கிழவியின் தந்திரம்/பொரி அரிசியின் கதை

விக்கிமூலம் இலிருந்து




15. பொரி அரிசியின் கதை

ர் ஊரில் ஒரு பொரி அரிசி கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் பட்டதாம். உருண்டு திரண்டு குண்டாகவும் வெளுப்பாகவும் இருக்கும் தனக்கு அழகான புருஷன் வேண்டும் என்று எண்ணியது. அந்த ஊரை விட்டுப் புறப்பட்டது. அதற்குத் தாயும் இல்லை; தகப்பனும் இல்லை. சின்னச் சின்னக் கையும் காலும் அசைய, அது ஊரைச் சுற்றப் புறப்பட்டது. யாரோ ராஜா சண்டையில் வெற்றி அடைந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அவனுடன் யானை, குதிரை' ஒட்டகம் முதலிய படைகளும் வந்தன. பொரி அரிசி வந்து கொண்டிருந்தபோது எதிரே அரசனுடைய யானை ஒன்று வந்தது. பொரி அரிசி விசுக் விசுக் கென்று வந்ததை அந்த யானை பார்த்தது. அதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது.

“ஏ பொரி அரிசி, பொரி அரிசி! எங்கே இவ்வளவு உற்சாகமாகப் புறப்பட்டாய்?” என்று அதைப் பார்த்து யானை கேட்டது.

உடனே பொரி அரிசி. “நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன். அதற்காக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லியது. "அப்படியானால் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளேன்"என்று யானை கேட்டது.

பொரி அரிசி நிமிர்ந்து யானையை மேலும் கீழும் பார்த்தது யானை மகிழ்ச்சியால் தன் காதுகளை அசைத்தது. அந்தக் காதுகள் முறத்தைப் போல இருந்தன. "ஐயையோ! இதைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் இந்த முறம் இரண்டும் நம்மைப் புடைத்துத் தள்ளி விடுமே!" என்று பொரி அரிசிக்குப் பயம் உண்டாகியது. "ஊஹும். நான் மாட்டேன், உனக்கு காது நன்றாகயில்லை. மடங்கி இருக்கிறது" என்று சொல்லி வேகமாகப் போகத் தொடங்கியது.

பொரி அரிசி வேகமாகப் போய்க் கொண்டுருந்தது. எதிரே ஒரு குதிரை வந்தது. "என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளேன் என்னுடைய கம்பீரமான நடை யாரிடம் இருக்கிறது?" என்று சொல்லிக் கொண்டே நான்கு முறை டக் டக் என்று குதிரை குறுக்கும் நெடுக்கும் நடந்து காட்டியது.

அது நடக்கும் பொழுது பொரி அரிசிக்கு உலக்கையின் ஞாபகம் வந்து விட்டது "ஐயோ! இதன் காலுக்கு அடியில் நாம் அகப்பட்டுக் கொண்டால் நம்மைப் பொடியாக்கி விடுமே!" என்று பயப்பட்டது.

"ஊஹும். நீ அசிங்கமான பிராணி. குந்தம் தள்ளி" என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிப் போய்விட்டது. கொஞ்ச தூரம் போன பிறகு எதிரே ஓட்டகம் ஒன்று தன் தலையை அசைத்து ஆட்டிக் கொண்டே வந்தது. ஒட்டகம் "நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்! நீ என் முதுகில் ஒய்யாரமாக ஊர்வலம் வரலாம்" என்று ஒட்டகம் சொல்லித் தன் உதட்டை அசைத்தது.

உடம்பெல்லாம் கோணல் மயமாக இருந்த ஒட்டகத்தைப் பொரி அரிசி ஒரு தடவை நிமிர்ந்து பார்த்து "ஐயா! எத்தனை கோணல்! உன்னையும் ஒரு பெண் கல்யாணம் பண்ணிக் கொள்வாளோ!." என்று சொல்லி வேகமாக ஓடிப் போய் விட்டது.

கொஞ்ச தூரம் போனபிறகு எதிரே ஒரு கழுதை வந்தது. பொரி அரிசியைப் பார்த்து "என்னைப் பார், என் வெள்ளி மூக்கைப் பார். உன் அழகுக்கும் என் அழகுக்கும் பொருத்தமாக இருக்கும். என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளேன்" என்று சொல்லி கொண்ணாரம் போட்டுக்குதித்தது. சந்தோஷத்தால் விலுக்கென்று பின்னங் காலால் உதைத்துத் தள்ளியது.

அதைப் பார்த்த பொரி அரிசி, "ஐயோ! நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். நீ காலை உதறி உதைக்கிறாய்" என்று சொல்லி விட்டு மேலே நடந்து போயிற்று.

அப்போது அங்கே அழகான கொண்டை பள பளக்க வாலும் சிறகும் மினுமினுக்க ஒரு சேவற் கோழி ஒய்யார நடை போட்டு எதிரே வந்து கொண்டிருந்தது. ஆஹா! என்ன அழகு! என்ன அழகு!"என்று பார்த்து ஆசை கொண்டது பொரி அரிசி.

அந்தக் கோழி பொரி அரிசியைப் பார்த்து. "பொரி அரிசிக்குட்டி, நீ புறப்பட்டது எங்கே?" என்று கேட்டது. பொரி அரிசிக்கு வெட்கம் வந்து விட்டது. "கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்" என்றது.

,மாப்பிள்ளை எங்கே?" என்று சேவல் கேட்டது. "நீர்தாம்" என்று சொல்லி ஒரு நமஸ்காரம் பண்ணிற்று பொரி அரிசி. "எதிரே வா" என்றது கோழி.

பொரி அரிசிக்குச் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. நாணிக்கோணி நடை போட்டுக்கொண்டு கோழிக்கு முன்னாலே வந்து நின்றது.

கோழி கொஞ்ச நேரம் சும்மா இருந்துவிட்டு லபக்கென்று அந்தப் பொரி அரிசியைக் கொத்தி விழுங்கி விட்டது. பொரி அரிசி அதன் தொண்டைக் குள்ளே போகும்போது, "கடைசியில் இப்படியா முடிந்தது நம் கதி!"என்று வருத்தப்பட்டு அழுதது.

எவர் உருவத்தைப் பார்த்தும் நகைக்கலாகாது என்பதைப் புரிந்து கொண்ட பொரி அரிசி, கோழியின் வயிற்றுக்குள் போய்விட்டது