உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெர்க்குலிஸ்/தங்க ஆப்பிள் கனிகள்

விக்கிமூலம் இலிருந்து

13. தங்க ஆப்பிள் கனிகள்


ஹெர்க்குலிஸ், மன்னன் ஏவிய பத்துப் பணிகளையும் நிறைவேற்றிவிட்டான்: இவைகளை முடிப்பதற்கு எட்டு ஆண்டுகளும் ஒரு மாதமும் ஆயின. பத்துப் பணிகள் முடிந்தவுடனேயே அவன் விடுதலையாகியிருக்க வேண்டும். ஆனால், வெர்னா வனத்து நாகத்தை வதைத்ததையும், ஆஜியஸ் மன்னனின் தொழுக்களைச் சுத்தம் செய்ததையும் முறையாக நிறைவேறிய பணிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று யூரிஸ்தியஸ் கூறினான். அவை முறையே ஹெர்க்குலிஸ் செய்து முடித்த இரண்டாவது, ஐந்தாவது பணிகள். நாகத்தை வதைக்கையில் ஹெர்க்குலிஸ் அயோலஸின் உதவியைப் பெற்றதால், அது அவ்வீரன் தானாகச் செய்ததன்று என்று மன்னன் வாதாடினான். தொழுக்களைச் சுத்தம் செய்ததற்கு, வீரன் ஆஜியஸ் மன்னனிடம் சம்மானம் பெற்றான் என்றும் அவன் குற்றம் சாட்டினான். இக் காரணங்களால் ஹெர்க்குலிஸ் மேலும் இரண்டு பணிகளைச் செய்து முடிக்க வேண்டியிருந்தது.

பதினோராவது பணியாக அட்லஸ் மலைச்சாரலிலிருந்த ஆப்பிள் மரத்திலிருந்து மூன்று தங்கக் கனிகளை ஹெர்க்குலிஸ் கொண்டுவர வேண்டுமென்று விதிக்கப்பட்டது. அந்த ஆப்பிள் செடி முற்காலத்தில் ஹீரா தேவியின திருமணத்தின்போது பூமிதேவியால் அவளுக்குப் பரிசளிக்கப்பெற்றதாகும். அதை ஹீரா அட்லஸ் மலைச்சாரலில் தன்னுடைய தெய்வீகத் தோட்டத்தில் நட்டு, அதற்குப் பாதுகாப்பாக ‘ஹெஸ்பிரைடுகள்’ என்ற தேவ கன்னியரை நியமித்திருந்தாள். அந்தக் கன்னியரும் ஆப்பிள் கனிகளைப் பறித்துவிடாமல் காப்பதற்காக மரத்தின் மீது எப்பொழுதும் ஒரு பெரிய நாகம் படுத்திருக்கவும் அவள் ஏற்பாடு செய்திருந்தாள்.

ஆனால், அட்லஸ் மலையும் அந்தத் தோட்டமும் எந்தத் திசையில் இருந்தன என்பது ஹெர்க்குலிஸுக்குத் தெரியவில்லை. அதனால் அவன் விஷயம் தெரிந்த எவரிடமாவது விசாரித்துத் தெரிந்துகொள்ள விரும்பினான். அதற்காக அவன் வடமேற்குத் திசையாக நடந்து சென்று இல்லிரிபாப் பிரதேசத்தின் வழியாகப் போ நதியை நோக்கிச் சென்றான். அந்த நதிக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த மோகினிகள் சிலர் நீரியஸ் என்ற பழைய கடல் தேவன் இருந்த இடத்தை அவனுக்குக் காண்பித்தார்கள். அவன் நீரியஸிடம் சென்று, அட்லஸ் மலைக்கு வழி கேட்டான். அத்தேவன் நெற்றியிலே குட்டையான இரு கொம்புகளையும், கடற் பாசிகளைப் போல் நீண்டு அடர்ந்து தொங்கிக்கொண்டிருந்த தாடி, மீசைகளையும் உடையவன். அவன் முதலில் முறையாகப் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால், பின்னர் . வல்லமை மிகுந்த ஹெர்க்குலிஸிடம் உண்மையைச் சொல்லிவிடுவதே மேல் என்று கருதி, அவன் விவாங்களையெல்லாம் தெரிவித்தான். மேலும், தங்க ஆப்பிள்களை ஹெர்க்குலிஸ் தானே பறிக்காமல், அட்லஸின் மூலம் பெற்றுக்கொள்வது மேலென்றும் அவன் ஆலோசனை சொன்னான்.


