங்கு! தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சையெடுக்க கும்பகோணத்தில் கோதானம் கொடுக்கும் பிள்ளைகளும் உண்டு. அவர்களைக் கண்டால் வெறுத்து ஒதுக்கு; தாயின் வயிற்றைப் பற்றி எரியச் செய்யாதே! அவ்வயிற்றைப் பசிக்கவும் விடாதே! ஏனெனில், நீ இருந்த இடம் அது அல்லவா? ஆகவே,தாயைப் போற்று! அது உனது கடமை !

தம்பி! இன்னும் ஒன்று. தாய் என்ற சொல் நம்மைப் பெற்றோர்களுக்கு மட்டும் வைக்கிற ஒரு சொல் என்று எண்ணி விடாதே. நம்மைப் பெற்ற நாட்டிற்கும் ‘தாய் நாடு’ என்று பெயர். தம்மை வளர்த்த மொழிக்கும் ‘தாய் மொழி’ எனப் பெயர். தமிழ் மக்களாகிய நமக்குத் தமிழ்நாடும், தமிழ் மொழியுமே தாய்நாடும் தாய்மொழியுமாகும். இவைகளை நமது தாய்ச் செல்வங்களேயாம். தாயை இழந்த பிள்ளைகள் சில காலம் தப்பிப் பிழைத்து உயிர் வாழ முடியும். ஆனால், தாய் நாட்டை இழந்து, தாய்மொழியை இழந்துபோன மக்கள் எக்காலத்தும் வாழ இயலாது. ஒருகால் வாழ்ந்தாலும், அவ்வாழ்வு வாழ்வாக இராது.

தம்பி முடிவாகக் கூறுகிறேன். உனக்கு என்று ஒரு தாய் இருந்தால், அவளைப் போற்றி வாழ், இன்றேல் தாயை இழந்து திக்கற்றுத் தெருவில் நிற்கும் பிள்ளைகளைப் பார்த்தேனும் திருந்து.

உனக்கென்று ஒரு மொழி இருந்தால், அதனை வளர்த்து வாழ்! இன்றேல், தன் மொழியை இறந்துபடச்செய்து பிற மொழிகளைக் கலந்து குளறிப்பேசி வாழும் மக்களைப் பார்த்தேனும் திருந்து.

உனக்கென்று ஒரு நாடு இருந்தால், அந்த நாட்டைக் காப்பற்றி வாழ்! இன்றேல், நாடற்று நாடோடிகளாய்த் திரியும் மக்களைப் பார்த்தேனும் திருந்து!

இவை மூன்றும் உனது தாய்ச் செல்வங்களாகும். இவைகள் வாழ்ந்தாலன்றி உனக்கு வாழ்வில்லை. இம்மூன்றும் உன்னைப் பெற்றவைகள், ஆனால், அவைகள் உன்னைப் பெற்றதினால் பெற்ற பயன் எனன? என்பதை எண்ணிப் பார்! எண்ணிப் பார்க்க வேண்டியது உனது கடமை. எண்ணு! துணி! செய்!!!

வாழட்டும் தாய்ச் செல்வங்கள்!