அட்லஸ் மலை ஆப்பிரிக்க, கண்டத்திலிருந்தது. அதன்மேலேதான் அட்லஸ் என்ற அசுரன் வான மண்டலத்தைத் தன் தோள்களின் மீது சுமந்து நின்று கொண்டிருந்தான். தேவர்கள் அவனுக்கு விரோதமாயிருந்ததால், அவன் பல்லாண்டு பல்லாண்டாக வானத்தைச் சுமக்க வேண்டுமென்று விதித்திருந்தார்கள்.


ஹெர்க்குலிஸ் பல இடங்களைச் சுற்றிக்கொண்டு, ஆப்பிரிக்காவை அடைந்து, அட்லஸ் மலையைக் கண்டு, அதன் மீது ஏறிச் சென்றான். அதன் உச்சியில் அட்லஸ் தன் பெரும் பாரத்தைச் சுமந்துகொண்டிருப்பதை அவன் கண்டான்: அவனிடம் ஹீராவின் தோட்டம் எங்கேயிருந்தது என்பதுபற்றிக் கேட்டான். அட்லஸ், அவன் வந்த விவரத்தைத் தெரிந்து கொண்டு, தானே போய் மூன்று தங்கக் கனிகளையும் கொணர்ந்து தருவதாகச் சொன்னான். ஆனால், நான் போய்த் திரும்புகிறவரை, நீ இந்த வானத்தை உன் தோள்களின்மீது தாங்கிக்கொண்டிருக்க வேண்டும்!’ என்று அவனை அட்லஸ் கேட்டுக் கொண்டான். ஆனால், ஆப்பிள் மரத்திலிருந்த நாகத்தை ஹெர்க்குலிஸ் முதலாவதாகக் கொல்ல வேண்டியிருந்தது. ஆதலால், அவன், தோட்டத்தின் வெளியில் நின்று கொண்டே, தன் விஷ அம்புகளில் ஒன்றை அதன் மீது ஏவி, அதை வதைத்துவிட்டு, அட்லஸிடம் திரும்பிச் சென்றான். அட்லஸ் வானத்தை அவனுடைய பெருந்தோள்களில் வைத்துவிட்டுக் கனிகளைக் கொண்டுவரச் சென்றான்.


ஹீராவின் தோட்டத்தைக் காத்து வந்த மூன்று கன்னியரும் அட்லஸின் குமாரிகளே என்று சில கதைகளிலே கூறப்பட்டிருக்கிறது. அது எவ்வாறிருப்பினும், அவர்கள் அவனுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள்.

ஆதலால், அவர்களிடம் சொல்லி, அவன் ஆப்பிள் கனிகளை வாங்கி வந்தான். அவன் மூன்று கனிகளையும் ஹெர்க்குலிஸிடம் காட்டி, தானே யூரிஸ்தியஸிடம் சென்று அவைகளைக் கொடுத்துவிட்டு வருவதாயும், அதுவரை அவன் தன் சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பது நலமென்றும் சொன்னான். அவன் நெடுங்காலமாக வான மண்டலத்தைச் சுமந்துகொண்டிருந்ததில் சலிப்படைந்திருந்தான். அதைத் தாங்கக் கூடிய வேறு ஒரு வீரன் வந்துவிட்டதால், அவன் மீது அச்சுமையை வைத்துவிட்டுத் தான் ஓடிவிட வேண்டுமென்பதே அவன் ஆசை. அவனுடைய உட்கருத்தை எப்படியோ யூகித்துக்கொண்ட ஹெர்க்குலிஸ் எதற்கும் நீ ஒரு கண நேரம் இதை வாங்கி வைத்துக் கொள்! இது என் தோளை அழுத்துகின்றது. நான் தோள்களின் மீது சும்மாடு கட்டி வைத்துக்கொண்டால் சற்று எளிதாயிருக்கும். அதற்குப் பின் நீ போய்வாலாம்! என்று சொன்னான்.


உடனே அட்லஸ் கைகளிலிருந்த தங்கக் கனிகள் மூன்றையும் கீழே வைத்துவிட்டு அவனிடமிருந்து வானத்தைத் தன் தோள்களிலே ஏற்றுக்கொண்டான். ஹெர்க் குலிஸ், அந்தக் கனிகளை எடுத்துக் கொண்டு, திரும்பிப் பாராமலே ஓடத் தொடங்கினான்.


அவன் நேராகத் தாய்நாடு திரும்பாமல், ஆப்பிரிக்காவில் சில பிரதேசங்களைச் சுற்றிக் கொண்டு வந்தான். அப்பொழுது லிபியாவை ஆண்டுகொண்டிருந்த ஆன்டியஸ் மன்னன் அவனை மல்யுத்தத்திற்கு அழைத்தான். மாவீரனும் அதனை ஏற்றுக்கொண்டான். இந்த ஆன்டியஸ் சமுத்திர ராஜனுக்கும் பூமிதேவிக்கும் பிறந்தவன்; மிகுந்த வலிமை யுள்ளவன். லிபியாவுக்கு வரும் வெளிநாட்டவரை அவன் மற்போருக்கு அழைத்து அவர்களைக் களைப்படையச் செய்து, கடைசியாக வதைத்துவிடுவது வழக்கம் . அப்படி மடிந்தவர்களுடைய மண்டை ஓடுகளை அவன் சேர்த்து வைத்திருந்தான். தன் தந்தையாகிய கடலரசனுக்கு ஆலயம் அமைத்து. அதற்கு மேற்கூரையாக அந்த ஓடுகளை அடுக்க வேண்டும் என்பது அவன் விருப்பம்.


அவனை நெடுங்காலமாக எவரும் வெல்ல முடியவில்லை. அவன் அசகாய சூரன் என்று பெயர் பெற்றிருந்தான். உண்மை என்னவென்றால், அவன் பூமி தேவியின் புத்திரனாயிருந்ததால், அவளுடைய அருளால் அவன் அளவற்ற ஆற்றல் பெற்று வந்தான். அவன் பூமி மீது நின்றுகொண்டிருந்தால், அவனை எவரும் வதைக்க முடியாது. அவனுடைய உடலின் உறுப்புகள் பூமியைத் தீண்டுந்தோறும், அவை மேலும் மேலும் செழுமை பெற்று, வலுவடைந்துவந்தன. இரவு நேரத்தில் அவன் வெறும் தரை மேலேயே படுப்பது வழக்கம். அவனுடைய வலியை முழுதும் மண்ணின் சம்பந்தத்திலேயே இருந்தது. சிங்கங்களின் இறைச்சியையே அவன் உணவாக அருந்தி வந்தான். ஹெர்க்குலிஸைப் போலவே அவனும் சிம்மத் தோலையே ஆடையாகப் போர்த்தியிருந்தான் . இந்த விவரமெல்லாம் முதலில் ஹெர்க்குலிஸுக்குத் தெரியாது.

வீரர் இருவரும் மற்போருக்குத் தங்களைத் தயாரித்துக்கொண்டனர். இருவரும் தங்களுடைய தோலாடைகளைக் கழற்றிவிட்டனர். ஹெர்க்குலிஸ், கிரேக்க முறைப்படி, தன் உடலில் எண்ணெய் தடவித் தேய்த் துக்கொண்டான். அதற்கு மாறாக ஆன்டியஸ், சூடான மணலை அள்ளி வந்து அதைத் தன் உடல் முழுதும் தேய்த்துக்கொண்டன். ஒவ்வோர் உரோமக் காவிலும் மண்ணின் தொடர்பு இருக்க வேண்டும் என்பது அவன் ஆவல்.

போர் தொடங்கியவுடன், ஹெர்க்குலிஸ், முதலில் தன் கை வரிசைகளைக் காட்டாமல் ஆன்டியஸே தன்மீது பாய்ந்து விளையாட அநுமதித்தும் கொண்டிருந்தான். நெடுநேரத்திற்குப் பிறகு அவன்களைப் படைந்த நிலையில், அவனை எளிதில் விழத் தட்டிவிடலாம் என்பது அவன் எண்ணம். அவ்வாறே இறுதியாக அவன் ஆன்டியஸைக் கட்டிக் கீழே கிடத்தினான். ஆன்டியஸ் தரையிலே சாய்ந்ததும். அவனுடைய அங்கங்கள் விம்மிப் புதுமையாக உரம் பெற்று விளங்குவதை ஹெர்க்குலிஸ் கண்டான். பின்னாள் சில சமயங்களில், ஹெர்க்குலிஸ் பிடித்துத் தள்ளாத நிலையிலுங்கூட ஆன்டியள்ஸ் தானாகத் தரையிலே விழுந்தெழுவதையும் அவன் கவனித்தான். அப்பொழுதுதான் அவன் ஆன்டியஸுக்கும் மண்ணுக்கும் உரிய தொடர்பைப்பற்றித் தெரிந்துகொண்டான். எனவே, அவன், அம்மன்னனைக் கைகளால் தலைக்கு மேலே தூக்கி வைத்துக்கொண்டு, அவன் எலும்புகளை உடைத்து, அவன் முச்சு நிற்கும்வரை அப்படியே கைகளில் வைத்துக் கொண்டிருந்தான்; பிறகுதான் அவனுடைய உடலைக் கிழே எறிந்தான்!


இதற்குப் பின்பு ஹெர்க்குலிஸ் எகிப்து நாட்டுக்குச் சென்றான். அங்கே ஆன்டியஸின் சகோதரனான புசிரிஸ் ஆட்சி புரிந்து வந்தான். முன்பு ஒரு சமயம் அந்த நாட்டில் ஏழு, எட்டு ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்டிருந்ததால், அவன் ஆண்டுதோறும் சீயஸ் கடவுளுக்கு ஒரு மனிதனைப் பலியிட்டு வந்தான். அவனுடைய பூசாரிகள் ஹெர்க்குலிஸைக் கண்டதும், அந்த ஆண்டில் அவனையே பலி கொடுத்துவிடலாம் என்று கருதினார்கள். அவனும், அதற்கு ஏற்றார் போல் ஏதும் அறியதவனாக நடித்தான். அவர்கள் அவனை எளிதில் கட்டிக்கொண்டு சென்று, பலி பீடத்திலே ஏற்றி வைத்தனர். மன்னனும், இளவரசனும் விழாக் காண வந்திருந்தனர். ஹெர்க்குலிஸ் ஒரு பூசாரி தன் தலைக்கு மேலே கோடரியை ஓங்கியதும், திடீரென்று தன்னைப் பினித்திருந்த கயிறுகளை அறுத்துக்கொண்டு வெளியே துள்ளினான். அங்கிருந்த பூசாரிகள் அனைவரையும் வதைத்துவிட்டு, அவன் அங்கிருந்து வெளியே சென்றான்.


இதற்கு அப்பால் அவன் ஆசியாவின் சில பகுதிகளைச் சுற்றிக் கொண்டு, கிரேக்க நாட்டுக்கு மீண்டு சென்றான். மைசீனில் அவன் மூன்று தங்க ஆப்பிள்களையும் யூரிஸ்தியஸிடம் சேர்ப்பித்தான். அவன் அவைகளை மீண்டும் ஹெர்க்குலிஸிடமே கொடுத்து விட்டான். அவன் அவைகளை அதீனா தேவி மூலம் ‘ஹெஸ்பிரைடுகள்’ என்ற ஹீராவின் காவல் கன்னியர்களுக்கு அனுப்பி வைத்தான். ஹீரா தேவியின் பொருள்களாகிய அக்கனிகளை அக்கன்னியர்களிடமிருந்து பறிப்பது பாவம் என்பதனாலேயே இவ்வாறு செய்யப் பெற்றது.